Published:Updated:

"ஸ்லாஷர் த்ரில்லர்ல அழகிய அசுரா மட்டும் லோக்கல் க்ளாஸிக்!" ஜேடி ஜெர்ரி - #15YearsOfWhistle

"ஸ்லாஷர் த்ரில்லர்ல அழகிய அசுரா மட்டும் லோக்கல் க்ளாஸிக்!" ஜேடி ஜெர்ரி  - #15YearsOfWhistle
"ஸ்லாஷர் த்ரில்லர்ல அழகிய அசுரா மட்டும் லோக்கல் க்ளாஸிக்!" ஜேடி ஜெர்ரி - #15YearsOfWhistle

'விசில்' படம் வெளியாகி பதினைந்து ஆண்டுகள் நிறைவடந்ததைத் தொடர்ந்து அப்பட இயக்குநர் ஜேடி.ஜெர்ரியின் பேட்டி.

பேய் படங்களும் பாம்பை மையப்படுத்தின படங்களும் வெளியாகிக் கொண்டிருந்த சமயம். புதுமுக நடிகர் நடிகைகளைக் கொண்டு சத்தமே இல்லாமல் ரிலீசானது 'விசில்'. விக்ரமாதித்யா, காயத்ரி ரகுராம், ஷெரின் என இளைஞர் பட்டாளத்தோடு லிவிங்ஸ்டன், செந்தில் என சீனியர் ஆர்டிஸ்ட்களும் இணைந்து களமிறங்கினர். பேய் பட பாணியில் த்ரில்லர் படமாக உருவான 'விசில்' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும், 'நாகா' என்ற கேரக்டரும் அதற்கான காஸ்ட்யூமும் படத்துக்கான அடையாளத்தை கொடுத்தது. இந்தப் படம் வெளியாகி பதினைந்து வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இயக்குநர் ஜேடி ஜெர்ரியை தொடர்புகொண்டு பேசினோம். 

பேய் பட ஜானரில் த்ரில்லர் படம் எடுக்கலாம்னு எப்படி தோன்றியது? 

"இந்தப் படம் ஸ்லாஷர் த்ரில்லர் ஜானர். ஒரு பழிவாங்கும் கதையில் பேய் மாதிரியான அமானுஷ்ய விஷயங்களை நுழைத்து கதை எழுதுவது. இதுவும் ஹாரர் ஜானரில் ஒரு பிரிவுதான். நான் நிறைய ஹாலிவுட் படங்கள் பார்ப்பேன். அந்தப் படங்களோட இன்ஸ்பிரேஷன்தான் 'விசில்'. இந்தக் கதையை எழுதி பென்டா மீடியா தயாரிப்பு நிறுவனத்திடம் போய் சொன்னேன். அதுல மீடியா ட்ரீம்ஸ் என்ற நிறுவனத்தில் சுஜாதா இருந்தார். அவர்தான் இந்தப் படத்தை நாங்க பண்றதுக்கான காரணம்னே சொல்லலாம். அவர்தான் இந்தப் படத்துக்கான வசனத்தையும் எழுதி கொடுத்தார்."

இந்தப் படத்துல நடிக்க வைக்க வேற யாராவது முயற்சி செஞ்சீங்களா?  

"காலேஜ் சப்ஜெக்ட்ங்கிறதுனால, இந்தப் படத்துக்கு புதுமுகம்தான் தேவைப்பட்டது. நாங்க சிபிராஜ், சாந்தனுனு பிரபலங்களுடைய மகன்களை நடிக்க வைக்க பிளான் பண்ணோம். அப்புறம், அவங்களுக்கும் தயக்கம் இருந்தது; எங்களுக்கும் சரியா அமையலை. சரினு ஆடிஷன் நடத்தினோம். அப்போ, செலக்டானவங்கதான் இந்தப் படத்துல நடிச்சாங்க.  அதுல ஷெரின் 'துள்ளுவதோ இளமை' படம் பண்ணியிருந்தாங்க. ஒரு கிளாமரஸ் பொண்ணு தேவைப்பட்டதுன்னு அவங்களை படத்துல நடிக்க வெச்சோம்."  

திவ்யதர்ஷினியும் (டிடி) ஆடிஷன்ல கலந்துகிட்டாங்களா? மீடியாவுல அவங்களுடைய வளர்ச்சியை எப்படி பார்க்குறீங்க? 

"பிரியதர்ஷினி டிவி ஷோக்களுக்கு திவ்யதர்ஷினியை கூட்டிட்டு வருவாங்க. அப்போ டிடி ஸ்கூல படிச்சிட்டு இருந்தாங்க. பேசும்போது, அவங்களோட பிஹேவியர், உடனுக்குடன் பேசுறது, அவங்க கிரியேட்டிவிட்டினு எல்லாமே எங்களுக்கு பிடிக்கும். அப்போ என்ன குறும்புத்தனமா இருந்தாங்களோ அதே குறும்போடதான் இப்போவும் இருக்காங்க. உண்மையாகவே, டிடியோட வளர்ச்சி எங்களை பிரமிக்க வைக்குது. எங்க படத்துல நடிச்சுட்டு இப்போ இந்த இடத்துல இருக்குறது ரொம்பவே பெருமையாவும் சந்தோசமாவும் இருக்கு."

'அழகிய அசுரா' பாடலுக்கு இன்னும் ரசிகர்கள் இருக்காங்களே?

"அதுக்கு காரணம் இமான்தான். 'விசில்' படத்துக்கு முன்னாடி ஒரு படம் பண்ணியிருந்தார். ஆனால், 'விசில்' இவருக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுத்து; அடுத்தக் கட்டத்துக்கு கூட்டிட்டு போனது. முதல்ல இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் பண்றதா இருந்தது. அப்புறம்தான், இமான் படத்துக்குள்ள வந்தார். இன்னைக்கு தமிழ் சினிமாவுல இருக்கிற முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியல்ல முதல் வரிசையில இமான் இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோசம்."

வழக்கமான பழிவாங்குற கதையை இப்படி எடுக்கணும்னு யோசிச்சதுக்கும் ஹாலிவுட்தான் காரணமா? 'நாகா' கேரக்டர் பத்தி சொல்லுங்க ?

"கரெக்டா சொல்லிட்டீங்க. இது ஹாலிவுட் சூட்சமம்தான். அமானுஷ்ய விஷயங்களை ரியலா நடந்த விநோதமான சம்பவங்களோடு சேர்த்து கதை எழுதுவாங்க. ஒரு மனுஷனுக்குள்ளேயும் ஒரு விநோதமான குணாதிசியம் ஒளிஞ்சிருக்கும். யாராலயும் அதை கணக்கிட முடியாது. அந்த குணாதிசியம் ஒரு கட்டத்துல அனுமாஷ்யமா மாறும். அப்படிதான் இந்தக் கதையும் எழுதுனோம். சண்முக சுந்தரம் எழுதிய நாட்டுப்புறபாடல்ல இருந்துதான் 'நாகா' வார்த்தையை கண்டுபிடிச்சு அதுக்கு உயிர் கொடுத்தோம். அவ்ளோதான். அந்த கேரக்டர்ல ராஜ் கபூர் சார் நல்லா நடிச்சிருப்பார். அதே போல, லிவிங்ஸ்டன் சாருக்கு அந்த புரொஃபெஸர் ரோல் கச்சிதமா பொருந்திருக்கும். இந்தப் படத்துல மிர்ச்சி சிவாவும் ரெண்டு நாள் நடிச்சார். அப்புறம், எங்ககிட்ட வந்து 'நான் நிறைய கனவுகளோட இருக்கேன். இந்தப் படத்துல எனக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிற மாதிரி தெரியலை. ஸோ, நான் இந்தப் படத்துல இருந்து விலகிக்கிறேன்னு சொல்லி விலகிட்டார். எங்களுக்கும் அவரோட சூழலை புரிஞ்சிக்க முடுஞ்சது. அவர் அப்போ சொன்ன மாதிரியே இப்போ சினிமாவுல தனக்கான ட்ராக்ல போயிட்டு இருக்கார்.’’

மறுபடியும் படம் பண்ற ஐடியா இருக்கா ?

"விளம்பர ஏஜென்ஸிக்கு போயிட்டதுனால அடுத்தடுத்து படம் பண்ண முடியலை. கண்டிப்பா படம் பண்ணுவோம். இத்தனை வருஷத்துக்கு பிறகு, இந்தப் படத்தைப் ஞாபகம் வெச்சிருக்கிறது ரொம்பவே சந்தோசமா இருக்கு."

அடுத்த கட்டுரைக்கு