Published:Updated:

73, அபிபுல்லா சாலை

73, அபிபுல்லா சாலை
பிரீமியம் ஸ்டோரி
73, அபிபுல்லா சாலை

73, அபிபுல்லா சாலை

73, அபிபுல்லா சாலை

73, அபிபுல்லா சாலை

Published:Updated:
73, அபிபுல்லா சாலை
பிரீமியம் ஸ்டோரி
73, அபிபுல்லா சாலை
73, அபிபுல்லா சாலை

கவிஞர் அறிவுமதியின் அலுவலக முகவரிதான் இன்று கோடம்பாக்கம் கொண்டாடும் கலைஞர்கள் பலரின் முதல் வரியுமாக இருக்கிறது. சுந்தர்.சி, செல்வபாரதி, சீமான், பாலா, பழநிபாரதி, நா.முத்துக்குமார், நந்தலாலா, யுகபாரதி, கபிலன், தபூசங்கர், அஜயன்பாலா, ஜெயா, சரவணன், நெல்லை ஜெயந்தா வரை அறிவுமதியின் கவிக்கூடத்தில் வளர்ந்தவர்கள் ஏராளம்.
 
‘உள்ளேன் ஐயா’ என்று ஒரு படம் எடுக்க விரும்பி ஆரம்பிக்கப்பட்ட அலுவலகம்தான், இன்றைக்கும் எங்கெங்கிருந்தோ வண்ணக் கனவுகளுடன் சென்னை வந்தடைகிற இளைஞர்களின் தாய்க் குடில்.

‘‘கனவுகளும் ஆசைகளும்தான் மனதில் இருக்கும். கையில் ஒரு பைசாகூட இருக்காது. இந்த நகரத்தில் வறுமையோடு வாழ நான் கற்றுக்கொண்டது அறிவுமதி அண்ணனிடம்தான். கையில் கொஞ்சம் பணம் இருந்தால், திமிராக நடக்கத் தோன் றும். காசே இல்லாவிட்டால் சோர்ந்துபோய் எங்காவது முடங்கத் தோன்றும். ஆனால், இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரே மாதிரி வாழ்க்கையை எதிர்கொள்கிற தைரியத்தைக் கற்றுக்கொண்டது அவரிடம்தான். ஒருநாள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துப்போனார். குளிப்பதற்காகக் காவிரி ஆற்றுக்குப் போனோம். நான் சோர்ந்துபோய் காவிரிக்கரையில் தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்தபோது, அழுக்கான என் சட்டையை எடுத்துத் துவைத்து, அது காய்வதற்காகக் காத்திருந்தார். அண்ணன் எனக்கு அம்மாவுமான தருணம் அது!’’ என்கிறார் இயக்குநர் சீமான்.

73, அபிபுல்லா சாலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘பழ.பாரதி என்கிற என் பெயரை பழநிபாரதி என மாற்றிவைத்தவர் அண்ணன்தான். என் முதல் கவிதைத் தொகுப்பான ‘நெருப்புப் பார்வைகள்’ புத்தகத்தை முழுக்கத் திருத்தி வடிவமைச்சது, என்னை ஒரு கவிஞனாக அங்கீகரித்து மேடைகளில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தது என எல்லாமே அவர்தான்.  ஒருவேளை, இந்த அபிபுல்லா சாலையில் உள்ள அறிவுமதி அண்ணனின் இந்த அலுவலகம் இல்லை என்றால், நானெல்லாம் வெளி உலகத்துக்கு அறியப்படாத கவிஞனாகத்தான் இருந்திருப்பேன். எனக்கு மட்டுமல்ல, ஊரிலிருந்து கிளம்பிவருகிற யாரோ ஒரு முகம் தெரியாதமிழனுக்குக்கூட இதுதான் உண்மையான சரணாலயமாக இருக்கிறது. என்னைப்போல பலரும் இங்கு வந்து போவதால், நாங்கள் அறிவுமதி அண்ணனின் நிழலில் நண்பர்களானோம். கவிதையும் கற்பனையுமாகக் கழிந்த மிக நீண்ட இரவுகள் அவை. செல்வபாரதி அப்போது எங்களுடன்தான் இருந்தார். அவரைப் பார்க்க சுந்தர்.சி வருவார். நான் ‘புதிய மன்னர்கள்’ படத்தில் பாடல் எழுதியிருந்தேன். அதைக் கேட்டுவிட்டு, ‘எனது அடுத்த படத்துக்கு எல்லா பாடல்களையும் நீ எழுது’ என்று சுந்தர்.சி தந்ததுதான் ‘உள்ளத்தை அள்ளித் தா’. அந்தப் படத்தின் அத்தனை பாடல்களையும்  அண்ணனின் அறையிலிருந்தே எழுதினேன். எனக்குத் திருப்புமுனையாக அமைந்தது அந்தப் படம்தான்!’’ என்கிறார் பழநிபாரதி.

‘‘கணிதம் படித்த என்னை கவிதை எழுதத் தூண்டியதும், உதவி இயக்குநராக என்னைச்

73, அபிபுல்லா சாலை

சேர்த்துவிட்டதும், ஆறு வருடங்கள் என்னைத் தங்கவைத்துப் பாதுகாத்ததும் அண்ணன்தான். காதல் கவிதைகளில் எனக்கென ஓர் இடத்தைப் பிடித்ததில் என்னைவிடப் பெரிதான சந்தோஷம் அண்ணனுக்குத்தான். போட்டிகள் நிறைந்த இந்த வெப்பத்தைத் தாங்கும் நிழலாக, எனக்கு அண்ணன் இருக்கிறார்’’ என்கிறார் தபூசங்கர்.

‘‘சினிமாவில் உதவி இயக்குநராகச் சேர வேண்டும் என்ற வேட்கையில்தான் சென்னைக்கு வந்தேன். என்னைப் பாடல் எழுதச் சொல்லி, திசைதிருப்பியது அண்ணன்தான். இசைக்குப் பாடல் எழுதுவதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டதும் இந்த அறையில்தான். என் முதல் கவிதைத் தொகுப்பான ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ புத்தகத்தை, அண்ணன் தன் ‘சாரல் வெளியீடு’ மூலமாகக் கொண்டுவந்தார். என்னை பாலுமகேந்திரா சாரிடம் உதவியாளராகச் சேர்த்துவிட்டார். அந்த அறைதான் எங்களுக்குச் சுவாசம் மாதிரி இருந்தது. ‘என்னைச் சந்திக்க கனவில் வராதே’ என்ற ஜப்பானியக் காதல் கவிதை களின் மொழிபெயர்ப்பு நூலுக்கு, ‘சமர்ப்பணம் 73, அபிபுல்லா சாலை’ என்று எழுதியதும் அந்த நன்றியில்தான்’’ என்று சிலாகிக்கிறார் நா.முத்துக்குமார்.

73, அபிபுல்லா சாலை

இப்படி, அறிவுமதி வழிகாட்டிய கவிஞர் களெல்லாம் இன்று சினிமாவில் கொண் டாடப்படும் கவிஞர்களாகவும் கலைஞர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அறிவுமதியோ, இரண்டு வருடங்களுக்கு முன்பே, ‘இனி திரைப்படங்களில் பாடல்கள் எழுத மாட்டேன்’ என அறிவித்துவிட்டார்.

‘‘ ‘உள்ளேன் ஐயா’ படத்துக்காகத்தான் புதுவை அற்புதம் எனக்கு இந்த அலுவலகத்தைப் போட்டுக்கொடுத்தார். இன்றுவரை அது தொடர்கிறது. ஒரு கவியரங்கத்தில் என் கவிதைகளைக் கேட்ட பெரியவர் கவிஞர் மீரா அவர்கள், என்னை தமிழ் ஆசான் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு அறிமுகம் செய்துவைத்தார். இந்த அறிவுமதியைக் கவிதையில் வளர்த்தது அவர்தான். எனக்கு ஓர் அப்துல் ரகுமான் கிடைத்த மாதிரி இந்தக் கிராமத்து இளைஞர்களுக்கு நாம் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதைத்தான் இன்று வரை செய்துவருகிறேன்.

