Published:Updated:

பாவம் இந்தப் பெண்கள்! - உலக சினிமா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாவம் இந்தப் பெண்கள்! - உலக சினிமா
பாவம் இந்தப் பெண்கள்! - உலக சினிமா

எம்.ராஜேந்திரன்

பிரீமியம் ஸ்டோரி

மூன்று வெவ்வேறு காலகட்டங்களில், மூன்று வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்த, மூன்று பெண்களைப் பற்றிய திரைப்படங்கள் இவை. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தச் சமூகத்தில் பெண்கள் எத்தகைய துயரங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை இந்தத் திரைப்படங்கள் உணர்த்துகின்றன.


ஆல்பர்ட் நோப்ஸ் (Albert Nobbs)

பாவம் இந்தப் பெண்கள்! - உலக சினிமாஇயக்கம்: ராட்ரிகோ க்ரேஸியர்

பனிபொழியும் அயர்லாந்தில் டூப்ளின் நகரம். 19-ம் நூற்றாண்டு.

அந்நாட்களில், பெண்கள் தனித்து வாழ சமூகம் அனுமதிப்பது இல்லை. பெண் என்றாலே, யாரேனும் ஒரு ஆணோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பது, அந்நாட்டின் எழுதப்படாத விதி! இவ்விதியின் மையக்கருத்தாகத்தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை படம் முழுவதும் செல்கிறது.

ஆல்பர்ட் நோப்ஸ், தகாத உறவில் பிறந்த பெண். அவளுடைய தந்தை யார் என்று சொல்வதற்கு முன்பே, தாயார் இறந்துவிடுகிறாள். அநாதையாக ஒரு கான்வென்ட்டில் வளரும் ஆல்பர்ட் நோப்ஸின் 14 வயதில், நான்கைந்து இளைஞர்கள் அவளை பாலியல் பலாத்காரம் செய்துவிடுகின்றனர். பிறகு, அங்கே இங்கே என்று சிறு சிறு வேலைகள் செய்யும் அவளுக்கு மாரிசன் ஹோட்டலில் வேலை கிடைக்கிறது. அவள் ஆணாக மாறுவேடம் பூண்டதான், அந்த ஹோட்டலில் வேலைக்குச் சேர முடிகிறது.

செல்வந்தர்கள் மட்டுமே வந்து தங்கும் மாரிசன் ஹோட்டலின் சொந்தக்காரி திருமதி பேக்கர். கண்டிப்பு நிறைந்த பேர்வழி!

பாவம் இந்தப் பெண்கள்! - உலக சினிமா

யாருக்குமே சந்தேகம் வராத வண்ணம் ஆல்பர்ட் நோப்ஸின் அன்றாட பணிகள் நடக்கின்றன. அவ்வப்போது ஹோட்டலில் வந்து தங்கும் வாடிக்கையாளரின் டிப்ஸும் அவளுக்குக் கிடைக்கிறது. இப்படிக் கிடைக்கும் பணத்தில் 600 டாலர்கள் வரை அவள் சேமிக்கிறாள். இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்த பின், தனியாக புகையிலைத் தூள் விற்கும் கடையை நடத்தவேண்டும் என்பது அவளின் ஆசை. அதற்காக, வியாபாரத்தில் நலிவடைந்த ஒரு காலியான கடையை அவள் அடிக்கடி போய்ப் பார்ப்பது வழக்கம்.

இதற்கிடையில், ஹோட்டலின் ஓர் அறைக்கு வர்ணம் பூச, ஹியூபர்ட் பேஜ் என்ற இளைஞனை வரவழைக்கிறாள் திருமதி பேக்கர். அன்றிரவு அவன் தங்குவதற்கு நோப்ஸின் அறையைப் பயன்படுத்திக்கொள்ளச் சொல்கிறாள். ரகசியம் வெளியாகிவிடும் என்ற பயத்தில், நோப்ஸ் அவனுக்கு இடம் தர மறுக்கிறாள். ஆனால், பேக்கரின் உத்தரவை மீற முடியாமல், வேறு வழியின்றி நோப்ஸ் சம்மதிக்கிறாள்.

