Published:Updated:

ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்

ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்
பிரீமியம் ஸ்டோரி
ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்

ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்

ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்

ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்

Published:Updated:
ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்
பிரீமியம் ஸ்டோரி
ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்

க்கிய அமெரிக்கக் குடியரசின் சிறந்த திரைப்படத்துக்கான விருது அல்ல ஆஸ்கர். அமெரிக்க அரசு, இந்திய அரசைப்போல திரைப்படங்களுக்கு விருது வழங்கும் வேலையை எல்லாம் தன் வசம் வைத்துக்கொள்வது இல்லை. உலகின் மிகப் பழைய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர்,  ‘அகாதமி ஆப் மோஷன் பிக்சர்’, ‘ஆர்ட்ஸ்’,  ‘சயின்ஸ்’ (AMPAS) என்னும் 6000-க்கும் சற்று முன்/ பின்னான எண்ணிக்கைகொண்ட 24 வகை திரைப்படத் தொழில்நுட்பத் துறைகளைச் சார்ந்த கலைஞர்களின் குழுமத்தால் வழங்கப்படும் விருது.

இந்த அமைப்பை நமது ஊரின் ‘பெப்சி’ அமைப்போடு ஒப்பிடலாம். இது, அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஆங்கில மொழி பேசும் படங்களுக்கான விருது மட்டுமே. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பிறமொழிப் படங்களுக்கேகூட இந்த விருதுக்கான போட்டியில் இடம் இல்லை. இது அந்த பூமியின் பூர்வகுடிகளான அமெரிக்கர்களின் (நமக்கு அவர்களைச் செவ்விந்தியர் என்றே சொல்லப்பட்டது)  ‘மாயன்’ மொழி பேசிய APOCALYPTO என்ற 2006-ம் ஆண்டுப் படத்துக்கும் எதிரான விதியானது. இந்த அரசியலின் விபரீதமான பகுதி என்னவென்றால், இதுபோன்ற  படங்களுக்கு 1957-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட சிறந்த பிறமொழிப் படங்களுக்கான விருதுப் போட்டியிலும் இடம் இல்லை என்பதுதான். அமெரிக்க ஜனநாயகத்தின் தனித்தன்மை அப்படியானது. ஆனால், அந்த நாட்டின் ‘சுதந்திரத்தின்’ மீதான ஆதர்சத்தால், ஈர்ப்பால் இந்தியச் சமூகத்திற்கு உருவான  ஹெச் ஒன் பி (H 1 B) மற்றும் ‘குடியுரிமை’ விசா மீதான அளவற்ற காதலுக்கு இணையானது ‘ஆஸ்கர்’ மீதான இந்தியக் காதல். அதிலும், தமிழ்க் காதல் ஈடுஇணையற்றது. ஆஸ்கர் விருது லட்சியத்தில் ஆஸ்கர் நாயகனையும், என்ன காரணமென்றே தெரியாமல் ஆஸ்கர் (பி) லிட் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும்கொண்ட லட்சிய பூமி இது. ஆனால், அந்த ‘லட்சியக் கனவு’, ஹாலிவுட் சினிமாவின் வழியாக நிறைவேறியதுதான் பெரிய நகைமுரண். மெய்யாகவே நம் தமிழ் தாகம் தீர, ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கான அசல் பாடல் (Original Song) மற்றும் பின்னணி இசைக்கான (Background score) ‘ஆஸ்கர்’ விருதுகளைத் தமிழ் உச்சரித்து (எல்லாப் புகழும் இறைவனுக்கே) ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கினார். அந்த நிகழ்வு நமது நீண்ட கால வேட்கையைத் தனித்தது.

ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்

ஆஸ்கர் விருதுகளும் அரசியலும் பிரிக்க முடியாதபடி தொடர்ந்து நிகழ்ந்தபடியே இருக்கின்றன. விருது பெறுபவர்கள் மட்டுமல்ல அறிவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டவர்களும் அரசியல் பேசிவிடவே செய்கின்றனர். பேசப்போவது குறித்த விடயம் பற்றி முன்னரே தெரிவிக்க வேண்டும் என்ற விதி ஒன்றை உருவாக்கும் அளவிற்கு அமைப்பு ஜனநாயகமற்றதாக இருக்க முடியாததால், ஒவ்வோர் ஆண்டும் ஏதோவொரு காரசாரம் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. அகாதமியால் சில காலத்திற்குப் பிறகு, அதிகப்பட்சமாகச் செய்ய முடிந்தது பேசுவதற்கான கால வரையறையை ஒரு நிமிடத்திற்கும் குறைவாக்கியது மட்டுமே.

அரசியல் நடவடிக்கை என்பது, பேசுவதுதோடு மட்டும் முடிந்து விடுவது இல்லை. ‘விருதை’ மறுப்பதன் மூலம் தங்களது அரசியலைப் பேசியவர்களும் உண்டு. இந்த மறுப்பு 1935-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் அநீதிப் போக்குக்கு எதிராக தனது விருதை நிராகரித்தார் மார்லன் பிராண்டோ. அதற்கு அவர் தேர்வுசெய்த வழிமுறை இன்னும் சிறப்பானது. 1973-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது ‘காட் ஃபாதர்’ திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு வழங்கப்பட்டது. அறிவிப்பாளர், “விருதை மார்லனின் சார்பாக, சஃகீன் லிட்டில்ஃபெதர் (Sacheen Littlefeather) எனும் பெண் பெற்றுக்கொள்வார்” என்று அறிவிக்கிறார். அமெரிக்க இந்திய (செவ்விந்தியர்தான்) உடையணிந்த பெண் ஒருவர் மேடையேறி, வழங்கப்பட்ட அந்த விருதை மேடையிலேயே மறுக்கிறார். தன்னை ஒரு ‘அப்பாச்சி’ என்றும் அந்தச் சமூகக் குழுமத்தின் பிரசிடென்ட் என்றும் அறிமுகம் செய்துகொள்கிறார். தன்னிடம் ஒரு நீண்ட உரை இருப்பதாகவும் காலங்கருதி இங்கு அதை பேசாமல் பத்திரிகைகளுக்கு வழங்கப்போவதாகக் கூறிவிட்டு, “திரைப்படங்களிலும் டெலிவிஷன் தொடர்களிலும் இந்திய அமெரிக்கச் சமூகம் சித்திரிக்கப்படும் விதத்தைக் கண்டிக்கும் முகமாக மார்லன் பிராண்டோ இந்த விருதைப் பெற மறுப்பதாக என்னை அறிவிக்கச் சொன்னார்” என்கிறார்.

ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்

தமிழ் சினிமாவின் ஆஸ்கர் முயற்சியைத் தொடங்கிவைத்தவர் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்களே. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களேற்று நடித்த ‘தெய்வ மகன்’ (1969) படமே ஆஸ்கர் விருதுக்காக அனுப்பப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம். அந்தப் படம் இறுதிச் சுற்றுக்கே முன்னேறவில்லை.அடுத்து ஆரம்பிக்கிறது கமல்ஹாசனின் ஆஸ்கர் அத்தியாயம். இந்த ‘ஆஸ்கர்’ நாயகனின் வேட்கையைத் தொடங்கிவைத்தது, அவர் நடித்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட முதல் படமான ‘சாகர்’ (1985) என்ற இந்திப் படம் என்பதுதான் வேடிக்கை. ரமேஷ் சிப்பி இயக்கத்தில் ரிஷி கபூர், டிம்பிள் கபாடியா ஜோடியுடன் கமல்ஹாசன் நடித்த இந்திப் படம் அது. ரமேஷ் சிப்பியோ, ரிஷி கபூரோ இந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப முன்னெடுப்பு நடவடிக்கை எடுத்திருக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏனெனில், ரமேஷ் சிப்பியோ, ரிஷி கபூரோ அதற்குப் பின்னர் அது போன்றதொரு முயற்சியைச் செய்யவில்லை. எனவே, அது கமல்ஹாசனின் முன்னெடுப்பு எனக் கொள்ளலாம்.

