Published:Updated:

“என்னோட ராசி... அது பெரியவங்க ஆசி!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“என்னோட ராசி... அது பெரியவங்க ஆசி!”
“என்னோட ராசி... அது பெரியவங்க ஆசி!”

சினிமாசின்னராசு முத்தப்பா, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

பிரீமியம் ஸ்டோரி

மிழ்த் திரையுலகில் வளர்ந்துவரும் இளம் பாடகர்களில் குறிப்பிடத்தக்கவர் வேல்முருகன். குறுகிய காலத்திலேயே 100 படங்களில் பாடி, பல வெற்றிப் பாடல்களைத் தந்து, இசைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

இவரது தனிச்சிறப்பே, தனது பாடல்கள் மட்டும் அல்லாமல், இரண்டு மூன்று தலைமுறைக்கு முந்தைய தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.எஸ். போன்ற இசை மேதைகளின் பாடல்களை பொதுமேடைகளில் பாடி வருவதுதான். இதனாலேயே இவர் மக்களின் மனம் கவர்ந்த பாடகராக விளங்குகிறார்.

இந்த வித்தியாசமான திரைப் பாடகரை, தீபாவளி மலருக்காக அவரது வீட்டில் சந்தித்தோம். தம்பதி சகிதமாகக் கேள்விகளை எதிர்கொண்டார்.

“என்னோட ராசி... அது பெரியவங்க ஆசி!”


 

நீங்கள் இளைஞராக இருந்தும், பழைய பாடல்களையே அதிகம் விரும்பிப் பாடுகிறீர்கள். இதற்கு ஏதேனும் காரணம் உண்டா?''

''பழைமையை நான் என்றும் மறக்கமாட்டேன். அந்தப் பாடல்களை பாடிப் பாடித்தானே இன்று உங்கள் முன் நிற்கிறேன்! என் சொந்த ஊர் விருத்தாசலம் அருகில் உள்ள முதனை என்கிற குக்கிராமம். நான் ஏழு வயதுச் சிறுவனாக இருந்தபோது, சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் எங்கள் ஊரில் ஒரு கச்சேரிக்கு வந்தார். நான் நேரில் பார்த்த முதல் பின்னணிப் பாடகர் அவர்தான். அப்போது அவர் சினிமாவில் பாடிய,

'அமுதும் தேனும் எதற்கு?’

'சமரசம் உலாவும் இடமே...’

'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது...’

'மாட்டுக்காரவேலா உன் மாட்டக் கொஞ்சம் பார்த்துக்கடா...’

போன்ற பாடல்களை மேடையில் பாடினார். அங்கு திரண்டிருந்த மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தையும் கைத்தட்டல்களையும் பார்த்து நான் வியந்து போனேன்.

அன்று முதல் என் உதடுகள் அந்தப் பாடல்களை முணுமுணுக்கத் தொடங்கின. பாடகராக வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு வித்திட்டவர் அவர்தான். எனவே, அவரே எனக்கு மானசீகக் குருவானார். இப்படி, ஒவ்வொரு பாடகரின் மனத்திலும் யாராவது ஒரு குரு இருப்பார்.''

''அப்படி எந்தெந்தப் பாடகர்கள், யார் யாரை குருவாகப் பின்பற்றினார்கள் என்று சொல்ல முடியுமா?''

''நிச்சயமாகச் சொல்ல முடியும். அந்தக் காலத்தில் கே.பி.சுந்தராம்பாளின் கணவரான கிட்டப்பா 'ஸ்ரீவள்ளி’ நாடகத்தில் 'காயாத கானகத்தே...’ பாடலைப் பாடி இருப்பார். பின்னாளில் ஏவி.எம். தயாரித்த 'ஸ்ரீவள்ளி’ படத்தில் அதே 'காயாத கானகத்தே...’ பாடலை கிட்டப்பா குரலிலேயே டி.ஆர்.மகாலிங்கம் பாடினார். இவர் கிட்டப்பாவை குருவாக ஏற்றுக்கொண்டதால்தானே அவரைப் போலவே பாட முடிந்தது!

