Published:Updated:

"தீபாவளி அன்னைக்குத்தான் இட்லி!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"தீபாவளி அன்னைக்குத்தான் இட்லி!”
"தீபாவளி அன்னைக்குத்தான் இட்லி!”

கொண்டாட்டம்பொன். விமலா

பிரீமியம் ஸ்டோரி

தீபாவளி... இந்த வார்த்தையைச் சொன்னதுமே நம் கண்களில் மத்தாப்பூ பூக்கும். பட்டாசு, புத்தாடை, பலகாரம் எனப் பலப்பல சுவாரஸ்யங்கள் நெஞ்சில் நினைவுகளாய் நீளும். சின்ன வயதில் இருந்து இன்று வரை கொண்டாடிய தீபாவளி தினங்களைப் பற்றிய நினைவுகளை யாராலுமே மறக்கமுடியாது. நம் திரையுலக, ஊடக நட்சத்திரங்கள் மனத்தில் பதிந்திருக்கும் தீபாவளி கலாட்டாக்கள் சில இங்கே...

"தீபாவளி அன்னைக்குத்தான் இட்லி!”

மா.கா.பா. ஆனந்த்

''எங்க வீட்ல என்னதான் கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டாலும், பட்டாசு வாங்கித் தர ரொம்பவே யோசிப்பாங்க. காசைக் கரியாக்கணுமாம்பாங்க. அதனால, தீபாவளி பட்டாசு வாங்கறதுக்காகவே உண்டியல்ல காசு சேமிச்சுட்டு வருவேன். பாண்டிச்சேரி ஹேண்ட்மேட் பட்டாசுன்னா ரொம்ப ஃபேமஸ்! அந்தப் பட்டாசு வெடிக்கும்போது பயங்கரச் சத்தம் வரும். ஊரையே அதிரடிக்கும். சத்தத்துக்காகவே போட்டி போட்டுக்கிட்டு பட்டாசு வாங்கப் போயிடுவேன். சின்ன வயசுல திருடன்- போலீஸ் விளையாட்டு விளையாடும்போது கேப்டன் பிரபாகரன், வீரப்பன் மாதிரியெல்லாம் நடிச்சு விளையாடுவோம். அப்ப தீபாவளி துப்பாக்கிதான் எங்களுக்கு ரியல் துப்பாக்கி. அதே மாதிரி ஃபிரெண்ட்ஸ் எல்லோரும் ஒண்ணு சேர்ந்து பாம் வெச்சு விளையாடுவோம். பாம்னு சொன்னதும் பயப்பட வேண்டாம். ஆட்டோபாம் பட்டாசுல ஊதுபத்தியைக் கட்டி அதை பத்த வெச்சுருவோம். அது எவ்ளோ நேரத்துல வெடிக்கும்னு எனக்கு டைமிங் தெரியும். ஸோ... கரெக்டா டைமிங் பார்த்து, வெடிக்கிற சமயத்துல ஓடிப் போயிடுவேன். அதுக்கப்புறம் என்ன... அந்த வழியா வந்தவங்க ஐயோ பாவம்தான்! ஒரு தரம் காலேஜ் படிக்கிறப்ப இதே மாதிரி ஊதுவத்தியில பட்டாசு கட்டி டைமிங்கா வெடிக்க வெச்சேன். எனக்கு ஆகாத குரூப் அந்த வழியா நடந்து போறப்ப, டமால்னு வெடிச்சிருச்சு. இது பெரிய பிரச்னையாகி, பிரின்சிபால் விட்ட டோஸ், பட்டாசு சத்தத்தைவிட ஹெவியா இருந்துச்சு!''

"தீபாவளி அன்னைக்குத்தான் இட்லி!”