அடுத்து, தெலுங்கு கே.விஸ்வநாத் அவர்களின் ‘ஸ்வாதி முத்யம்’. இங்கும் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும்.  தெலுங்கிலிருந்து ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே படம் அது மட்டும்தான். இந்தி, தெலுங்கு முயற்சிகளுக்கு அடுத்து தொடர்கிறது தமிழ் அத்தியாயம். 1987-ல் ‘நாயகன்’, 1992-ல் ‘தேவர் மகன்’, 1995-ல் குருதிப்புனல்’, 1996-ல் ‘இந்தியன்’, 2000-ல் ‘ஹே ராம்’. ஏழு திரைப்படங்களை ஆஸ்கருக்கு அனுப்பிய ஒரே இந்திய நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்

ஆஸ்கர் தொடர்பில் எனக்குப் புரியாத புதிர் என்னவென்றால், இந்திய தேசத்தின் சிறந்த படம் மற்றும் இயக்குநருக்கான விருதுகளை வாங்கிக் குவித்து அசரவைத்த நமது சகோதரர்களான சேட்டன்கள் (அதாவது அடூர், அரவிந்தன் போன்றவர்கள்) ஏன் ஆஸ்கர் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை என்பதுதான்.அது வியாபார சினிமாவுக்கானது என்பதால் புறக்கணித்திருப்பார்களோ? அதுபோக ஆஸ்கர் நுழைவுக்கான தகுதியில் ஏழு நாள்களாவது படம் திரையரங்கில் ஓடியிருக்க வேண்டும் என்ற விதி வேறு இருந்து தொலைக்கிறது. ஒரு காட்சிகூட திரையரங்கில் ஓடாத படங்களைச் சிறந்த படங்களாக அறிவித்து மகிழ்ந்தவர்கள்தானே அவர்கள். சரி, பிரான்ஸின் ‘கான்’ திரைப்படவிழாக்களில் கொடியேற்றியிருப்பார்களோ என அங்கும் தேடினேன். கான் விழாவில் போட்டி அல்லாத திரையிடலில் பங்கேற்றதோடு சரி போலும். தமிழில் வசந்தபாலனின், ‘வெயில்’ அங்கு திரையிடப்பட்டது. சேட்டன்கள் மட்டுமில்லை, இந்தியாவின் ‘லூயி புனுவல்’ மணி கௌல் போன்றவர்களையும்கூட காணவில்லை. வேடிக்கை என்னவென்றால், தங்கப்பனை விருது வென்ற தமிழ் பேசிய படம் ‘தீபன்’ இங்கு பெரிதாகப் பேசப்படவில்லை. தீபன் கொஞ்சம் சுமார்தான் என்றாலும், உலக சினிமா காதலர்கள் அதை முற்றிலுமாக நிராகரித்துவிட்டதை எப்படி விளங்கிக் கொள்வது என்றுதான் புரியவில்லை.

ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்சப் டைட்டில் படங்கள் மட்டும்தான் சிறப்பானதோ, என்னவோ தெரியவில்லை. உன்னத சினிமா காதலர்கள் ‘கான்’ விழாவின் டாக்குமென்டரி பிரிவிலாவது தங்களது திறமையை நிரூபிப்பார்கள் என நாம் நம்புவோம்.  

16 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெற்றிமாறனின் ‘விசாரணை’ ஆஸ்கர் சென்றது. ‘விசாரணை’ படத்தின் தமிழ்த் தன்மை கேள்விக்குரியதுதான். இந்தக் கதைக்களம் உலகின் எந்தப் பிரதேசத்திலும் நிகழ்ந்திடும் வாய்ப்புகொண்டதுதான்.அதன் மையக்கரு சர்வதேசத் திரைப்பட ஜூரிகளை எளிதாகச் சென்றடைந்துவிடும் என்ற வாய்ப்பே அந்தக் கதைத் தேர்வுக்கான காரணமாய் இருக்கக்கூடும். இதுபோன்ற ‘UNIVERSAL THEME’கள் ஒரு மொழி சினிமாவின் தனித்தன்மைக்கு எதிரானவையே. வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’-மும் பேட்டைக்காரனும் கருப்பும், ஐரினும் இன்னும் நெருக்கமாக ‘வெற்றிக்கு’ அருகில் அழைத்துச் சென்றிருப்பார்கள் என்று எண்ணுவதைத் தவிர்க்க முடியவில்லை. நிற்க. ஏற்கெனவே வெனிஸ் விழாவில் விருது வென்ற படம் என்பதால் எதிர்பார்ப்பும் பலமாகவே இருந்தது. நியமனமாவது உறுதியாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இறுதியில் பொய்த்துப்போனது.

தொடர்ந்து சர்வதேசப் பட விழாக்களின் போக்கினை அவதானிப்பவர்களுக்கு ஒன்று தெரியும், ஒவ்வொரு விழாவும் அவற்றிற்கான தனித்துவமான அளவுகோள்களைக் கொண்டிருக்கின்றன. ஒரே திரைப்படம் பல விழாக்களில் விருது பெறுவது மிக மிக அரிதாக மட்டுமே நடக்கும் நிகழ்வன்று. ஆனாலும், ஆஸ்கர் மீதான அத்தனை பார்வைகளையும் மிஞ்சி ‘விசாரணை’க்கு விருது கிடைத்து, வெற்றிமாறன் உள்ளிட்ட வேட்டி/சேலை (அரசியல் சரித்தன்மை!!) கட்டிய தமிழர்கள் (ஒரு தமிழ்ப் படத்திற்காக), உலகெங்கும் ஒளிபரப்பாகும், இன்றும் பிரபலமான/ வண்ணமயமான அந்த மேடையில் பெற்றிருந்தால், தமிழ் நெஞ்சங்கள் (நானும்தான்) கொஞ்சம் விம்மியிருக்கவே செய்யும்.

ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்

இந்த ஆண்டின் ஆஸ்கர் விழா, கடந்த எட்டு ஆண்டுகளில் மிகக் குறைவான டி.ஆர்.பி பெற்ற விழா என்று சொல்லப்படுகிறது. அமெரிக்க நண்பர்கள் சிலர், ஆஸ்கர் விருதெல்லாம் இங்கு பெரிய விடயமாகக் கருதப்படுவது இல்லை என்றும் கூறுகின்றனர். போதாக்குறைக்கு இந்த ஆண்டின் ஆஸ்கர் விழாவுக்கு முன்னதாக நடந்த ‘ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு’ எனப்படும் திரைப்பட நடிகர் சங்கத்தின் விருது விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ‘மெரில் ஸ்ட்ரிப்’ என்ற பிரபல நடிகையின் பேச்சு கவனிப்புக்கு உள்ளானது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ‘ஒன்பது இஸ்லாமிய நாடுகளுக்கு அமெரிக்கா வருவதற்கான தடை’க்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் சாடித் தீர்த்தார். விழாவின் அறிமுக உரையிலேயே ‘ஆஷ்டன் கட்ச்சர்’ எனும் இளம் நடிகர், ‘விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பவர்களை எனது அமெரிக்காவுக்கு வரவேற்கிறேன்’ என்று மார்தட்டித்

ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்

தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து அன்றைய விழா முழுவதும் டிரம்ப் எதிர்ப்பு உரைகளால் நிறைக்கப்பட்டது. மஹெர்ஷலா அலி என்ற நடிகர், ‘நான் ஒரு முஸ்லீம், எனது தாய் கிறித்தவர், இதையெல்லாம் கடந்து எங்களால் அன்பைப் பரிமாறிக்கொள்ள முடிகிறது’ என்று டிரம்பின் இஸ்லாமிய விரோதத்தைச் சுளுக்கெடுத்தார்.

