Published:Updated:

'' 'பேரன்பு' படத்துல மம்மூட்டி சார்கூட நடிக்கிற வாய்ப்பை அவரே தந்தார்'' - திருநங்கை அஞ்சலி அமீர்

வெ.வித்யா காயத்ரி
'' 'பேரன்பு' படத்துல மம்மூட்டி சார்கூட நடிக்கிற வாய்ப்பை அவரே தந்தார்'' - திருநங்கை அஞ்சலி அமீர்
'' 'பேரன்பு' படத்துல மம்மூட்டி சார்கூட நடிக்கிற வாய்ப்பை அவரே தந்தார்'' - திருநங்கை அஞ்சலி அமீர்

'இயக்குநர் ராமின் அடுத்த படைப்பு 'பேரன்பு'. மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், திருநங்கை அஞ்சலி அமீர். 

என்னுடைய சொந்த ஊர் கேரளாவிலுள்ள கோழிக்கோடு மாவட்டம். என் சின்ன வயசுலேயே அம்மா இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் பாட்டி வீட்டுலதான் வளர்ந்தேன். என்னுடைய சின்ன வயசுலேயே எனக்குள்ள ஏற்பட்ட மாற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமா உணர ஆரம்பிச்சேன். என் இருபது வயசுல அதை முழுசா உணர்ந்தப்ப வீட்டுல பயங்கரமா எதிர்த்தாங்க. ஒரு கட்டத்துல தாக்குப் பிடிக்க முடியாம விட்டு வெளியேறிட்டேன்'' என்றவர் ஒரு நொடி மௌனத்திற்கு பின் பேசத் தொடங்கினார்.

''சென்னை வந்ததும் எங்கே போறது, என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்பவே கஷ்டப்பட்டேன். அப்பத்தான் பிரியா அம்மாவைப் பார்த்தேன். அவங்க பொண்ணா என்னைத் தத்தெடுத்து வளர்த்தாங்க. ஒரு சூழ்நிலையில் அவங்களை விட்டும் வெளியேற வேண்டியிருந்துச்சு. அப்புறம் அங்கே இருந்து கோயம்புத்தூர் போனேன். அங்கே யாமினிங்குறவங்களுடைய அறிமுகம் கிடைச்சது. யாமினி என் இரண்டாவது அம்மா. கோயம்புத்தூர்லதான் ஆப்ரேஷன் செய்துகிட்டேன். முதல்ல கால் சென்டரில் வேலை பார்த்துட்டு இருந்தேன். அங்கே வேலை பார்க்கும்போதுதான் பி.எஸ்.டபிள்யூ படிச்சேன். அதுமட்டுமில்லாமல் பியூட்டி பார்லரில் வேலை பார்த்துட்டும் இருந்தேன். பிரைடல் மேக்கப், மெஹந்தி டிசைன் எல்லாமே பண்ணணுவேன். திருநங்கைனாலே பாலியல் தொழில் பண்ணுவாங்க... பிச்சை எடுப்பாங்கங்கிற நிலைக்கு வந்திடக்கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா நின்னேன். அதுல வெற்றியும் அடைஞ்சுட்டு வர்றேன்'' என்றவர் இந்த வருடம் முதுகலைப் பட்டப் படிப்பு படிக்கவிருக்கிறார் என்பது கூடுதல் பூங்கொத்து.  

''கேரளாவில் நிறைய நிகழ்ச்சிகள் பண்ணிட்டு இருந்தேன். எனக்குத் தெரிந்த புகைப்பட நண்பர் மூலமா அந்த வாய்ப்பு எனக்கு மாடலிங் வாய்ப்பு கிடைச்சது. திருநங்கைன்னு சொல்லாம நார்மல் மனுஷியாய் மாடலிங்குக்குள் நுழைஞ்சேன். அந்த நேரத்தில் ரொம்ப போராட வேண்டியிருந்தது. திருநங்கைகளுக்கான 'மிஸ் கோவை' போட்டியில் டைட்டில் வின் பண்ணேன். மகேந்திரா ஷோரூம் நடத்துன 'யுனிவர்சல் கான்டெஸ்ட்' போட்டியில் திருநங்கையாலாம் இல்லாமல் நார்மல் பர்சனா கலந்துகிட்டு டைட்டில் வின் பண்ணேன். அது என் வாழ்நாளில் கிடைச்ச மறக்கமுடியாத அங்கீகாரம் என ஆனந்தக் கண்ணீர் சிந்தியப் பின் தொடர்ந்தார்.

'திருநங்கை'ன்னு கூப்டுறதே தவறான விஷயம். என்னை அந்தப் பெயர் சொல்லி கூப்டுறது சுத்தமா பிடிக்காது. எங்களுடைய பெயர் அது கிடையாதே. நாங்களும் சாதாரண மனுஷங்க மாதிரிதான். மாடலிங் ஃபீல்டில் இருந்தப்போ நிறைய வலிகளை அனுபவிச்சிருக்கேன். நான் வலியால் அழுகிற சமயத்துல எனக்கான ஆறுதல்னா என் கண்ணாடி தான். கண்ணாடி முன்னாடி நின்னு என்னால முடியும்னு எனக்கு நானே பல முறை தைரியம் சொல்லிப்பேன். 

நான் திருநங்கை என்பது தெரியாமலேயே மலையாள சீரியலில் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடிக்க கூப்டாங்க. பத்து நாள் ஷூட் போனேன். அதுக்கப்புறம்தான் அவங்களுக்கு நான் திருநங்கைன்னு தெரிஞ்சிருக்கு. இந்தக் கேரக்டருக்கு வேறு மாதிரியான பொண்ணு வேணும்னு சொல்லி என்னை ரிஜெக்ட் பண்ணாங்க. நான் என் சுயத்தை மறைக்க விரும்பலை. அதே நேரம் அதை எப்பவும் சொல்லிகிட்டு இருக்கவும் விரும்பலை. அதனால அவமானத்தை சந்திக்கிறப்ப எல்லாம் ரொம்ப உடைஞ்சு போவேன்.

 கேரளா ரியாலிட்டி ஷோக்களில் நடிச்சிட்டு இருந்தேன். அதுல என்னைப் பார்த்துட்டு 'பேரன்பு' படத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. அந்தப் படத்தின் அசிஸ்டென்ட் எனக்கு ஃபோன் பண்ணி, 'இது ராம் சாருடைய படம். மம்முட்டி சார்தான் உங்களை ரெஃபர் பண்ணாங்க. ஆடிஷனுக்கு வாங்க'ன்னு கூப்டாங்க. நிறையப் பேர் இப்படி பேசி ஏமாத்தினதுனால அவங்க கூப்டப்ப போகலை. நான் ஒர்க் பண்ண சேனலுக்கு ஃபோன் பண்ணி மறுபடியும் கூப்டாங்க. அப்புறம்தான் சென்னைக்கு ஆடிஷனுக்குப் போனேன். நான் நடிச்சுக் காட்டினதும் ராம் சாருக்குப் பிடிச்சிருந்தது. அப்படித்தான் 'பேரன்பு' வாய்ப்பு கிடைச்சது.

மம்முட்டி சார் என்னைப் பார்த்து, 'நான் தான் உன்னை ரெஃபர் பண்ணேன்'ன்னு சொன்னார். அவரைப் பார்த்ததும் அவ்வளவு படபடப்பாக இருந்துச்சு. கேமரா முன்னாடி எப்படி நடிக்கணும்னு அவர்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். அவர் ரொம்ப எனர்ஜியா இருப்பார். வேலை மேல அவர் வைச்சிருக்கிற லவ்க்கு இணையே கிடையாது. 

ராம்சாருடைய படத்துல நடிச்சது என் பாக்கியமா நினைக்கிறேன். பொறுமை, ஃபர்பெக்‌ஷன்... இதெல்லாம் ராம் சார்கிட்ட இருந்து கத்துக்கலாம். பேரன்பு படத்துல நடிச்சதுனாலதான் இவ்வளவாவது தமிழ் பேச முடியுது.  ஒண்ணு தெரியுமா... கிளசரின் இல்லாம எனக்கு இப்ப அழவும் தெரியுது... ஹலோ ரியல் லைஃப்ல இல்ல... ரீல் லைஃப்ல'' என்று பலமாக சிரிக்கிறார் அஞ்சலி.

''முதல் படத்துலேயே பெரிய ஆர்ட்டிஸ்ட், பெரிய டைரக்டர் கூட நடிச்சது மிகப்பெரிய பெருமை. மலையாளத்தில் மோகன்லால் சார்கூட ஒரு படம் நடிச்சேன். கதாநாயகியாகக் கன்னடம் மற்றும் தெலுங்கு படத்தில் நடிச்சிருக்கேன். பேரன்பு படம் வெளியானதும் நிச்சயம் தமிழ் ரசிகர்களுடைய ஃபேவரைட் நடிகை லிஸ்டில் நானும் இருப்பேன்'' எனப் புன்னகைக்கிறார், அஞ்சலி.