அன்றிரவு, நோப்ஸின் அறையில் தங்கும் ஹியூபர்ட் பேஜுக்கு விஷயம் தெரிந்துவிடுகிறது. இதனால் மிரளும் நோப்ஸிடம், 'நான் இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லமாட்டேன்’ என ஹியூபர்ட் சத்தியம் செய்தும், நோப்ஸின் பயம் விலகுவதாகத் தெரியவில்லை. வேறு வழியின்றி, ஹியூபர்ட் தன் மேல்சட்டையை விலக்குகிறான். அப்புறம்தான் அவளுக்கு உண்மை தெரிகிறது... ஹியூபர்ட் ஆண் அல்ல; பெண்! அதுமட்டுமின்றி, தையல் வேலையில் ஈடுபட்டுள்ள கேத்தலினா என்ற பெண்ணை தான் மணந்திருப்பதாகக் கூறுகிறாள் ஹியூபர்ட்.

அதே ஓட்டலில் வேலை பார்க்கும் இன்னொரு பெண் ஹெலன் டேவ்ஸ். வயது 20; ரொம்ப அழகாக இருப்பாள். ஆனால், வாய் துடுக்கு அதிகம். அங்கே வேலைக்குச் சேரும் ஜோ மெக்கின்ஸ் என்ற இளைஞனோடு காதலும் சரசமுமாக சந்தோஷமாக பொழுதைப் போக்குகிறாள் அவள். ஆனால், ஜோ மெக்கின்ஸ் ஒரு குடிகாரன். அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்ற கனவோடு வாழ்பவன்.

ஒரு நாள், ஹியூபர்ட் பேஜின் வீட்டுக்குப் போகிறாள் ஆல்பர்ட் நோப்ஸ். அங்கே அவளுடைய மனைவி கேத்தலினாவைச் சந்திக்கிறாள். இருவரும் மனமொத்த வாழ்க்கையை வாழுவதைக் கண்டதும், இவருக்கும் அதேபோல் வாழ ஆசை பிறக்கிறது. இதனால் அவர் ஹெலன் டேவ்ஸை நாடுகிறாள்.

திடீரென நகரத்தில், ஹோட்டலில் என எல்லா இடங்களிலும் டைஃபாய்டு காய்ச்சல் பரவுகிறது. நோப்ஸுக்கும்கூட காய்ச்சல் வருகிறது. பேக்கரின் எதிர்ப்பையும் மீறி, சுகாதார அதிகாரிகள் ஹோட்டலை மூடுகின்றனர். எனினும், நோப்ஸ் அதில் இருந்து மீண்டு எழுகிறாள். பிறகு, ஹியூபர்ட் பேஜின் வீட்டுக்குச் செல்கிறாள். அங்கே டைஃபாய்டு காய்ச்சலில் கேத்தலினா இறந்துவிட்டதை அறிந்துகொள்கிறாள். அவளின் நினைவாக, அவள் தைத்து வைத்திருந்த பெண்களுக்கான ஆடைகளை அணிந்துகொண்டு, இருவரும் நிஜமான பெண்களாக கடற்கரையெங்கும் ஓடுகின்றனர். ஆனாலும், பல ஆண்டுகளாக ஆண்களாகவே வாழ்ந்த அவர்கள், பெண்ணின் ஆடைகளை அந்நியமாக உணருகின்றனர்.

பாவம் இந்தப் பெண்கள்! - உலக சினிமா

மீண்டும் நோப்ஸ், ஹெலன் டேவ்ஸிடம் மன்றாடுகிறாள். தன்னைக் காதலிக்கும்படி கெஞ்சுகிறாள். ஆனால், வயதான அவளுடன் நடந்துசெல்வதேகூடத் தனக்குப் பிடிக்கவில்லை என ஹெலன் தன் காதலன் ஜோவிடம் கூறுகிறாள். அவனோ அமெரிக்கா போகும் கனவில், ''நோப்ஸிடம் நெருங்கிப் பழகு. அப்போதுதான் அவள் விலையுயர்ந்த பரிசுகளையும் பணத்தையும் தருவாள். அந்தப் பணம் அமெரிக்கா செல்வதற்கு உதவும்!'' என ஆலோசனை சொல்கிறான். அவன் சொன்னபடி நோப்ஸுடன் அவ்வப்போது வெளியில் செல்கிறாள் ஹெலன். அவ்வப்போது அவள் வாங்கித் தரும் பரிசுகளை ஜோவிடம் தருகிறாள்.

அதே சமயம், அங்கு பணிபுரியும் மற்றொரு பெண்மணி, 'மெக்கென்ஸ் நல்லவன் கிடையாது. அவனை நம்புவது தவறு’ என்று எச்சரிக்கை செய்கிறாள். அவளின் வார்த்தைகளை அலட்சியம் செய்யும் ஹெலன், ஒருநாள் கர்ப்பமடைகிறாள். இதை அவள் அவனிடம் கூற, அவன் எரிச்சல் அடைகிறான்.

ஒருநாள், ஹெலனுக்கும் ஜோவுக்கும் தகராறு மூள்கிறது. அதை விலக்கப்போகும் நோப்ஸை ஜோ தள்ளிவிட, சுவரில் மோதி விழுந்து, தலையில் ரத்தம் வர, வலியோடு தன் அறைக்குச் செல்லும் நோப்ஸ், அன்றிரவே இறந்துவிடுகிறாள். யாருமற்ற அறையில் அவரைச் சோதிக்கும் டாக்டர், அவள் ஒரு பெண் என்பதைக் கண்டுகொள்கிறார். ஆனால், அவர் அதைப் பற்றி ஒருவரிடமும் சொல்லவில்லை.

இதே சமயம், பணக் கஷ்டத்தில் இருக்கும் பேக்கர், நோப்ஸ் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைக் கைப்பற்றி, ஹோட்டலுக்கு வர்ணம் அடித்துப் புதுப்பிக்க ஹியூபர்ட் பேஜை வரவழைக்கிறார்.

ஜோ மெக்கின்ஸ் தனியாக அமெரிக்கா செல்கிறான். ஹெலனுக்குக் குழந்தை பிறக்கிறது. அதற்கு ஆல்பர்ட் நோப்ஸ் என்று பெயரிடுகிறாள். குழந்தையோடு தவிக்கும் ஹெலனிடம், அவளையும் அவள் குழந்தையையும் நோப்ஸின் நினைவாக தான் ஏற்றுக்கொள்வதாக ஹியூபர்ட் பேஜ் சொல்வதோடு படம் முடிகிறது.

34 நாட்களில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் கதையை எழுதியவர், இந்தப் படத்தின் கதாநாயகி க்ளென் க்ளோஸ்.எவ்வித ஆர்ப்பாட்டமோ அடிதடியோ இல்லாமல் நேர்க்கோட்டில் சீராகச் செல்லும் இந்தப் படம் யாருக்கும் எவ்வித அறிவுரையும் சொல்லவில்லை. எனினும், ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு வகையில் எல்லோ ருக்கும் தன் உண்மையான முகத்தைக் காட்டாமல், மூடியே வருகிறான் என்கிற உண்மை, படம் பார்க்கும்போது நமக்குள் உறைக்கிறது.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஆணாகவே வாழ்ந்த ஆல்பர்ட் நோப்ஸின் கதை, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை உணரும்போது, நம் கண்களில் நம்மையறியாமல் நீர் துளிர்க்கிறது.

மெலினா (Malena)

இயக்கம்: குஸ்ஸிப்பி டொர்னாட்ரோ

பாவம் இந்தப் பெண்கள்! - உலக சினிமாபோர் என்றாலே, மக்களுக்கு பாதிப்புதான் என்பதில் சந்தேகம் இல்லை. அதிலும் பெண்களுக்கு பாதிப்புகள் அதிகம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், இத்தாலி சிசிலி நகரத்தில் வாழ்ந்த மெலினா என்ற பெண்ணின் கதை இது. தனியாக வாழும் அவள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டாள் என்பதுதான் இந்தப் படம் சொல்லும் கதை. அதிலும், அழகான ஒரு பெண் சந்தர்ப்ப சூழ்நிலையால் தனியாக வாழும்போது, இந்தச் சமூகம் அவளை எப்படியெல்லாம் பார்க்கிறது என்பது உலகறிந்த விஷயம்.

இரண்டாம் உலகப்போர் சமயம்; இத்தாலி நாட்டு சிசிலி நகரம்; கணவனும் ராணுவ வீரனுமான நினோல் ஸ்கார்டியா எங்கோ ஒரு போர்க்களத்தில் இருக்க, தன்னந்தனிமையில் வாழ்கிறாள் மெலினா. கிரேக்க தேவதைகளையும் தோற்கடிக்கும் பேரழகி! அவள் அந்த நகரத்து வீதிகளில் நடந்து செல்லும்போது, மற்ற பெண்கள் பொறாமையினாலும் காழ்ப்பு உணர்ச்சியாலும் அவளைக் கரித்துக்கொட்ட, ஆண்களோ அவளைக் கொண்டாடுகின்றனர்; சொந்தங்கொள்ள முயற்சிக்கின்றனர். ஒரே ஒரு தடவையாவது தொட்டுவிட மாட்டோமா எனத் துடிக்கின்றனர்.

