Published:Updated:

`கல்யாணம்னா ஒரே வீட்ல உக்காந்து வத்தக்குழம்பை நக்கிச் சாப்பிடுறதா!?’ `தடயம்’ சுயாதீனப் படம் ஒரு பார்வை!

சுஜிதா சென்

எழுத்தாளர் தமயந்தியின் `தடயம்' குறும்படம் குறித்த கட்டுரை.

`கல்யாணம்னா ஒரே வீட்ல உக்காந்து வத்தக்குழம்பை நக்கிச் சாப்பிடுறதா!?’ `தடயம்’ சுயாதீனப் படம் ஒரு பார்வை!
`கல்யாணம்னா ஒரே வீட்ல உக்காந்து வத்தக்குழம்பை நக்கிச் சாப்பிடுறதா!?’ `தடயம்’ சுயாதீனப் படம் ஒரு பார்வை!

ஓர் ஆண் கதை சொல்வதற்கும், ஒரு பெண் கதை சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. பெண்களின் கதைகள் அதற்கே உரித்தான குணங்களையும், அழுத்தங்களையும், உணர்ச்சிகளையும் கொண்டிருக்கும். காரணம், ஆண்களைவிட ஒருபடி அதிகம் உணர்ச்சிகளை பெண்கள்தாம் வெளிப்படுத்துவார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. அப்படி ஒரு பெண் பார்வையிலிருந்து எடுக்கப்பட்டிருக்கும் சுயாதீனப் படம்தான், `தடயம்'. இலக்கிய வட்டத்துக்கு நன்கு பரிச்சயமான எழுத்தாளர் தமயந்தி இந்த சுயாதீனப் படம் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.  

கதைகளின் ஆதி அங்கமாக இருக்கும் `காதலும் காதல் நிமித்தமுமான'வைதாம் இக்கதையின் தளம். முன்னாள் காதலர்கள் தேவாவையும், ஜெனியையும் காலம் மீண்டும் ஒருமுறை சந்திக்க வைக்கிறது. அப்படியொரு தருணம் தன் வாழ்நாளில் நடக்கவே நடக்காது என்று தீர்க்கமாக நம்பிக்கொண்டிருந்தார், ஜெனி. சிறுவயதிலிருந்தே அவர் விரும்பிய, இன்னமும் விரும்பிக்கொண்டிருக்கும் ஒருவர்தான், தேவா. அவனும் இவளை உளமாரக் காதலிக்கிறான். சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் இவர்கள் இருவரும் பிரியவேண்டிய நிலை. அந்தப் பிரிவுக்குக் காரணமாக ஜெனி இருக்கிறாள். வலி கடந்து, காலங்கள் சென்று, நரை கூடி இவர்கள் இருவரும் சந்திக்கும் தருணம் எப்படி இருக்கிறது என்பதுதான், இப்படத்தின் கதை. இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஜெனிக்குக் கொடிய கேன்சர் நோய். அதனால்தான், தேவா ஜெனியைச் சந்திக்க முக்கியக் காரணம்!

சாதாரணமாகப் பேசும்போதுகூட தூயத் தமிழில் கவிதை நயத்துடன் பேசுவது, ஜோக் அடிப்பது, அளவுகடந்த காதலை சூழலுக்கேற்ப வெளிப்படுத்துவது என்று மேட்டிமைத்தனம் கொண்டவளாக ஜெனியும், தன் பழைய காதலி தற்போது கஷ்டப்படுவதை பார்த்து கையாலாகாத மனநிலையைக் கொண்டவராக தேவாவும் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பேசிக்கொள்ள ஆயிரமாயிரம் கதைகள் இருந்தாலும், மிச்சப்படுவது மௌனம் மட்டுமே. அதையும் தாண்டி தேவாவின் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கும்போது, `நான் இப்போ கள்ளக் காதலிதானே' என்கிறாள், ஜெனி. செய்வதறியாது நிற்பதைவிட தேவாவால் அப்போது ஒன்றும் செய்யமுடியவில்லை. படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு பெண் இதற்குமேல் வேறென்ன யோசிப்பாள், பேசுவாள் என்பதை மிக யதார்த்தமாகச் சொல்கிறது, ஜெனி கதாபாத்திரம். தன் காதலியை உச்சிமுகர்ந்து இதழ் முத்தம் கொடுக்க வருகையில், `பரிதாப முத்தங்களை இயேசு நிராகரிப்பார்' என்கிற வார்த்தை ஜெனிமீது நம்மையும் காதல் கொள்ள வைக்கிறது.

