Published:Updated:

``பாலு மகேந்திரானு சொன்னதும் எனக்கு இந்தச் சம்பவம்தான் ஞாபகம் வரும்..!’’ - `ஆடுகளம்’ நரேன்

ப.தினேஷ்குமார்
``பாலு மகேந்திரானு சொன்னதும் எனக்கு இந்தச் சம்பவம்தான் ஞாபகம் வரும்..!’’ - `ஆடுகளம்’ நரேன்
``பாலு மகேந்திரானு சொன்னதும் எனக்கு இந்தச் சம்பவம்தான் ஞாபகம் வரும்..!’’ - `ஆடுகளம்’ நரேன்

வில்லன், காமெடியன், அன்பான அப்பா, குணச்சித்திர வேடங்கள் என்று  எல்லாப் படங்களையும் தனது ஆடுகளங்களாக மாற்றி, நடித்துக் கலக்குபவர் `ஆடுகளம்’ நரேன். பாலுமகேந்திராவின் `கதை நேரம்' முதல் `இரவுக்கு ஆயிரம் கண்கள்’ வரை தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை கம்பீரமான தோற்றத்தாலும் குரலாலும் தூக்கிநிறுத்தியவர். தொடர்ந்து ஷூட்டிங்கில் பரபரப்பாக இருக்கும் `ஆடுகளம்’ நரேனை அவரது வீட்டில் சந்தித்தோம்.

பாலு மகேந்திரா பட்டறையிலிருந்து வந்தவங்கள்ல நீங்களும் ஒருத்தர்... உங்களுக்கும் பாலு மகேந்திராவுக்கும் இடையிலான உறவைப் பற்றிச் சொல்லுங்க?

``இன்னைக்கு நான் ஒரு நல்ல நடிகனாக இருப்பதற்கு பாலு மகேந்திரா சார்தான் காரணம். `கதை நேரம்' சீரியல் பண்ணிட்டு இருந்த சமயத்தில் ஒருநாள் இரவு முழுக்க ஷூட் போயிட்டு இருந்தது; விடிய ஆரம்பிச்சுடுச்சு. ஓரளவுக்கு எல்லாம் எடுத்து முடிச்சிட்டோம். மீதம் ரெண்டு காட்சிகள்தாம் இருந்துச்சு. எல்லாருக்கும் ஓய்வு கொடுத்துட்டு மதியம் 2 மணிக்கு வந்தா போதும்னு பாலு சார் சொன்னபோது, அவர் முன்னாடி போய் நான் நின்னேன். கண்ணெல்லாம் தூக்கம் சொக்குது. சார் என்கிட்ட, `வீட்டுக்குப் போயிட்டு
7 மணிக்கெல்லாம் திரும்பி வந்துடுங்க’ன்னு சொன்னாரு. `ஏன் சார்’ன்னு கேட்டதற்கு, `சொன்னா வந்துடுங்க'னு சொன்னார்.

வீட்டுக்குப் போயிட்டு, குளிச்சிட்டு மீண்டும் லொகேஷனுக்கு பைக்கை ஓட்ட முடியாம ஓட்டிட்டு வந்தேன். லொகேஷனுக்குப் போய் பார்த்தா, அங்க யூனிட்டே இல்லை; சார் மட்டும் அங்கேயே இருக்கார். என்கிட்ட, `நான் டிரெஸ் சொல்லியிருக்கேன். மாத்திட்டு வந்துடுங்க'னு சொன்னார். எனக்கு பயங்கரக் கோபம் வந்துடுச்சு. காஸ்டியூமர் ரெடியானு என்கிட்ட கேட்டார். `என்ன ரெடியாகுறது. என்னால முடியாதுன்னு போய் சொல்லு. நான் தூங்கப்போறேன்’னு கோபத்துல சொல்லிட்டேன். அப்புறம் டீம் வந்துடுச்சு, மேனேஜர் வந்து கூப்பிட்டார். நான் வரலைன்னு சொல்லிட்டேன். `நான் வரட்டுமா, இல்லை நீ கூப்பிட்டுட்டு வர்றீயா'னு மேனேஜர்கிட்ட பாலு சார் சொன்னதும், `என்னடா, இது வம்பு’னு நான் போயிட்டேன். 

என்னைச் சாப்பிடச் சொன்னார். `என்னால சாப்பிட முடியாது சார். சாப்பிட்டா இன்னும் தூக்கம் அதிகமா வரும்'னு சொன்னேன். `ராத்திரியெல்லாம் வேலை செஞ்சிட்டு சாப்பிடாமல் இருக்கக் கூடாது சாப்பிடுங்க' அவர் சொன்னதும் எனக்கு ஒரு யோசனை வந்தது. `நல்லா சாப்பிடுவோம். தூக்கம் வருதுன்னு சொன்னா அவரால் என்ன பண்ண முடியும்’கிற நினைப்புல நல்லா சாப்பிட்டேன். பாஸ்கர்னு ஒருத்தரைக் கூப்பிட்டு அவர்கூட என்னைப் போகச் சொன்னார். ஒரு ரூமுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க ஃபேன் ,கட்டில்னு எல்லாம் ரெடியாக இருந்துச்சு. பாஸ்கர் தூங்கச் சொன்னார். நானும் எதுவும் யோசிக்கலை; உடனே தூங்கிட்டேன். 1 மணிக்கு எழுப்பினாங்க. திரும்பவும் நல்லா சாப்பிட வச்சி தூங்கச் சொல்லிட்டாங்க. மீண்டும் 3  மணிக்குதான் எழுந்தேன். எனக்கு ஒரே குழப்பமாக இருந்துச்சு. அவர்கிட்ட போனபோது, `உங்க பையன் ராத்திரியெல்லாம் தூங்க மாட்டான். அவன் நிறையத் தொந்தரவு கொடுப்பான். நீங்க சரியாத் தூங்க மாட்டீங்க. சரியாகத் தூங்காம ஷூட்டிங்குக்கு வந்தால் உங்களை வச்சு குளோஸ்-அப் ஷாட்ஸ் எடுக்க முடியாது. அதனாலதான் உங்களை வச்சு இரவில் ஷூட்டிங்கிலும் பகலில் உங்களைத் தூங்கவும் வச்சேன்’னு சொன்னார். நான் ரொம்ப நெகிழ்ந்துபோயிட்டேன். பாலு மகேந்திரானு சொன்னதும் எனக்கு இந்தச் சம்பவம்தான் ஞாபகம் வரும். அவர் எனக்கு ஒரு தகப்பன் மாதிரி இருந்தார். உரிமையா நிறைய சண்டைகள் போடுவோம். ஓர் அப்பா-மகனாகத்தான் நாங்க இறுதிவரைப் பழகுனோம். இப்போ பாலு சாரை ரொம்ப மிஸ் பண்றேன்.

உங்களைப் பெரும்பாலும் தந்தை கதாபாத்திரத்திலேயே பார்த்து வருகிறோம். அதைத்தாண்டி மற்ற கதாபாத்திரங்களில் உங்களைப் பார்க்க முடிவதில்லை?

``சீரியல்கள்ல நிறைய அப்பா வேடங்கள் பண்ணியிருக்கிறேன். சினிமாவில் ஷங்கர் சார்தான் `நண்பன்’ படத்தில் அப்பா வேடம் கொடுத்தார். `சுந்தரபாண்டியன்’ படம் என்னை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு போயிடுச்சு. அதன் பிறகு தந்தை கதாபாத்திரங்களாக வர ஆரம்பிச்சுடுச்சு. ஒரு குணச்சித்திர நடிகர், கிடைத்த கதாபாத்திரங்களைத்தான் செய்ய முடியும். அப்படி, இதுவரைக்கும் எனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாகச் செய்துட்டு வரேன்னு நம்புறேன். அந்த நம்பிக்கையிலதான் தொடர்ந்து பயணிச்சுட்டு இருக்கேன்.’’

இப்போ என்னென்ன படங்கள் நடிச்சிட்டு  இருக்கிங்க?

`` `யூ டர்ன்’ படத்தோட தமிழ், தெலுங்கு ரீமேக்ல நடிச்சிருக்கேன். இதுவரையிலும் நான் பண்ணாத ஒரு கேரக்டர் `கஜினிகாந்த்' படத்துல பண்றேன். தெலுங்கில் ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் நிறைய புராஜெக்ட் போயிட்டு இருக்கு.’’

சின்னத்திரைக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம்ன்னு நினைக்கிறீங்க?

``சின்னத்திரை கொஞ்சம் கஷ்டம். அதில் எப்பொழுதும் ஒரு நாளைக்கு ஆறு சீன் நடிச்சே ஆகணும்கிற பிரஷர் இருந்துட்டே இருக்கும். அதே இடம், அதே நடிகர்கள் மற்றும் தொடர்ந்து நடிக்கிற சீன்கள்கூட ஒரே மாதிரியா இருக்கும். இது எனக்குன்னு இல்லை, எல்லாருக்கும் ஒருவித கஷ்டமா இருக்கும்.

சினிமா ஈசி. வேற வேற இடங்கள், புது புது டீம், வித்தியாசமாக நிறைய விஷயங்கள் பண்ணலாம். புது புது ஜாம்பவான்களைச் சந்திக்கலாம். அவங்ககிட்ட இருந்து நிறையக் கத்துக்கலாம்.’’

சினிமா உலகில் உங்களுடைய நண்பர்கள் யார்?

``வெற்றிமாறன் எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பன். எல்லாக் கதாநாயகர்களும் எனக்கு நண்பர்கள்தாம். விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், பாபி சிம்ஹா, அதர்வானு ஒரு பெரிய லிஸ்டே இருக்கு.’’

உங்களுடைய குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்க?

``நான், மனைவி, ரெண்டு பசங்க இருக்காங்க. பையன் இப்போதான் காலேஜ் போகப்போறார். பொண்ணு பத்தாவது போறாங்க. என்னை நல்லா புரிஞ்சிக்கிட்ட குடும்பம். என்னுடைய வேலைகள்ல ஒருநாளும் குறுக்கிட்டது இல்லை. என்னுடைய வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்காங்க. ஐ லவ் மை பேமிலி.’’

`சுந்தரபாண்டியன்’ படத்தில் வரும் `இங்க நீங்க எப்படியோ, அங்க அவரு' மற்றும் `நண்பன்’ படத்தில் வரும் அந்த சென்டிமென்ட் டெம்ளேட் செம வைரல். அதை வெச்சு வர்ற மீம்ஸ்லாம் பார்த்திருக்கீங்களா..?

``(சிரிக்கிறார்) நிறைய மீம்ஸ் பார்த்திருக்கேன். ஃப்ரெண்ட்ஸ்லாம் எனக்கு அனுப்புவாங்க. அந்த மீம்ஸ்லாம் பார்க்கும்போது, என்னோட ஞாபகங்கள்லாம் அந்த சீன் எடுத்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிடும். அந்த ரெண்டு சீன்களும் நிறைய ஆர்கியுமென்ட் பண்ணி, இது மாதிரி பண்ணலாமா அது மாதிரி பண்ணலாமான்னு யோசிச்சு ரொம்பக் கஷ்டப்பட்டு எடுத்தோம். இப்போ நினைக்கும்போது வடிவேலு சொல்ற மாதிரி `என்னை வச்சி காமெடி கீமடி பண்ணலையே’ங்கிற மாதிரி இருக்கு. நம்மளை பார்த்து மக்கள் சிரிக்கிறாங்கனு நினைக்கும்போது அது ஒரு தனி சந்தோஷம்’’ என்கிறார் `ஆடுகளம்’ நரேன்.