Published:Updated:

`பிரிந்தாலும் நம் அன்பு பொய் இல்லையே!' - அனுராக் கற்றுத்தரும் ரிலேஷின்ஷிப் பாடங்கள்

அனுராக் காஷ்யப்பும் அவருடைய காதல் கதைகளின் ஹேப்பி எண்டிங் உங்களுக்குத் தெரியுமா?

`பிரிந்தாலும் நம் அன்பு பொய் இல்லையே!' - அனுராக் கற்றுத்தரும் ரிலேஷின்ஷிப் பாடங்கள்
`பிரிந்தாலும் நம் அன்பு பொய் இல்லையே!' - அனுராக் கற்றுத்தரும் ரிலேஷின்ஷிப் பாடங்கள்

சேர்ந்தே வாழ்ந்தாலும் மனதளவில் பிரிந்திருக்கக்கூடிய வாழ்க்கைமுறைதான் இந்தியர்கள் பலரின் மேரேஜ் லைஃப்ஸ்டைல். ஆனால், மணமுறிவுக்குப் பிறகும் மனமுறியாமல் அதே மரியாதையோடும் அன்போடும் புரிதலோடும் பழகிக்கொள்பவர்கள்,  நம் இந்தியாவில் எத்தனை பேர்?  இந்தக் கேள்விக்கு, தன் திருமண வாழ்க்கையையே பதிலாக்கியிருக்கிறார் பாலிவுட்டின் பிஸி இயக்குநர் அனுராக் காஷ்யப்

யார் இந்த அனுராக் காஷ்யப்?

தற்போது 46 வயதாகும் அனுராக் காஷ்யப், பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநர். இவர் இயக்கிய `பாஞ்ச்', `ப்ளாக் ஃப்ரைடே', `நோ ஸ்மோக்கிங்', `தேவ் டி', `குலால்', `தட் கேர்ள் இன் எல்லோ பூட்ஸ்', `கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்', `அக்லி', `பாம்பே வெல்வெட்', `ராமன் ராகவ்', `முக்காபாஸ்' போன்ற படங்கள், அதன் மேக்கிங் மற்றும் வலிமையான சமூகப் பிரச்னைகளை அழகியலோடு அணுகியவிதத்துக்காக இந்தியாவைத் தாண்டியும் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகின்றன. `சினிமாவுக்காக தன் மணவாழ்க்கையையே குலைத்துக்கொண்டவர்' என்று இப்போது விமர்சிக்கப்படும் உன்னதமான கலைஞன் அனுராக். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்று, தற்போது தனியாக வாழ்ந்துவருகிறார். முன்னாள்  மனைவிகளுடன் நட்பாகவும் இருக்கிறார். இதெல்லாம் எப்படிச் சாத்தியம்? 

தன் காதல் மனைவி ஆர்த்தி பஜாஜை, டெல்லி நாடகக் கல்லூரியில் முதன்முதலாக 1997-ம் ஆண்டு சந்தித்தார், அனுராக். புரிதலோடுகூடிய நட்பாக ஆரம்பமாகி காதலில் முடிந்த உறவு அது.  திரைப்படங்களில் எடிட்டராகப் பணிபுரிய வேண்டும் என்ற கனவோடு இருந்த ஆர்த்தியை, அனுராக்குக்கு அவ்வளவு பிடித்தது. இருவரும் நட்பாகி, மும்பையில் பத்துக்குப்பத்து அறை ஒன்றை எடுத்து தங்கி, திரைப்படக் கனவைச் சேர்ந்து துரத்தும் அளவுக்கு நெருக்கமானார்கள்.

லிவிங்டுகெதர் வாழ்க்கையில், 2001-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தனர். `ஆலியா' என்று அந்தக் குழந்தைக்குப் பெயரிட்டு, சேர்ந்தே வளர்த்தார்கள். தங்கள் மகளுக்காக, 2003-ம் ஆண்டில் முறைப்படியும் அதிகாரபூர்வமாகவும் மணமுடித்துக்கொண்டு, வாழ்க்கையைத் தொடர்ந்தனர். திரைப்பட வாழ்வின் ஆரம்பகட்டத்தில் இருந்த அனுராக்குக்கு, திரை வாழ்வின் ஆரம்பம் சறுக்கல்தான். `பாஞ்ச்', `பிளாக் ஃப்ரைடே', `குலால்' போன்ற படங்கள் சென்ஸாரால் ரிலீஸ் ஆவதில் பிரச்னை ஏற்பட்டு முடங்கிவிட, கடும் மனஉளைச்சலுக்கு உள்ளானார். 2007-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்தனர். ஆனாலும் ரிலீஸாகாத முதல் படமான `பாஞ்ச்' படத்திலிருந்து சமீபத்தில் அவர் இயக்கத்தில் ரிலீஸான `முக்காபாஸ்' வரை ஆர்த்திதான் அனுராக் படங்களுக்கான எடிட்டர்!  சிக்கலான ஃபிலிம் மேக்கிங்கைக்கொண்ட இவரது படங்களில், மிகவும் சவாலான வேலைதான் எடிட்டிங். ஒவ்வொரு படத்திலும் அதைப் பார்த்து பார்த்துச் செதுக்கித் தருகிறார் ஆர்த்தி. 

இது எப்படிச் சாத்தியம்?

``நான்கு வருட வாழ்க்கையில், நல்ல நண்பராக அனுராக் எனக்கு இருந்தார். ஆனால், அவருடைய நாடோடி வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இருந்தது. அவரால் முடிந்தவரை ஒத்துழைத்தார். ஆனால், அவருக்கு எல்லாமே சினிமாதான். அவருடைய மதம் `சினிமா' என்பார். குழந்தை ஆலியாவுக்காக, சண்டைபோட்டுக்கொள்ளாமல் தனித்தனியாக வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்தோம். எங்களால் சேர்ந்து ஒரே வீட்டில்தான் இருக்க முடியவில்லையே தவிர, ஒன்றாக வேலைசெய்வதற்கு தடையில்லை. ஏனென்றால், எனக்கு சினிமா மீது காதல் வரக் காரணமே அவர்தான். காதலித்தபோதும் பிறகு லிவிங்டுகெதராக வாழ்ந்தபோதும் எங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் வந்ததில்லை.

இந்தச் சமூகத்துக்காகச் சேர்ந்து வாழ முற்பட்டபோதுதான் சிக்கல்கள் உருவாகின. போலியாக நடித்துக்கொண்டு வாழ்வதைவிட, பிரிவதுடன் பழையபடி நட்போடு அவரவர் வாழ்க்கையைத் தொடரவும் அனுமதித்துக்கொண்டோம். அதன் பிறகு, வாழ்க்கை தெளிவானது. நானும் அவரும் இன்று வரை நாள் முழுவதும் சினிமாவுக்கான ஆலோசனையில் இருக்கும்போதும்கூட நல்ல நண்பர்களாக அன்பைப் பரிமாறிக்கொள்கிறோம். இத்தனை வருடம் கழித்து எங்கள் மகளுக்காகச் சந்தித்துக்கொள்கிறோம். நல்ல பல முடிவுகளை அவளுக்காகச் சேர்ந்து எடுக்கிறோம்'' என்றார் ஆர்த்தி. 

அனுராக் காஷ்யப் ஒருபடி மேலே இருக்கிறார். 2014-ம் ஆண்டில் அவர் இயக்கிய `அக்லி' படத்தின் மையக்கதையே அவர் சொந்த வாழ்க்கைதான். சினிமா கரியரில் சாதிக்கத் துடிக்கும் மாடல் ஒருவனின் மனப்போராட்டம்தான் கதை. டைவர்ஸாகிப் பிரிந்து போகிறாள் மனைவி. இன்னொருபுறம் தன் மகளைத் தொலைத்தும்விடுகிறான். தன்னையே வில்லனாக உருவாக்கி எடுத்த கதை என்பது அனுராக்கைத் தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இந்தப் படத்தின் எடிட்டர் ஆர்த்தி, இந்தப் படத்தை எடிட் செய்தபோது என்ன மனநிலையில் இருந்திருப்பார் என்பதை யூகிக்க முடியவில்லை.

ஆர்த்தியின் பிரிவுக்குப் பிறகு சுருண்டு படுத்துக்கொள்ளாமல் `தேவ் டி' என்ற டிரெண்டு செட்டிங் படத்தை பாலிவுட்டுக்குக் கொடுத்தார் அனுராக். அந்தப் படத்தில் நடித்த கல்கி கோச்லின் என்கிற நடிகையைத் திருமணம் செய்துகொண்டார். சில வருடத்தில் கல்கியோடும் விவாகரத்தானது. ஆர்த்தி எடுத்த அதே முடிவை கல்கியும் எடுத்தார். அனுராக் காஷ்யப்பின் படங்களில் இப்போதும் நடிப்பதோடு, அவருடன் நல்ல நட்பிலும் வாழ்க்கையைத் தொடர்கிறார் கல்கி.

``அவரைப் பிரிவது கடினமாக இல்லை. சேர்ந்து கருத்துவேறுபாடுகளோடு வாழ்வதைவிட பிரிந்திருந்தாலும் நாங்கள் இன்னமும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். என் புதுக்காதலை அவரிடம் பகிரக்கூடிய இடத்தில்தான் இருக்கிறேன். அனுராக் என் நல்ல நண்பர்'' என்கிறார் கல்கி கோச்லின். 

காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் எல்லோருமே கடைசிவரை சேர்ந்து இருக்கவேண்டிய அவசியமில்லை. அதற்காக, பிரிந்தால் ஒருவர் மீது ஒருவர் புழுதி வாறித் தூற்றிக்கொள்ளவேண்டியதுமில்லை. நல்ல நண்பர்களாகத் தொடரலாம், அனுராக் காஷ்யப் - ஆர்த்தி- கல்கி போல!