சகலகலா வல்லவராகத் திகழ்ந்த பி.யு.சின்னப்பா பாணியில் இன்னொருவர் பாடுவது கடினம் என்று சொல்வார்கள். சின்னப்பாவின் குரல் வித்தையைக் கையாண்டு சி.எஸ். ஜெயராமன் பல திரைப்பாடல்களைப் பாடியிருக்கிறார். 'மங்கையர்க்கரசி’ படத்தில் பி.யு.சின்னப்பா பாடிய 'காதல் கனிரசமே...’ பாடலை, அதே பாணியில் 'குறவஞ்சி’ படத்தில் 'காதல் கடற்கரை ஓரமே...’ என்று பாடியிருக்கிறார் சி.எஸ்.ஜெயராமன்.

அந்தக் காலத்தில் பாட வருகிறவர்கள் எல்லாம் எம்.கே.தியாகராஜபாகவதர் போலப் பாடவேண்டும் என்று விரும்புவார்கள். டி.எம்.சௌந்தரராஜனுக்கு அத்தகைய சாரீரம் இருந்தது. இவர் பாகவதர் போல ஏழு கட்டையில் பாடாவிட்டாலும், பாடல் பதிவின்போது பாகவதருக்கு நிகராக தன் குரலைப் பதிவுசெய்துவிடுவார். அவர்போலவே டி.எம்.எஸ். பல பாடல் களைப் பாடியுள்ளார். 'சிந்தாமணி’ படத்தில் 'ராதே உனக்குக் கோபம் ஆகாதடி...’ என்ற பாகவதரின் பாடலை அப்படியே ஸ்ருதி பிசகாமல் 'குலமகள் ராதை’ படத்தில் டி.எம்.எஸ். பாடியிருக்கிறார். இதேபோல், பாகவதரின் 'ஹரிதாஸ்’ படப் பாடலான 'அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்’ என்ற பாடலை 'சம்பூரண ராமாயணம்’ படத்துக்காக சில வரிகள் மாற்றப்பட்டு, டி.எம்.எஸ். பாடியிருக்கிறார்.

இவர் மட்டுமா? நடிப்பிசைப்புலவர் என்று அழைக்கப்பட்ட கே.ஆர்.ராமசாமி கூட பாகவதர் பாணியைப் பின்பற்றிப் பாடியிருக்கிறார். 'சொர்க்கவாசல்’ படத்தில் 'எங்கும் இன்பம் நிலவினிலே நீல வானத்திலே மழை தரும் அமுதான கானத்திலே...’ என்ற பாடலை, பாகவதர் குரலிலேயே பாடியிருக்கிறார்.''

“என்னோட ராசி... அது பெரியவங்க ஆசி!”

''உங்கள் திரைப்பாடல்களின் வெற்றி குறித்து..?''

'' 'சுப்பிரமணியபுரம்’ தொடங்கி 'வெண்ணிலா வீடு’ வரை நூறு படங்களில் பாடியிருக்கிறேன். இவற்றில் பத்து படங்கள் நூறு நாட்கள் ஓடியிருக்கின்றன. 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ 175 நாட்கள் வெற்றிகரமாக ஓடி வெள்ளி விழா கொண்டாடியிருக்கிறது.

எனக்கு ஒரு ராசி உண்டு. ஒரு இயக்குநருடனோ அல்லது ஒரு இசையமைப்பாளரிடமோ நான் முதன்முதலாக இணைந்து பணியாற்றுகிறபோது, அது வெற்றிப்படமாக அமைகிறது. அது பெரியவங்க ஆசி என்றுதான் சொல்ல வேண்டும். இயக்குநர்கள் வரிசையில் சசிகுமாரின் 'சுப்பிரமணியபுரம்’, சமுத்திரக்கனியின் 'நாடோடிகள்’, வெற்றிமாறனின் 'ஆடுகளம்’, ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா’, ராஜேஷின் 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய படங்களைக் குறிப்பிடலாம். இதே மாதிரி, அறிமுக இசையமைப்பாளர்கள் மற்றும் புது தயாரிப்பாளர்களின் படங்களுக்கு நான் முதன்முதலாக பாடும்போதும் எனக்கு வெற்றிதான்!

இப்போது ஜி.வி.பிரகாஷின் முதல் தயாரிப்பான 'மத யானைக் கூட்டம்’ படத்துக்காகவும் பாடி இருக்கிறேன்.''

''இந்தப் பாடலை இவர் பாடினால்தான் நன்றாக இருக்கும் என்று இசையமைப்பாளர்கள் தீர்மானிக்கிறார்களா? அல்லது, யார் வேண்டுமானாலும் எந்தப் பாடலையும் பாடலாம் என்று நினைக்கிறார்களா? உங்களைப் போன்ற பாடகர்களுக்கு எந்த அடிப்படையில் வாய்ப்பு அளிக்கிறார்கள்?''

''எல்லாப் பாடல்களையும் எல்லோராலும் பாடிவிட முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. அந்தக் காலத்தில் ரஞ்சன் நடித்த 'நீலமலைத் திருடன்’ படத்தில் டி.எம்.எஸ். பாடிய 'சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா...’ பாடலை யாராலும் மறக்க முடியாது. மிக அற்புதமான பாடல். எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பாட்டு இது. இதேபோன்று தனக்கும் டி.எம்.எஸ். ஒரு பாட்டு பாட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ரொம்பவும் ஆசைப்பட்டார். அப்படிப் பிறந்ததுதான் 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’ என்ற பாடல்! இதுவும் காலத்தை வென்ற பாடல். இந்தப் பாடல்களை டி.எம்.எஸ். தவிர வேறு யார் பாடியிருந்தாலும் எடுபட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்!

பாடலுக்கு ஏற்றவாறு ஒரு பாடகரைத் தீர்மானிப்பது ஒருபுறம் இருக்க, கதாநாயகனுக்கு ஓரளவு குரல் பொருந்துகிற பாடகருக்கே முதல் வாய்ப்பு தரப்படுகிறது. அதோடு, பெரிய ஹீரோ படம் என்றால், அவருடைய ஒப்புதலும் வேண்டும்.''

''அண்மையில் நடைபெற்ற இசைக் கலைஞர்கள் பொன் விழாவில் ஒரு மிகப் பெரிய பாடல் பாடி அசத்திவிட்டீர்களே?''

''அது ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்ட பிரமாண்டமான விழா! இசை ரசிகர்களுக்காக ஏதேனும் புதுமை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதற்காக 45 நிமிடங்களுக்கு ஒரே பாடலைத் தயார் செய்தேன். தியாகராஜ பாகவதர் முதல் ஜேம்ஸ் வசந்தன் வரை இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள் என 500-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் பெயர்களை இணைத்து, அவர்களது அருமை பெருமைகளை ஒரே பாடலாகப் பாடினேன். இது 15 பாடல்களுக்குச் சமம். இதற்குக் கிடைத்த வரவேற்பினால், இதை அவ்வப்போது பல மேடைகளிலும் பாடி வருகிறேன்.''

''பொது நிகழ்ச்சிகளில் உங்கள் அம்மாவைப் பற்றியும் பாடி, மனத்தை உருக வைத்துவிடுகிறீர்களே..?''

''ஆமாம்! நான் இளம் வயதிலேயே தாயை இழந்தவன். எனவே, தாய்ப் பாசத்துக்காக ஏங்கியிருக்கிறேன். அதனால்தான், தாய்ப்பாசத்தை போற்றும் வகையில் -

'பத்து மாதம் என்னைப் பெற்றெடுத்த அம்மா - உன்

பாசத்திற்கு முன்னாலே எல்லாமே சும்மா...’

என்கிற பாடலை எல்லா மேடைகளிலும் தவறாமல் பாடி வருகிறேன். இதைப் பாடும்போது எனக்குக் கண்ணீர் வந்துவிடும்.''

''நீங்கள் இசைக் கல்லூரியில் படித்தவர். உங்கள் மனைவி நடனம் பயின்றவராமே?''

''ஆம். நான் இசைக் கலைஞன்; அவர் பரதக் கலைஞர், அதுவும் முறையாகக் கற்று, முதுகலைப் பட்டம் பெற்றவர். எங்கள் திருமணத்துக்குப்பிறகுதான் பரதத்தில் பட்டப் படிப்புகள் படித்தார். இப்போது இந்தத் துறையில் எம்.ஃபில் (MPhill) படித்துக்கொண்டிருக்கிறார்.''

குழந்தை ரக்ஷனாவை கொஞ்சிக்கொண்டிருந்த அவர் மனைவி கலாவிடமும் சில கேள்விகளை வீசினோம்.

''உங்களுக்கும் திரைத்துறை பக்கம் வரும் ஆசை இருக்கிறதா..?''

''இல்லை. சினிமாவுக்கு வரவேண்டும் என்கிற ஆசையே எனக்குக் கிடையாது. இப்போது கல்லூரிப் படிப்பையும் தொடர்ந்துகொண்டு, நாட்டியப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறேன். எதிர்காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக பரதக் கலையைத் கற்றுத்தர ஆசைப்படுகிறேன். இதற்காக, அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று நாட்டியப் பயிற்சி கொடுக்கவும் ஒரு திட்டம் வைத்துள்ளேன்.''

''உங்கள் கணவர் பாடிய திரைப்பாடல்களில் உங்களுக்கு எந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும்?''

''அவர் பாடிய மெலடி பாடல்கள்தான் எனக்கு  மிகவும் பிடிக்கும்.

'கொஞ்சும் கிளி பாடவெச்சா

கும்மாளம்தான் போடவெச்சா’

பாடலை அடிக்கடி முணுமுணுப்பேன். இது 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் வருகிறது.

இதேபோல, 'வெண்ணிலா வீடு’ படத்தில் வருகிற

'ஆள அசத்துது மனசு

ஆட கழட்டுது வயது

குழந்தை பிறந்த பின்னும்

நம் காதல் இன்னும் புதுசு...’

என்கிற ரொமான்டிக் பாடலும் எனக்குப் பிடிக்கும்.''

விகடன் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் சொல்லி விடை கொடுத்தனர் வேல்முருகன் தம்பதியினர்.

“என்னோட ராசி... அது பெரியவங்க ஆசி!”

தரைக்கு வந்த நிலா

ஹை..! இங்கே பாருங்க, ’நிலா நிலா ஓடி வா... நில்லாமல் ஓடி வா’ என்று யாரோ ஒரு குழந்தை விளையாட்டாகக் கூப்பிட, நிஜமாகவே நிலா இறங்கி பூமிக்கு வந்துவிட்டது! ஆமாம்... எவ்வளவு தடவை கூப்பிட்டாலும் நிலா இறங்கி வராமல் குழந்தைகளை ஏமாற்றுகிறதே என்று நினைத்தாரோ என்னவோ, இந்தச் செயற்கை நிலாவைத் தயாரித்துவிட்டார், ரஷ்யாவைச் சேர்ந்த கலைஞர் 'லியோனிட் டிஷ்காவ்’ (Leonid Tishkov). இந்த நிலா விளக்கை உலகின் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று, இத்துடன் குழந்தைகளை நிறுத்தி விதவிதமாகப் படங்கள் எடுத்துக் கொடுக்கிறார்.

“என்னோட ராசி... அது பெரியவங்க ஆசி!”

கனமான ஓட்டம்

ஓட்டப் பந்தயத்தில் ஜெயிக்க வேண்டும் என்றால், அதிலேயே முனைப்பாக ஓட வேண்டும். ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த டோனி ஃபீனிக்ஸ்மோரிசன் (Tony Phoenix-Morrison) ஓடும் ஓட்டம் சற்று வித்தியாசமானது. அவர் ஓடுவதை பார்வையாளர்கள் விசித்திரமாகவும் புதுமையாகவும் பார்க்கிறார்கள். காரணம், சுமார் 43 கிலோ எடையுள்ள குளிர்சாதனப் பெட்டி  ஒன்றைத் தன் முதுகில் சுமந்தபடி ஓடுகிறார் இவர். இதுவரை இப்படி 1000 கி.மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடியிருக்கிறார். இவருக்கு இப்போது வயது 50. ஆனாலும், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறார் டோனி. இதனால் கிடைக்கும் நிதியை முதியோர் நலனுக்காக செலவுசெய்வதற்காக டோனியை எத்தனை பாராட்டினாலும் தகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு