Published:Updated:

“சினிமாவில் நான் ஒரு துளி!” - விஜய் சேதுபதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“சினிமாவில் நான் ஒரு துளி!” - விஜய் சேதுபதி
“சினிமாவில் நான் ஒரு துளி!” - விஜய் சேதுபதி

சினிமாடி.அருள் எழிலன், படங்கள்: கே.ராஜசேகரன்

பிரீமியம் ஸ்டோரி

வாழ்க்கையில் நடக்கிற சின்னச் சின்ன விஷயங்கள்தான் பெரிய படைப்பாக மாறுகிறது என்று நான் நினைக்கிறேன். என் படங்களும் அப்படித்தான்! கதைக்கும் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதோடு பயணிப்பதுதான் எனக்கான சினிமா பாதை என நம்புகிறேன்!''- யதார்த்தமாகப் பேசும் விஜய் சேதுபதிக்கு அப்பா வைத்த பெயர் விஜய குருநாத சேதுபதி.

மனைவி ஜெஸ்ஸி, குழந்தைகள் சூர்யா, ஸ்ரீஜாவோடு சென்னையில் வசிக்கும் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவின் முகத்தை மாற்ற நினைக்கும் புதிய கதைசொல்லிகளின் ஹீரோ. இயல்பான வெற்றி என்றாலும்கூட, வலிமையான வெற்றி இது. ஐந்து வருடங்களுக்கு முன்பு குறும்பட இயக்குநர்களைத் தமிழில் கண்டுகொள்ளவே ஆளில்லாமல் கிடந்த நிலை மாறி, அவர்களுக்கு தமிழ் சினிமாவின் முன்னரங்கில் இடம் கிடைத்திருப்பதற்கு விஜய் சேதுபதியும் முக்கிய காரணம்.

“சினிமாவில் நான் ஒரு துளி!” - விஜய் சேதுபதி

''சின்ன வயசுல விஜய் சேதுபதி எப்படி?''

''சொந்த ஊர் ராஜபாளையம் டவுன். ஐந்தாம் வகுப்பு வரை அங்குதான் படித்தேன். பக்கத்து வீட்டு பாட்டி, நிறைய மாடு வளர்த்தாங்க. அதை மேய்த்துக்கொண்டு மலையடிவாரத்தில் சுற்றித் திரிவதும், கள்ளிப் பழங்கள் பறித்துத் தின்பதுமாக என் சிறு வயது கழிந்தது. அப்பா சிவில் இன்ஜினீயர். வருவாய் நோக்கத்துக்காகச் சென்னையில் குடியேறினார். பாசமும் அன்பும் கொட்டிக் கிடக்கும் வீடு. வீடு, நண்பர்கள்... இதைத் தாண்டி வேறு உலகம் இருப்பதாக நான் நினைக்கவும் இல்லை; வேறு விஷயங்களில் நாட்டம் இருந்ததும் இல்லை.

கோடம்பாக்கம் எம்.ஜி.ஆர் ஸ்கூலில் தமிழ் மீடியத்தில் படித்தேன். அப்புறம் டி.பி. ஜெயின் கல்லூரியில் பி.காம். சேர்ந்தேன். படிப்பில் சுமார்தான். பள்ளிக்கூடத்தில் நடக்கும் கலாசார நிகழ்வுகளிலோ, மேடை நிகழ்வுகளிலோ, விளையாட்டு மாதிரியான விஷயங்களிலோ கூட எனக்கு எந்த ஆர்வமும் இருந்ததில்லை. வீட்டை விட்டா கல்லூரி; கல்லூரியை விட்டா நண்பர்கள். அப்போது எனக்குப் பிடித்தமான விஷயங்கள் இவ்வளவுதான்! ஆரம்பத்தில் ரொம்பக் குள்ளமாக இருந்தேன். கல்லூரியில் இரண்டாம் வருடத்துக்குப் பிறகுதான், நான் வேகமாக வளர்ந்தேன். இந்த வளர்ச்சியைத் தவிர சொல்லிக்கொள்கிற மாதிரி வேறு எதுவும் பெரிய வளர்ச்சிகளோ, மாற்றங்களோ கல்லூரி வாழ்க்கையில் நடக்கலை!''

“சினிமாவில் நான் ஒரு துளி!” - விஜய் சேதுபதி

''அப்படின்னா... உங்களுக்கும் சினிமா ஒரு விபத்துதானா?''

