Published:Updated:

அன்பு மனிஷா, ஜொலிக்கும் அனுஷ்கா, உறுதுணை தியா... `சஞ்சு’வில் அசத்திய நடிகைகள்! #Sanju

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அன்பு மனிஷா, ஜொலிக்கும் அனுஷ்கா, உறுதுணை தியா... `சஞ்சு’வில் அசத்திய நடிகைகள்! #Sanju
அன்பு மனிஷா, ஜொலிக்கும் அனுஷ்கா, உறுதுணை தியா... `சஞ்சு’வில் அசத்திய நடிகைகள்! #Sanju

சஞ்சுவுக்காக மான்யதாவே போராடிக்கொண்டிருக்கும் காட்சிகள் சற்றே நெருடலாகவும், நிழல் கதையில் கொஞ்சம் நிஜக்கதையின் அரசியலும் இருப்பதை உறுதிசெய்கின்றது.

ரு மிகப்பெரிய நடிகர்..அரசியல் ஆளுமையின் மகன் வாழ்க்கை எப்படி இருக்கும்? பிறக்கும்போதே பணம், புகழ், செல்வாக்கு எனக் கிடைக்கும் ஒருவரின் வாழ்வில், சந்தோஷமும் வெற்றியும் மட்டும்தானே இருக்கும் என்று எண்ணும் பலருக்கும், `சஞ்சு’ என்ற சஞ்சய் தத்தின் வாழ்க்கை ஓர் உதாரணம்; ஓர் ஆச்சர்யம்; ஓர் அதிர்ச்சி! ஆறு வயதிலேயே பெற்றோரைப் பிரித்து போர்ட்டிங் ஸ்கூலில் தவித்தது, இளம்வயதில் போதைக்கு அடிமை, அம்மாவின் மறைவு, அப்பாவின் கண்டிப்பு, காதல் தோல்வி, பெண்கள் மீதான மயக்கம்,`தீவிரவாதி’ என்ற முத்திரை எனப் பல அதிர்ச்சித் திருப்பங்களைக்கொண்ட சஞ்சுவின் வாழ்வில், மகிழ்ச்சியும் மனநிறைவும் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டுதான் இருந்தன எனக் கூறலாம்.

58 வயதாகும் சஞ்சுவின் வாழ்க்கைக் கதையை, சமீபத்தில் பாலிவுட்டில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க, `சஞ்சு’ என்ற திரைப்படமாக வெளியாகியுள்ளது. படத்தைப் பற்றி பல்வேறு விதமாக விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கையில், சஞ்சுவாக நடித்த ரன்பீர் கபூரின் நடிப்புக்கு ராயல் சல்யூட் அடித்திருக்கின்றனர் விமர்சர்களும் ரசிகர்களும்! அதே சமயத்தில், அவரின் வாழ்வில் கடந்துசென்ற பெண் கதாபத்திரங்களும் அசத்தலாக இருந்தன.

சஞ்சுவின் அம்மா நர்கிஸ் தத் கதாபத்திரத்தில் நடித்த மனிஷா கொய்ரல்லா, சுமார் 20 வருடங்கள் முன், `பம்பாய்' படத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக, சாதாரண சேலை கட்டிக்கொண்டு, எளிமையான தோற்றத்தில் வரும் ஷைலா பானுவை நினைவுப்படுத்திச் சென்றார். மிகக்  குறைந்த நிமிடங்களே வந்தாலும், விமானத்தில் தன் மகனுக்கும், கணவனுக்கும் மத்தியில் அமர்ந்துக்கொண்டு குழந்தைத்தனமாகப் பேசும் காட்சி அழகு!

சுயசரிதை எழுதும் பிரபல எழுத்தாளர் வின்னி டையஸாக வரும் அனுஷ்கா ஷர்மா. படத்தில் அபார ஆளுமையாக வலம் வருகிறார். ஒரு காட்சியில், அவர் சஞ்சுவிடம், ``நீங்கள் உங்கள் மனைவியைத் தவிர எத்தனை பெண்களுடன் இருந்திருக்கிறீர்கள்?”, என்று மிகவும் சீரியசாகக் கேட்க, அதற்கு சஞ்சு கூறிய பதிலைக் கேட்டு, சீரியஸாக இருக்கும் அவரின் முகம் விழுந்து விழுந்து சிரிக்கும்போது நேர்த்தியான சீனியர் நடிகையாகத் தோன்றுகிறார். அவர் ஒரு லண்டன் எழுத்தாளர் என்பதாலோ என்னவோ, திரைப்படம் முழுவதுமே, அவர் நிற்பதும், நடப்பதும், சிரிப்பதும் என ஹாலிவுட் நடிகைக்கு இணையாகவே நமக்குத் தெரிகிறார். அந்தச் சுருள் முடி சூப்பர் அனுஷ்கா!

PC: koimoi.com

சஞ்சுவின் மனைவி மான்யதா தத்தாக வரும் தியா மிர்சாவும், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். ஆனால், சஞ்சுவின் முதல் மனைவி ரிச்சா ஷர்மா பற்றியோ, இரண்டாவது மனைவி ரியா பிள்ளை பற்றியோ..ஒரு காட்சி அல்ல..ஒரு வரி வசனம்கூட இல்லாதது மிகவும் ஆபத்தம் ! மேலும், அவரின் சகோதரிகளான ப்ரியா தத் மற்றும் நம்ரதா தத் பற்றின காட்சிகளும் இல்லை என்பதும் முழுமையாகச் சஞ்சுவின் வாழ்க்கையைக் கூறவில்லை என்பதுபோல் தோன்றுகிறது. இத்தனைக்கும், 2007ம் ஆண்டு, சஞ்சுவுக்கு ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது அவரின் சகோதரி `ப்ரியா தத்’தான். 2013ம் ஆண்டு, மான்யதாவை சஞ்சு திருமணம் செய்துகொண்ட சமயத்தில், ப்ரியாவுக்கும் சஞ்சுவுக்கும் சில பூசல்கள்கூட எழுந்தன. ஆனால், இது எதுவும் படத்தில் காட்டாமல், சஞ்சுவுக்காக மான்யதாவே உறுதுணையாக இருக்கும் காட்சிகள் சற்றே நெருடலாகவும், நிழல் கதையில் கொஞ்சம் நிஜக்கதையின் அரசியலும் இருப்பதை உறுதிசெய்கின்றது. ஆனால், மான்யதாவாக தியா மிர்சாவின் நடிப்பு அமைதியும் அடக்கமும் நிறைந்தது. நிஜத்திலும் அப்படியாகத்தான் இருக்கிறாரா என்பது நமக்குத் தெரியவில்லை..தேவையுமில்லை! ஆனால், சஞ்சுவின் நிஜ வாழ்க்கைதானா இது என்ற சந்தேகத்தை எழுப்புகிறது இந்தப் பகுதி!

சஞ்சுவின் முதல் காதலி ரூபியாக வரும் சோனம் கபூர் க்யூட்! சமீபத்தில் வெளியான `வீரே தி வெண்டிங்’ கொஞ்சம் சறுக்கினாலும், ரூபியாக, ``வேர் இஸ் மை  மங்கல் சுத்திரா?’ (Where is my mangal suthra?) என்று அவர் கத்தி அழும் காட்சி, நம்மை அதிரவைக்கிறது! ரூபியின் தந்தையைச் சஞ்சு முதல்முறையாகச் சந்திக்கும் காட்சி, ஆபாசம் நிறைந்த நகைச்சுவை வசனங்கள்..கொஞ்சம் ஓவர்தான் !

மனிஷா கொய்ரல்லா, அனுஷ்கா ஷர்மா, சோனம் கபூர், தியா மர்சா எனப் படத்தில் தோன்றிய பெண் கதாபத்திரங்கள் அனைவருக்குமே அப்லாஸ் கொடுக்கலாம். ஆனால், சஞ்சுவின் வாழ்வில் அழுத்தமான பெண்கள் யாருமே இல்லையா என்று கேள்வி எழும் அளவுக்குத்தான் இந்தத் திரைப்படம் காட்டியிருக்கிறது. சஞ்சு ,`வாழ்க்கை முழுவதும் சூழ்நிலை கைதி’யாக்கப்பட்டார் என்ற சித்திரிப்பதில், `டீடெய்லிங்’ காட்டிய இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, இந்த விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் சஞ்சு, சஞ்சய் தத்தின் வாழ்க்கையை முழுமையாக்கியிருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு