Published:Updated:

விஜய், கொண்டாட்டங்கள் நிறைந்த கம்ப்ளீட் பேக்கேஜ்..! #HBDVijay

விஜய், கொண்டாட்டங்கள் நிறைந்த கம்ப்ளீட் பேக்கேஜ்..! #HBDVijay
விஜய், கொண்டாட்டங்கள் நிறைந்த கம்ப்ளீட் பேக்கேஜ்..! #HBDVijay

விஜய், கொண்டாட்டங்கள் நிறைந்த கம்ப்ளீட் பேக்கேஜ்..! #HBDVijay

பண்டிகைகள் பல இருந்தாலும், ஏனோ தீபாவளி மட்டும் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல். புதுமையின் வாசம் கமழும் வண்ணப் புத்தாடைகள், தெருவெங்கும் நெருப்பு மலர் பூக்கும் மத்தாப்புகள், உண்ண ருசிமிகு பண்டங்கள், பார்க்க புதுரிலீஸ் படங்கள் எனக் கொண்டாட்டங்களுக்கு அளவுகோலே அல்லாத பண்டிகை அது. அப்படியான ஒரு வண்ணமிகு தீபாவளிதான் விஜய்யும் எனக்கு. நடிகர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும், ஏனோ விஜய் மட்டும் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல்! ஏன் ஸ்பெஷல்? நடிப்பு, நடனம், நகைச்சுவை, ஆக்‌ஷன், காதல், வசன உச்சரிப்பு, ஸ்க்ரீன் ப்ரெஸன்ஸ், பெரும் ரசிகர் கூட்டம் என ஒரு மாஸ் ஹீரோவுக்கு இருக்க வேண்டிய பத்துப் பொருத்தங்களும் இன்றைய தேதியில் பக்காவாய் அமையப்பெற்ற ஒரே நடிகர், கொண்டாட்டங்கள் நிறைந்த கம்ப்ளீட் பேக்கேஜ் அவர். தளபதி, கொண்டாடித் தீராத தீபாவளி!

நடனம், விஜய்யின் முக்கிய அடையாளம். சுறுசுறுவென சங்குச்சக்கரம் போல் அவ்வளவு எனர்ஜியாக ஆடுவார். `எவ்வளவு கடினமான நடனசைவாக இருந்தாலும் முகத்தில் புன்னகை மாறாமல் நளினமாக ஆடுபவர்' என்பது வார்த்தை மாறாமல் எல்லா கொரியோகிராஃபர்களும் சூட்டும் புகழாரம். `ஆல்தோட்ட பூபதி' பாடல் விஜய்யின் நடனத்திற்காக அதிகம் பேசப்பட்டது. அதன்பிறகு, அவரது நடனம் `சிவகாசி' படத்தில் அடுத்த கட்ட பரிணாமம் அடையத் தொடங்கி, `அழகிய தமிழ் மகன்' படத்தில் முழுமையடைந்தது. `எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...' பாடலில் விஜய் போட்ட மூட்டி மூவ்மென்ட் எல்லோருக்குமே ஆச்சர்யம். அதுதான், அடுத்தடுத்த படங்களில் விஜய் நடனத்தில் புதிதாய் என்ன செய்திருக்கிறாரென ஆவலை ஏற்படுத்திக் காத்திருக்க வைக்க தொடங்கியது. `குருவி', `வில்லு', `வேட்டைக்காரன்' மற்றும் `சுறா'. இந்த நான்கு படங்களும் விஜய்யை நடனத்தில் வேறோர் உயரத்துக்கு ஜிவ்வென அழைத்துச் சென்றது. சமீபத்தில், `மெர்சல் அரசன்' பாடலில் கூட தியேட்டர் தெறிக்க, சுழட்டி பிகிலடிக்கச் சுற்றி சுற்றி ஆடி கெத்துக் கிளப்பியிருப்பார் மெர்சல் அரசன்!

விஜய் அப்படியொன்றும் பேரழகு கிடையாது. அஜித், அப்பாஸ், அரவிந்த்சாமி வகையறா கிடையாது. ஆனால், எப்போதும் தண்ணி அடித்தமாதிரி ஒருவித கிரக்கத்திலேயே இருக்கும் கண்கள், எல்லாம் செய்துவிட்டு எதுவுமே செய்யாது இருப்பதுபோல் தெரியும் அப்பாவியான முகம், வாயைத் திறக்காமலேயே பேசும் அந்த ஸ்டைல், நான்கு நாள்கள் ஷேவ் பண்ணாத தாடி... அவ்வளவு க்யூட்டாக இருப்பார். `சச்சின்' படத்தில் விஜய் நக்கலாய் சிரிக்கும் போதெல்லாம் ஏனோ நமக்கும் மென்சிரிப்பு தோன்றும். `காதல் சொல்வது உதடுகள் அல்ல' பாடலின் இறுதியில், மஞ்சள் நிற பூக்களுக்கு நடுவே நின்று சிறிதாய் புன்னகையிட்டு நகர்வார். அந்த ஃப்ரேம் அம்மாடியோவ் கொள்ளையழகு. `ஷாஜகானி'ல் பார்த்த விஜய்க்கும் `சர்காரி'ல் பார்க்கும் விஜய்க்கும் குறைந்தபட்சம் ஆறு வித்தியாசம் கூட இல்லை. இளையதளபதி, பெயருக்கேற்றார்போல் என்றும் இளமையான தளபதி. 