ஆஸ்கர் விருது, அதன் பிரமாண்ட விழா என்பதெல்லாம் ஹாலிவுட் சினிமா உலகம் எனும் மிகப் பெரிய சந்தையின் வியாபாரத்தைத் தனதாக்கிக்கொள்ளும் அமெரிக்க முதலீட்டிய முன்னெடுப்பின் ஒரு பகுதிதான். அமெரிக்காவை, அதன் பொருளாதாரத்தை இருபது நிறுவனங்கள் நடத்துவதாகச் சொல்லப்படுவது உண்டு.இப்போதும் அதன் வியாபாரத்தின் மைய இழை, ‘ஆயுதங்கள்’ என்றே அவதானிக்கப்படுகிறது. அமெரிக்காவின் நலன் கருதி  ‘பொய்களால்’ கட்டமைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போரிலிருந்து இன்றைய சிரியா-ஐ.எஸ்.ஐ.எஸ் சிக்கல் வரை அனைத்திலும் அமெரிக்காவின் ‘பங்களிப்பு’ அறமற்றது. இன்று உலகை இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக்கிவிட்ட அநீதியும் அவர்களையே சேரும். இந்தக் குற்றங்கள் அனைத்தும் ஏதோ ஓர் ஆதாயம் கருதியே நிகழ்த்தப்பட்டவை. அந்த ஆதாயம் ஒருவகையில் இன்னும் அமெரிக்காவை உலக இயக்கத்தின் மையப்புள்ளியாக நிலை நிறுத்தி வைத்திருக்கிறது. அந்த ஆதாயங்களில் மறைமுகமாகவேனும் பலன் பெறும் பெருவாரி வெள்ளை இனத்தின் ‘மனச்சாட்சி’ நீதியின் சார்பில் நின்று பேசியே தன்னை இயல்பாக்கிக்கொள்ள முடிகிறது. இந்த ‘மனச்சாட்சி’ மனிதர்களுக்கு எதிரான வெள்ளைச் சமூகத்தின் ஆத்திரமே இன்று ‘டொனால்டு டிரம்ப்’ ஆக வளர்ந்து நிற்கிறது. டிரம்பின் கலவரமான அரசியல் நிலைப்பாடுகளால் நிலைகுலைந்து போயுள்ளது இந்த ‘மனச்சாட்சியாளர்’ தொகுதி. அதன் வெளிப்பாடே கலைஞர்களின் அறைகூவல்கள். டிரம்ப் இந்தச் சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சுகிற ஆள் இல்லை. இனி டிரம்ப் ஆட்சி, உலகின் அரசியல் சூழலை எப்படியெல்லாம் சிக்கலுக்குள்ளாக்கும் என்பது அவருக்கே தெரியாது என்பதுதான் அபத்தம்.

ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்

2000-ம் ஆண்டிற்குப் பிறகான காலங்களில், அதிலும் குறிப்பாக 2008-ல் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் ஆஸ்கர் வென்ற பிறகு, அமெரிக்க ஆங்கில மொழி ஆஸ்கர் விருதுபெற்ற படங்களும், பிறமொழி ஆஸ்கர் விருதுபெற்ற படங்களின் பட்டியலும், விருது வழங்கும் போக்கில் உருவாகியிருக்கும் ‘பார்வை’ மாற்றத்தை நமக்கு உணர்த்துகின்றன.  திரைப்படங்களின் அரசியல் பார்வையும், அதன் நிலைப்பாடுகளும் விருதுத் தேர்வுக்கான முக்கியமான காரணங்களாக மாறியிருக்கின்றன. பிரதான ஆஸ்கரில் 2009-ன் ‘ஹர்ட் லாக்கர்’, இராக் போரில் ஈடுபடும் போர்வீரர்களின் மனப்போராட்டம் குறித்துப் பேசியது. இதுவரையான ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த படத்திற்கும், சிறந்த இயக்குநருக்குமான விருதை ஒரு பெண் இயக்குநரின்(கேத்லின் பிக்லோவ்) படத்துக்கு (தனிநபர் தயாரிப்பு/ INDEPENDENT FILM) கிடைத்தது இதுவே முதல் முறை. அதைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டின் சிறந்த படமாகத் தேர்வானது ‘12 YEARS A SLAVE’. நடிகர்/ இயக்குநர் ஸ்டீவ் மெக் க்வின் இயக்கத்தில் பிராட் பிட், ஸ்டீவ் மற்றும் பிற நடிகர்கள் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவான பீரியட் படம் அது. அமெரிக்காவில் கறுப்பர் அடிமைத்தளைக் காலத்தில், சுதந்திரம் பெற்றுவிட்ட மனிதனாக (அடிமைகளைச் சுதந்திர மனிதர்களாக அறிவிக்கும் உரிமை அவர்களின் உரிமையாளர்களுக்கு உண்டு) வாழ்ந்த கறுப்பின இசைக் கலைஞன், வஞ்சகமாக ஏமாற்றப்பட்டு மீண்டும் 12 ஆண்டுகள் அடிமையாக வாழ நிர்பந்திக்கப்பட்டு, மீண்டு வருவதான கதைக்களம். அந்தப் படத்தை பிராட் பிட் போன்ற வெள்ளை இன நடிகர்கள் இணைந்து தயாரித்ததும், அதற்கு விருது வழங்கப்பட்டதும் கவனத்திற்கு உரியது.அதுபோலவே, 2015-ம் ஆண்டின் ‘ஸ்பாட் லைட்’ படம் அமெரிக்கக் கத்தோலிக்க தேவாலய குருமார்களின் ‘சிறார்கள் மீதான பாலியல் வன்முறை’ குறித்த தீவிரமான விவாதப் பொருளை மைய இழையாகக்கொண்டது. நீண்டகால ஊடக ஆய்வுகளை மையமாகக்கொண்டு பாஸ்டன் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் டாம் மெக்கார்த்தி இயக்கிய படம் அது. இறுதியாக 2016-ம் ஆண்டிற்கான விருதினை வென்ற ‘மூன் லைட்’ படம், கறுப்பினச் சிறுவன் ஒருவனின் கதை. மிகக் குறைந்த முதலீட்டில், 25 நாள்களில் படப்பிடிப்பு செய்து முடிக்கப்பட்ட படம். முற்றிலுமாகக் கறுப்பினத்தவர் நடிப்பில் மட்டுமே உருவாகி ஆஸ்கர் வென்ற முதல் படம். கறுப்பினச் சிறுவனின் வாழ்வை அவனது பத்து வயதிலிருந்து முப்பது வயது வரையிலான வாழ்வுத் தருணங்களை, அவனது வளர்நிலை சிக்கல்களை, அவனது பாலியல் தேர்வு குறித்த குழப்பங்களை மட்டுமே மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட படம் அது. இப்படியாக பெரிதும் பேசப்பட்ட படங்கள் அனைத்தும் சிறு முதலீட்டில் உருவாக்கப்பட்டு குறைந்த வசூலை மட்டுமே பெற்ற படங்களே. ஆஸ்கரின் பிரமாண்டம் ஏதோ ஒரு கட்டத்தில் அமெரிக்க மனச்சாட்சியாளர்களின் இதயத்தோடு உறவுகொள்ள வேண்டியதாகியிருக்கிறது. திரைப்பட நட்சத்திரங்களின் வெறும் ‘வாய் ஜால’ பேச்சரசியலை விடுத்து, தாங்கள் இயங்கும் களத்திலும் அதற்கான மதிப்பீட்டை வழங்கிடத் தீர்மானித்ததன் வெளிப்பாடே இந்த அரசியல் சினிமாக்களுக்கான அங்கீகாரம்.

ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்

பிறமொழிப் படங்களுக்கான தேர்விலும் இந்த அரசியல் சாயலைத் தெளிவாகக் காண முடிகிறது. ஆசியாவின் மிகப் பெரிய மாஸ்டர்களில் அகிரா குரசோவா ஒரே ஒருமுறை ஆஸ்கர் பெற்றார். சத்ய ஜித் ரே ஒருமுறைகூடப் பெறவில்லை. ஆனால், இரான் இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹாடி ஏழு ஆண்டுகளில் இருமுறை பெற்றிருக்கிறார்.இதை என்னவென்று சொல்வது?

ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்65 முறை ஐரோப்பியப் படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது ஆஸ்கர். குறிப்பாக இத்தாலிய மாஸ்டர்கள் ஃபெலினிக்கும், டி சிகாவுக்கும் மட்டும் முறையே நான்கு முறை. (இது அந்த மாஸ்டர்களுக்கு வழங்கப்பட்ட விருதுபற்றிய விமர்சனம் அல்ல.)

இதில், நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், இப்போது பிறமொழிப் படங்களின் நியமனத்திலும் ஆசிய, சினிமாக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இரானியப் படங்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்று வெகுகாலம் ஆகிவிட்டது என்றாலும், அந்த நாட்டின் திரைப்படக் கள உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள வடிவ மாற்றமே ஆஸ்கர் வெற்றிக்குக் காரணம் என அவதானிக்கப்படுகிறது. இரானில் நடந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட படங்கள், அரசின் தீவிரத் தணிக்கையை மனதில்கொண்டு உருவானபோது, அவை மனித உறவுச் சிக்கல்களைப் பேசவில்லை. மாறாக அவை குழந்தைகளை மையமாகக்கொண்டு அவர்களின் வறுமை, ஏக்கம், இயலாமை, தோல்வி ஆகியவற்றை, பொருளை அடைவதன் வழியான அவஸ்த்தையின் ஊடாகப் பேசின. மஜித் மஜிதின் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ (1999-ம் ஆண்டின் ஆஸ்கர் நியமனம்) குழந்தைகளின் வாழ்வில் ஒரு ஜோடி ஷூக்களின் இழப்பு உருவாக்கும் சிக்கல்களை மையமாகக்கொண்ட காவியமான படைப்பு. அந்தவகைத் திரைப்படங்கள் இத்தாலிய நியோ –ரியலிச படங்களின் சாயலில் உருவாக்கப்பட்டவை என்பதாகக் கருதப்படுகின்றன.

ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்

அதற்கு மாறாக இன்றைய அஸ்கர் ஃபர்ஹாடி படங்கள், ஹாலிவுட் பாணி உருவாக்க அடிப்படையில் மனித உறவுச் சிக்கல்களைப் பேசும் படமாக இருக்கின்றன. 2011-ம் ஆண்டின் ‘தி செபரேஷன்’ படமும் இந்த ஆண்டின் சிறந்த படமான ‘தி சேல்ஸ்மேன்’ ஆகிய இரண்டும் கணவன் மனைவி உறவுச் சிக்கலைப் பேசும் படங்கள். முதல் படம் எதிர்காலம் என்பதைக் கருதி பூமியை விட்டு உறவுகளை விட்டு அகல்வதன் சிக்கலைப் பேசியது. ‘சேல்ஸ்மேன்’  குழந்தை இல்லாத, நடிகர், நடிகை தம்பதியினர் உறவில் உருவாகும் ஓர் அசாதாரமான இடையீட்டினால் (மனைவி கடுமையாக யாரோ ஒரு மர்ம நபரால் தாக்கப்படுகிறார்) ஏற்படும் மனப் போராட்டத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. மனைவி மீதான தாக்குதலால் ஊனப்பட்டுவிட்ட தனது ஆண்மையை நிறுவ, அவளுக்கு ஆறுதல் சொல்வதை விடுத்து, தாக்குதல் நடத்திய நபரைக் கண்டுபிடித்து தண்டனைக்கு உள்ளாக்குவதற்கு முன்னுரிமை கொடுக்கிறான். மனைவி தனக்கேற்பட்ட மன உளைச்சலிலிருந்து வெளிவரத் தவிக்கிறாள். இதற்கிடையே அவர்கள் மேடையேற்ற உருவாக்கி வரும் ஆர்தர் மில்லரின் ‘டெத் ஆஃப் ஏ சேல்ஸ்மேன்’ நாடக ரிகர்சல்களும், அரங்கேற்றமும் இவர்களது வாழ்வுச் சிக்கலின் சிடுக்கான பகுதிகளின் வெளிப்பாடாகிறது. ஒருவிதமான இணைவுக் கதைக்களத்தை நாடகத்தின் பகுதியாக்கி நிறைவுசெய்கிறது படம். இந்த விதமான இரானிய சினிமாக்களின் அடிப்படை உருவ மாற்றங்களே அமெரிக்கர்களைத் தொடர்புறுத்திவிடும் சாத்தியம்கொண்டு, வெற்றி வாய்ப்பை உருவாக்குகிறது என அவதானிக்கப்படுகிறது. 
      
ஆஸ்கர் விருது விழாவும் அரசியல் பேச்சும் நிரந்தர உறவு கொண்டவையாகி விட்டன. இந்த ஆண்டின் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதை மஹெர்ஷலா அலி என்ற இஸ்லாமியர் முதல்முறையாகப் பெற்றார். சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் தவறுதலாக மாற்றி வாசிக்கப்பட்டது. முதலில் ‘லா லா லேண்ட்’-ஐ சிறந்த படம் என அறிவித்துவிட்டு பின்னர் மாற்றி ‘மூன் லைட்’ சிறந்த படம் என அறிவிக்கப்பட்டது. ‘மூன் லைட்’ திரைப்படம், ஒரு கறுப்பினச் சிறுவன் தன் இன, பாலியல் தேர்வு போன்றவற்றைப் பருவங்களினூடாகக் கண்டடைவதைக் கவித்துவமாகச் சொல்லியிருக்கும் படம். அந்தப் படத்துக்கான ஏற்புரையில் டிரம்பின் எல்.ஜி.பி.டி-களுக்கு எதிரான கருத்துகளைச் சாடி, ‘நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்’ என கலைஞர்கள் அறைகூவல் விடுத்தனர். இந்த வருடத்து சிறப்பு அரசியல் பேச்சை நிகழ்த்தியவர், இரானிய இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹாடி சார்பாகப் பேசிய விண்வெளி வீரரும் பொறியாளருமான அன்சாரி என்பவர். டிரம்பின் இஸ்லாமியப் பயணத் தடைக்கு எதிராக விருது விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டார்.

ஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்

ஆஸ்கர் விருதுகளின் அரசியல், விமர்சனத்திற்குரியனவாக இருந்தாலும், அதன் நோக்கம் ஹாலிவுட் சினிமாவை உலக வியாபாரமாக மாற்றுவதற்கான எத்தனம் கொண்டது என்றாலும், சர்வதேசத் திரைப்பட விழாக்களில் மிக வண்ணமயமானதும் கவனத்தை ஈர்ப்பதுவும் பெரும் ஊடக வெளிச்சம் பெறுவதுமான விழா அதுவே. அதன் எதிர்மறை அம்சங்கள் அனைத்தையும் மீறி அது மிகமுக்கியமான விடயமாக மாறும் இடம், கலைஞர்கள் தங்கள் குரலை வெளிப்படுத்த அது அமைத்துத்தரும்(!) மேடை.  இராக் போர், பாலஸ்தீனப் பிரச்னை, சீனாவின் தைவானுக்கெதிரான அடக்குமுறை என அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிரானதாக இருந்தாலும் நியாயத்தைப் பேசிவிட கலைஞர்களுக்கு அந்த மேடை  ஒரு முக்கிய வாய்ப்பை வழங்கிவிடுகிறது.

உலகெங்கிலும் உருவாகிவரும் பெரும்பான்மைவாதம் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் அநேகமாக ஒரேவிதமாக அரசோச்சும் நிலை. அமெரிக்கக் கலைஞர்கள், அவர்களது அமைப்புகளோடு எழுந்து நின்று அதற்கு எதிரான குரலைப் பதிவுசெய்திருக்கிறார்கள். நமது கலையுலகம் இதன் நீர்த்துப்போன சாயலிலாவது தனது ‘எதிர்ப்பின்’ அரசியலைப் பேசிவிடாதா என்ற ஏக்கம், இந்திய/ தமிழ்த் திரைப்படத்திற்கான ஆஸ்கரைவிட தொலைதூரக் கனவாய்த் தெரிகிறது!