Published:Updated:

தமிழ்த் திரையுலகின் பிதாமகன்! - ம(றை)றக்கப்பட்ட தமிழனின் வரலாறு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழ்த் திரையுலகின் பிதாமகன்! - ம(றை)றக்கப்பட்ட  தமிழனின்  வரலாறு
தமிழ்த் திரையுலகின் பிதாமகன்! - ம(றை)றக்கப்பட்ட தமிழனின் வரலாறு

வரலாறு ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்

பிரீமியம் ஸ்டோரி

கேரளாவில் சினிமாவுக்கான முதல் விதையை ஊன்றியவர் டேனியல். அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டாலும், இன்று அவரை கேரளம் கொண்டாடுகிறது. அவர் பெயரில் விருது வழங்குகிறது. அவரின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கிறது. ஆனால், அவருக்கு முன்னரே தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவுக்கே சினிமாவை அறிமுகப்படுத்திய தமிழரை தமிழகம் இன்றுவரை அங்கீகரிக்கவில்லை; அவ்வளவு ஏன், அறிந்துகொள்ளவேயில்லை.

தமிழ்த் திரையுலகின் பிதாமகன்! - ம(றை)றக்கப்பட்ட  தமிழனின்  வரலாறு

அவர்தான் சாமிக்கண்ணு வின்சென்ட். இந்திய சினிமா தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிவரும் நிலையில், தென்னிந்தியாவில் சினிமாவுக்கான முதல் விதையை ஊன்றிய இவர்தான், தமிழக சினிமாவின் பிதாமகன் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

உலகின் முதல் திரைப்படம், 1895-ம் ஆண்டு பாரிஸில் லூமியர் சகோதரர்களால் திரையிடப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு வின்சென்ட், தமிழகம் முழுவதும் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கிவிட்டார். அப்போது அவருக்கு வயது 22-தான்.

அந்தக் காலகட்டத்தில் திரையரங்குகள் கிடையாது. பயண சினிமா முறைதான் இருந்தது. ஒரு மாட்டுவண்டியில் புரொஜெக்டர் முதலான சாதனங்களை ஏற்றிக்கொண்டு, ஒவ்வொரு ஊராகச் சென்று படங்களைத் திரையிட்டுக் காட்டவேண்டும். எல்லாம் மூன்று நிமிடங்கள், ஐந்து நிமிடங்கள், பத்து நிமிடங்கள் என அதிகபட்சம் 20 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய அளவிலான துண்டுப் படங்கள்தான். அவையும் ஊமைப் படங்கள் என அழைக்கப்பட்ட மௌனப்படங்கள். இத்தனைக் குறைபாடுகளுக்கிடையே, கலையாக மட்டுமே பார்க்கப்பட்ட சினிமாவைத் தொழிலாக தேர்வுசெய்து, அதில் சாதனை படைத்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட்.

யார் இந்த சாமிக்கண்ணு வின்சென்ட்?

1883-ம் ஆண்டு, கோவையில் மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். 1903-ம் ஆண்டு ரயில்வேயில் வேலை கிடைக்க, திருச்சி பொன்மலை ரயில் நிலையத்தில் டிராஃப்ட்ஸ்மேனாகப் பணியாற்றத் தொடங்கினார். ஆங்கிலேயர்களும் பணம் படைத்தவர்களும் மிகுந்து காணப்படும் பகுதியாக இருந்த ரயில் நிலையத்தில், அவருக்கு  அறிமுகமானார் 'டுபான்’ என்ற பிரெஞ்சுக்காரர். அந்தச் சந்திப்பில்தான் தமிழக சினிமாவின் முதல் விதை ஊன்றப்பட்டது.

டுபான் பயண சினிமாக்காரர். ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று சினிமாக்களைத் திரையிட்டு காட்டும் பணியைச் செய்துவந்த அவர், தன்னுடன் பயண சினிமா கருவியையும் (புரொஜெக்டர்) கொண்டுவந்திருந்தார். இலங்கையில் இருந்து பயணத்தை முடித்துத் திரும்பியிருந்த டுபான், பயணம் காரணமாகவும் காலநிலை மாற்றம் காரணமாகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டார். உடல் ஒவ்வாமையால் நாடு திரும்பத் திட்டமிட்ட டுபான், பயண சினிமா கருவியை விற்க முடிவுசெய்துள்ளதாக சாமிக்கண்னு வின்சென்ட்டிடம் கூறினார்.

டுபானுடனான சந்திப்பில் அந்தப் புரொஜெக்டர் மீது ஆர்வம் ஏற்பட்ட, சாமிக்கண்ணு வின்சென்ட் அதைத் தானே வாங்கிக்கொள்ளத் திட்டமிட்டார். அன்று அந்தக் கருவியின் விலை 2,250 ரூபாய். மாதம் 25 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி வந்த சாமிக்கண்ணு வின்சென்ட்டிடம் அவ்வளவு தொகை இல்லை. உறவினர்கள், நண்பர்களிடம் உதவி கோரினார். ஆனால், சினிமா ஒரு தொழிலாக அறியப்படாத அந்தக் காலகட்டத்தில் அவருக்குப் பண உதவி செய்யப் பலரும் தயங்கினர்; சிலர் கேலியும் செய்தனர். ஆனாலும், மனம் தளராமல் அங்கே இங்கே அலைந்து திரிந்து பணத்துக்கு ஏற்பாடுசெய்த வின்சென்ட், அதை இரண்டாயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி, வாங்கிவிட்டார். அதனுடன் 'லைஃப் ஆஃப் ஜீசஸ் கிறிஸ்ட்’ எனும் துண்டுப் படமும் இலவச இணைப்பாகக் கிடைத்தது.

தமிழ்த் திரையுலகின் பிதாமகன்! - ம(றை)றக்கப்பட்ட  தமிழனின்  வரலாறு

தமிழக சினிமாவின் அடித்தளம் அப்போதுதான் இடப்பட்டது. சென்னை, பம்பாய், கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் மட்டுமே காட்டப்பட்ட சினிமாவை தென்னக சிறு நகரங்களுக்குக் கொண்டு வந்தார் சாமிக்கண்ணு வின்சென்ட். திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரியில் 'லைஃப் ஆஃப் ஜீசஸ் கிறிஸ்ட்’ திரைப்படத்தை முதன்முதலில் திரையிட்டார். தமிழர் ஒருவரால் காட்டப்பட்ட முதல் சினிமா இதுதான். சில மாதங்களில், தன் கடனை முழுவதுமாக அடைத்துவிட்ட சாமிக்கண்ணு வின்சென்ட், அதன் பின்னர் தமிழகம் முழுவதும் பயணம் செய்து திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கினார். தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பயணித்து, திரைப்படங்களைத் திரையிட்டார். மின்சாரம்கூட மக்களிடம் அறிமுகமாகியிராத அந்தக் காலகட்டத்தில், திரையில் ஓடிய சலனப்படங்கள் மக்களை பிரமிப்பில் ஆழ்த்தி, வெகுவாகக் கவர்ந்தன.

சினிமாவில் அடுத்தடுத்து சில தொழில்நுட்பங்களைப் புகுத்தினார் சாமிக்கண்ணு வின்சென்ட். அப்போது வெளிவந்தவை அனைத்தும் மௌனப்படங்கள் என்பதால், மக்களுக்கு அலுப்பூட்டுவதைத் தவிர்க்க, கிராமபோன் மூலம் பின்னணி இசையைக் கொடுத்துப் படங்களைத் திரையிட்டார். மின் வசதி இல்லாமல் இருந்த டென்ட் கொட்டகையில் மின்சாரத்தைப் புகுத்தினார். சென்னையில் 'எடிசன் சினி கிராண்ட் சினி மெகாபோன்’ எனும் பெயரில் மின்வசதி கொண்ட கொட்டகையைத் திறந்தார். இதுதான் தென்னிந்தியாவின் முதல் மின்வசதி கொண்ட கொட்டகை.

இதன் தொடர்ச்சியாக, நிரந்தர திரையரங்கம் கட்டவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 1914-ம் ஆண்டு கோவையில் 'வெரைட்டி ஹால்’ என்ற பெயரில் ஒரு தியேட்டரைக் கட்டினார். 1914-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தத் திரையரங்கம், 100 ஆண்டுகளை எட்டி இன்றைக்கும் இயங்கி வருகிறது. உரிமையாளர் மாறிவிட்டதால், இது 'டிலைட் தியேட்டர்’ என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தியேட்டர் இருக்கும் சாலையின் பெயர் இன்றைக்கும் 'வெரைட்டி ஹால்’ சாலைதான். மேலும் பேலஸ், ரெயின்போ, லைட்ஹவுஸ் எனப் பல தியேட்டர்களைக் கட்டினார் சாமிக்கண்ணு வின்சென்ட்.

மௌனப்படங்களைத் தொடர்ந்து, பேசும் படங்கள் வரத்தொடங்கின. அந்தக் காலகட்டத்தில் ஒலித் தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் அமைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1929-ம் ஆண்டு, தென்னிந்தியாவில் இந்தப் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவரும் சாமிக்கண்ணு வின்சென்ட்தான். அதுமட்டுமல்லாமல், சினிமா புரொஜெக்டரை தென்னிந்தியா முழுவதும் விற்பனை செய்யவும் தொடங்கினார். 'பதே’ எனும் புரொஜெக்டர் நிறுவனத்தின் முதல் தென்னிந்திய விற்பனையாளர் சாமிக்கண்ணு வின்சென்ட்தான்.

தமிழ்த் திரையுலகின் பிதாமகன்! - ம(றை)றக்கப்பட்ட  தமிழனின்  வரலாறு

இவர் வெற்றிகரமான சினிமா தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். 1931-ம் ஆண்டு இவர் தயாரித்த 'வள்ளித்திருமணம்’ எனும் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இவர் தயாரித்த 'ஹரிச்சந்திரா’, 'சகுந்தலா’, 'சுபத்ரா பரிணயம்’, 'சத்தியவான் சாவித்திரி’ உள்ளிட்ட பல படங்களும் வெற்றிபெற்றன.

திரைத் துறையைத் தாண்டியும் தனது தடத்தைப் பதித்துள்ளார் சாமிக்கண்ணு வின்சென்ட். கோவைக்கு மின்சாரத்தை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். திரைப்பட விளம்பரங்களுக்காக முதலில் கோவையில் மின் அச்சகத்தை நிறுவினார். தொடர்ந்து, மின்சாரத்தால் இயங்கும் அரிசி ஆலையை நிறுவிய இவர், இந்த இரு ஆலைகளின் தேவைக்காக மின்சாரத்தையும் உற்பத்தி செய்தார். தனது ஆலைகளுக்குத் தேவைப்பட்டது போக, மீதமுள்ளதைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் கொடுத்தார். இவர் தயாரித்து வழங்கிய மின்சாரத்தால், கோவை நகரம் முதன்முதலில் மின்விளக்குகளால் ஜொலித்தது.

1942-ம் ஆண்டு, சாமிக்கண்ணு வின்சென்ட் மரணமடைந்தார். அவரது மகன் பால் வின்சென்ட் நிறுவனப் பொறுப்பேற்றார். சாமிக்கண்ணு வின்சென்ட் மறைவுக்குப் பின்னர், பல்வேறு காரணங்களால் அவரது குடும்பம் பொருளாதாரரீதியாக பலவீனமடைந்தது. அவர் கட்டிய அனைத்துத் திரையரங்குகளும், அவர் வசித்த வெரைட்டி ஹால் மாளிகையும் அடமானம் வைக்கப்பட்டு, மீட்க இயலாமல் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாநகரின் அடையாளமாக விளங்கிய, வின்சென்ட் வாழ்ந்த அந்த பிரமாண்ட மாளிகை, 1987-ல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

தென்னிந்தியாவின் இரண்டாவது திரையரங்கமான 'வெரைட்டி ஹால்’ தியேட்டர் பெயர் மாற்றப்பட்டது. வின்சென்ட்டின் நினைவாக அதன் வாசலில் இருந்த ஒன்றரை டன் எடையுள்ள அவரது சிலை அகற்றப்பட்டது. போராடி சிலையை மீட்ட அவரது குடும்பத்தார், அதை கோவை மைக்கேல் தேவாலயத்தில் ஒப்படைத்தனர். அங்கு 29 ஆண்டுக் காலம் வைக்கப்பட்டிருந்த அந்தச் சிலையை, பின்னர் வின்சென்டின் பேத்திகளில் ஒருவரான ஷீலா, தேவாலயத்தில் இருந்து எடுத்துவந்து தனது வீட்டு வாசலில் வைத்துள்ளார்.

''நாங்கள் வாழ்ந்த வீடு கோவையின் அடையாளங்களில் ஒன்று. மிகப் பெரிய மாளிகை அது. வெரைட்டி ஹால் தியேட்டருக்கு பக்கத்தில் இருந்தது. மாளிகையில் இருந்து நாங்கள் படம் பார்க்கச் சென்று வருவதற்கென பிரத்யேகமான வழி இருந்தது. தாத்தா சாமிக்கண்ணு வின்சென்ட் மறைவுக்குப் பின்னால் அடமானம் வைக்கப்பட்ட அந்த வீட்டை மீட்கமுடியாமல் போக, 1987-ம் ஆண்டு அந்த மாளிகை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. தியேட்டர் பெயரையும் மாற்றி, சிலையை அகற்றி, தாத்தாவின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அவரது சிலைகூட பொதுமக்கள் பார்வையில் இல்லாமல் பூட்டப்பட்ட வீட்டில்தான் உள்ளது. அதைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, அவரின் வரலாறு மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்'' என உருக்கமாக வேண்டுகோள் விடுக்கிறார், கோவையில் வாழ்ந்து வரும் சாமிக்கண்ணு வின்சென்ட்டின் பேரன் வின்ஃபிரட் வின்சென்ட்.

தமிழ்த் திரையுலகின் பிதாமகன்! - ம(றை)றக்கப்பட்ட  தமிழனின்  வரலாறு

சாமிக்கண்ணு வின்சென்ட் மறைந்த பின்னர், மாநகராட்சியால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இருதயா தியேட்டர் சாலை 'வின்சென்ட் சாலை’ என மாற்றப்பட்டதாம்.  ஆனால், வின்சென்ட் யார் என்பதுதான் மக்களில் பலருக்குத் தெரியவில்லை.  

சாமிக்கண்ணு வின்சென்ட் குறித்து ஆய்வாளர் தியடோர் பாஸ்கரனின் கட்டுரைகள், பேராசிரியர் பாவேந்தனின் ஆய்வுகள், இயக்குநர்     ம.செந்தமிழனின் 'பேசாமொழி’ ஆவணப்படம் ஆகியவை மூலம் நினைவுகூரப்பட்டுள்ளபோதும், தமிழக திரையுலகம் இவரை எப்படி மறந்தது என்பதுதான் தெரியவில்லை.

''யாரால் இந்த சினிமா ஒரு தொழிலாக மாற்றப்பட்டதோ, யாரால் சினிமாவானது சாமானியர்களைச் சென்றடைந்ததோ, யாரால் சினிமாவில் கோடிகள் கொழிக்கும் என நிரூபிக்கப்பட்டதோ... அவரை இந்த சினிமா துறை மறந்துபோனது ஒரு வரலாற்றுச் சோகம். கேரள சினிமாவுக்கு வித்திட்ட டேனியல் எனும் தமிழனை, கேரள அரசு அவர் பெயரால் விருது கொடுத்து கௌரவிக்கிறது. அதேபோல் தமிழகத்தில் சாமிக்கண்ணு வின்சென்ட் பெயரிலும் விருது வழங்கிட வேண்டும். சாமிக்கண்ணு வின்சென்டால் கட்டப்பட்ட இப்போதைய டிலைட் தியேட்டரை அரசுடைமையாக்கி, அதை சினிமா கண்காட்சி அரங்காக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார் 'பேசாமொழி’ ஆவணப்பட இயக்குனர் ம.செந்தமிழன்.

இன்று நாம் கொண்டாடும் சினிமாவுக்கான மூலகாரணகர்த்தாவான, சினிமாவை தென் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய மனிதரைப் பற்றி எந்தக் குறிப்பும் மக்களிடையே இல்லை. அரசுகளும்கூட வின்சென்ட்டை கௌரவிக்கத் தவறிவிட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, இன்று பலரை நினைவுகூரும் ஊடகமாக ஆற்றல் வாய்ந்து காணப்படும் சினிமா துறை, தனக்கு வித்திட்ட சாமிக்கண்ணு வின்சென்டை நினைவுகூர மறந்ததுதான் உச்சகட்ட சோகம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு