Published:Updated:

``ரஜினி, கமல், விஜய், அஜித்... ஸ்டுடியோக்களை விரும்பும் டாப் ஹீரோக்கள். என்ன காரணம்?!"

``ரஜினி, கமல், விஜய், அஜித்... ஸ்டுடியோக்களை விரும்பும் டாப் ஹீரோக்கள். என்ன காரணம்?!"
``ரஜினி, கமல், விஜய், அஜித்... ஸ்டுடியோக்களை விரும்பும் டாப் ஹீரோக்கள். என்ன காரணம்?!"

``பழைய படப்பிடிப்புத் தளமும் புது தொழில்நுட்பமும் கலந்து உருவாகும் இந்தப் படைப்புகள், பல செய்திகளை உணர்த்துவதாக உள்ளன!" - மீண்டும் ஸ்டுடியோவுக்குள் முடங்கும் தமிழ்சினிமா. என்ன காரணம்?!

ரஜினி - கமல் இணைந்து நடித்த `16 வயதினிலே' திரைப்படம் ரிலீஸான சமயம். `மிஸ்டர் பாரதிராஜா, நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. நாங்க கோடிக்கணக்குல பணத்தைக் கொட்டி ஸ்டுடியோ கட்டி வெச்சிருக்கோம். நீங்க பாட்டுக்கு அவுட்டோர் போய் ஷூட் பண்ணினா எப்படி? உங்களுக்கு என்ன லொகேஷன் வேணும்னு சொன்னீங்கனா நாங்க எங்க ஏவி.எம் ஸ்டுடியோவிலேயே செட் போட்டுத் தர்றோம்.' என்று ஏவி.மெய்யப்ப செட்டியார் சொன்னபோது, ஒரு கணம் திகைத்துப் போனார் பாரதிராஜா. ஆனால் ஏவி.மெய்யப்ப செட்டியார் பயந்ததுபோலவே `16 வயதினிலே’ படத்துக்குப் பிறகு தமிழ் சினிமா ஸ்டுடியோவை ஓரங்கட்டத் தொடங்கியது. ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, சாலக்குடி... இப்படி வெளிப்புறப் படப்பிடிப்பு ஏரியாவைத் தேடி கேமராவைத் தூக்கிக்கொண்டு கிளம்ப ஆரம்பித்தனர். 

 `காலா' செட்

`பராசக்தி' படத்தில் சிவாஜி கணேசன் பேசிய `சக்ஸஸ்...' என்ற முதல் வசனம் படமாக்கப்பட்ட ஏவி.எம் ஸ்டுடியோ, `பாட்ஷா'வில் வரும் `ஆட்டோக்காரன்...' பாடலைப் படம்பிடித்த வாஹினி ஸ்டுடியோ, `சிங்காரவேலன்' படத்தில் `போட்டு வைத்த காதல் திட்டம்' பாட்டுக்கு கமல்ஹாசன் ஆடிய பிரசாத் ஸ்டுடியோ, `அண்ணாமலை' படம் எடுக்கப்பட்ட கற்பகம் ஸ்டுடியோ, `துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் `இன்னிசை பாடிவரும்' பாடலில் விஜய் ஆடிய முருகாலயா ஸ்டுடியோ... இப்படி அனைத்து ஸ்டுடியோக்களும் கொஞ்சம் சொஞ்சமாக வெறிச்சோடத் தொடங்கின. சினிமாவின் மீதான தணியாத காதலால் ஸ்டுடியோக்களை நிர்மாணித்த அதன் உரிமையாளர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

காலப்போக்கில் ஏவி.எம் ஸ்டுடியோவின் முக்கியமான பகுதிகள் இடிக்கப்பட்டன. `போக்கிரி ராஜா'வுக்காக ரஜினி - ராதிகாவுடன் சண்டையிட்ட குடிசை செட் தரைமட்டமாகி, இப்போது உயரமான வணிகத்தளமாகி நிற்கிறது. விஜய வாஹினி ஸ்டுடியோ வளாகம் கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலாகவும், விஜயா ஃபோரம் மாலாகவும் தோற்றமளிக்கிறது. சென்னை தரமணியில் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர் திரைப்பட நகரில் உள்ள பூங்கா புல்வெளிகளில் ஆடு, மாடுகள் மேயத் தொடங்கிவிட்டன. 

இப்படி ஸ்டுடியோக்கள் தங்கள் இயல்பிலிருந்து வேறொன்றாக மாறிக்கொண்டு இருந்த சமயத்தில்தான், சினிமாக்கள் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அரங்குகளை நோக்கி அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. அதற்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸின் தாக்கமும் முக்கியமான காரணம். ஸ்டுடியோவில் க்ரீன் மேட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளை, கிராஃபிக்ஸ் உதவியுடன் காட்டிலோ, அரண்மனையிலோ எடுக்கப்பட்டதாக மாற்றலாம் என்பதால், மீண்டும் ஸ்டுடியோவை மொய்க்கத் தொடங்கிவிட்டன கேமராக்கள். மாஸ் ஹீரோக்களை வைத்து பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமான காரியமாக மாறத்தொடங்கியதும் இதற்கு முக்கியமான காரணம். அதனால், பாதுகாப்புடன் கூடிய ஸ்டுடியோக்களில் படப்பிடிப்பு நடத்துவதை ஹீரோக்களும் விரும்பத் தொடங்கினர். 

