Published:Updated:

``என்னை சினிமாவுக்குக் கொண்டுவரணும்னு அப்பா ஆரம்பத்துல நினைக்கலையோனு தோணுது!" - அதர்வா முரளி

``என்னை சினிமாவுக்குக் கொண்டுவரணும்னு அப்பா ஆரம்பத்துல நினைக்கலையோனு தோணுது!" - அதர்வா முரளி
``என்னை சினிமாவுக்குக் கொண்டுவரணும்னு அப்பா ஆரம்பத்துல நினைக்கலையோனு தோணுது!" - அதர்வா முரளி

ஒரே மாதிரியான படங்கள் அமைவது குறித்து, நடிகர் அதர்வா முரளி பேசியிருக்கிறார்.

`பாணா காத்தாடி’யில் பட்டம் விட்டபடி தமிழ் சினிமாக்கு அறிமுகமான அதர்வா முரளி, சினிமாவின் அடுத்த ஏரியாவில் ஆழம் பார்க்க இறங்கியிருக்கிறார். யெஸ்... தன்னை நடிகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் பத்ரி வெங்கடேஷின் `செம போத ஆகாத’ மூலமாக தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார், அதர்வா.

``தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பிஸியான ஹீரோக்கள் தயாரிப்பாளராகி வருகிற சூழலில், அதர்வாவும் அந்த வரிசையில் இணைந்திருக்கிறார். திடீரெனத் தயாரிப்புப் பக்கம் எப்படி?"

``சினிமா நிகழ்ச்சிகள்ல தயாரிப்பாளர்கள் தங்களோட கஷ்டங்களைப் பேசுறதைப் பலமுறை கேட்டிருக்கேன். அப்போ எல்லாம் சினிமா எடுக்கிறதுல என்ன சிரமம் இருக்கப்போகுதுனுதான் நினைப்பேன். வயசு அப்படி நினைக்க வெச்சது. நானா இருந்தா, `இந்த மாசம் பூஜை, இந்த மாதம் ரிலீஸ்’னு ஸ்கெட்ச் போட்டுத் தூக்குவேன்’னு நண்பர்கள்கிட்ட சொல்லியிருக்கேன். இப்படிப் பேசிட்டு திரிஞ்ச நேரம் பார்த்து பத்ரி சார் `செம போத ஆகாத' கதையைச் சொன்னார். ஏற்கெனவே மறுபடியும் அவருக்கு ஒரு படம் பண்ணனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன், கூடவே நாமளே தயாரிப்போம்னும் தோணிடுச்சு. தயாரிப்பாளர் ஆனது, இப்படித்தான். ஆனா சினிமா எடுத்து ரிலீஸ் பண்றது சாதாரண விஷயமில்லைனு கடந்த சில வருடங்கள்ல உணர்ந்துட்டேன். நாங்களே சில தவறுகளைச் செய்தோம். அதெல்லாம் அனுபவமா சேர்ந்திருக்கு. அடுத்தடுத்த பயணங்கள்ல அந்தத் தப்பு நடக்காதபடி பார்த்துக்குவோம்.

தயாரிப்பாளார் ஆன பிஸியான ஹீரோக்களின் வரிசையில் இருக்கணும்கிறதைவிட, பிஸியான ஹீரோ கம் தயாரிப்பாளரா இருக்கவே ஆசைப்படுறேன். பிஸியான நடிகர்னா நீங்க எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம். இதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. `நம்பர் ஒன் இடத்துக்கெல்லாம் ஆசை இல்லை’னு யாராவது சொன்னாங்கன்னா, அது பொய். `சூப்பர் ஸ்டார்’ ஆகணும்கிற ஆசை இங்கே எல்லா நடிகர்களுக்குமே இருக்கு. எல்லோரும் ரஜினி சார் ஆகிவிட முடியாது. `சூப்பர் ஸ்டார்’ங்கிற வார்த்தையை நான் ஒரு குறியீடாச் சொல்றேன்’’.

`` `செம போத ஆகாத’, `இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ டைப் படம் மாதிரி இருக்குமோஎன்கிற ஒரு சந்தேகம் இருக்கு. கேள்விப்பட்டீங்களா?"

``எதிர்மறையான விமர்சனங்களை இந்தப் படம் சந்திக்காதுனு என்னால அடித்துச் சொல்லமுடியும். 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவங்கதான் எங்களோட டார்கெட் ஆடியன்ஸ். ஆனா, எல்லாத் தரப்பு மக்களுக்குமே பிடிக்கும்னு நம்புறோம். கருணாகரன் டிராக் முழுக்க செம இன்ட்ரஸ்டிங்கான ஒரு விஷயம் இருக்கு. மியூசிக் யுவன். நான் ஸ்கூல் நாள்கள்ல இருந்து அவரைக் கவனிச்சுட்டு வர்றேன். கேட்டதும் மறுநொடியே பண்ணலாம்னு சொன்னார். படம் பத்தி சிம்பிளா சொல்லணும்னா, `போதைங்கிறது சில மணி நேரத்துல இறங்கிடக் கூடியது. ஆனா, போதையில இருக்கிறப்போ ஏதாச்சும் முடிவெடுத்தா, அதோட விளைவுகள் எப்படி இருக்கும்?' இதைத்தான் படமா சொல்லியிருக்கோம். அவசரப்பட்டு எந்தப் படத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்’’.

``தயாரிப்பாளராகச் சந்தித்த சிக்கல்கள் என்ன?"

``சினிமா ஸ்ட்ரைக் முடிஞ்ச பிறகு, படத்துல வொர்க் பண்ண மத்த சிலருக்காகக் காத்துக்கிட்டு இருக்கவேண்டிய சூழல். இதைப் பிரச்னைனு பேசினா, `ஒரு படம் எடுத்துட்டுப் பேச வந்துட்டான்யா’னு சொல்வாங்க. ஜி.எஸ்.டி., சினிமா ஸ்ட்ரைக்னு மொத்த இண்டஸ்ட்ரியே பாதிக்கப்பட்ட விஷயங்களாலதான், என் படமும் தாமதமாச்சு. அதேசமயம், என்னால நான் நினைச்ச மாதிரியான படங்களைத் தரமுடியும்னு தோணுது.’’

``ஒன்பதாண்டு பயணத்தில் `பரதேசி’ மட்டுமே கவனம் ஈர்த்தது. தமிழ் சினிமாவில் அதர்வாவுக்கான இடம் இது?"

``நீ ஒரு ஆக்‌ஷன் ஹீரோன்னு எங்கிட்ட பலபேர் சொல்லியிருக்காங்க. எனக்கு அமையிற படங்களோ வேறமாதிரி இருக்கு. `பாணா காத்தாடி’யில எந்த நேரத்துல சட்டையைக் கழட்டி போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வைக்கிற சீன் வெச்சாங்களோ, தொடர்ந்து சட்டையில்லாத உடம்பைக் காட்டுற படங்களாகவே வந்தது. அடி வாங்கணும்; கடைசியில சாகணும்... இப்படியே படங்கள் அமைஞ்சா, எங்கிட்டு ஆக்‌ஷன் ஹீரோ ஆகுறது? `பரதேசி' வெளியானதுக்குப் பிறகு தொடர்ந்து அதே மாதிரியான கேரக்டர்கள்.

`எடுத்த உடனே ஒரு கும்மிருட்டு குடோன்ல இருந்து ஒருத்தன் தூக்கி வெளியில வீசப்படுவான் சார்...' இப்படித்தன் கதையை ஆரம்பிப்பாங்க. ஆக்‌ஷன் ஆசையில `ஹீரோ யாரை சார் அடிப்பான்’னு கேட்டா, `தூக்கி வீசப்படுறவன்தான் ஹீரோ’னு சொல்வாங்க. `ஆஹா... மறுபடியும் முதல்ல இருந்தா, ஆளை விடுங்க’னு எஸ்கேப் ஆயிடுவேன். வேற என்ன செய்யமுடியும்? `பரதேசி’ மாதிரி இனியொரு படம் பண்ணக் கூடாதுனு இருக்கேன்.

எனக்கான இன்ட்ரஸ்ட் எதுனு கேட்டா, லவ் சப்ஜெக்ட் படங்கள். அதுவும் மணிரத்னம் சார் லவ் ஸ்டோரீஸ் மாதிரி இருக்கணும். அப்பாவுக்குக்கூட லவ் சப்ஜெக்ட் செட் ஆச்சு. ஆனா, அது ஒன் சைடு லவ். எனக்கு ரெண்டு பக்கமும் காதல் நிரம்பி வழியணும். அப்படியொரு கதையில சீக்கிரத்துலயே வருவேன். இது மட்டுமல்ல, நான் நடிச்சு வெயிட்டிங்ல இருக்கிற எல்லாப் படங்களுமே ஆறு மாசத்துல இருந்து ஒரு வருடத்துக்குள்ள வரிசையா வெளிவரும். அதுக்கான முயற்சிகள் எடுத்துக்கிட்டு இருக்கேன்." 