பிக் எஃப்.எம். பாலாஜி

''தீபாவளின்னா சின்ன வயசுல எனக்கு ரெண்டு டிரஸ் எடுத்துக் கொடுத்துடுவாங்க. ஒரு தடவை ஏனோ தெரியலை, எனக்கு டிரஸ் எடுத்துத் தரவே இல்லை. செம கடுப்பாகிடுச்சு. அதுக்கப்புறம் வீட்ல இருக்கிற பெரியவங்க கால்ல விழுந்து, எக்கசக்க பில்டப் கொடுத்து, கெஞ்சி, காசு வாங்கி, புது டிரஸ் வாங்கி தீபாவளி கொண்டாடினேன். அன்னிக்குன்னு பார்த்து சன் டி.வி. நியூஸ்ல தீபாவளியை மக்கள் எப்படி கொண்டாடுறாங்கனு நியூஸ் கவர் பண்ணிட்டு இருந்தாங்க. என்னையும் சேர்த்து மொத்தம் ஆறு ஃப்ரெண்ட்ஸ் அதுக்கு பதில் சொல்லியிருந்தோம். அந்த ஆறு பேர்ல நான்தான் ரொம்ப மொக்கையா பதில் சொன்னேன். இத பெருமையா  வேற எங்க அம்மாகிட்ட சொன்னேன். அவங்க உடனே 'என் புள்ள சன் டி.வி-யில வரப் போறான்’னு ஊரெல்லாம் போய் டமாரம் அடிச்சிட்டாங்க. 'ஐயையோ... நாம ஒழுங்காவே பேசலையே! டி.வி-யில நம்மளைக் காட்டாட்டி என்ன பண்றது?’ன்னு முழிச்சிட்டு இருந்தேன். அப்புறம் பார்த்தா, வேற யார் பேசினதும் டி.வி-யில வரலை; நான் பேசினது மட்டும் வந்தது. எனக்கு செம குஷி ஆகிடுச்சு!''

"தீபாவளி அன்னைக்குத்தான் இட்லி!”

பார்வதி

''இப்ப 'மரியான்’ வெற்றிதான் என்னோட ரியல் தீபாவளி! எனக்கு மத்தாப்பு மாதிரி, சத்தம் வராத பட்டாசுகள்தான் பிடிக்கும். சத்தம் வர்ற பெரிய பெரிய பட்டாசுகள் வெடிக்குறதுன்னா ரொம்பப் பயம். தீபாவளிக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் மீட் பண்றது எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரைக்கும் நாலு பேருக்கு நல்லது பண்ணணும்; அதுதான் ரியல் தீபாவளி! ஒரு நடிகையா மக்கள் மனசுல இடம் பிடிச்ச மாதிரி, நாளைக்கு ஒரு நல்ல டைரக்டரா ஆகணும். அதுதான் என்னோட ஆசை. அந்த ஆசை நிறைவேறும் நாள் தான் எனக்கு டிரிபிள் தீபாவளி!''

"தீபாவளி அன்னைக்குத்தான் இட்லி!”

டைரக்டர் பாண்டிராஜ்

''என்னோட ஸ்கூல் டேஸ்ல தீபாவளி எப்போ வரும்னு ரொம்ப ஆவலா எதிர்பார்த்துட்டு இருப்பேன். அதுவும், தீபாவளி வர்றதுக்கு ஒரு மாசம் முன்னாடி இருந்தே ரொம்ப ஜாலியா கவுன்ட் டவுன் போட்டு எதிர்பார்ப்போம். ஏன்னா, தீபாவளி அன்னிக்குதான் புது டிரஸ் கிடைக்கும்; பட்டாசு கிடைக்கும்; வாய்க்கு ருசியா பலகாரம் கிடைக்கும். இது எல்லாத்தையும் விட, தீபாவளி அன்னிக்குதான் எங்க வீட்ல இட்லியே சமைப்பாங்க. இட்லி சாப்பிடுறதுக்காகவே, எப்படா தீபாவளி வரும்னு ஏங்கிட்டிருப்பேன். அதே மாதிரி தீபாவளி ரிலீஸ் படம் பார்க்குறதுன்னா எனக்கு பயங்கர சந்தோஷம். எனக்கு மறக்க முடியாத தீபாவளின்னா, அது 2008 தீபாவளிதான். ஏன்னா, அந்த வருஷம் தீபாவளிக்கு 15 நாள் முன்னாடிதான் 'பசங்க’ படத்துக்கு கமிட் ஆனேன். நான் அசிட்டென்ட் டைரக்டரா இருந்தவரைக்கும், தீபாவளி கொண்டாட ஊருக்கே போனதில்லை. முதல் தடவையா படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிட்டு ஊருக்குப் போனேன். அந்தத் தீபாவளியை என்னால மறக்க முடியாது!''

"தீபாவளி அன்னைக்குத்தான் இட்லி!”

பிரேம்ஜி

''தீபாவளின்னா செம என்ஜாய்மென்ட்தான்! அடிச்சுப் புடிச்சு பட்டாசு வெடிக்கணும். ஒரு தீபாவளி அன்னிக்கு சென்னையில பயங்கர மழை. முட்டி அளவுக்கு தண்ணி தேங்கிடுச்சு. 'ஐயையோ! இன்னிக்குப் பட்டாசே வெடிக்க முடியாதோ!’ன்னு கவலைப்பட்டேன். ஒரு ஐடியா பண்ணினேன். ஒரு பெரிய டேபிள் கொண்டுவந்து வெச்சு, மழையில நனையாம அதுக்கு அடியில பட்டாசு கொளுத்திக் கூத்தடிச்ச தீபாவளி அது.

சின்ன வயசுல தீபாவளின்னா, எங்க ஃபேமிலியில எல்லோரும் ஒண்ணாச் சேர்ந்து பண்ணைபுரம் போயிடுவோம். அங்கே சந்தோஷமா, ஜாலியா விளையாடுவோம். திரும்பவும் அப்படியொரு ஜாலி கிடைச்சா வேணாம்னா சொல்லப் போறேன். உடனே முதல் ஆளா அங்கே ஓடிட மாட்டேன். பட்டாசு, ஸ்வீட், புது டிரஸ்... அதுக்கடுத்து நைட் பார்ட்டி... வாவ்..! வாட் எ தீபாவளி!''

"தீபாவளி அன்னைக்குத்தான் இட்லி!”

பிந்து மாதவி

''தீபாவளின்னா எனக்கு செம ஜாலி! தீபாவளி வந்துட்டா போதும்.... எங்க குடும்பத்துல இருக்குற எல்லோரும் மதனபள்ளியில் இருக்குற எங்க பாட்டி வீட்டுக்குப் போயிடுவோம். அங்கே பயங்கர அமர்க்களமும் கொண்டாட்டமுமா இருக்கும். அதுலேயும் நான் பண்ற சேட்டைக்கு அளவே இல்லைன்னு எல்லோரும் சொல்லிட்டே இருப்பாங்க. எங்க தெருவுல யார் அதிகமா பட்டாசு வெடிக்குறதுன்னு போட்டி போட்டுட்டு வெடிப்போம். பட்டாசு வெடிச்சு முடிச்சதுக்கப்புறம், எல்லோரும் தூங்கப் போயிடுவாங்க. விடிஞ்சதும், பந்தயத்துல யார் வீடு ஜெயிச்சிருக்குன்னு தெரிஞ்சிடும். அதனால, ராத்திரியோட ராத்திரியா எல்லார் வீட்டுல இருக்குற பட்டாசுக் குப்பைகளையும் அள்ளிட்டு வந்து என் வீட்டு வாசல்ல இரைச்சுடுவேன். அப்புறம் என்ன... அந்த தீபாவளி வின்னர் நான்தான்!''

"தீபாவளி அன்னைக்குத்தான் இட்லி!”

சிவா

''பண்டிகைன்னு சொன்னாலே அது சந்தோஷம்; நம்பிக்கை. அதிலும் தீபாவளின்னு சொன்னா, அது டபுள் நம்பிக்கை! தீபாவளி கொண்டாடாத மற்ற மதங்களைச் சார்ந்த நண்பர்களுக்கு ஸ்வீட், பிரியாணி  எல்லாம் கொடுப்பேன். அவங்களும் கிறிஸ்துமஸ், ரம்ஜான் வந்தா பிரியாணி கொடுப்பாங்க!

என் சின்ன வயசுல பைசாவைக் கண்ணுலயே காட்டமாட்டாங்க. அதனால, தீபாவளியைக் காரணம் காட்டி வீட்டுல காசு வாங்கிட்டு, முந்தின நாள் நைட்டுதான் கடைக்குப் போய் துணி வாங்குவேன். இப்பதான் நான் பார்க்க செக்கச்செவேல்னு சேட்டு பையன் மாதிரி இருக்கேன். சின்ன வயசுல நான் கறுத்த குட்டி மாதிரி இருந்தேன். அதனால ஒரு டிரஸ் எடுக்கறதுக்குள்ள படாத பாடு படுவேன். எந்த டிரஸ்ஸும் செட்டாகாது. அப்படிப் பார்த்துப் பார்த்து எடுத்துப் போட்டுக்கிட்ட பிறகு, பொண்ணுங்க என்னை சைட் அடிப்பாங்க பாருங்க(?!)... ஹூம்... அதெல்லாம் ஒரு காலம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு