ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., ரஜினி, கமல்... திரைப்பட விருது விழா பிளான்!

திரைப்பட மானியம் பெறவிருக்கும் 149 படங்களுக்கான பட்டியலை வெளியிட்டிருக்கிறது, தமிழக அரசு. தவிர, மானியம் பெறும் பத்து படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் காசோலையைக் கொடுத்திருக்கிறார்.

சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் உருவான படங்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது. கடந்த  2007-ஆம் ஆண்டில் இருந்து பத்து வருடங்களாக சிறு பட்ஜெட் படங்களுக்கான அரசு மானியத்தைத் தராமல் காலதாமதம் செய்துவந்தது, தமிழக அரசு. ஜெயலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசின் திரைப்பட விருதுகளும், சிறு பட்ஜெட்டில் உருவான  படங்களுக்கு தலா 7 லட்சம் அரசு மானியமும் வழங்கப்படும் என்று எடப்பாடி அரசு அறிவித்தது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழு ஒவ்வொரு வருடமும் ரிலீஸாகும் திரைப்படங்களைப் பார்க்கும். அவற்றில் தமிழக அரசின்  திரைப்பட மானியம் பெறத் தகுதிபெற்ற படங்களை இக்குழு தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்யும்.

திரைப்பட மானியம் - எடப்பாடி அரசு

அதன்படி, 2007 முதல் 2014 வரையிலான எட்டு ஆண்டுகளில் வெளியான சிறு பட்ஜெட் படங்களலிருந்து மொத்தன் 149 படங்களைத் தேர்வு செய்து, அரசு மானியம் வழங்கலாம் எனத் தமிழக அரசின் திரைப்படத் தேர்வுக்குழு பரிந்துரைத்திருக்கிறது. இன்று 149 படங்களுக்கான திரைப்பட மானியத் தொகைக்கான காசோலையை (ஒவ்வொரு படங்களுக்கும் 7 லட்சம் ரூபாய்) தருவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 

அதனடிப்படையில், 'பள்ளிக்கூடம்', 'நினைத்தாலே', 'குப்பி' படங்களைத் தயாரித்த விஸ்வாஸ் சுந்தர், 'வெளுத்துக்கட்டு' படத் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், 'அய்யா வழி' தயாரிப்பாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், 'தனம்' திரைப்படத் தயாரிப்பாளர் கெளசல்யா, 'சூர்யா' படத் தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம், 'ஆட்டநாயகன்' படத் தயாரிப்பாளர் கே.முரளிதரன், 'அவள் பெயர் தமிழரசி' படத்தின் தயாரிப்பாளர் வி.எம்.லலிதா, 'அம்மான்னா சும்மா இல்லடா' படத் தயாரிப்பாளர் கோவிந்தன்,  'நம்ம கிராமம்' படத்தின் தயாரிப்பாளர் மோகன் சர்மா, 'மலரினும் மெல்லிய' படத்தைத் தயாரித்த ராஜ மனோகரன்... ஆகிய பத்து தயாரிப்பாளர்களுக்கு மட்டும் கோட்டையில் இன்று மானியத் தொகைக்கான காசோலையைக் கொடுத்து, மானியத் தொகை வழங்கும் நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முதல்வர் காசோலை வழங்கிய படங்களைத் தவிர, மற்ற படங்களுக்கான மானியத்தை தமிழக அரசின் தலைமையத்தில் இருக்கும் செய்தி ஒளிபரப்புத்துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு அந்தந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறார்கள். 

எடப்பாடி பழனிசாமி

சென்னையில் இருக்கும் தயாரிப்பாளர்கள் இன்றே அவர்களுக்குரிய மானியத் தொகைக்கான காசோலையைப் பெற்றுக்கொள்ளலாம். வெளியூர்களில் இருக்கும் தயாரிப்பாளர்கள் சென்னைக்கு வந்து, செகரேட்டரியில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு, சிறுபட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் நெஞ்சில் பால்வார்த்து இருக்கிறது. இப்போதைக்கு மானியத்துக்கான காசோலை கிடைக்கவே கிடைக்காது என்றும், மானியத்துக்கான காசோலை வேண்டுமானால், தயாரிப்பாளர்கள் இடைத் தரகர்களுக்கு லட்சங்களில் கையூட்டு கொடுத்தால்தான் கிடைக்கும் என்று மிரட்டி வந்தனர். இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பு தயாரிப்பாளர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. 

தவிர, 2015-ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டுவரை வெளியான மூன்று வருடத் திரைப்படங்களில் மானியத்துக்குரிய தகுதிபெற்ற திரைப்படங்களையும் தேர்வுக்குழு தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துவிட்டது. அந்தப் படங்களுக்கு மானியம் வழங்கும் வேலைகளிலும் தீவிரம் காட்டும்படி உத்தரவு சென்றிருக்கிறது. அநேகமாக ஜூலை மாதத்தில் தமிழக அரசின் திரைப்பட விருது விழா நடக்கலாம் என்று சொல்கிறார்கள். இந்த விருது விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறது, எடப்பாடி பழனிசாமி அரசு. 2007-ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டுவரை வெளியான திரைப்படங்களுக்கான அனைத்து விருதுகளையும் அந்த விழா மேடையில் வழங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரே மேடையில் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், ரஜினி, கமல், விஜய், அஜித்... என முன்னணி சினிமா பிரபலங்கள் இடம்பெறுவார்கள் எனச் சொல்லும் கோட்டை வட்டாரம், திரைப்பட விருதுகளை இறுதி செய்வது, நிலுவையில் இருக்கும் மானியத் தொகைகளை வழங்குவது உள்ளிட்ட வேலைகளை சீக்கிரம் முடிக்கத் திட்டமிட்ட காரணம் இதுதான் என்கிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!