சுந்தர்.சி, சீமான், செல்வபாரதி ஆகிய மூவரும் ஒரே காலகட்டத்தில் இந்த அறைக்கு வந்தார்கள். அப்படி வந்த தம்பிகளில் முதலில் திரையில் வெளிச்சத்துக்கு வந்து, ஓர் இயக்குநராக வெற்றி யடைந்து, தபூசங்கர், பழநிபாரதி, செல்வபாரதி என நிறைய தம்பிகளுக்கு வெளிச்சம் கொடுத்தது சுந்தர்தான். யுகபாரதி பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த சமயத்தில்தான் இங்கு வந்து சேர்ந்தான். வார்த்தைகளை ஒரு நேர்க்கோட்டில் கொண்டுவரும் வித்தையைக் கற்றிருக்கிறான். கபிலன் புதிய புதிய விஷயங்களைப் பாடல்களாக்கு வதற்குக் கற்றிருக்கிறான். நா.முத்துக்குமார் சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரையில் பரிச்சயமுள்ள, அதை எளிய தமிழில் பாடல்களில் கொண்டுவரும் வித்தையைக் கற்றவன்.

73, அபிபுல்லா சாலை

பாலா மதுரையிலிருந்து வந்த நேரத்தில், என்னிடம் ஒரு நண்பர் அறிமுகப்படுத்தினார். அப்போது பாலாவும் பொன்வண்ணனும் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். ‘வீடு’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பாலாவின் அறைக்குச் சென்று எழுப்பி, ‘வீடு’ படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்வேன். அந்தப் படம் முழுவதுமே படப்பிடிப்பை அருகிலிருந்து பார்த்துப் பணியாற்றினான். அந்தப் படம் முடிந்ததும் பாலுமகேந்திரா, ‘இன்னோர் உதவியாளர் வேண்டும். யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டார். பாலாவைச் சொன்னேன். ‘யாரிடம் பணியாற்றியிருக்கிறான்?’ என்றார். ‘உங்களிடம் தான். உங்களுக்குத் தெரியாமலேயே!’ என்று சொல்லிச் சேர்த்துவிட்டேன். ‘சேது’ கதையை என்னிடம் முதலில் சொல்லும்போதே அழவைத்தவன் பாலா.
 
அஜயன் பாலா ஒரு சிறுகதை ஆசிரியராகத்தான் என்னிடம் வந்தான். பின்பு அவனது உலக சினிமாக்களின் பரிச்சயம் என்னைப் பிரமிக்க வைத்தது. நந்தலாலா, சந்தங்களுடன் பாடல்கள் எழுதுவதில் சிறப்பானவன்.

சென்னைக்கு வந்த இத்தனை வருடங்களில் இத்தனை பாசமுள்ள இளைஞர்களை என் தம்பிகளாகச் சம்பாதித்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது  பெருமிதமாக இருக்கிறது’’ என்கிறார் கவிஞர் அறிவுமதி.

கலை வளர்க்கும் கம்பீரத்தோடு நிற்கிறது 73-ம் எண் கட்டடம்!

-டி.அருள்எழிலன், நா.இரமேஷ்குமார்

படங்கள்: பொன்.காசிராஜன்


16.1.2008 தேதியிட்ட இதழிலிருந்து...

73, அபிபுல்லா சாலை

``பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரே மாதிரி வாழ்க்கையை எதிர்கொள்கிற தைரியத்தைக் கற்றது அண்ணனிடம்தான்!''

- சீமான்

73, அபிபுல்லா சாலை

``அண்ணனின் அலுவலகம் இல்லையென்றால் நான் வெளி உலகத்துக்கு அறியப்படாத கவிஞனாக இருந்திருப்பேன்!''

- பழநிபாரதி

73, அபிபுல்லா சாலை

``பாடல் எழுதுவதற்குப் பயிற்சி எடுத்துக் கொண்டது இந்த அறையில்தான். இந்த அறை எங்களுக்கு சுவாசம் மாதிரி இருந்தது!''

- நா.முத்துக்குமார்

73, அபிபுல்லா சாலை

``சென்னைக்கு வந்த இத்தனை வருடங்களில் இத்தனை பாசமுள்ள இளைஞர்களை என் தம்பிகளாகச் சம்பாதித்திருக்கிறேன்!''

- அறிவுமதி

73, அபிபுல்லா சாலை

``ஆறு வருடங்கள் என்னைத் தங்கவைத்துப் பாதுகாத்தது அண்ணன்தான். வெப்பத்தைத் தாங்கும் நிழலாக எனக்கு அண்ணன் இருக்கிறார்!''

- தபூசங்கர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism