Published:Updated:

"ஆக்‌ஷனும் இல்லாத, த்ரில்லரும் இல்லாத ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதை!" - 'ஆந்திரா மெஸ்' படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
"ஆக்‌ஷனும் இல்லாத, த்ரில்லரும் இல்லாத ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதை!" - 'ஆந்திரா மெஸ்' படம் எப்படி?
"ஆக்‌ஷனும் இல்லாத, த்ரில்லரும் இல்லாத ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதை!" - 'ஆந்திரா மெஸ்' படம் எப்படி?

'ஆந்திரா மெஸ்' படத்தின் விமர்சனம்

பல ஆண்டுகளாக கிச்சனிலேயே குடியிருந்து, சமைத்து எடுத்துவரப்பட்ட மெனுதான், இந்த 'ஆந்திரா மெஸ்'!

அடியாட்களை ஆடிஷன் வைத்துத் தேர்ந்தெடுக்கும் சிரிப்பு வில்லன் (ஆனா, சிரிப்பே வராது!) தேவராஜ். அவரிடம் ஒரு பெட்டியைத் தூக்க வேண்டும் என்ற அசைன்மென்ட் வருகிறது. பெட்டியைத் தூக்கும் பொறுப்பை தனக்காக சில்லறை வேலைகள் செய்யும் வரதா அண்ட் கோவிடம் ஒப்படைக்கிறார், 'பெட்டியைத் திறந்து பார்க்கக் கூடாது' என்ற கண்டிஷனோடு!. பெட்டியைச் சொன்னபடி தூக்கும் அவர்கள், கண்டிஷனை மீறி திறந்து பார்க்கிறார்கள். அதிலிருப்பது, அவர்களை ஊரைவிட்டே ஓடத் தூண்டுகிறது. பெட்டியில் இருந்தது என்ன? (அது அவ்ளோ பெரிய சஸ்பென்ஸ் எல்லாம் இல்ல பாஸ்! படத்துலதான் அப்படி எதுவுமே இல்ல, விமர்சனத்துலயாவது இருக்கட்டுமேனுதான் இந்த பில்டப்!) ஊரைவிட்டு ஓடியவர்கள் தப்பித்தார்களா இல்லையா... என்பதுதான் மீதிக்கதை. அதை 'அட என்னதான்யா சொல்லவர்றீங்க?' என நாம் சலித்துக்கொள்ளும்படி சொல்லியிருக்கிறார், படத்தின் இயக்குநர். 

ராஜ்பரத், ஓவியர் ஏ.பி ஶ்ரீதர், மதி, அமர், சையத், வினோத், பூஜா தேவரையா எனப் பலபேர் இருக்கிறார்கள், படத்தில். ஆனால், கதை என ஒன்று இல்லாததால் அவர்களுக்கு நடிக்கவும் ஸ்கோப் இல்லை. பளீர் விழிகளோடு வரும் தேஜஸ்வினி மட்டுமே கவனம் ஈர்க்கிறார். ஆனால், அவரை கிளாமருக்காக மட்டுமே பயன்படுத்தியிருப்பது உறுத்தல். இதேபோல, நான்கு பேர் குழு பணத்தைத் திருடும் கதைகள் எத்தனையோ தமிழ் சினிமாவில் இருக்கிறது. அதில், நீங்கள் என்ன புதுமை வைத்துள்ளீர்கள் என்பதைக் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும். 

காயம்பட்ட ஒருவரை கூடவே வைத்திருப்பது, கடைசிவரை ஒரு ஃபிரேமில்கூட போலீஸைக் காட்டாதது, திருடிய பின் இவர்களது திட்டம் என்ன எனப் படத்தில் எழும் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை. பல இடங்களில் சிலரது நடிப்பு மிகவும் செயற்கையாக இருக்கிறது. படத்தில் நடித்த தேவராஜும், ஜமீனும் அடிக்கடி மீசையை முறுக்கிக்கொள்வதற்கும், படத்தின் டைட்டில் டிசைனுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா இயக்குநரே?! ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் வெளிவந்திருக்கும் இப்படத்தில், இறுதிவரை ஆக்‌ஷனும் இல்லை, த்ரில்லரும் இல்லை.   

பின்னணி இசை ஓகே. ஆனால், சில இடங்களில் கதையோடு தொடர்பில்லாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு தொடக்கத்தில் கவனம் ஈர்த்தாலும், ஒரேமாதிரியான லைட் எஃபெக்ட்ஸ் சலிப்பைத்தருகிறது. படத்தொகுப்பும் சொல்லும்படி இல்லை. இருக்கும் காட்சிகளையெல்லாம் முடிந்த அளவுக்கு ஒட்டித் தைத்திருக்கிறார், எடிட்டர். பலமுறை பல்பில் இருக்கும் டங்ஸ்டனை குளோஸ்-அப்பில் காட்டியிருக்கிறார்கள். அதுவும் ஒரு குறியீடோ?!   

படத்தில் எங்கெல்லாம் அமைதி நிலவுகிறதோ, அங்கெல்லாம் 'பணத்தால் நம்பிக்கை, பயம் ரெண்டுமே வரும்', 'துப்பாக்கி, பீரங்கி எல்லாம் மனுஷன் தோத்ததுக்கான அடையாளம்', 'காட்டுல இருக்கவேண்டியதெல்லாம் நாட்டுல இருக்கு', 'காதல் பட்டாம்பூச்சி மாதிரி' என டைனோசர் காலத்திலேயே செத்துப் புதைந்த கருத்துக்களையும், வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளையும் வாய்ஸ் ஓவரில் பேசிக்கொள்கிறார்கள். படம் பார்ப்பவர்களுக்கு ஒரு கட்டத்தில் படத்தைவிட பாப்கார்ன் அதிக கவனத்தை ஈர்க்கிறது. பாப்கார்னில் இருக்கும் உப்பு, காரம் எல்லாம் 'ஆந்திரா மெஸ்'ஸில் இருந்திருந்தால், இன்னொருமுறை பார்க்கத் தோன்றியிருக்கும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!   

'டிக் டிக் டிக்' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

அடுத்த கட்டுரைக்கு