'வேலைக்காரன்' செட்

தவிர, இன்றைய சூழலில் பொது இடங்களில் கேமரா வைத்துப் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வாங்குவதும், அதற்குப் பின் உள்ள அரசு விதிகளையும் பார்த்தால் கண் கட்டுகிறது. நடிகர்களை ரியல் லொகேஷன்களுக்கு அழைத்துச்சென்று தங்கவைத்து ஷூட் செய்வதைவிட, செட்டில் ஷூட் செய்வது எளிதாகவும், அதனால் படத்தின் பட்ஜெட் குறைவதாகவும் சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.  

இதற்கு `பாகுபலி' படம்தான் ஆகப்பெரிய உதாரணம். அது எந்த அரண்மனைகளிலும் படமாக்கப்படவில்லை. ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்துப் படமாக்கினார்கள். இதேபோல் மதுரை பின்புலத்தில் உருவான `ஜில்லா’, திருநெல்வேலி பின்புலத்தில் உருவான ‘பைரவா’ ஆகிய படங்கள் சென்னை சாலிக்கிராமம் மோகன் ஸ்டுடியோவில் செட் போட்டு எடுக்கப்பட்டவையே!. ஆனால், மதுரை, திருநெல்வேலிக்குச் சென்ற அதன் இயக்குநர்கள் மீனாட்சி அம்மன் கோயில், கோயில் அமைந்துள்ள தெரு போன்றவற்றைத் தனியாக ஷூட் செய்து, கிரீன் மேட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளுடன் டெக்னாலஜியைப் பயன்படுத்தி இணைத்துக்கொண்டனர். 

பாகுபலி செட்

இந்தத் தொழில்நுட்பம் தெரியாத ரசிகர்கள், சென்னையில் ஷூட்டிங்கைப் பார்த்துவிட்டு படத்தைப் பார்த்தால், `என்னது... மோகன் ஸ்டுடியோவில் இருந்த வீட்டுக்குப் பின்னால் மதுரை மீனாட்சியம்மன் கோயிலா?!’ என்று ஆச்சர்யப்பட்டாலும் வியப்பதற்கு இல்லை. இதேபோல `தெறி' படத்தில் விஜய் சென்னைப் பாரிமுனையில் சண்டையிடும் காட்சி அனைத்தும் ஸ்டுடியோவில் கிரீன் மேட்டில் எடுக்கப்பட்டவையே!. பிறகு, அந்தக் காட்சிகளையும் பாரிமுனையில் எடுக்கப்பட்ட வீடியோ ஃபுட்டேஜையும் இணைத்துக்கொண்டார்கள். இந்த கிரீன் மேட் படப்பிடிப்புக்குத்தான் இன்று ஸ்டுடியோ மிகவும் அவசியமாகிறது. சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் `காலா' படத்தில் இடம்பெற்ற பிரமாண்டமான தாராவி குடிசைப் பகுதி சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் செட் அமைத்துப் படமாக்கப்பட்டவை. 

தற்போது உருவாகிவரும் புதுப்படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டி, ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில்தான் படமாக்கப்படுகின்றன. சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் `விசுவாசம்’ படம் கதைப்படி மதுரை பின்புலத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. அஜித்தை படப்பிடிப்புக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றால், அவர் ஒதுக்கியுள்ள 100 நாள்களும் ஷூட்டிங் செய்யமுடியாது. அவர் ரசிகர்களுடன் செல்ஃபிதான் எடுத்துக்கொண்டு இருக்கமுடியும். அந்தளவுக்கு ரசிகர்கள் அன்புத்தொல்லை அதிகமாக இருக்கும். அதனால், மதுரையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்ததுபோல் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைத்திருக்கிறார்கள்.  

இதேபோல, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கமல் நடிக்கும் `இந்தியன் 2' படப்பிடிப்பும் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில்தான் நடைபெற உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் டார்ஜிலிங் பின்னணியில் நடைபெறும் கதை. அதனால், அங்கே ஒரு மாத காலம் ஷூட்டிங் நடக்கிறது. இதில் டார்ஜிலிங்கின் முக்கியமான பகுதிகளைப் படம்பிடித்துவிட்டு, பிறகு சென்னை ஸ்டுடியோவில் ரஜினியை கிரீன் மேட் தொழில்நுட்பத்தில் ஷூட் செய்து மேட்ச் செய்யும் திட்டத்தில் இருக்கிறார்கள். 

பழைய படப்பிடிப்புத் தளமும் புது தொழில்நுட்பமும் கலந்து உருவாகும் இந்தப் படைப்புகள், பல செய்திகளை உணர்த்துவதாக உள்ளன!

அடுத்த கட்டுரைக்கு