Published:Updated:

"ஏய்ய்ய்ய்ய்ய் ஹாலிவுட்டே.... நிலாவில் கால் வைத்த முதல் இந்தியர்... ஜெயம் ரவி!" - 'டிக் டிக் டிக்' விமர்சனம்

"ஏய்ய்ய்ய்ய்ய் ஹாலிவுட்டே.... நிலாவில் கால் வைத்த முதல் இந்தியர்... ஜெயம் ரவி!" - 'டிக் டிக் டிக்' விமர்சனம்

தமிழின் முதல் ஸோம்பி படம் கொடுத்த சக்தி செளந்தர் ராஜன் அண்ட் கோ எடுத்திருக்கும் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் மூவி இந்தப் படம். - 'டிக் டிக் டிக்' விமர்சனம்.

"ஏய்ய்ய்ய்ய்ய் ஹாலிவுட்டே.... நிலாவில் கால் வைத்த முதல் இந்தியர்... ஜெயம் ரவி!" - 'டிக் டிக் டிக்' விமர்சனம்

தமிழின் முதல் ஸோம்பி படம் கொடுத்த சக்தி செளந்தர் ராஜன் அண்ட் கோ எடுத்திருக்கும் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் மூவி இந்தப் படம். - 'டிக் டிக் டிக்' விமர்சனம்.

Published:Updated:
"ஏய்ய்ய்ய்ய்ய் ஹாலிவுட்டே.... நிலாவில் கால் வைத்த முதல் இந்தியர்... ஜெயம் ரவி!" - 'டிக் டிக் டிக்' விமர்சனம்

மிழின் முதல் ஸோம்பி படம் கொடுத்த சக்தி செளந்தர் ராஜன் அண்ட் கோ எடுத்திருக்கும் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் மூவி இந்த 'டிக் டிக் டிக்.’

அசுர வேகத்தில் பறந்து வரும் பிரமாண்ட விண்கல் ஒன்று வங்காள விரிகுடா அருகே விழப்போவதாகக் கணிக்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படி நடந்தால் தென்னிந்திய வரைபடமே மாறிவிடும் என்கிற அளவுக்கு அபாயம். அதை விண்வெளியில் வைத்தே தடுக்க சக்திவாய்ந்த அணு ஆயுதம் தேவை என்பதை அறிந்து, கள்ள மார்க்கெட்டில் அலசுகிறது இந்திய பாதுகாப்புத்துறை. கடைசியில் ஒரே ஓர் இடத்தில் அந்த ஆயுதம் இருப்பதாகத் தெரிய வர, அதைத் திருடவும் விண்கல்லைத் தடுக்கவும் ஜெயம் ரவி உட்பட ஒரு டீம் கிளம்புகிறது. அந்த ஆயுதம் எங்கே, விண்கல்லைத் தடுத்தார்களா இல்லையா என்பதை அதிக திக்திக் தருணங்கள் இல்லாமல் சொல்கிறது, இந்த டிக் டிக் டிக்.

விண்கல்லைத் தடுக்கும் ஹீரோவாக ஜெயம் ரவி. ஆட்டம் பாட்டத்தோடு நடிக்கும் வழக்கமான கேரக்டர் இல்லை. வெளியே இறுக்கமாக, அதே சமயம் மகனுக்காக மட்டுமே இளகும் அப்பா வேடம். நிஜ அப்பா - மகன் ஜோடியே நடித்திருப்பதால் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார்கள். 'பேராண்மை'க்குப் பிறகு முழுக்க முழுக்க சீரியஸான ரோலில் இப்போதுதான் நடிக்கிறார் ரவி. நியாயமும் செய்திருக்கிறார். ஆனால், மேஜிக் மேன், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட், ஹேக்கர்... என கேரக்டரை குழப்பியடிக்கிறார்கள். தவிர, அவ்வப்போது இந்திய ஸ்பேஸ் ஷிப்பிலும் சரி, விண்வெளியில் இருக்கும் ஆய்வு மையத்திலும் சரி... விண்வெளி வீரருக்குரிய அத்தனை டெக்னிக்கல் விஷயங்களையும் அசால்ட்டாகக் கையாள்கிறார். படத்தில், நிலாவில் கால் வைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஜெயம் ரவிக்குப் பெற்றுத் தந்திருக்கிறார் இயக்குநர். 

நிவேதா பெத்துராஜ் - ரகளைப் பெண்ணாக வலம் வந்தவருக்கு இதில் சீரியஸ் ஆர்மி வுமன் வேடம். முதல் சில நிமிடங்கள் கேரக்டருக்குள் செட் ஆகாமல் தடுமாறினாலும் செயற்கைக்கோள் விண்ணில் வேகம் பெறப் பெற நிவேதாவும் நடிப்பில் தன் ஸ்கோரை ஏற்றுகிறார். முதல் பாதியின் இறுக்கத் தருணங்களை கொஞ்சமே கொஞ்சம் தளர்த்துகிறது ரமேஷ் திலக் - அர்ஜுன் இணை. ஆனால், அர்ஜுன் வைத்திருக்கும் ஹேக்கிங் கருவியை யாருமே கண்டுபிடிக்காதது எட்டாவது அதிசயம்.

எல்லோருக்கும் சூப்பர் சீனியராக ஜெயப்பிரகாஷ். எப்போதுமே நடிப்பில் வெளுத்து வாங்குபவர் ஏனோ இந்தப் படத்தில் டல்லடிக்கிறார். அவரது நோக்கமும் படத்தில் தெளிவாக இல்லை. வின்சென்ட் அசோகனுக்கும் பெரிய ஸ்கோப் இல்லை. இன்டர்நேஷனல் வில்லனாக வரும் ஆரோன் அஸீஸுக்கு அநியாய ஹைப் ஏற்றி வழக்கமான தமிழ்ப்பட வில்லன் ஆக்கியிருக்கிறார்கள். 

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் சி.ஜி! 'கிராவிட்டி', 'இன்டர்ஸ்டெல்லார்' போன்ற பிரமாண்டங்களே தமிழ் ரசிகர்கள் பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் நிலையில், கொஞ்சம் ஏமாற்றினாலும் படம் தள்ளாடிவிடும் என்ற நிலைமைதான். ஆனால், கிராஃபிக்ஸ் அவுட்புட் படத்தில் சிறப்பாக வந்திருக்கிறது. வாழ்த்துகள் டீம்! சூப்பரான ஒளிப்பதிவு இல்லாமல் இந்தக் கிராஃபிக்ஸ் வெற்றி பெறாது. எனவே, ஒளிப்பதிவாளர் வெங்கடேஷுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். கலை இயக்குநர் மூர்த்தியின் பங்களிப்பும் அபாரம். அந்த வகையில் இந்தப் படம் டெக்னிக்கலாகப் புதிய கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது. இரண்டாம் பாதியில் மட்டும் எடிட்டர் பிரதீப் ராகவ் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

ஸ்பேஸ் மூவி... ஓகே! ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்... ஓகே! ஆனால், இந்தப் புரொமோஷனும் மாயாஜாலமும் மட்டும் போதாதே ஒரு படத்துக்கு! ஜெயம் ரவி படத்தில் செய்யும் முக்கால்வாசி விஷயங்களுக்கு லாஜிக்கே இல்லை. தமிழ் சினிமா டெக்னிக்கலாக அடுத்தகட்டம் நோக்கிப்போகிறதோ இல்லையோ தமிழ் சினிமாவில் வரும் டெக்கீகள் வேற லெவல் அட்ராசிட்டி செய்கிறார்கள். இந்தப் படத்தில் ஜெயம் ரவி அண்ட் கோ ஹேக் செய்யாத ஒரே விஷயம், விண்கல் மட்டும்தான். எடுங்க... ஆனா, நம்புறமாதிரி படம் எடுங்க!

இமானின் இசையில் 'குறும்பா' பாடல் படமாக்கப்பட்டவிதம் நன்றாக இருக்கிறது. அதற்காக விண்வெளியில் ஜெயம் ரவி மிதந்தால், நடந்தால், திரும்பினால் எல்லாம் தீம் மியூசிக் போட்டு அதிரடிப்பது நியாயமில்லை சாரே! ஜெயம் ரவியை மிரட்டும் திடீர் வில்லன், மருந்துக்குக்கூட இஸ்ரோ உள்ளிட்ட எந்த விண்வெளி ஆய்வதிகாரிகளையும் காட்டாதது, எதற்கென்றே தெரியாத ஒரு கொலை முயற்சி, பிம்பிலிக்கா பிலாப்பி மேஜிக் வித்தைகள்... என திரைக்கதையில் எக்கச்சக்க ஓட்டைகள். குறிப்பாக, முதல் 30 நிமிடங்கள் அநியாய செயற்கைத்தனம். கொஞ்சம் கதையிலயும் கவனம் செலுத்தியிருக்கலாம் சக்தி ப்ரோ!

'ஸ்பேஸ் மூவி' என்பதில் ஸ்பேஸுக்கு முடிந்த அளவுக்கு நியாயம் செய்திருக்கிறது படக்குழு. ஆனால், ஒரு திரைப்படமாக கனமான கதை இல்லாததால் ஏமாற்றமளிக்கிறது 'டிக்டிக்டிக்’.