அந்த ஆண்களின் கூட்டத்தில் பத்துப் பதினைந்து வயது விடலைச் சிறுவர்களும் அடக்கம். அவர்களில் ஒருவன்தான் 13 வயது ரொனாட்டோ. புதிதாக வாங்கிய சைக்கிளை ஓட்டிக்கொண்டு வரும் ரொனாட்டோ, கடற்கரைச் சாலையில் அரட்டையடித்துக்கொண்டிருக்கும் சக நண்பர்களோடு போய்ச் சேர்ந்துகொள்ளும்போதுதான், முதன்முதலாக மெலினாவைப் பார்க்கிறான். அப்போது அவளின் முகமும் உடலும், அவள் நடக்கும்போது ஏற்படும் அசைவுகளும் தன்னுடலில் ஏற்படுத்தும் மாற்றத்தைத் திகைப்புடன் கவனிக்கும் ரொனாட்டோ, அந்த நொடியில் இருந்து அவளின் மேல் பைத்தியமாகிவிடுகிறான். அதோடு நில்லாமல், ஒரு தேர்ந்த உளவாளிபோல் அவள் செல்லும் இடம் எல்லாம் அவளுக்கு முன்பாகவே சென்று, அவளின் பார்வையில் படுவதுபோல் நிற்கிறான். ஆனால், நகரத்து ஆண்களின் மோகப் பார்வைகளுக்கு, வெற்றுப் பார்வை, கல்லாகச் சமைந்த முகம் என மெலினா தரும் எதிர்ப் பார்வைதான் ரொனாட்டோவுக்கும் கிடைக்கிறது.

பாவம் இந்தப் பெண்கள்! - உலக சினிமா

ரொனாட்டோவும் அவனுடைய நண்பர்களும் படிக்கின்ற பள்ளியில்தான் மெலினாவின் தந்தை லத்தீன் மொழி ஆசிரியராக இருக்கிறார். அவர் வயது முதிர்ந்தவர்; காது கேளாதாவர். அவருடைய வீட்டுக்கு அவ்வப்போது சென்று பணிவிடை புரிவது மெலினாவின் வழக்கம்.

திடீரென ஒரு நாள், அவளுடைய கணவன் போரில் மரணமடைந்த செய்தி கிடைக்கிறது. அதைத் தொடர்ந்து, எவ்விதக் கட்டுப்பாடுகளுமற்ற மெலினா தான் விரும்பும் ஆண்களோடு சோரம் போகிறாள் என்ற வதந்திகளும் பரவுகிறது. இதனால் மன உளைச்ச லுக்கு ஆளாகும் அவருடைய தந்தை, அவமானம் தாங்காமல் வேலையை விடுவதோடு, மகளுடனான உறவையும் முறித்துக்கொள்கிறார். பிறிதொரு நாளில் நடக்கும் விமான குண்டுவீச்சில் உயிரையும் துறக்கிறார். தவிர, மெலினாவோடு உள்ளார்ந்த நட்பு பாராட்டிய குற்றத்துக்காக இளம் ராணுவ அதிகாரி ஒருவனும் பணிமாற்றம் செய்யப்பட்டு, வேறொரு ஊருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றான்.

நாட்கள் நகர நகர, மெலினா பற்றிய வதந்திகள் வேகமும் பலமும் பெறுகின்றன. பல் டாக்டர் ஒருவரின் மனைவி, மெலினா தன் கணவனை மயக்கிவிட்டாள் என வழக்குத் தொடுக்கிறாள். வக்கீலின் வாதத் திறமையால் மெலினா விடுபடுகிறாள். 'வழக்குக்கான கட்டணம் உன் உடம்புதான்!’ என்கிறார் அந்த வக்கீல். கையில் இருக்கும் சொற்ப பணத்தைத் தந்துவிட்டு, தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறாள் மெலினா.

போர் உச்சத்தைத் தொடும் காலத்தில், எல்லா இடத்திலும் உணவுப் பொருள் திண்டாட்டம் தாண்டவமாட, அது மெலினாவையும் பாதிக்கிறது. அந்த பாதிப்பில் இருந்து தப்புவதற்காக, அவள் தன்னுடைய நீளக் கூந்தலைக் குட்டையாக கத்தரித்து, செவ்வண்ணம் ஏற்றி, நகரத்தில் கூடாரமிட்டிருக்கும் ஜெர்மன் ராணுவ அதிகாரிகளிடம் போய்ச் சேர்ந்துகொள்கிறாள். அவர்களோடு கார்களில் ஏறிப் பறக்கிறாள். உணவுப் பிரச்னையையும் தீர்த்துக்கொள்கிறாள்.

