Published:Updated:

``விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி... ஆளுக்கு 5 லட்சம்!" - விமல்

``விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி... ஆளுக்கு 5 லட்சம்!" - விமல்
``விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி... ஆளுக்கு 5 லட்சம்!" - விமல்

நடிகர் விமல், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் சூரியுடனான நட்பு குறித்துப் பேசியிருக்கிறார்.

```மன்னர் வகையறா' தயாரிப்பாளரா எனக்கு முதல் படம். இந்தப் பட வேலைகள்ல ரெண்டு வருஷம் லாக் ஆயிட்டேன். வேறெந்தப் படங்களிலும் கமிட் ஆகாததுக்குக் காரணம் இதுதான். `மன்னர் வகையறா' ஹிட் ஆனது சந்தோஷம். அதேசமயம் கொஞ்சம் சங்கடமாவும் இருக்கு!" என்கிறார், விமல். 

``சினிமாவுல நடிக்கணும்னு ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தேன். `பசங்க' சான்ஸ் கிடைக்கிற வரைக்கும் கூத்துப்பட்டறையில இருந்தேன். அப்ப இருந்தே விஜய் சேதுபதி எனக்குப் பழக்கம். கிட்டத்தட்ட ஐந்தரை வருடம் நானும் அவரும் கூத்துப்பட்டறையில இருந்தோம். விதார்த்தும் எங்ககூட இருந்தார். `தமிழ்சினிமாவுல முகம் தெரியிற அளவுக்கு நாமளும் ஹீரோ ஆவோம்'னு எங்க மூணுபேருக்கும் நம்பிக்கை இருந்தது. விஜய் சேதுபதி லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா என்ட்ரி கொடுத்தார். அவர் இன்னைக்கு தமிழ்சினிமாவுல பெரிய ஹீரோ ஆயிட்டாலும், எங்களுக்குள்ள இருக்கிற நட்பு இன்னும் அப்படியேதான் இருக்கு. எந்த மனக்கசப்பும் இல்லாம நாங்க பழகிட்டு இருக்கோம். 

அதேமாதிரிதான், தம்பி சிவகார்த்தியேனும்! நாங்க ரெண்டுபேரும் திருச்சி பசங்க. சிவா தொகுப்பாளரா இருந்த காலத்துலிருந்தே பழக்கம். `பசங்க' படம் மூலமா என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துன பாண்டிராஜ் சார்தான், சிவாவை `மெரினா' படத்துல அறிமுகப்படுத்தினார். சிவா ஹீரோ ஆனதும் முதல் ஆளா அவருக்கு வாழ்த்து சொன்னேன். `ஹீரோக்கள்ல இருந்து எனக்கு வந்த முதல் வாழ்த்து இதுதான்'னு சொல்லி சந்தோஷப்பட்டார்.

சிவாவை என் குடும்பத்துல ஒருத்தரா பார்க்குறேன். சிவா அம்மா கையால நானும் சாப்பிட்டிருக்கேன். எங்க வீட்டுல சிவா சாப்பிட்டிருக்கார். சூரி வீட்டுல ஏதாவது ஒரு விசேஷம்னா, அதுல நானும் சிவாவும் முதல்ல நிற்போம். சமீபத்துல மதுரையில நடந்த சூரி வீட்டு விசேஷத்துக்கு நானும் சிவாவும் குடும்பத்தோட போயிருந்தோம். விஜய் சேதுபதியும் வரவேண்டியது... அவர் கொஞ்சம் பிஸியா இருந்ததுனால, வரலை. சிவா, சூரி, விஜய் சேதுபதி, விதார்த்னு நான் பழகிய எல்லோர்கிட்டேயும் நட்புறவோட இருக்கேன். இந்தச் சூழல்லதான், சில ஊடகங்கள்ல நான் ரெண்டுபேரையும் போட்டியா நினைக்கிறேன்னு செய்தி வந்திருந்தது. இது எனக்குக் கஷ்டமா இருக்கு.  

எங்க நட்பைப் பத்தி புரிஞ்சுக்க உங்களுக்கு ஒரு சம்பவம் சொல்றேன். `மன்னர் வகையறா' படத்துக்குப் பொருளாதார ரீதியா எனக்குப் பிரச்னை. அந்தப் பிரச்னைகளையெல்லாம் நான் யார்கிட்டேயும் சொன்னதில்லை. ஆனா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூரி மூணுபேருமே `ஏன் ஒருமாதிரி இருக்கீங்க. என்ன பிரச்னை?'னு அந்தப் படம் சம்பந்தமா கேட்டுக்கிட்டே இருந்தாங்க. ஆறுதலா பேசுனது மட்டுமல்ல... ஆளுக்கு 5 லட்சம் ரூபாய் பணத்தை எனக்குக் கொடுத்தாங்க. நட்பா பழகிய அவங்ககிட்ட நான் வேணாம்னுதான் தவிர்த்தேன். `தயவுசெஞ்சு வெச்சுக்கோங்க'னு உரிமையோட கொடுத்தாங்க. இந்த மனசு யாருக்குங்க வரும்? 

இப்படித்தான் நாங்க எல்லோரும் அண்ணன் தம்பியா பழகிட்டு இருக்கோம். என்னைக்குமே அவங்களுக்கு நான் போட்டியாவோ, என்னை அவங்களுக்குப் போட்டியாவோ நினைச்சதில்லை. அவங்க எல்லோரும் என் நலம் விரும்பிகள். சோர்ந்து போறப்போ இவங்க கொடுக்கிற ஆறுதலும் நம்பிக்கையும்தான் எனக்குப் பலம். அந்த உத்வேகத்துலதான் என் பேனர்ல தொடர்ந்து மக்கள் ரசிக்கிற நல்ல படங்களைத் தயாரிக்கணும்னு இருக்கேன். 

அதேமாதிரி என் படங்களுக்கு நானே ஹீரோயின்களைத் தேர்ந்தெடுக்கிறேன்னும் எழுதுறாங்க. அதெல்லாம் சுத்தப் பொய். இப்போ, `களவாணி 2', `இவனுக்கு எங்க மச்சம் இருக்கு'னு ரெண்டு படத்துக்கு ஷூட்டிங் போய்க்கிட்டு இருக்கு. இந்தப் படங்களோட ஹீரோயின்ஸ் செலக்‌ஷன்ல நான் தலையிடலை. தவிர, எனக்கு ஜோடியா இவங்க நடிக்கணும்னு சொல்ற அளவுக்குப் பெரிய ஆளா நான் இன்னும் வளரலை. சினிமாவில் நான் கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு!" என்று முடித்தார், விமல்.

அடுத்த கட்டுரைக்கு