Published:Updated:

'நினைத்தாலே இனிக்கும்' முதல் 'காலா' வரை... தமிழ் சினிமா பாடல்களை ஆளும் 'கண்ணம்மா'!

'நினைத்தாலே இனிக்கும்' முதல் 'காலா' வரை... தமிழ் சினிமா பாடல்களை ஆளும் 'கண்ணம்மா'!
'நினைத்தாலே இனிக்கும்' முதல் 'காலா' வரை... தமிழ் சினிமா பாடல்களை ஆளும் 'கண்ணம்மா'!

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த `கண்ணம்மா' பாடல்களின் தொகுப்பு இது.

`கண்ணம்மா' என்ற வார்த்தையை நமக்குப் பரவலாக்கியவர், பாரதியார். அந்த வார்த்தை இன்று மிகப் பிரபலம். காரணம், அந்த வார்த்தையை சினிமா பாடல்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த வார்த்தை இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ஹிட் அடிக்கின்றன. அந்த வார்த்தையும் அதனுடன் வரும் இசையும் சேருகையில் அதற்கு ஒரு பலம் சேரும் போல. அப்படி, `கண்ணம்மா' என்ற வர்த்தை இடம்பெற்று நம்மை மீண்டும் முணுமுணுக்க வைத்த பாடல்களின் பட்டியல் இதோ..!

நினைத்தாலே இனிக்கும் :

``பாரதி கண்ணம்மா...
நீயடி சின்னம்மா
கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்..."

- கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் வாணி ஜெயராமும் இணைந்து பாடியிருப்பார்கள். கமல் - ஜெயப்பிரதா ஜோடியின் டூயட் பாடலாக `நினைத்தாலே இனிக்கும்' படத்தில் இடம்பெற்றது.   

வண்ண வண்ணப் பூக்கள் :

``கண்ணம்மா... காதல் என்னும் கவிதை சொல்லடி"

- என்று `இசைஞானி' இளையராஜாவின் இசையிலும் குரலிலும் இந்தப் பாடல் வேறலெவல் ஹிட் அடித்தது. இளையராஜா - ஜானகி காம்போவில் உருவான சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.   

பிரியமுடன் :

``பாரதிக்குக் கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா"

- எனத் தொடங்கும் இந்தப் பாடலை தேவா இசையமைக்க, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருப்பார். தேவா ஹிட்ஸில் இந்தப் பாடல் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். 

பெண்ணின் மனதைத் தொட்டு :

``கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா..
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா..." 

- இப்பாடலை எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் உன்னி மேனன் பாடியிருப்பார். படம் வெளியாகி இத்தனை வருடங்கள் கடந்தும் இன்னும் இந்தப் பாடலை ரசிக்காத காதலர்கள் இருக்கமாட்டார்கள்.

தம் :

``கண்ணம்மா கண்ணம்மா
மீனு வாங்கப் போலாமா"

- தேவா இசையில் அனுராதா ஶ்ரீராமும் உதித் நாராயணனும் பாடிய பாடல் இது. குத்துப் பாடலாக உருவான இதில், சிம்புவும் ரக்‌ஷிதாவும் நடனமாடியிருப்பார்கள். 

ஜிகர்தண்டா :

``கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாளாம்..."

- இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்க, அந்தோணிதாசனும், ரீட்டா அந்தோணிதாசனும் பாடியிருப்பார்கள். இந்தப் பாடல் வரிகளை முத்தமிழ் எழுதியுள்ளார். சித்தார்த்துக்கும், லட்சுமி மேனனுக்குமான காதல் காட்சிகள் இந்தப் பாடலில்  இடம்பெற்றிருக்கும். 

றெக்க :

``கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை...
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை..."
 

- என யுகபாரதி எழுதிய வரிகளுக்கு இமான் இசையமைக்க, நந்தினி ஶ்ரீகர் பாடியிருந்தார். பாடல் மட்டுமல்ல, பாடலில் வரும் மாலா அக்கா கேரக்டரும் பாப்புலர்.  

கவண் :

"பாயும் ஒளி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு
தும்பி அடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம் 
தூய சுடர் வான் ஒளியே... சூறை அமுதே...
கண்ணம்மா என் காதலி..."
 

- பாரதி எழுதிய பாடலை இந்தக் காலத்துக்கு ஏற்றவாறு இசையமைத்து, அதற்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டியிருப்பார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி. ஆதி, அந்தோணிதாசன், பத்மலதா ஆகியோர் பாடிய இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.  

காலா:

``பூவாக என் காதல் தேன் ஊறுதோ...
தேனாக தேனாக வானூறுதோ...
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா?"

 - எனத் தொடங்கும் இந்தப் பாடல் `காலா'வின் கிளாசிக் ஹிட். சந்தோஷ் நாராயணன் இசையில் உமா தேவியின் காதல் வரிகள் நம் காதில் தேனாக வந்து பாய்கின்றது. 

ஜுங்கா :

``கண்ணம்மா கன்ட்ரோலு பண்ணம்மா...
கண்ணம்மா கைமீறி போலாமா..."

- என்ற பல்லவியுடன் ஆரம்பிக்கிறது, படத்தில் இடம்பெற்ற `பாரீஸ் டு பாரிஸ்' பாடல். லலிதானந்த் பாடல் வரிகள், சித்தார்த் விபின் இசை, அந்தோணிதாசன் குரலில் உருவாகியிருக்கும் இந்தப் பாடல் `ஜுங்கா' படத்தின் டிராக் லிஸ்ட்டில் முதல் பாடல்.  

`கண்ணம்மா' என்ற வார்த்தை இடம்பெற்றால், அந்தப் பாடல் ஹிட்டாகிறது. அப்படி அந்த வார்த்தையில் என்ன பவர் என்று தெரியவில்லை. இதில் விடுபட்ட,  உங்களுக்குப் பிடித்தமான `கண்ணம்மா' பாடல்களை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள். 

அடுத்த கட்டுரைக்கு