இருப்பினும், போரில் நாஜிப் படைகள் தோற்றுவிட, மறுபடியும் ஆதரவற்றுப் பரிதவிக்கிறாள் மெலினா. அதீதமான பொறாமையினால் வெகுண்டெழும் பெண்களின் கூட்டம், அவளை அடித்து உதைத்து, நடுத்தெருவில் போட்டுவிட்டுச் செல்கிறது.

அன்று மாலை, மெஸினா என்ற இடத்திற்குச் செல்லும் ரயிலில் மெலினா புறப்பட்டுப் போவதை ரொனாட்டோ பார்க்கிறான். அடுத்த சில தினங்களில், செத்துப்போனதாகக் கருதப்பட்ட மெலினாவின் கணவன் நினோ ஸ்கார்டியோ, ஒரு கையை இழந்த நிலையில், சிசிலிக்குத் திரும்பி வருகிறான். போர் அகதிகளால் நிரம்பி வழியும் தன் வீட்டைக் கண்டு திகைக்கிறான். மனைவியைப் பற்றி விசாரிக்கப்போகும் இடத்தில், 'உன் மனைவி ஒரு விபசாரி’ என்ற குற்றச்சாட்டுடன் அடியும் உதையும் வாங்குகிறான்.

அன்றிரவு மனம் வெதும்பிய நிலையில் தெருவோரம் அமர்ந்திருக்கும் அவன் மடியில் ரொனட்டோ வீசும் கடிதமொன்று விழுகிறது. அதில், 'மற்றவர்கள் சொல்லும் பழிகளை நம்பாதீர்கள். உங்கள் மனைவி உத்தமி. உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் வேறு ஒரு இடத்துக்குப் புறப்பட்டுப் போய்விட்டாள்’ என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது.

பாவம் இந்தப் பெண்கள்! - உலக சினிமா

ஒரு வருடம் கழிகிறது. வழக்கப்படி இயங்கிக்கொண்டிருக்கும் சிசிலி நகரத்து மக்கள், அன்றைய தினம் ஸ்தம்பித்துப்போகிறார்கள். அவர்களோடு சேர்ந்து, வாயில் சிகரெட், உடன் ஓர் இளம்பெண் என முழு நீள கோட் சூட், தொப்பி சகிதம் நிற்கும் ரொனாட்டாவும் திகைத்துப்போகிறான். அவனுடைய பார்வையில், மெலினா தன் கணவனோடு, வீட்டுக்குச் செல்லும் காட்சி தெரிகிறது.

மனிதனுடைய காம உணர்வு உடல்ரீதியாக 14 வயதில் தொடங்கி 21 வயதில் உச்சமடைகிறது. அதன்பின் சரிந்துகொண்டே செல்கிறது. அந்தச் சரிவின் கடைசிப் புள்ளிகளில் நிற்கும் பெரியவர்களே மெலினாவைக் கண்டு அவஸ்தைப்படும்போது, தொடக்கத்தில் இருக்கும் விடலைப் பருவத்தினரது நிலைமை என்னவாக இருக்கும்? அதுவும் போரின் குழப்பம் காரணமாக, நெறிப்படுத்தப்படாமல் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சூழ்நிலையில்? அந்த நிலைமையின் சங்கடங்கள்தான் ரொனாட்டோவுக்கும் அவன் தோழர்களுக்கும் ஏற்படுகின்றன.

ஆனால், ரொனாட்டோ அத்தனை மோசமான சிறுவன் அல்ல. மெலினாவைப் பற்றி ஆபாசமாகப் பேசும் தோழனை அவன் அடித்துக் கீழே சாய்க்கிறான். அதே சமயம் தன் கற்பனையில், பழங்கால ரோமானியப் படை வீரனாக வாளேந்தி நிற்கிறான். நேரெதிரே மகாராணி கோலத்தில் இருக்கும் மெலினா சைகை செய்தவுடன், எதிராளியை துவம்சம் செய்கிறான். அடுத்து அவள் போகுமிடம் எல்லாம் பின்தொடர்கிறான். அதிவேகமாக செல்லும் சாரட்டில் பிரயாணித்தப்படி, எதிரிகளைச் சுடுகிறான். கடற்கரையில் எண்ணற்ற காதல் கடிதங்களை எழுதி, திருப்தியின்மையாலோ அல்லது பயத்தாலோ கசக்கி எறிகிறான்; தன் காதலை நிறைவேற்றி வைக்கும்படி மேரி மாதாவிடம் விண்ணப்பிக்கிறான். அவளைப் பற்றி அவதூறு பேசும் ஒரு பெண்மணியின் கைப்பையில் சிறுநீர் கழிக்கிறான்; இறுதியில், மெலினா ஜெர்மன் அதிகாரிகளிடம் சேர்ந்தவுடன், அவளைப் பற்றி நகரத்து மக்கள் அருவருப்பாக விவாதிக்க, அந்த விவாதங்கள் ரொனாட்டோவின் மண்டைக்குள் ஏற, அவன் இப்படிப்பட்ட கற்பனைகளோடே மெலினாவை நினைத்தபடி வாழ்கிறான்.

படத்தில் சில நிமிடங்களே வரும் ரொனாட்டோவின் தந்தை பாத்திரமும் முக்கியமானதுதான். ஆரம்பத்தில் மகனின் நடவடிக்கைகளில் கோபப்படும் அவருக்கு, பின்னர்தான் அவனுடைய உணர்வுகள் புரிகின்றன. அதைப்பற்றி அவர் புலம்பும் புலம்பல்கள் நகைச்சுவையின் சிகரங்கள்.

படத்தின் இறுதிக் காட்சி மிக முக்கியமானது. தன் கணவனுடன் ஊர் திரும்பும் மெலினாவைக் காணும் பெண்கள், ''அவள் முன்புபோல் அழகாக இல்லை. சற்று குண்டாகிவிட்டாள். கண்களின் கீழே சுருக்கங்கள் விழுந்துவிட்டன. இனிமேல் இவளைப் பற்றிக் கவலையில்லை'' என்று முணுமுணுத்தாலும், அவர்களின் உண்மையான உணர்வுகள் வேறு. அது, மெலினா தன் கணவனைத் தவிர, வேறு யாரையுமே காதலிக்கவில்லை; அவள் புனிதமானவள்; அவளை அவதூறாகப் பேசியதும் அலங்கோலப்படுத்தியதும் தங்களுடைய தவறு என்ற குற்றவுணர்வே! இதனால், மறுநாள் காய்கறி வாங்க வரும் மெலினாவுக்கு, அத்தனைப் பெண்களும் வணக்கம் சொல்கிறார்கள். ஒரு பெண் மேல்கோட்டு ஒன்றை இலவசமாகத் தருகிறாள்.

இறுதியாக, வீடு நோக்கி நடக்கும் மெலினாவின் பையில் இருந்து பழங்கள் சிதற, அவற்றைத் திரும்பவும் எடுத்துப் பையில் போடுவதற்கு ரொனாட்டோ உதவுகிறான். பின்பு, முதலும் கடைசியுமாக அவளிடம் பேசுகிறான்... ''வாழ்த்துக்கள் திருமதி மெலினா!'' ஆம். இனி அவன் அவளைப் பின்தொடர மாட்டான் என்பதை நிச்சயப்படுத்தும் விதமாக அவனுடைய குரல் பின்னணியில் ஒலிக்கிறது... ''நான் பழகிய பெண்கள் எல்லாம், 'என்னை ஞாபகத்தில் வைத்துக்கொள்வாயா?’ என்று கேட்கிறார்கள். ஆனால், நான் ஞாபகத்தில் வைத்திருக்கப்போவது, அந்தக் கேள்வியை கேட்காத அந்தப் பெண் மட்டுமே!''

ஸ்டோனிங் ஆஃப் சுரயா எம் ( The Stoning Of Suraya M)

பாவம் இந்தப் பெண்கள்! - உலக சினிமாஇயக்கம்: சைரஸ் நவ்ரஸெத்

சிறு வயதில் விளையாடும்போது, நாயைக் கண்டால் கல்லெறிவோம். ஆனால் பெரியவர்களோ, 'நாய் மீது கல்லெறியாதீர்கள். அது வாயில்லா ஜீவன், பாவம்!’ என்று நம்மைக் கண்டிப்பார்கள். ஆனால், இந்த 21-ம் நூற்றாண்டில், நாய்க்கும் கருணை காட்டும் இந்தச் சமூகத்தில்தான், உலகத்தின் சில பகுதிகளில் குற்றம் இழைத்ததாகக் கூறப்படும் பெண்ணுக்குத் தண்டனையாக, அவரைக் கல்லால் அடித்தே கொன்றுவிடுகிறார்கள். அதுவும் சட்டப்படி!

