Published:Updated:

நடிகர் திலீப் விவகாரம்... என்ன நடக்கிறது மலையாள சினிமாவில்?

நடிகர் திலீப் விவகாரம்... என்ன நடக்கிறது மலையாள சினிமாவில்?
நடிகர் திலீப் விவகாரம்... என்ன நடக்கிறது மலையாள சினிமாவில்?

முற்றுகிறது நடிகர் திலீப், 'அம்மா' பிரச்னை. கேரள சினிமாவில் என்ன நடக்கிறது?

டிகை மஞ்சு வாரியருடன் விவாகரத்து,காவ்யா மாதவனுடன் மறுமணம் என நடிகர் திலீப்பின் வாழ்க்கை அனைவரும் அறிந்ததே! 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேரள நடிகை ஒருவர் கொச்சியில் மர்மக் கும்பலால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார். அந்த வழக்கில் சந்தேகத்துக்குரிய சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விசாரித்ததன் மூலம் பல்சர் சுனி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கடத்தலுக்கும் நடிகர் திலீபுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. காவ்யாவுக்கும் தனக்கும் இருந்த தொடர்பைத் தாக்கப்பட்ட அந்த நடிகை வேவு பார்த்து மஞ்சு வாரியரிடம் தெரிவித்ததால் கோபமடைந்த திலீப், அவரைப் பழிதீர்க்கவே ஆட்களை ஏவி இப்படிச் செய்துவிட்டார் எனப் பரவலாகப் பேசப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மலையாள சினிமா நடிகை நடிகர்களின் ஒருங்கிணைந்த சங்கமான 'அம்மா'வில் (AMMA - Association of Malayalam Movie Artists) திலீப்புக்கு எதிராகப் புகார் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நடிகையும் திலீப்பும் 'அம்மா'வின் (AMMA) பிள்ளைகள்தான் என சென்டிமென்ட்டாகப் பேசி, அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பினார் அன்றைய தலைவரும் நடிகருமான இன்னொசென்ட். இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக, நடிகர் திலீப் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். தவிர, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அந்த நடிகைக்கு ஆதரவாக இருந்த நடிகர் ப்ரித்திவிராஜ், 'அம்மா'விலிருந்து நடிகர் திலீப்பை வெளியேற்ற வேண்டும் எனக் குரல் கொடுத்தார். 

ஓர் அவசரக் கூட்டத்தைக்கூட்டி, அம்மாவின் (AMMA) அன்றைய பொதுச் செயலாளர் நடிகர் மம்மூட்டி, திலீப்பை அதிரடியாக நீக்கினார். தொடர்ந்து திலீப்பை கேரளத் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்தும், கேரள சினிமா தொழிலாளர் சம்மேளனத்திலிருந்தும் வெளியேற்றினார்கள். இந்த மூன்று சங்கங்களிலும் சீனியர் ஜூனியர் எனத் தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு கேரள சினிமாவை மறைமுகமாகத் தன் வசம் வைத்திருந்த திலீப் மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கும், இந்த அறிவிப்பு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து அம்மாவில், 'இது முறையற்ற பதவி நீக்கம்' என அம்மாவின் நிர்வாகிகளுக்கு திலீப்பின் ஆதரவாளர்கள் மூலம் எதிர்ப்புகள் வந்தன. 

இந்நிலையில், 'அம்மா' உறுப்பினர்களான ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கலிங்கல், பார்வதி ஆகியோர், மேலும் சில பெண் கலைஞர்களுடன் சேர்ந்து சினிமாவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்கொள்ள 'விமென் இன் சினிமா கலெக்டிவ்' (WCC - Women in Cinema Collective) என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை சில மாதங்களுக்கு முன்பு உருவாக்கினார்கள்.

அந்த நடிகை கடத்தல் வழக்கில் மாஸ்டர் மைன்ட்டாகச் செயல்பட்டிருக்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள திலீப், தனது 82 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு சமீபத்தில் வெளியே வந்தார்.  

சமீபத்தில் நடந்த 'அம்மா'வின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார், நடிகர் மோகன்லால். அண்மையில் நடந்த சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நடிகை ஊர்மிளா உன்னி 'திலீப்பை வெளியேற்றிய விவகாரத்தில் சங்கத்தின் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றவில்லை. எனவே, அவரது நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும்' எனக் கோரிக்கை வைக்க, அந்த விவாதத்தின் இறுதியில், திலீப்பை மீண்டும் சங்கத்தில் இணைத்துக்கொள்வதாக அறிவித்தார் தலைவர் மோகன்லால். 

இதையடுத்து, சங்கத்தின் மீது சரமாரி விமர்சனங்களை வைத்து, நடிகர் ப்ரித்விராஜ் 'அம்மா' பொதுக்குழுவில் கலந்துகொள்ளவில்லை. தவிர, திலீப்பை மீண்டும் சங்கத்தில் இணைத்துக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, WCC அமைப்பைச் சேர்ந்த ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கலிங்கள் ஆகியோர், சங்கத்திலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். இவர்களது நடவடிக்கைகளைப் பிரபல இயக்குநர் ஆஷிப் அபு வரவேற்றிருக்கிறார். தவிர, ஜூலை 13 அல்லது 14-ம் தேதி, மலையாள நடிகர்கள் சங்கக் கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும் எனத் தீலீப் நீக்கத்துக்கு ஆதரவாக இருக்கும் நடிகைகள் ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது கேரள சினிமாவில் 'அம்மா' மற்றும் டபிள்யூசிசி என இரண்டு சங்கங்களும் இருபெரும் சக்தியாக எதிரும் புதிருமாக நிற்கும் நிலையில், திலீப் விவகாரத்தின் தொடர்ச்சி எப்படி இருக்கும் எனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள், மலையாள சினிமா பிரபலங்கள்.          

அடுத்த கட்டுரைக்கு