Published:Updated:

அட்டகாசமாகத் தொடங்கி கிடப்பில் இருக்கும் கமல், சிம்பு, நயன்தாரா, விஷால், கார்த்தி படங்கள்!

அலாவுதின் ஹுசைன்

பல படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டிவிட்டு அட்ரஸ் இல்லாமல் 'கப்சிப்' ஆன கதைகள் தமிழ்சினிமாவில் அதிகம். அப்படி கிடப்பில் போடப்பட்ட சில படங்களின் பட்டியல் இது.

அட்டகாசமாகத் தொடங்கி கிடப்பில் இருக்கும் கமல், சிம்பு, நயன்தாரா, விஷால், கார்த்தி படங்கள்!
அட்டகாசமாகத் தொடங்கி கிடப்பில் இருக்கும் கமல், சிம்பு, நயன்தாரா, விஷால், கார்த்தி படங்கள்!

ட்ஜெட், தொழில்நுட்பம், நட்சத்திரங்களின் உடல்நிலை, படக்குழுவினருக்குள் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அரசியல் காரணங்களாலும்  சில படங்கள் குறித்த நேரத்தில் முடிவடையாமல் நின்றுவிடும். உதாரணத்திற்கு கமல்ஹாசன் தயாரித்து இயக்கிய 'மருதநாயகம்', விக்ரம் நடிப்பில் உருவாகவிருந்த ' கரிகாலன்' எனப் பல படங்களைச் சொல்லலாம். 'மருதநாயகம்' படம் எப்போது வேண்டுமானாலும் தயாராகலாம் என கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இது எல்லாப் பட ங்களுக்கும் சாத்தியமா என்றால், இல்லைதான்! இதோ, ஆரவாரமாக ஆரம்பிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட சில படங்களின் பட்டியல்!

மன்னவன் வந்தானடி:

சந்தானம், தனது காமெடியன்  இமேஜை சற்றே மாற்றி ஹீரோ ஆகிறார் என்றதும் பலருக்கும் ஷாக். இரண்டு மூன்று படங்கள்  நடிக்கத் தொடங்கிய நிலையிலேயே இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார் என்பது பெரிய பரபரப்பாக இருந்தது. இன்னொரு '7ஜி ரெயின்போ' காலனி ரேஞ்சில் இருக்கும் என எதிர்பார்க்க,  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்ததோடு சரி. இன்றுவரை அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்லாமலே இருக்கிறது.

பொன் ஒன்று கண்டேன்:

கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் விஷ்ணு விஷால், தமன்னா  நடிப்பில் உருவாகவிருப்பதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற 'பெல்லி சூப்புலு' படத்தின் ரீமேக் இது, விஷ்ணு விஷால், தமன்னா முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்... எனப் பல எதிர்பார்ப்புகள் இந்தப் படத்தைச் சுற்றியிருந்தது.       

ராஜதந்திரம் 2:

2015-ஆம் ஆண்டின் முக்கியமான வெற்றிப்படமாக இருந்தது, 'ராஜதந்திரம்'. ஓரளவு பிரபலமான முகங்களைக் கொண்டு, தரமான கதை வழியே மக்களைத் தியேட்டர் பக்கம் இழுத்தது, இப்படம். இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு படத்தின் இயக்குநர் அம்ஜத்தை மட்டும் தவிர்த்து, 'ராஜதந்திரம் 2' படத்தை ஆரம்பித்தனர். இதற்கான படத்தின் முதல் ஆறு நிமிட வீடியோவும் வெளியிடப்பட்டது. பிறகு, இப்படத்தின் எந்தவித அப்டேட்ஸும் இல்லை. 'பொன் ஒன்று கண்டேன்', 'ராஜதந்திரம் 2' இரு படங்களுக்கு செந்தில் வீராசாமி என்பவர்தான் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

கொலையுதிர் காலம்:

'உன்னைப்போல் ஒருவன்', 'பில்லா 2' படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்க, நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படம் இது. படத்தை யுவன் ஷங்கர் ராஜா, பாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. முழுக்க இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்பட்டுள்ள படப்பிடிப்பில், இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மிச்சம் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், இப்படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் தமன்னா, பிரபு தேவா ஆகியோரை வைத்துத் தொடரவிருப்பதாகச் சொல்கிறார்கள். படம் வெளிவருமா என்று நயன்தாரா மற்றும் இயக்குநருக்கு மட்டுமே தெரியும். 

கான்: 

சிம்பு  - செல்வராகவன் முதல் முறையாக இணைந்த படம், யுவன் - செல்வராகவன் கூட்டணி மீண்டும் கைகோர்த்த படம்... என அதிரடியான எதிர்பார்ப்போடு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. வழக்கமாக சிம்பு படங்களுக்கு, படப்பிடிப்புக்கு தாமதமாக வரும் சிம்புதான் காரணம் என்பார்கள். இந்தப் படத்திற்கு சிம்பு சரியாக ஷூட்டிங்கிற்கு வந்து, கிட்டத்தட்ட 20 நாள்கள் படப்பிடிப்பும் நடத்தப்பட்டு, பிறகு திடீரென நின்றது. 

கருப்பு ராஜா வெள்ளை ராஜா: 

நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகு, பிரபு தேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் இணைந்து நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம். சாயிஷா படத்தின் கதாநாயகியாகத் தேர்வாகியிருந்தார். பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட இப்படம், பின் எந்த ஆரவாரமும் இன்றி  கிடப்பில் போடப்பட்டது. பிரபல இயக்குநர் கே.சுபாஷ் எழுதிய கதை என்பதாலும், 'நடிகர் சங்கக் கட்டடத்திற்கு நானும் கார்த்தியும் இணைந்து தருவதாகக் கூறிய 10 கோடி தொகைக்கான ஆரம்பம், இந்தப் படம்' என விஷால் அறிவித்ததாலும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.     

சங்கமித்ரா:

தமிழின் 'பாகுபலி' என வர்ணிக்கப்பட்ட படம், 'சங்கமித்ரா'. சுந்தர்.சி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதி ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பதாக அறிவிப்புகள் வந்தது. சென்ற வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதன்பின் இப்படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் வெளியேறினார். பாலிவுட் நடிகை திஷா பதானி ஸ்ருதிஹாசனுக்குப் பதிலாக கமிட் ஆனார். படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகள் முழுவீச்சில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.     

சந்தனத்தேவன்:

ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த சமயத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அமீர் இயக்கத்தில் 'சந்தனத்தேவன்' என்ற படத்தில் ஆர்யா, அர்யாவின் தம்பி சத்யா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற செய்தி, போராட்டத்திற்கும் கொஞ்சம் உத்வேகம் கொடுத்தது. கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று படத்தில் இடம்பெறும் ஒரு பாடலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானதோடு சரி. இதுவரை எந்தச் சத்தமும் இல்லை. 

சபாஷ் நாயுடு:

கமல் ஹாசன் நடிப்பில் 'தசாவதாரம்' படத்தில் வந்த பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை பிரதானமாக வைத்து, 'சபாஷ் நாயுடு' என்ற பெயரில் கமல் ஹாசன் இயக்கி நடித்திருக்கும் படம் இது. அப்பா கமலுடன் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்கும் முதல் படமாகவும் இது அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி, ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில், அதற்குப் பிறகான வேலைகள் முழுவீச்சில் இல்லை. தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிறகு, கமல் - ஷங்கர் கூட்டணியில் 'இந்தியன் 2' படம் தயாராகவுள்ளது. அதனால், இப்படம் வெளியாகும் என நம்பலாம்.  

மேற்சொன்ன படங்கள் மட்டுமின்றி, பல படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டிவிட்டு அட்ரஸ் இல்லாமல் 'கப்சிப்' ஆன கதைகள் தமிழ் சினிமாவில் அதிகம். நீங்கள் மிகவும் எதிர்பார்த்து கிடப்பில் போடப்பட்ட படங்களையும், அதற்கான காரணத்தையும் ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்!