
மிஸ்டர் மியாவ்
விஜய், ஹேர்ஸ்டைலில் வெரைட்டி காட்டிவருகிறார். இப்போது, முறுக்கு மீசையும் தாடியுமாக இருக்கும் விஜய்யின் புது கெட்டப், அட்லீ இயக்க உள்ள படத்துக்குத்தான். சர்தார்ஜி கெட்டப். அந்தக் கேரக்டருக்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்கவைக்கப் பேசிவருகிறார்கள். படத்தின் சில காட்சிகளைப் பஞ்சாப்பில் ஷூட் செய்ய இருக்கிறார்கள்.

நயன்தாரா காட்டில் அடைமழை. கோபி நயினார் இயக்கத்தில் ‘அறம்’, தாஸ் ராமசாமி இயக்கத்தில் ‘டோரா’, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துவருகின்றன. ‘கொலையுதிர் காலம்’ படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் பறந்திருக்கிறார் நயன். சைக்கோ ஹாரர் த்ரில்லரான இந்தப் படத்தின் படப்பிடிப்பு அங்கு நடைபெறுகிறது.
ஸ்ருதிஹாசன் தன் 31-வது பிறந்தநாளை ஜனவரி 28-ம் தேதி ‘கட்டமரயுடு’ பட ஷூட்டிங்கில் கொண்டாடினார். மறுநாள் சென்னையில், கமல்ஹாசன் இல்லத்தில் தன் நெருங்கிய நண்பர்களான பிரபுதேவா, தமன்னா, விஷால், ஜீவா உள்ளிட்டோருக்கு பிறந்த நாள் விருந்து அளித்தார் ஸ்ருதி. தமிழில் ‘சபாஷ் நாயுடு’, தெலுங்கில் பவன் கல்யாணுடன் ‘கட்டமரயுடு’, இந்தியில் ‘பெஹன் ஹோகி டெரி’ ஆகிய படங்கள் ஸ்ருதி கைவசம்.
உருவமும், வயதும் வெற்றிக்குத் தடையில்லை என்பதை உடைத்தெறிந்து உள்ளார் 21 வயது இயக்குநர் கார்த்திக் நரேன். இவரின் ‘துருவங்கள் பதினாறு’ மூன்று கோடி ரூபாயில் தயாராகி 7 கோடி ரூபாய் வரையிலும் வசூல் செய்தது. இந்தப் படத்தில் நடிக்க அரவிந்த்சாமியைத்தான் முதலில் அணுகியிருக்கிறார் கார்த்திக் நரேன். ஆனால், ஒன் லைன் மட்டுமே கேட்டுவிட்டு நிராகரித்தார் அரவிந்த்சாமி. ஆனால், அதே அரவிந்த்சாமிதான் இவரது அடுத்த படமான ‘நரகாசூரன்’ ஹீரோ. அரவிந்த்சாமியை இயக்கவேண்டும் என்பது கார்த்திக் நரேனின் நீண்ட நாள் ஆசை. முதல் படத்தில் விட்டதை இரண்டாவது படத்திலேயே பிடித்துவிட்டார்.
‘அஜித் 57’ படத்தின் முக்கால்வாசி காட்சிகள் பல்கேரியாவில் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் பட்ஜெட்டை எகிறிவிட்டதால், வெளிநாடுகளில் எடுக்கவேண்டிய இன்டோர் ஷூட்டிங்கை சென்னையில் நடத்துகிறார்கள். அஜித்துக்கு ஃபேவரைட்டான பின்னி மில்லில்தான் செட் போட்டு மீதிக் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள்.
மியாவ் பதில்
ஜெய் - அஞ்சலி காதல், திருமணத்தில் முடியுமா?
இப்போது காதல் எம்ப்ளாய்மென்ட்டில் ஜெய், அஞ்சலி காதல் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. சினிஷ் இயக்கிவரும் ‘பலூன்’ படத்தில் ஜெய், அஞ்சலி நடித்து வருகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்தபோது, மீண்டும் காதல் மின்னல் இருவர் கண்களில் கண்சிமிட்டியது. ‘பலூன்’ பட யூனிட்டே இருவரின் அட்டகாசங்களையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது. படப்பிடிப்பு இடைவெளிவிட்ட நேரத்தில் இருவரும் சைலன்ட்டாக லண்டனுக்குப் பறந்து போயினர். தேம்ஸ் நதியோரம் கூலாக அமர்ந்து காதல் யாகம் வளர்த்தனர்.
ஊர் திரும்பியபின், ‘பலூன்’ படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. இருவரும் ஒன்றாகவே வலம்வந்தனர். ‘அஞ்சலி’ என அழைத்து வந்த படயூனிட் இப்போது ‘மேடம்’ என்கிறார்கள். உத்தரவு போட்டது ஜெய்யாம். அவர், அஞ்சலியை புதுப்படத்தில் ஒப்பந்தம் செய்ய வருகிறவர்களிடம் ‘கதை என்ன? ஹீரோ யார்?’ என்று கேள்விகேட்டு குடைகிறாராம். தன் புதுப்படங்களுக்கு எல்லாம் ஹன்சிகா, தமன்னா என முன்னணி நடிகைகளை ஒப்பந்தம் செய்யச் சொல்லி தயாரிப்பாளரை வற்புறுத்தும் ஜெய், ஏனோ ஒரு படத்தில்கூட அஞ்சலியை சிபாரிசு செய்யவே இல்லை. இதிலிருந்து புரிந்துகொள்ளுங்கள்.