ஆக்‌ஷன் படமென்று வந்துவிட்டால் அடியும் உதையும் கலந்து வைத்து தலைவாழை விருந்து வைப்பதுதான் தளபதியின் ஸ்டைல். பேச்சு மட்டும்தான் சைலன்டா இருக்கும். ஆனால், அடி ஒவ்வொன்றும் சரவெடி! `துப்பாக்கி' படத்தில் தீவிரவாதிகளின் குடவுனுக்குள் ஒற்றை ஆளாய் நுழைந்து, ட்யூப் லைட்டை கழட்டி அடித்துவெளுக்கும் காட்சி ஒன்றுபோதும் உதாரணத்துக்கு. `போக்கிரி' படத்தில்வரும் சண்டைக் காட்சிகளில் எல்லாம் ரத்தம் தெறிக்கும். பார்க்கும் நமக்கு வலிக்கும்! `கத்தி' காயின் ஃபைட்டாய் இருக்கட்டும், அணிந்த கூலிங் க்ளாஸ் கழண்டு விழாமல் அடியாட்களை புரட்டி எடுக்கும் `தெறி' ப்ராட்வே ஃபைட்டாய் இருக்கட்டும், எல்லாம் எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத 1000 வலா சரவெடி!  ஆக்‌ஷன் மத்தாப்பு கொளுத்தும் அதேவேளையில் காதல் ரோஜாப்பூ நீட்டுவதிலும் விஜய் தெறிபேபி. ஆரம்பகாலத்தில், லவ் அண்டு லவ் ஒன்லியென `காதலுக்கு மரியாதை', `துள்ளாத மனமும் துள்ளும்' என வலம் வந்தவர், `திருமலை'க்குப் பிறகு முழுநேர மாஸ் ஹீரோவானார். ஆனாலும், `சச்சின்', `காவலன்', `தெறி' போன்ற படங்களில் அந்தப் பழைய லவ்வர் பாய் விஜய்யை அதே உயிர்ப்போடு காணமுடியும். வாழ்க்கை என்பது ஒரு வட்டம்தானே!

எல்லாம் ஓகே. ஆல் ஏரியாவிலும் விஜய் கில்லிதான்! ஆனால், தன் படங்களில் நடிப்புக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை எனும் குற்றசாட்டை பலர் வைப்பதுண்டு. இது கொஞ்சம் உண்மைதான். ஆனால், கொஞ்சம்தான் உண்மை. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கும் விநியோஸ்தர்களுக்கும் லாபம் ஈட்டித் தொரும் மிகச் சில நடிகர்களில் முதன்மையானவர் விஜய். தமிழ்த் திரையுலகின் வணிக இயந்திரத்தில் அவர் முக்கியமானதொரு சக்கரம். அந்தச் சக்கரம் சீராகச் சுற்ற, அவர் `இளைய தளபதி'யாகவும் `தளபதி'யாகவுமே இருக்கவேண்டியதாய் இருக்கிறது. திரையில் முற்றிலும் வேறொரு விஜய்யைப் பார்க்க திரையுலகமே முதலில் தயாராக இல்லை. முற்றிலும் புதிதான, சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க விஜய் தயங்குவதற்கான காரணம் இதுதான். அந்தக் குற்றச்சாட்டிலுள்ள கொஞ்சம் உண்மை இது மட்டும்தான். உண்மையில், விஜய் முற்றிலும் வேறோர் ஆளாக மாறி நடிப்பதில்லை. ஆனால், அதற்கு விஜய் முயற்சி செய்யாமலும் இருந்ததில்லை என்பதுதான் பாயின்ட். 

இத்தனைகால உழைப்பின் பயனாய் அடைந்த மாஸ் ஹீரோ எனும் பெரும் பிம்பத்தை அவரே ஆங்காங்கே அணுகுண்டு வைத்து உடைக்க முற்பட்டிருக்கிறார். `கில்லி', `மதுர', `திருப்பாச்சி' என மூன்று மாஸ் கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர்கள் கொடுத்தபிறகு, `சச்சின்' எனும் ரோம்-காம் படத்தில் நடித்தார். மாஸ், ஆக்‌ஷன் எல்லாத்தையும் கொஞ்சம் தூரம் தள்ளிவைத்து, அவ்வளவு க்யூட்டான நடிப்பை வெளிபடுத்தியிருப்பார். `துப்பாக்கி',`கத்தி',`மெர்சல்',`தெறி' போன்ற படங்களிலும் விஜய்க்குள் இருக்கும் திறமையான நடிகரை உணரமுடியும். விஜய்யிடம் செல்ஃப் ட்ரோலிங் எனும் விஷயத்தையும் அதிகமாய் காணலாம். `தெறி' படத்தில் குள்ளமான தோற்றத்தில் தோன்றியது, `வேலாயுதம்' படத்தில் வரும் டீக்கடைக் காட்சி, `சின்னத்தாமரை' பாடலில் அனுஷ்கா மோதி கீழே விழுவதென நிறைய உதாரணங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம். `புலி' படத்தில் வில்லனின் காலைப் பிடித்து மன்றாடுவதாகட்டும், `காவலன்' படத்தில் அசினிடம் பேசிக்கொண்டே போய் தவறி விழுவதாகட்டும் கதைக்கு என்ன தேவையோ, அதைச் செய்ய விஜய் தயங்கியதில்லை. ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்யவும் தயங்கியதில்லை. இந்தத் தீபாவளியும் அதற்கு இன்னொரு சான்றாய் அமையும்... நம்புவோம் நண்பா! ஹேப்பி தீபாவளி

அடுத்த கட்டுரைக்கு