`கல்யாணம்னா என்னனு நினைக்கிற? ஒரே வீட்ல உட்கார்ந்து வத்தக் குழம்பை நக்கி நக்கி சாப்பிடுறதுனு நினைச்சுட்டு இருக்கியா?' என்று ஜெனி கேட்கும் நேரத்தில், படம் பார்ப்பவர்கள் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் நின்றது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது. `ஒரே வீட்ல பி.சுசீலாவும், ஒளரங்கசீப்பும் ஒண்ணா வாழமுடியுமா?' என்பது போன்ற வசனங்களுக்காகப் படத்தின் எழுத்தாளர் தமயந்திக்கு வாழ்த்துகள். 

``நம்ம ரெண்டு பேருக்கும் ஏன் கல்யாணம் ஆகலை"

``ஏன்னா நம்ம ரெண்டுபேருக்கும் சண்டையே வராது. அதான் கடவுளாப் பார்த்து சேர்த்து வைக்கலை" 

``அப்போ உங்க கடவுள் சண்டைகளைத்தான் ஆதரிக்கிறாரா?"

எனும் வசனங்கள் தடயத்தைக் காப்பாற்றியுள்ளது எனலாம்.

இந்த ஒரு மணிநேரக் கதையில் கேமரா முழுவதும் அந்த ஓர் அறையையே சுற்றி சுற்றி வருவது... சின்னச் சலிப்பு! அவ்வளவு அர்த்தமான உரையாடல்களுக்கு இடையே ஒரு டூயட்... ஏன் தமயந்தி? 

`தடயம்’ குறித்து தமயந்தி பகிர்ந்துகொண்ட கருத்துகளில் இது எனக்கு முக்கியமாகப் பட்டது. ``நிறைய ஆவணப் படங்களை இயக்கி இருக்கிறேன். ஆனால் ஒரு சுயாதீனப் படத்தை கூட்டுத் தயாரிப்பு முயற்சியில் இயக்குவது மிகக் கடினம். அவ்வாறான திரைப்படங்களை புரோமோட் செய்யும் வழிமுறைகளும் குறைவு. மாலா மணியனின் பர்ஸ்ட் புரொடக்ஷன் இப்படத்தின் வர்த்தகம் செய்வது தமிழ் சூழலில் மிக முக்கியமானது. இதைப் போல் சுயாதீனப் படங்களும் அதை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களும் பெருக வேண்டும். இக்கதை ஆனந்த விகடனில் வந்த போது இக்கதையைப் பல இயக்குநர்கள் குறும்படமாக இயக்க விரும்பினார்கள். என் எழுத்தில் எனக்கு பெர்சனலாக மிகவும் பிடித்த கதைகளில் இதுவும் இன்று. அதனால், நானே இதை இயக்க முடிவு செய்தேன். இசை அமைப்பாளர் ஜஸ்டின் கெனன்யா, கேமராமேன் ஆண்டனி ஜெய், எடிட்டர் டி.பிரவின் பாஸ்கர் இவர்கள் மூவரும்தாம் எனது பக்க பலம். அவர்களுக்கு நன்றி!" என்றார். 

இந்தக் சுயாதீனப் படம்  மூலம் அறிமுக இயக்குநராகக் கவனம் ஈர்க்கிறார் தமயந்தி. அதே சமயம், `எழுத்தாளர் தமயந்தி'  நிர்ணயித்திருக்கும் பென்ச்மார்க்கை, 'இயக்குநர் தமயந்தி' வெகுவிரைவில் எட்டிப் பிடிக்க வாழ்த்துகள்..!