ஆம்! அப்படிப்பட்ட ஓர் உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் 'ஸ்டோனிங் ஆஃப் சுரயா எம்.’

பிரான்ஸில் குடியேறிய ஈரானிய பத்திரிகையாளரான ஃப்ரைடவ்ன் சாகெப்ஜம் என்பவரால், 1990-களில் எழுதப்பட்ட பெஸ்ட் புக்செல்லர் வரிசையில் உள்ள 'லிணீ திமீனீனீமீ லிணீஜீவீபீமீமீ’ என்ற நூலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் 'ஸ்டோனிக் ஆஃப் சுரயா எம்’. அமெரிக்காவில் குடியேறிய ஈரானிய இயக்குநர் 'சைரஸ் நவ்ரஸெத்’ இதை இயக்கியதோடு மட்டுமில்லாமல், மனைவியோடு சேர்ந்து திரைக்கதையையும் அமைத்துள்ளார். இவரது வாழ்க்கையிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாகவும் இயக்குநர் குறிப்பிடுகிறார்.

ஈரானின் ஒரு கிராமத்தின் வழியே செல்லும்போது பிரெஞ்ச் பத்திரிகையாளர் ஒருவரின் கார் பழுதாகி நின்றுவிடுகிறது. அதைச் சரிசெய்ய, கிராமத்தில் ஒரு மெக்கானிக்கை அவர் அணுகும்போது, சாரா என்ற நடுத்தர வயதுப் பெண், அவரைச் சந்தித்து ஏதோ சொல்ல முயற்சி செய்கிறாள். ஆனால், பல்வேறு தடங்கல்கள் காரணமாக, அது முடியாமல் போகிறது. அதை உணர்ந்த பத்திரிகையாளர் கடும் முயற்சிக்குப் பிறகு அந்தப் பெண்ணின் முகவரியை அறிந்து, மற்றவர்களுக்குத் தெரியாமல் அவளது வீட்டுக்கே சென்று, அவளைச் சந்திக்கிறார். அப்போது அவள் கூறும் சம்பவம் ஒன்று, அவரை நிலைகுலையச் செய்கிறது. அவளது உறவுக்காரப் பெண் சுரயாவுக்கு நடந்த கொடுமைதான் அது. ஆம். ஒருநாள் முன்புதான் அவளுக்கு மரண தண்டனையாக, அவளைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட்டிருக்கிறார்கள் அந்த நாட்டு அதிகாரிகள்.

பாவம் இந்தப் பெண்கள்! - உலக சினிமா

சுரயா பாவப்பட்ட ஒரு பெண். அவளுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள். அவளது கணவன் அரசு அதிகாரி. அவன் மிகவும் மோசமானவன். மனைவியையும் குழந்தைகளையும் சரியாகக் கவனிப்பது இல்லை. ஆகையால், சுரயா அந்த ஊரில் உள்ள, மனைவியை இழந்து தனிமையில் வாழும் ஒரு பெரியவரின் வீட்டுக்குச் சென்று, வீட்டு வேலை செய்து, பிழைப்பை நடத்துகிறாள்.

இதற்கிடையே சுரயாவின் கணவன், 14 வயதுப் பெண் ஒருத்தி மீது மோகம் கொண்டு, அவளைத் திருமணம் செய்யத் திட்டமிடுகிறான். அந்தப் பெண்ணின் அப்பா செய்த ஏதோ ஒரு குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதைச் சாக்காக வைத்து, திருமணத் துக்குச் சம்மதித்தால் அவளது தந்தையை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றுவதாக வாக்களிக்கிறான். அந்தச் சின்னப் பெண்ணும் அப்பாவின் விடுதலைக்காகத் திருமணத்துக்குச் சம்மதிக்கிறாள். ஆனால், அவனது வருமானத்தில் இரண்டு குடும்பங்களைப் பராமரிக்க முடியாத சூழல். அதனால், எப்படியாவது மனைவி சுரயாவை விவாகரத்து செய்துவிடத் தீர்மானிக்கிறான். ஆனால், அதற்கு அவள் சம்மதிக்கவில்லை. இதனால் முல்லாவின் உதவியை நாடுகிறான். முல்லாவும் அவனது மனைவியைச் சந்தித்து, இதுகுறித்துப் பேசுகிறார். 'கவலைப்படாதே! விவாகரத்துக்குப் பிறகு நான் உன்னைப் பராமரிக்கிறேன்’ என்கிறார். சுரயாவுக்கு அவளது குழந்தைகள்தான் உலகம். இதனால், சுராயா அதற்கு உடன்பட மறுத்ததோடு, முல்லாவை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறாள்.

