Published:Updated:

"காதலருடன் சீக்கிரமே கல்யாணம் நடந்தா சந்தோஷம்தான்!" - இலியானா

காதல், திருமணம், சினிமா பயணம் குறித்து நடிகை இலியானா

"காதலருடன் சீக்கிரமே கல்யாணம் நடந்தா சந்தோஷம்தான்!" - இலியானா
"காதலருடன் சீக்கிரமே கல்யாணம் நடந்தா சந்தோஷம்தான்!" - இலியானா

தமிழ் சினிமாவில் `அதிர்ஷ்டமில்லா நடிகைகள்' என்று சொல்லப்பட்டவர்களில் ஒருவர் இலியானா. தமன்னா வில்லியாக நடித்த `கேடி' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் தோல்வியைத் தழுவியதையடுத்து டோலிவுட் சென்ற இவரைத் தெலுங்கு திரையுலகம் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டாடியது. மிக அதிகச் சம்பளம் வாங்கக்கூடிய அளவுக்கு இவரது நடிப்பு மற்றவர்களை ஈர்த்தது. கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து `நண்பன்' படத்தில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். ஒல்லி பெல்லி பாடல் இங்கே மாஸ் ஹிட்! 

சமீபத்தில் இவர் பாலிவுட் சினிமா குறித்து மிகப் பெருமையாகப் பேசியுள்ளார். 2012-ல் `பர்ஃபி' (Barfi) எனும் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக இந்தியில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், டோலிவுட் பக்கம் மீண்டும் வருவதற்கு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியுள்ளன. ``தென்னிந்தியத் திரையுலகம் நடிகைகளை ஒரு போகப்பொருளாகப் பார்க்கிறது. ஆனால், பாலிவுட் சினிமா அப்படி இல்லை. அங்கே கிளாமர் என்பது கதையின் ஒரு அம்சமாக இருக்கிறது" என்று பாலிவுட் பற்றி கூறியுள்ளார்.

18 வயதில் சினிமா துறையைத் தேர்ந்தெடுத்த இலியானாவுக்குத் தன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையும் அதிகம் இருந்தது. தனது காதல், திருமணம், தாய்மை குறித்து அவ்வப்போது வந்த வதந்திகளை தவிர்ப்பதே இவரது பிரதான வேலையாக இருந்து வந்தது. ஆஸ்திரேலிய போட்டோகிராஃபரான ப்யூ ஆன்ரூ நீபோன் என்பவர்தான் இலியானாவின் காதலன், கணவர் என்ற வதந்தி சோஷியல் மீடியாக்களில் வைரலாகப் பரவியது. மேலும், இவர்களுக்குத் திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டது என்றும் பேச ஆரம்பித்துவிட்டனர். 

``எங்களுக்கு உண்மையில் திருமணமாகவில்லை. நான் கர்ப்பமாகவும் இல்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்தால் நான் சந்தோஷப்படுவேன். சீக்கிரம் இது நடக்க வேண்டும் என்றும் விருப்பப்படுகிறேன். ஆனா, அதற்கு இன்னும் நேரமிருக்கிறது. எனது காதலர் என்னைப் புரிந்துகொண்டவராக இருக்கிறார். காதலில் நம்பிக்கை மிக முக்கியம். என் வாழ்க்கை சிறப்பானதாக மாறும் என்று எனக்குள் பெரிய கனவே இருக்கிறது" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.   

இவர் இப்படி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது சினிமா வட்டாரத்தைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஏனெனில், இலியானா தனது பெர்சனல் பக்கங்களைத் தன்னுள் மட்டும் வைத்துக்கொள்பவர்.  

``மன அழுத்தத்துக்கு ஆளாகும்போது நான் முதலில் தேடும் மனிதர் ஆன்ட்ருதான். பொதுவாக நான் மனஅழுத்தத்தில் இருக்கும்போது யாரையுமே பார்க்கமாட்டேன். வீட்டிலேயே அடைந்து கிடப்பேன். சாட்டிங்கூட செய்யமாட்டேன். எல்லாவற்றையும் மீறி யாரேனும் என்னைத் தொடர்புகொள்ள நேரிட்டால், அவர்களை பயங்கரமாக திட்டிவிடுவேன். அதை முற்றிலும் மாற்றியது ஆன்ட்ருதான். ஆனால், நாங்கள் ஒருபோதும் மற்றொருவர் வேலையைப் பற்றி பகிர்ந்துகொண்டதில்லை" என்று கூறியுள்ளார். 

``தற்போது, `அமர் அக்பர் ஆண்டனி' எனும் தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். சினிமாவை மட்டும் நம்பி என்னால் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. சினிமாவில் எனது பயணம் முடிந்தாலும் சமூகத்துக்காக நான் செய்ய வேண்டிய கடமை அதிகம் இருக்கிறது. சில படங்களில் நடித்திருந்தாலும் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு என் கதாபாத்திரங்கள் இருந்திருக்கின்றன. சினிமா, குடும்பம் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் நான் கட்டாயமாகக் குடும்பத்தைதான் தேர்ந்தெடுப்பேன். ஆனால், சினிமா அதை தாங்கிக் கொள்ளாது. குடும்பத்தை விட்டுவிட்டு தன்னை மட்டுமே பார்த்துக்கொள்ளச் சொல்லும். அதுதான் சினிமாவின் தன்மை. அதை என்னால் ஒருபோதும் செய்ய இயலாது. 

ஸ்கூபா டைவிங், பாரா கிளைடிங், ஸ்விம்மிங், டான்ஸ், டிராவல் ஆகியவற்றில் எனக்கு ஈடுபாடு அதிகம் இருக்கிறது. சினிமாவிலிருந்து விலகிய பிறகு இவைதான் என்னை ஆத்மார்த்தமாக உணரச் செய்யும் என்று நம்புகிறேன். நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே சில கச்சேரிகளில் பாடியிருக்கிறேன். மீண்டும் எனது இசைப் பயணத்தையும் தொடங்கவிருக்கிறேன். கூடிய விரைவில் ஆல்பங்களை வெளியிடுவேன்." என்று தன்னம்பிக்கையுடன் தெரிவிக்கிறார், இலியானா.