
ரஜினி கமல் விஜய் அஜித் விக்ரம் உஷார், உஷார்!
‘நாங்களும் கெட்டப் போடுவோம்ல பாஸு!’- சே குவேரா கெட்டப்பில் திருமா திரும்பி முறைக்கிற ஸ்டில்களைப் பார்த்தாலே பல்ஸ் எகிறுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், இப்போது ஆக்ஷன் ஹீரோவாக அடித்துத் தூக்கவரும் பக்கா கமர்ஷியல் படமாம் ‘கலகம்’!

‘‘ஆஹா, தமிழ் சினிமாவில் இன்னொரு ஹீரோவா?’’
‘‘இன்னொரு ஹீரோன்னு சொல்லா தீங்க; உண்மையான ஹீரோன்னு சொல்லுங்க. இதுவரை நடிச்சவங்க எல்லாம் உருப்படியா என்ன செய்தி சொல்லியிருக்காங்க? ‘கலகம்’ படம் வந்ததும் தமிழ்நாடே அலறப்போகுது, பாருங்க.
சட்டக் கல்லூரிப் பேராசிரியரா வர்றேன். பாலசிங்கம்னு பேர். யாரும் சீண்டாத வரைக்கும், சின்னச் சிரிப்போடு இருப்பான் பாலாண்ணா. சீண்டிட்டா, சிங்கமாகிப் பிரிச்சு மேய்ஞ்சிருவான். படத்தில் ஒரு காட்சியில் சே குவேராவாகவும் வர்றேன்!’’
‘‘ `கலகம்’, விடுதலைச் சிறுத்தைகளின் பிரசாரப் படமா?’’
‘‘இது புது மாதிரியான சினிமா. நான் அரசியல்ல இருக்கேன் என்பதால், படத்தில் எந்தவிதத்திலும் சமரசம் செய்துக்கலை. நான் இன்னும் கொஞ்சம் கலர் ஆகணும்னு இயக்குநர் களஞ்சியம் சொல்லியிருக்கார். ஒரு நாளைக்குக் குறைஞ்சது ஆறு மணி நேரமாவது தூங்குங்கன்னு சொல்லியிருக்கார். முயற்சிபண்றேன். நாங்க நடத்துற மண்ணுரிமை மாநாடு முடிஞ்சதும், முழு முனைப்போடு படப்பிடிப்பில் இறங்குறோம்.’’

‘‘பூஜா, ஷெரீன், ஜோதிர்மயி, லட்சுமிராய்னு பல ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்காமே... இத்தனை பேரோடவும் லவ், டூயட்னு கலக்கப்போறீங்களா?’’
ஹாஹாவென வாய்விட்டுச் சிரிப்பவர், ‘‘கதைப்படி டாக்டருக்குப் படிக்கிற பொண்ணுதான் நாயகி. அதற்குப் பொருத்தமான சில கதாநாயகிகளிடம் பேசிட்டிருக்காங்க. அதில் நீங்க சொன்னவங்களும் இருக்காங்க. பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்திகூடவும் பேச்சு நடந்துட்டிருக்கு. நீங்க யாருமே எதிர்பார்க்காத அரசியல் வி.ஐ.பி ஒருத்தரையும் நடிக்கவைக்கலாம்னு யோசிச்சிட்டிருக்கோம். எல்லாம் சரிப்பட்டு வந்தா, படம் படுபிரமாதமா வளர்ந்து நிக்கும்!’’

‘‘கமர்ஷியல் படம்னு சொல்றீங்க. ஹீரோயினோடு ஜாலி ரொமான்ஸ், குத்துப் பாட்டு, அதிரடி ஃபைட்னு இருந்தால்தானே இங்கே படம் ஓடும்? உங்க படத்திலும் அவற்றை எதிர்பார்க்கலாமா?’’
‘‘இன்னும் எத்தனை நாளைக்குங்க ஹீரோயின் தொப்புளையே பார்த்துட்டு இருக்கிறது? மக்களோட ரசனையைக் கெடுத்து வெச்சிருக்காங்க. இது ஆக்ஷன் படம். அதுக்காக படம் பூராவும் ‘ஆ... ஊ...’னு கையைக் காலைத் தூக்கிக்கிட்டு அந்தரத்தில் பறந்தபடி, ஒரே ஆள் நூறு பேரைப் பந்தாடுற பாணி படம் இல்லை. பார்வை யிலேயே பதறவைப்பேன். ‘ஆக்ஷன் ஹீரோ’ன்னு சொல்லிட்டு இருக்கிறவங்க பண்ணாத விஷயங்களை இதில் பண்ணப்போறேன். இது நம்ம படம், புகுந்து விளையாடிர மாட்டோமா!’’
‘‘மத்த ஹீரோக்கள் செய்யாததை நீங்க சினிமாவுக்கு வந்து என்ன புதுசா செய்றதா ஐடியா?’’
‘‘நான் தொழில்முறை நடிகன் இல்லை. படம் ஓடி பெரும் பணம் சம்பாதிக்கணும்னு எனக்கு நிர்பந்தம் கிடையாது. நல்ல கம்யூனிசச் சிந்தனைகளை அதன் கரு சிதையாமல் கொண்டுசெல்வதற்கான ஒரு முயற்சிதான் என்னோட திரைப் பிரவேசம். இனி எங்க சித்தாந்தங்களைக் கொண்டுசெல்ல எவர் தயவும் தேவையில்லையே!’’

‘‘எல்லா ஹீரோக்களையும் சகட்டுமேனிக்குப் போட்டு வாங்கினவர் நீங்க. கடைசியில் நீங்களும் சினிமாவுக்கு வர வேண்டியதாகிடுச்சே?’’
சின்ன யோசனைக்குப் பிறகு... ‘‘என்ன பண்ணச் சொல்றீங்க? கட்சி ஆரம்பிச்ச இத்தனை வருஷங்களில் எதிர்பார்த்த வளர்ச்சி அடையலைங்கிறது வருத்தமான விஷயம்தான். தொண்டர்கள் சோர்ந்துபோகாம இருக்க ஏதாச்சும் செய்தாகணுமே. என் கருத்துகளைப் பொதுமக்களிடம் கொண்டுசெல்ல சினிமா ஒரு நல்ல ஊடகமா இருக்கும்னு தோணுச்சு. அதான்... களம் இறங்கியாச்சு. ‘கலகம்’ தொண்டர்களைக் கலகலப்பாக்கும்!’’
‘‘‘சிவாஜி’தான் இப்ப டாக் ஆஃப் தமிழ்நாடு. ஒரு ‘சினிமாக் காரரா நீங்க என்ன நினைக்கிறீங்க?’’
‘‘சிவாஜி டிக்கெட்டுக்கு முன்பதிவு ஆரம்பிக்கிற அன்னிக்கு அதிகாலையில இருந்தே தியேட்டர்கள் வாசல்ல கூட்டம் திமிறுது. அப்படி ஒண்ணும் அது ஆரோக்கியமான சினிமாவா எனக்குத் தோணலை. அப்புறம் ஏன் அதுக்கு இத்தனை வரவேற்புனு புரியலை. ஆனா, நம்ம படம் அப்படி இல்லை. அதிரடியா வெடிக்கும்; ஆதரவா அணைக்கும்!’’ என்றவர், ‘‘சும்மா போடுங்க... ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரமுக்கெல்லாம் டஃப் அயிட்டம் கொடுக்க வர்றான் இந்தத் திருமானு!’’
டம்மி பிஸ்டலைச் சுழற்றியபடியே சிரிக்கிறார் புது ஹீரோ!
- கி.கார்த்திகேயன், மை.பாரதிராஜா
20-6-2007 - இதழிலிருந்து...