''எனக்கு எப்பவுமே சினிமா பிடிச்ச விஷயமா இருந்தது இல்லை; சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது இல்லை. போட்டோவுக்கு போஸ் கொடுக்கக் கூடத் தயங்குற அளவுக்குக் கூச்ச சுபாவம் உள்ள ஆளாகத்தான் நான் இருந்தேன்.

பி.காம். முடித்துவிட்டு ஒரு கம்பெனியில வேலை பார்த்தேன். மாத ஊதியக்காரனாக மாறி, வாழ்க்கை இப்படியேதான் போகும் என்று நினைத்தேன். சென்னையில் ஒரு வருஷம் வேலை பார்த்துவிட்டு, துபாய் போனேன். போகும்போது வீட்டையும் நண்பர்களையும் விட்டுட்டுப் போறது ரொம்ப வருத்தமாக இருந்தது. ஆனா, பள்ளியோ, கல்லூரியோ சென்னையோ என்னிடம் கொண்டு வராத மாற்றத்தை 21 வயதில் துபாய்தான் கொண்டு வந்தது. அப்போது பெரிய வருமானம் இல்லாவிட்டாலும், தனியாக வாழ்வை எதிர்கொள்ளலாம் என்கிற துணிச்சலை எனக்குள் ஏற்படுத்தியது துபாய்தான்.

மூன்று வருடங்கள் கழித்து, திருமணத்துக்காக சென்னை வந்தேன். வடபழனியில் இருக்கும் 'போட்டோ சயின்ஸ்’ லேபில் எனக்கு ஸ்டில்ஸ் எடுக்குறதுக்காகப் போனேன். அங்கே, கணேஷ் என்ற போட்டோகிராபர், ஒருத்தரை வைத்து சினிமா ஸ்டில் ஷூட் நடத்திக்கொண்டிருந்தார். அவர்தான் என்னோட போட்டோக்களைப் பார்த்துவிட்டு, 'போட்டோவில் நீங்க நல்லாயிருக்கீங்க. சினிமாவில் நடிக்க டிரை பண்ணுங்களேன்’ என்று சொல்லி விட்டுச் சென்றார். திருமணம் ஆன பிறகு, என் மனைவிக்குத் தெரியாமல் சினிமாவில் நடிக்க டிரை பண்ணினேன். அதே நேரத்தில் கூச்சமும் முழுமையாகப் போக வேண்டும் என்று ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியாக இணைந்தேன். நேரடியாக வாடிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினால், என்னுடைய கூச்சம் போகும் என்று நம்பினேன்.''

''ந.முத்துசாமியின் கூத்துப் பட்டறையில் எப்போ சேர்ந்தீங்க? அந்தப் பயிற்சி உங்களுக்குப் பயன்பட்டதா?''

''மார்க்கெட்டிங் வாழ்க்கையும் ரொம்ப சீக்கிரமே போரடிக்க ஆரம் பிச்சுது. மனசு ஒட்டாமல் அலைந்தேன். 2004 - ஜூன் மாதம் கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெறவேண்டும் என்ப தற்காக ந.முத்துசாமி அவர்களைப் போய்ப் பார்த்தேன். ஆனா, அப்போ அவங்களுக்குத் தேவைப்பட்டது ஒரு அக்கவுன்டன்ட்தான். அதனால், நான் ஒரு கணக்காளராக கூத்துப்பட்டறையில் இணைந்தேன். கூடவே இருந்து, அவங் களோட நாடகப் பயிற்சிகளைப் பார்த் தால்கூட நமக்குப் பயன்படும்; என் னைக்காவது வாய்ப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் கணக்காள ராக இணைந்தேன். 2004 டிசம்பரில் சுனாமி அலைகள் நமது கடலோரங் களைத் தாக்கிப் பேரழிவை உருவாக் கினப்போ, சுனாமியில் வாழ்வை இழந்திருந்த மீனவ மக்களுக்கு நம் பிக்கையளிக்க 'ஆக்ஷன் எய்ட்’ என்ற என்.ஜி.ஓ. அமைப்போடு இணைந்து கூத்துப்பட்டறைக்காரங்க நாடகங்கள் போட்டாங்க. அதில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைச்சுது. அது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. கூச்சம் போக அதுவும் ஒரு காரண மாக இருந்தது.''

“சினிமாவில் நான் ஒரு துளி!” - விஜய் சேதுபதி

''தொலைக்காட்சி மெகா சீரியல்கள், குறும்படங்களில் இருந்து எப்படி சினிமாவில் ஜொலிக்க முடிந்தது?''

'' 'புதுப்பேட்டை’ படத்தில் சின் னதா ஒரு ரோல் பண்ணினேன். 'பெண்’ சீரியலில் சீதா மேடத்தோட மகனாக நடிச்சேன். கன்னடத்துல ஒரு படத்தில் வில்லனாக நடிச்சேன். 'வெண்ணிலா கபடிக்குழு’, 'நான் மகான் அல்ல’ இப்படிப் பல படங் கள். ஆனா, எல்லாம் சின்னச் சின்ன ரோல்தான். பிறகு, பாலுமகேந்திரா சாரைப் பார்த்து வாய்ப்புக் கேட்க, அவரோட அலுவலகத்துக்குப் போனேன். 'உன் கண் நல்லாயிருக்கு. நாளைக்கு வா... உன்னை போட்டோ எடுக்கிறேன்’னார் அவர். மறுநாள் போனேன். பாலு சார் என்னை போட்டோ எடுத்தார். 'நான் படம் பண்ணினா வாய்ப்பு தருவேன்’ என்றார். பாலு சார் என்னை போட்டோ எடுத்தே பெரிய விஷயம். அது பெரிய நம்பிக்கையை விதைத்தது.

பின்னர், நண்பரும் இப்போது 'காக்கா முட்டை’ படத்தை இயக்குபவ ருமான மணிகண்டன் மூலமா  'பீட்சா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜோட அறிமுகம் கிடைச்சுது. அவரோடு இணைந்து  மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் சுப்புராஜ் இயக்க சில குறும்படங்கள் செய்தோம். அதெல்லாம் நன்றாகக் கவனிக்கப்பட்டது. ஒரு நடிகனாக உருவாக எனக்கு நம்பிக்கையை விதைத்தது அந்தக் குறும்படங்கள்தான். சில படங்களில் நான் ஹீரோவாக நடிக்கிறதா இருந்து, அது கைகூடி வராமல் போனது. தமிழ் சினிமாவில் ஹீரோவாக முடியாவிட்டாலும், எனக்கொரு நல்ல இடம் இருக்கிறது என நம்பினேன். நடிப்பு, டப்பிங் என சினிமாவில் என்னென்ன வேலைகள் எல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்தேன். என்ன செய்தாவது சினிமாவில் இருக்கவேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. அந்த நேரத்தில்தான் 'தென்மேற்கு பருவக் காற்று’ வாய்ப்பு வந்தது. எல்லாமே இயல்பாக நடந்தது.''

''உங்களுக்கான கதையை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?''

''கதை இல்லாமல் நடிகன் வெற்றி பெற முடியாது. நல்ல கதையாக, அதை சுவாரஸ்யமாகச் சொல்லும் திரைக்கதை யாக இருந்தால், தேர்ந்தெடுக்கிறேன். கதையில் எனக்கு என்ன கதாபாத்திரம், மற்றவர்களுக்கு என்ன கதாபாத்திரம் என்பதை எல்லாம் நான் பார்ப்பது இல்லை. கேட்டதும் மனதில்  பளிச் சென்று ஒட்டிக்கொள்கிற கதைகளையே நான் விரும்புகிறேன்.''

''இனி இந்த இடத்தைத் தக்கவைக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டி யிருக்கும், இல்லையா?''

''அப்படிச் சொல்ல முடியாது. இது என்னோட தொழில். இதுக்கு நான் உண்மையாக இருக்கணும்னு நினைக் கிறேன். யாரோட இடத்தையும் நான் தட்டிப் பறிக்கவில்லை. அதுபோல என் இடத்தையும் யாரும் இங்கே எடுத் துக்கவும் முடியாது. காலந்தோறும் சினிமா புதிய புதிய மாற்றங்களோடு தன்னை உயிர்ப்பித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதில் நானும் ஒரு துளி. அவ்வளவுதான்!

'தென்மேற்கு பருவக்காற்று’ வந்த பிறகுகூட, பெரிதாக வாழ்க்கை மாறி விடவில்லை. 'நடுவுல கொஞ்சம் பக்கத் தைக் காணோம்’ படம் பண்ணும் போதுகூட என்னிடம் பணம் இல்லை. கடன் வாங்கித்தான் வாழ்க்கையை ஓட்டினேன். இன்றைக்குப் பணம் இருக்கு. அதே பழைய ஆளாகத் தான் இன்னமும் இருக்கிறேன். சினிமாவில் என்னோட இடம் எது என்பது எனக்குத் தெரியும். நாளையே இது எதுவும் இல்லாமல், ரொம்ப சாதாரணமான ஒரு வாழ்வை வாழ வேண்டும் என்றால் கூட, அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன்.''

''ஒரு நடிகராக மட்டுமே இருக்க விருப்பமா? திரைப்படங்கள் இயக்கும் ஆசை இல்லையா?''

''ஒரு இயக்குநர் ஆகவேண்டும் என்பது என்னுடைய ஆசைதான். ஒரு நடிகனாக உருவாகி வந்த பிறகு, நடிப்பைவிட டைரக்ஷன் மேல் எனக்கு இன்னும் பெரிய மரியாதை உருவாகியிருக்கிறது. ஒரு படத்தை இயக்குவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. சீனு ராமசாமி சார் 'தென்மேற்கு பருவக்காற்று’ பண்ணினார். அப்பு றம் 'நீர்ப்பறவை’ பண்ணினார். அடுத்த படத்துக்கு இப்போதுதான் தயாராகிக்கொண்டிருக்கிறார். ஆனால், நான் அதற்குள் கிட்டத் தட்ட ஏழு படங்களை முடித்து விட்டேன். இங்கேதான் ஒரு இயக் குநருக்கும் நடிகனுக்குமான வித்தி யாசத்தை நான் புரிந்துகொள் கிறேன். போய் நடித்துவிட்டு வருவது மட்டுமே, நடிகனுடைய வேலை. ஆனால், இயக்குநரோ படத்தில் வருகிற மொத்த கதா பாத்திரங்களையும் மனத்தினுள் சுமக்கிறார். தயாரிப்பாளரைச் சமாளிக்கிறார். யூனிட்டை மேய்க் கிறார். இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு படத்தை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதனால், இப்போதைக்கு அதுபற்றி யோசிக்கவே பயமா இருக்கு!''

“சினிமாவில் நான் ஒரு துளி!” - விஜய் சேதுபதி

''இப்போது புதிதாக வரும் இயக்குநர்களின் கதைகளை நீங்கள் நிராகரிக்கிறீர்களாமே?''

''எனக்குக் கதை பிடித்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் நான் நடித்த எல்லா படங்களையும் நீங்கள் பார்த்தால் தெரியும், அவர்கள் எல்லாரும் முதல் பட இயக்குநர்கள். இப்போது ஒப்புக் கொண்டிருக்கும் படங்களில்கூட பெரும்பாலான படங்களை இயக்குகிறவர்கள் முதல் பட இயக்குநர்களே! நான் கதை கேட்பதில் பெரிய இயக்குநர்கள், சின்ன இயக்குநர்கள் என்று பாரபட்சம் பார்ப்பது இல்லை.''

''நீங்கள் நடிக்கும் படங்கள் பற்றிச் சொல்லுங்களேன்?''

'''இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திலும், 'பண்ணையாரும் பத்மினியும்’ படத்திலும் நடித்திருக் கிறேன். அடுத்து சங்குதேவன், சீனு ராமசாமி சாரின் 'இடம் பொருள் ஏவல்’, 'வன்மன்’, 'வசந்தகுமாரன்’, ஜனநாதன் சாரோட 'பொறம்போக்கு’, அப்புறம் 'மெல்லிசை’ என்று வரிசையாக சில படங்கள் செய்கிறேன். ஒரு படத்தின் கதா பாத்திரத்துக்கும் இன்னொரு படத்தின் கதாபாத்திரத்துக்கும் தொடர்பே இல்லாமல் அதிரடியாக வெவ்வேறு நிறமுள்ள படங்களாக அவை அமையும். தெலுங்கு, கன்னடப் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது. இப்போதைக்குத் தமிழில் ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை முடித்துக் கொடுப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறேன். மற்றபடி, வில்லனாக நடிக்கவேண்டும் என்பது என் விருப்பம்!''

''நிறைவேறாமல் போன ஆசை?''

''நான் சினிமாவில் வாய்ப்புத் தேடிக்கொண்டு இருக்கும்போது, 'எப்படா இவன் ஹீரோ ஆவான்’ என்று என் அப்பா ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரோட முதல் வருட நினைவு நாளில், மிகச் சரியாக டிசம்பர் 24 அன்றுதான் என் முதல் படம் 'தென்மேற்கு பருவக்காற்று’ ரிலீஸ் ஆனது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு