Published:Updated:

"திவ்யா எவ்வளவோ கற்றுக்கொடுத்தும், வினோத் கற்றுக்கொண்டது காதலை!" - #15YearsOfKaadhalKondein

தார்மிக் லீ

எதிர்பார்ப்பு கௌதம் மேனன் காதல் கதையைப்போல் இருந்தாலும், நித்தமும் நாம் அனுபவிப்பது செல்வராகவனின் காதல் கதையைத்தான். அதனால்தான் செல்வானின் படங்கள் நம்மை அதிகம் பாதிக்கிறது!

"திவ்யா எவ்வளவோ கற்றுக்கொடுத்தும், வினோத் கற்றுக்கொண்டது காதலை!" - #15YearsOfKaadhalKondein
"திவ்யா எவ்வளவோ கற்றுக்கொடுத்தும், வினோத் கற்றுக்கொண்டது காதலை!" - #15YearsOfKaadhalKondein

பொதுவாக செல்வராகவன் படங்களில் வார்த்தைகளைவிட உணர்வுகள்தாம் அதிகம் பேசும். கதாநாயகன் என்ற சித்திரிப்பே செல்வராகவன் படங்களில் இருக்காது. `இப்படத்தின் கதாநாயகன் இவர்' என்று வெறும் வார்த்தைக்காகச் சொல்லலாம். ஏனெனில், செல்வா படத்தின் கதாநாயகர்கள் வேறு. யார் அவர்கள்? 

நட்பு - காதல் என்ற உணர்வுகளுக்குள் சிக்கி உயிரை விட்டவன், காதலித்த பெண்ணால் கதி கலங்கி நிற்கும் கிறுக்கன், தாதா, தூதுவன், கலைக் காதலன்... என நம்முள் இருக்கும் எவனோ ஒருவன்தான் பெரும்பாலான செல்வா படங்களின் கதாநாயகர்கள். அவர் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் எங்கோ எப்போதோ நாம் கண்டிப்பாக அனுபவித்த ஒன்றாகவே இருக்கும். படத்தில் அவர்களை வினோத், கதிர், கொக்கு குமார், கார்த்திக்... என கேரக்டர்களாகப் பார்த்திருக்கமாட்டோம். மாறாக, நாமே கதிராக, வினோத்தாக, கார்த்திக்காக நின்றிருப்போம். சுருங்கச் சொன்னால், செல்வராகவன் படங்களைப் பார்ப்பது, நம்மை நாமே கண்ணாடியில் பார்த்துக்கொள்வதுதான். இதுதான். செல்வாவையும் நம்மையும் பிணைத்துப்போடுகிறது.  

இந்தக் கட்டுரையின் கதாநாயகன், `காதல் கொண்டேன்' வினோத். நம்முள் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இவன் வெளிவந்து, இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. உலகத்திலேயே மிகவும் ஆபத்தான உணர்வு காதல். அதுவும் நட்பு காதலாக மாறி, அதையும் ஒருதலையாக அனுபவிக்கும்போதுதான், புதைந்திருக்கும் உணர்வுகள் உச்சிக்குச் செல்லும். அவ்வுணர்வை யாராலும் தடுக்கவும் முடியாது. வினோத், அப்படிச் சிக்கியவன்தான். பெற்றோர்கள் ஆதரவின்றி அநாதை ஆசிரமத்தில் வளர்ந்த இளைஞன், வெளியுலகத்தில் அடியெடுத்து வைக்கிறான். மாறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்துவந்த இவனுக்கு, சராசரி வாழ்க்கை என்னவென்பதை அந்த ஆட்டோக்காரரே உணர்த்தியிருப்பார்.

கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகம் என்னவென்று பார்க்கிறான், தெரிந்தும்கொள்கிறான். உலகமே சிக்கலென நினைக்கும் விஷயங்களை எளிமையாகக் கையாள்கிறான், உலகமே எளிமையாக நினைக்கும் விஷயங்கள் அனைத்துமே இவன் கண்ணுக்குச் சிக்கலாகவும், வேறுவிதமாகவும் தெரிகிறது. விதிகளும் வரைமுறைகளும் தெரியாமல் அல்லாடுகிறான், அசிங்கப்படுகிறான். ஊரே இவனைப் பார்த்துச் சிரிக்கிறது. இப்படியாக, தனிமை உலகில் இருந்த இவனுக்கு ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. 

வழக்கமான வாழ்க்கையிலிருந்து விலகி, நட்பு வாயிலாக, வேறோர் உலகத்தை வாழத் தொடங்குகிறான். `கெட்டுப்போன சாப்பாட்டைச் சாப்பிடுபவன், யாரிடமும் அதிகம் பேசமாட்டான், பழைய சட்டை, பாத்ரூம் செருப்பு, பென்சிலில் கோடுபோட்ட மாதிரி உடல்...' என இவைதாம் இவனின் தோற்றமும், சுபாவமும். ஆனால், அவள் அப்படியில்லை. கூர்மையான கண்கள், வசீகரிக்கும் அழகு, கொஞ்சும் பேச்சு, கண்ணுக்கே தெரியாத சிவப்பு கலர் பொட்டு... பிறகெப்படி அவளுக்கு இவனைப் பிடித்தது? அது நம்மைத் தேர்ந்தெடுத்த நம் தோழிகளுக்கும் காதலிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். 

தனிமையில் பேசிக்கொண்டிருந்த இவனுக்குத் துணை கிடைக்கிறது. அவளும் இவன் கையைப் பிடித்து உலகத்தைச் சொல்லித் தருகிறாள். கற்றுக்கொள்ள எவ்வளவோ இருந்தும் இவன் முதலில் கற்றுக்கொண்டது, காதலை. இவனது இயல்பு நிறைந்த பார்வையிலும் பேச்சிலும் சின்னத் தயக்கமும் ஏக்கமும் ஏற்படுகிறது. கனவை நோக்கி ஓடச்சொல்லிவிட்டு அவள் கிளம்பியதும், பிரிவின் பயம் வந்த இவனுக்குள் காதல் முழுமையாக ஊடுறுவியது. அவளுக்கும் அப்படித்தான். ஆனால், வேறொருவனோடு!. அதுவும் இவன் மூலமாகவே. மீண்டும் தனிமைப்படுத்தப்படுகிறான். காதல் வழியில் தன்னந்தனியாகப் பயணிக்கும் இவனால் மீண்டும் நட்பு வட்டத்துக்குள் வரமுடியவில்லை. காதலுக்கும் காமத்துக்கும் இடையில் தத்தளிக்கிறான். இறுதியில் காதலா, நட்பா என அவளுக்குக் கேள்வி எழுகிறது. காதலுக்கான அர்த்ததைப் புரிந்துகொண்டு உலகத்திலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கிறான். 

வினோத்தின் இந்நிலையை, நாமும் வாழ்க்கையின் எங்காவது ஓர் ஓரத்தில் அனுபவத்திருப்போம். முழுமையாக அனுபவித்திருந்தால் இந்நேரம் இந்தக் கட்டுரையை நான் எழுதியிருக்க முடியாது, நீங்களும் படித்திருக்க முடியாது. ஆனால், இப்படம் கொடுத்த தாக்கத்தை எப்போதாவது அனுபவித்திருப்போம். இது நான்கு விஷயத்தால் சாத்தியப்பட்டது. ஒன்று இந்தப் படத்தில் வினோத்தாக வாழ்ந்த தனுஷ், இரண்டு, இது அனைத்தையும் வழிநடத்திச் சென்ற செல்வராகவன், மூன்றாவது, பாடல்களுக்கு வரிகள் எழுதிய நா.முத்துக்குமார், பழநிபாரதி. நான்காவது காரணம், அனைத்து உணர்வுகளுக்கும் உயிர் கொடுத்த யுவனின் இசை

எதிர்பார்ப்பு கௌதம் மேனன் காதல் கதையைப்போல் இருந்தாலும், நித்தமும் நாம் அனுபவிப்பது செல்வராகவனின் காதல் கதையைத்தான். அதனால்தான் செல்வானின் படங்கள் நம்மை அதிகம் பாதிக்கிறது. சில படங்களே இயக்கியிருந்தாலும், செல்வராகவனின் தனித்துவத்துக்கு இவையெல்லாம்தாம் காரணங்கள். டிரெண்டில் இருப்பதைப் வைத்துப் படம் எடுப்பது ஒரு ரகம். எடுத்த படம் டிரெண்ட் ஆவது இன்னொரு ரகம். 'காதல் கொண்டேன்' இரண்டாவது ரகம். 

இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சினிமாவாக 'காதல் கொண்டேன்' கொடிகட்டிப் பறக்கும்!