Published:Updated:

"மகன் ஆரவ் நிச்சயம் நடிகர் ஆவார்!" - 'அப்பா' ஜெயம் ரவி #TikTikTikSuccessMeet

"மகன் ஆரவ் நிச்சயம் நடிகர் ஆவார்!" - 'அப்பா' ஜெயம் ரவி #TikTikTikSuccessMeet
"மகன் ஆரவ் நிச்சயம் நடிகர் ஆவார்!" - 'அப்பா' ஜெயம் ரவி #TikTikTikSuccessMeet

நடிகர் ஜெயம் ரவி தனது மகன் ஆரவ்வுடன் இணைந்து நடித்த 'டிக் டிக் டிக்' அனுபவத்தைப் பேசியிருக்கிறார்.

இந்தியாவின் முதல் விண்வெளிப் படம் என்ற அடையாளத்துடன் கடந்த வாரம் வெளியான திரைப்படம், 'டிக் டிக் டிக்'. இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை படக்குழுவினர் தங்களது வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ், எடிட்டர் மோகன், மோகன் ராஜா, இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன், இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் பிறந்தநாளையும், இந்த நிகழ்ச்சியில் கொண்டாடினார்கள்.  

மதன்கார்க்கி பேசியபோது, "உண்மை, நேர்மை, உழைப்பு இது மூன்றும்தான் வெற்றிக்குக் காரணம். இப்படத்தின் வெற்றி யாரும் பொறாமைப் படக்கூடிய வெற்றியாக அமையவில்லை. ஏனெனில், இதன் கதை மிகவும் வித்தியாசமானது. இப்படியான ஒரு அறிவியல் கதையை எல்லா மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்த இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜனுக்கு வாழ்த்துக்கள். ஜெயம் ரவிக்கு இதுபோன்ற கதைகளைத் தேர்வுசெய்து நடிப்பதற்குத் திறமையுடன் சேர்ந்து தைரியமும் தேவை. அதை மற்றொரு முறை நிரூபித்திருக்கிறார். மோகன் சார் 'குறும்பா' பாடலைக் கேட்டதும், 'குறும்பாவுக்கு வாழ்த்துக்கள்' என எனக்கு மெசேஜ் செய்திருந்தார். ஆரவ் இந்தப் படத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர்களில் ஒருவன். அந்தச் சிரிப்பு, குறும்பு அவனிடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது." என்றார். 

இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கூறியதாவது, "என்னை நம்பி இந்த புது முயற்சிக்கு ஒப்புக்கொண்ட அனைவருக்கும் நன்றி. படத்தின் வெற்றியைக் கொண்டாட ஒரு பாக்கியம் தேவை. அது இப்படத்துக்குக் கிடைத்திருக்கிறது. கிராஃபிக்ஸ் செய்த அருணுக்கும், இசையமைப்பாளர் இமானுக்கும் நன்றிகள். இவர்கள் இருவரும்தான் இப்படத்தை உயர்ந்த தரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர்." என்று கூறினார். 

ஜெயம் ரவி பேசும்போது, "மீடியா நண்பர்களுக்கு நன்றி. இந்தப் படத்திலிருந்த நிறைய தவறுகளை சுட்டிக் காட்டியிருந்தாலும், 'தமிழில் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்'னு விமர்சனத்துல எழுதியிருந்தீங்க. இந்தப் படத்தோட வெற்றி ரசிகர்களைத்தான் சேரணும். இப்படி ஒரு படம் எடுக்கிறது சாதாரண விஷயம் இல்லை. நல்ல கதையை மக்கள் எப்போதுமே வரவேற்கிறாங்க. 

விண்வெளிப் படத்தை ஒரு ஆவணப்படமா எடுத்திருக்கலாம். ஆனா, அதை ஒரு வணிகப் படமாக எடுத்துக் கொடுத்ததுக்கு இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் சாருக்கு நன்றி. இது அவரோட நான் பண்ற ரெண்டாவது படம். அமைதியும், அடக்க ஒடுக்கமும்தான் இவரோட ஸ்டைல். இதுக்கு மேல அடக்கமா ஒருத்தரால நடந்துக்க முடியுமானு தெரியலை. உண்மையிலேயே எங்க டீமே ரொம்ப அமைதியாதான் இருப்போம். 'பேசுங்க'னு சொன்னாக்கூட பேசுறதுக்கு யோசிப்போம். 