பாவம் இந்தப் பெண்கள்! - உலக சினிமா

சும்மா இருப்பானா சுரயாவின் கணவன்? தனது மனைவிக்கும் அவள் வேலைசெய்யும் வீட்டில் உள்ள பெரியவருக்கும் தொடர்பு இருப்பதாக, முல்லாவிடம் பொய்ப் புகார் அளிக்கிறான். கோபத்தில் இருந்த முல்லாவும் சுறுசுறுப்பாக புகாரை விசாரிக்க ஆரம்பிக் கிறார். ஆனால், அதில் துளிக்கூட உண்மை இல்லை என்பது ஊருக்கே தெரியும். இருந்தாலும், அதிகார துஷ்பிரயோகம் காரணமாக, அவளுக்கு எதிராகவே எல்லாம் அமைந்துவிடுகிறது. சுரயா வீட்டு வேலை செய்யும் பெரியவரையும் முல்லா விசாரிக்கிறார். 'சுரயா மிகவும் நல்ல பெண். நீங்கள் கூறுவது அபாண்டம்! இது ஆண்டவனுக்கே அடுக்காது’ என்கிறார் அவர். ஆனால் முல்லாவோ, அவரை மிரட்டிப் பணியவைக்கிறார். வேறு வழியில்லாமல், அதிகாரத்துக்கு அடங்கிய அந்தப் பெரியவர், நடக்காததை நடந்ததாகக் கூறுகிறார். சுரயாவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதுவும், கல்லால் அடித்து அவளைக் கொல்ல வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அவளது உறவுக்காரப் பெண் எவ்வளவோ முயன்றும், இதைத் தடுக்க முடியவில்லை. ஊரில் உள்ள பெண்கள் ஆதரவு இருந்தும், சுரயாவுக்கு ஆதரவாக எதுவும் நடக்கவில்லை.

இறுதியில், தண்டனை நாள் நிர்ணயிக்கப்படுகிறது. ஊருக்கு நடுவே ஒரு மைதானத்தில், இடுப்பளவு குழியில் அவளைப் புதைத்து, அவள் மீது கல்லெறிய வேண்டும் என்று கூறுகிறான் முல்லா. தண்டனை நாளும் வந்தது. முதல் கல்லை அவளது அப்பாவே எறிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அடுத்து கணவன்; அடுத்து, அவளின் மகன்... என பட்டியல் நீண்டது. பிறகு, ஊரே அவளை நோக்கிக் கல்லெறிந்தது. கடைசியில், சிறிது சிறிதாக சுரயாவின் உருவம் மறைந்து, ஒரு குவியலாகிப் போனாள்.

இந்தச் சம்பவத்தைப் பத்திரிகையாளரிடம் கூறி முடித்த சுரயாவின் உறவுக்காரப் பெண், ஒரு நிமிடம் பெருமூச்சுவிடுகிறாள். அவள் கூறிய அனைத்தும் ஓர் ஆவணமாக பத்திரிகையாளரின் டேப்பில் பதிவாகிறது. ஆனால், அதை அவ்வளவு சுலபமாக அங்கிருந்து அவரால் கொண்டுபோக முடியவில்லை. டேப்பில் இருந்து ஒலிநாடா பறித்து எறியப்படுகிறது. பத்திரிகையாளர் தப்பித்து ஓடி, தனது காரை அடைகிறார். அங்கிருந்து புறப்பட்டுப் போகும் வழியில், குறுக்கு வழியாக வந்த அந்த உறவுக்காரப் பெண், 'இதுதான் உண்மையான டேப்’ என அவரிடம் அளிக்கிறாள். அந்த அரிய ஆவணத்தோடு அவர் அங்கிருந்து தப்பித்து, தனது தேசத்தை அடைகிறார். பிறகு, இந்தக் கொடுமையை ஒரு புத்தகமாக வெளியிட்டு உலகுக்கே தெரியப்படுத்துகிறார்.

அதைத் தழுவித்தான் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஈரானில் தடை செய்யப்பட்டது. இது ஓர் அமெரிக்கத் தயாரிப்பாக, சர்வதேச பட விழாக்களில் வெளியிடப்பட்டு, பல்வேறு பரிசுகளைப் பெற்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு