Published:Updated:

"'இந்த ஜூஸு யாருக்கு'ங்கிற நளினியின் வாய்ஸ் என்னுடையது!" நித்யா ரவீந்தர்

"'இந்த ஜூஸு யாருக்கு'ங்கிற நளினியின் வாய்ஸ் என்னுடையது!" நித்யா ரவீந்தர்
"'இந்த ஜூஸு யாருக்கு'ங்கிற நளினியின் வாய்ஸ் என்னுடையது!" நித்யா ரவீந்தர்

`` `வாங்கடா என் ரெண்டு கண்ணுகளா'னு விஜயகுமார், சரத்பாபு இருவரையும் பார்த்து சொல்லுவார். அது ஷூட்டிங் என்பதை மறந்து அந்த நேரத்துல, `அப்போ நான் உங்களுக்கு முக்கியமில்லையா?'னு சிவாஜி சார்கிட்ட கேட்டு கோபப்பட்டேன். அவர் சிரிச்சுகிட்டே, `நீதான்மா என் உயிரு'னு கட்டிப்பிடிச்சு கொஞ்சினார்."

`` `நடிச்சது போதும். இனி குழந்தைகள், குடும்பத்தை மட்டும் பார்த்துப்போம்'னுதான் சினிமாவுல நடிக்காம இருந்தேன். இப்போ பசங்க பெரியவங்களாகிட்டாங்க. அதனால இப்போ ஆக்டிவா நடிக்க முடிவெடுத்திருக்கேன்" எனப் புன்னகையுடன் பேசுகிறார் நடிகை நித்யா ரவீந்தர். டப்பிங் கலைஞராகவும் பணியாற்றிவருபவர். 

``நீங்க நடிகையானது எப்படி?"

``என்னோட அப்பா சொந்தமா நாடக கம்பெனி வெச்சிருந்தார்; நடிக்கவும் செய்வார். அவரின் நாடகங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிப்பேன். தொடர்ந்து விசு சார், மெளலி சார்களோட நாடகங்கள்லயும் நடிச்சேன். இப்படி பிஸியா நடிச்சுகிட்டு இருக்க, படிப்பில் சரியா கவனம் செலுத்த முடியலை. எனக்கு நடிப்பைவிட, படிப்புலதான் அதிக விருப்பம். ஆனா, `எப்போ வேணாலும் படிக்கலாம். ஆக்டிங் வாய்ப்பு வரும்போது பயன்படுத்திக்கணும்'னு அப்பா சொல்லிட்டார். அதனால ஒன்பதாவதோடு படிப்பை நிறுத்திட்டேன். நாடகங்களைத் தொடர்ந்து மலையாளப் படத்தில் நடிக்கத் தொடங்கி சினிமாவுலயும் பிஸியாகிட்டேன்."

``சிவாஜி கணேசனுடன் நடித்த அனுபவம் பற்றி..."

``தமிழில், `குடும்பம் ஒரு கதம்பம்'தான் என் முதல் படம். அதுபோலவே, மலையாளத்தில், `லாரி', தெலுங்கு மற்றும் கன்னடத்தில், `கைதி'னு தலா ஒரு படங்களே எனக்கான ஆக்டிங் அடையாளத்துக்குப் போதும்னு பலரும் சொல்லுவாங்க. சிவாஜி சார்கூட, `தீர்ப்பு' படத்துல நடிச்சதை இப்பவும் என்னால மறக்க முடியலை. அந்தப் படத்தில் சிவாஜி சாருக்கு கற்பூரத் தட்டைக் காட்டுறதுதான் என் முதல் காட்சி. அவர் சாமி கும்பிட்டுட்டு, `வாங்கடா என் ரெண்டு கண்ணுகளா'னு விஜயகுமார், சரத்பாபு ரெண்டு பேரையும் பார்த்துச் சொல்லுவார். அது ஷூட்டிங்கிறதை மறந்து அந்த நேரத்துல, `அப்போ நான் உங்களுக்கு முக்கியமில்லையா?'னு சிவாஜி சார்கிட்ட கேட்டு கோபப்பட்டேன். அவர் சிரிச்சுகிட்டே, `நீதான்மா என் உயிரு'னு கட்டிப்பிடிச்சு கொஞ்சினார். சந்தோஷப்பட்டேன். இறந்துபோன என்னைச் சுடுகாட்டில் அடக்கம் பண்ற மாதிரி ஒரு காட்சி வரும். அதுக்காக உச்சி வெயில்ல என்னைப் படுக்க வெச்சு, ஷூட் பண்ணினாங்க. அப்போ, `நீங்க நடிக்க வேண்டிய சீனை முதல்ல எடுத்துடுறோம்'னு டைரக்டர் சிவாஜி சார்கிட்ட சொன்னார். `அடேய், உச்சி வெயில்ல இப்படி இந்தப் புள்ளையைப் படுக்க வெச்சிருக்கியே. அந்தப் பொண்ணை ரொம்பக் கஷ்டப்படுத்தாதே. நான் வெயிட் பண்றேன். அந்தப் புள்ளையோட சீன்ஸை முதல்ல எடு'னு சொல்லிட்டார். இப்படி அந்தப் படத்துல நடிச்சு முடிக்கிற வரை, அவர் என் மேல ரொம்பப் பிரியமா இருந்தார்."

``தங்கச்சி ரோலில் அதிகமா நடிக்கக் காரணம்?"

``இதுவரைக்கும் வாய்ப்புக்காக யாரையுமே நான் அணுகினதில்லை. வந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நடிச்சேன். என் தோற்றத்துக்குத் தங்கச்சி ரோல்தான் செட்டாச்சு. அதனால அந்த ரோல்லேயே அதிகமா நடிச்சேன். தெலுங்கில் அப்போதைய முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் தங்கச்சியா நடிச்சிருக்கேன். அதனால அவங்களோடு எனக்கான பாசம் ரொம்ப அதிகம். எனக்கு ஒரு சின்னப் பிரச்னைகூட வராம, அன்பா பார்த்துப்பாங்க. 1987-ம் வருஷம், கல்யாணமாச்சு. பிறகு குடும்பப் பொறுப்புகளை கவனிச்சுக்க, நடிப்புக்கு பிரேக் கொடுத்துட்டு, சீரியல்கள்ல மட்டும் நடிச்சுகிட்டு இருந்தேன். மறுபடியும் ரீஎன்ட்ரியா `நான் பெற்ற மகனே' படம் மூலமா கொடுத்தேன். அப்புறம் `அலைபாயுதே', `அன்பே அன்பே',  `மேகா', `சரவணன் இருக்க பயமேன்'  உள்ளிட்ட செலக்டிவான பல படங்கள் நடிச்சேன். இதுவரை நாலு மொழிகள்லயும் 120 படங்களுக்கும் மேல நடிச்சிருக்கேன்." 

``டப்பிங் ஆர்டிஸ்டானது எப்படி?" 

`` `எங்கேயோ கேட்ட குரல்' படத்தில் அம்பிகாவின் மகளுக்கு டப்பிங் கொடுத்தேன். யதேச்சையான அந்த வாய்ப்புக்குப் பிறகு டப்பிங் கொடுக்கலை. `அதிகச் சிரமமிருக்காது; நீங்கதான் பேசணும்'னு பி.வாசு சார் சொல்ல, `என் தங்கச்சி படிச்சவ' படத்தில் ரூபினிக்கு டப்பிங் கொடுத்தேன். பிறகு நிறைய நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துட்டு இருந்தேன். `லண்டன்' படத்துல, `இந்த ஜூஸூ யாருக்கு. சொல்லாதையெல்லாம் செய்'னு வடிவேலுவைப் பார்த்து நளினி பேசுற டயலாக் ரொம்ப ஃபேமஸ். 90-களிலிருந்து இப்போ வரை சினிமா, சீரியல், விளம்பரம்னு நளினிக்குத் தொடர்ச்சியா நான்தான் டப்பிங் கொடுத்துட்டு இருக்கேன். நடிப்பு அவங்களோடது; வாய்ஸ் என்னோடது. சீமா அக்காவுக்கும் நான்தான் டப்பிங் கொடுக்கிறேன்." 

``ஃபேமிலி லைஃப் எப்படிப் போகுது?"

``முன்பு சினிமா ஒளிப்பதிவாளராக வொர்க் பண்ணின கணவர் ரவீந்தர், இப்போ சினிமாவுல நடிச்சுக்கிட்டு இருக்கார். பொண்ணு ஜனனி ரவீந்தர், கல்யாணமாகி அமெரிக்காவுல வசிக்கிறாங்க. மகன் அர்ஜூன் ரவீந்தர், கார்ப்பரேட் ஃபிலிம் மற்றும் கான்செப்ட் வீடியோ டைரக்‌ஷன் ஃபீல்டுல இருக்கார். `ஏதாச்சும் வேலை இருக்கு', `அவசரமா வெளிய போகணும்'ன்னா அவன் சரியா சாப்பிடமாட்டான். அதனால, அவனுக்கு இப்போ வரை பெரும்பாலும் நான்தான் சாப்பாடு ஊட்டிவிடுவேன். பெரியவனா வளர்ந்துட்டாலும், தாயாக என் மகனுக்குச் சாப்பாடு ஊட்டுறதில் சந்தோஷம்தான். என் கணவரும், மகனும் என்னை நல்லா பார்த்துக்கிறாங்க. ஆனால், `படிக்க வேண்டிய காலத்தில் படிக்காம விட்டுட்டோமே'னுதான் அடிக்கடி வருத்தப்படுவேன்."
 

அடுத்த கட்டுரைக்கு