மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
Photo: ANI
ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது. பிரமாண்டமான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. பாலிவுட் பிரபலங்களான மாதுரி தீக்ஷித், கரீனா கபூர் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் என நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிக்கு நடுவே 30 போட்டியாளர்கள் கலந்து கொண்ட மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது.
நடுவர்களாக கிரிக்கெட் வீரர்கள் இர்ஃபான் பதான், கே.எல் ராகுல், பாலிவுட் பிரபலங்களான மலைகா அரோரா, பாபிடியோல், குனால் கபூர், 2017-ம் ஆண்டின் மிஸ் இந்தியாவான மனுஷி சில்லர் ஆகியோர் இருந்தனர்.
இந்தப் போட்டியின் இறுதியில் சென்னையைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் என்பவர் மிஸ் இந்தியாவாக தேர்தெடுக்கப்பட்டார். சென்னையில் படித்துவரும் அவருக்கு வயது 19. அவருக்குக் கடந்த வருட மிஸ் இந்தியாவான மனுஷி சில்லர், கிரீடத்தை அணிவித்தார். அனுக்ரீத்தி வாஸ் இந்தாண்டு நடைபெறும் உலக அழகிப்போட்டிக்கு இந்தியா சார்பில் கலந்துகொள்வார். முன்னதாக மிஸ் தமிழ்நாடு வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இடத்தை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மீனாட்சி செளத்திரியும், மூன்றாவது இடத்தை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் என்பவரும் பெற்றனர். இவர்கள் இருவரும் முறையே மிஸ் கிராண்ட் இன்டர்நேஷ்னல் மற்றும் மிஸ் யுனைடெட் காண்டினண்ட்ஸ் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.