``சினிமா தயாரிக்கிற இந்த நேரத்துல அப்பா இருந்திருந்தால்...?"

``என் தாத்தா இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தவர். அப்பாவுக்குத் தமிழ் சினிமாவுல தனி இடம் இருந்தது. ஆனா, என்னை சினிமாவுக்குக் கொண்டு வரணும்னு ஆரம்பத்துல அப்பா நினைக்கலையோனுதான் தோணுது. ஏன்னா, சினிமாவுக்குத் தேவையான அடிப்படையான விஷயங்களை ஒரு நடிகரோட மகனா இருந்தும் நான் கத்துக்காமலேயே இருந்தேன். ஆனா, எல்லாப் படங்களுக்கும் என்னைக் கூட்டிட்டுப்போக மறக்கமாட்டார். `வாட்டாக்குடி இரணியன்’னு ஒரு படம். அப்பா மடியில உட்கார்ந்தபடி அந்தப் படத்தைப் பார்த்தேன்னு சொல்வாங்க. க்ளைமாக்ஸ்ல அப்பா இறந்துடுவார். அந்தக் காட்சியைப் பார்த்து அழ ஆரம்பிச்சிருக்கேன். குனிஞ்சு என் முகத்தைப் பார்த்த அப்பா, `என் மடியிலதான்டா நீ உட்காந்திருக்க’னு சொன்ன பிறகுதான், அழறதை நிறுத்தினேனாம். அப்பா உயிருடன் இருந்தவரை இந்தச் சம்பவத்தை அடிக்கடி சொல்வார். ஒரு கட்டத்துல நான் இயக்குநராகணும்னு ஆசைப்பட்டேன். அந்தச் சமயத்துல அப்பா உதவினார். நான் ப்ளஸ் டூ பாஸ் பண்ணினதையே அவ்வளவு கொண்டாடியவர். படம் தயாரிக்கிறதைப் பார்த்திருந்தா, இன்னும் சந்தோஷப்பட்டிருப்பார்." 

``சமீபத்துல `போதை கோதை’ங்கிற மியூசிக் ஆல்பத்துல நடிச்சிருந்தீங்க.. அந்த அனுபவத்தைச் சொல்லுங்க?" 

``கௌதம் மேனன் சார்கிட்ட நிறைய விஷயங்கள் பேசிட்டிருப்பேன். அப்படி கமிட் ஆனதுதான், அது. அவரோட சேர்ந்து வொர்க் பண்ண ரொம்பவே ஆசை. அவரோட யூ-டியூப் சேனலுக்காக அந்தப் பாட்டுல நடிக்கச் சொன்னார். அவர் டைரக்‌ஷன்ல படம் வர்றப்போ வரட்டும், அதுக்கு முன்னோட்டமா இந்த ஆல்பம் இருக்கட்டும்னு நடிச்சுட்டேன். ஆனா, அந்த `போதை கோதை’க்கும் `செம போத ஆகாத’ படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை." 

``நயன்தாராவுடன் நடித்த அனுபவம்?" 

`` `இமைக்கா நொடிகள்’ நயன்தாரா, அனுராக் காஷ்யப்னு பெரிய ஆளுங்களோட சேர்ந்து நான் பண்ணியிருகிற படம். நயன்தாராவுடன் நடிச்சது வொண்டர்ஃபுல் அனுபவம். `லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவோட நடிக்க இன்னைக்கு இருக்கிற இளம் ஹீரோக்கள் அத்தனை பேருக்குமே ஆசை இருக்கு. எனக்கு அந்த வாய்ப்பு அமைஞ்சது. அவங்களைப் பத்திச் சொல்லணும்னா, `சினிமாவுக்கு அவங்க தர்ற மரியாதையை, சினிமா அவங்களுக்குத் திருப்பித் தந்திருக்கு. நிறைய விஷயங்கள் அவங்ககிட்ட இருந்து கத்துக்கலாம்."

அடுத்த கட்டுரைக்கு