இந்தக் கதையில எனக்கு எப்படிக் கல்யாணம் நடந்துச்சு, எப்படிக் குழந்தை பொறந்துச்சுனு ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் இருந்துச்சு. ஆனா, அதை வெட்டித் தூக்கிட்டாங்க. எனக்குக் கதையில ஹீரோயின் இல்லைனாகூட பரவாயில்ல. படம் நல்லா வரணும்ங்கிறது மட்டும்தான் எல்லாரோட மனசுல இருந்துச்சு. இன்னொரு முக்கியமான விஷயம், இசையமைப்பாளர் இமான் படத்தை வேற லெவலுக்குக் கொண்டுபோயிருக்கார். இவரோட நூறாவது படம் இது. அடுத்ததா அஜித் சாரோட படத்துக்கு இசையமைக்கிறார். அதுக்குப் பிறகு இவர் அமிதாப் பச்சன் சார் படத்துக்கு இசையமைப்பார்னு நினைக்கிறேன். இமான் சாரோட குடும்பத்தைப் பார்க்கும்போது எனக்கு என் குடும்பத்தைப் பார்க்கிறமாதிரி இருக்கும். 

இந்தப் படத்தோட ஸ்பேஸ்ஷிப் செட்டைப் பார்த்ததுக்குப் பிறகுதான், எனக்கும் நிவேதா பெத்துராஜுக்கும் இந்தப் படம் ஓடும்ங்கிற நம்பிக்கை வந்துச்சு. இந்தப் படத்தை எடிட் பண்றதும் சாதாரண காரியம் கிடையாது. எடிட்டர் பிரதீப் என்கிற கடும் உழைப்பாளிக்கு எனது வாழ்த்துக்கள். 

என் முதல் படத்துக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்தீங்களோ, அதே அளவுக்கு என் பையனுக்கும் வரவேற்பைக் கொடுத்துருக்கீங்க. அவன் ஒரு இடத்துல உட்கார்ற ஆள் கிடையாது. படத்தோட ஷூட்டிங்ல அவன் ஒரே இடத்துல உட்கார்ந்து எல்லாரோட நடிப்பையும் கவனிச்சு நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டான். இந்த மெச்சூரிட்டியைப் பார்க்கும்போது சந்தோஷமா இருந்தது. என் பையன் அப்டீங்கிறதுனால சொல்லலை. அவனுக்குப் பல திறமைகள் இருக்கு. அவனை வேறலெவலுக்குக் கொண்டுபோகணும். அவன் ஹீரோவா அறிமுகமாகுற முதல் படத்தை நான்தான் இயக்குவேன்." என்றார், ஜெயம் ரவி. 

இயக்குநர் மோகன் ராஜா இதுகுறித்துப் பேசியபோது," எல்லாரும் சேர்ந்து ஒரு குழுவா வேலை பார்த்தால் அதோட வெற்றி எப்படி இருக்கும்ங்கிறதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு, இந்தப் படம். குறைவான நாள்ல படமெடுத்து அதை ஹிட்டாக்க முடியும்னு நிரூபிச்சிருக்காங்க. இயக்குநர் சக்திகிட்ட இருந்து கத்துக்க வேண்டிய விஷயம் அதிகமா இருக்கு. 'வனமகன்', 'பேராண்மை' போன்ற படங்கள் பண்ணும்போது அதுக்காக நிறைய ரிஸ்க்கை எடுக்கிறான், ரவி. கடும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்குமானு ரவிகிட்ட அடிக்கடி கேட்டுக்கிட்டே இருப்பேன். இதனால, எங்களுக்குள்ள அடிக்கடி சண்டைகூட வந்திருக்கு. ஆனா, அவனுக்கான வெற்றியை ரசிகர்கள் கொடுத்துக்கிட்டேதான் இருக்காங்க. அதுக்காக அவங்களை சிரம் தாழ்த்தி வணங்குறேன். 'நல்லவன் தோற்றால் அது தப்பில்லை. ஆனா, ஏன்டா நல்லது பண்ணோம்னு யோசிக்கிறதுதான் பெரிய தப்பு. அப்போ நம்ம உழைப்புமேல நமக்கு சந்தேகம் வந்துருச்சுனு அர்த்தம். அதுக்கு ஒருபோதும் நாம இடம் கொடுத்துடக்கூடாது'னு நான் ரவிக்கு அறிவுரை சொல்வேன். ரவி கடந்த ஒருவாரமா சந்தோஷமா இருக்கான். அதுக்குக் காரணம் 'டிக் டிக் டிக்' படமும், அதுக்கு வந்த பாஸிட்டிவ் விமர்சனங்களும்தான்." என்றார். 

கடைசியாகப் பேசிய ஜெயம் ரவியின் மகன் ஆரவ், "என் முதல் படத்துக்கு சப்போர்ட் பண்ண எல்லோருக்கும் நன்றி. நான் என்ன பேசணும்னுகூட யோசிக்கலை. என் அப்பா எனக்கு நிறைய கத்துக்கொடுத்துருக்கார். நன்றி" என்று மழலை மாறாமல் பேசினார். இறுதியில் ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடி, நிகழ்ச்சியை முடித்தனர். 

அடுத்த கட்டுரைக்கு