Published:Updated:

காலா, நடிகையர் திலகம் இல்லை... டாப் 10-ல் எந்த படம் முதலிடம்..? #SurveyResult

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காலா, நடிகையர் திலகம் இல்லை... டாப் 10-ல் எந்த படம் முதலிடம்..? #SurveyResult
காலா, நடிகையர் திலகம் இல்லை... டாப் 10-ல் எந்த படம் முதலிடம்..? #SurveyResult

உங்களுக்குப் பிடித்த டாப் 10 படங்களைத் தேர்வு செய்யுங்கள் என விகடன் இணையதளத்தில் சர்வே ஒன்றை நடத்தினோம். எந்தப் படம் எந்த இடம் என்ற முடிவுகள் இதோ...

2018 ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 70க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்கள் ரிலீஸாகியுள்ளன. இதில் ரஜினி, சூர்யா, விஷால், விஜய் சேதுபதி என டாப் நடிகர்கள் படமும் ரிலீஸாகியிருக்கிறது. இந்த 70 படங்களிலிருந்து சிறந்த 20 படங்களை தேர்வு செய்து, அதில் உங்களுக்குப் பிடித்த டாப் 10 படங்களைத் தேர்வு செய்யுங்கள் என விகடன் இணையதளத்தில் சர்வே ஒன்றை நடத்தினோம். எந்தப் படம் எந்த இடம் என்ற முடிவுகள் இதோ...

10.மெர்க்குரி:

கமல்ஹாசனின் பேசும் படத்துக்குப் பிறகு தமிழில் வெளிவந்திருந்த சைலன்ட் மூவிதான் `மெர்க்குரி’. பிரபுதேவா, ரம்யா நம்பீசன், இந்துஜா, சனத், தீபக் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தமிழ் சினிமாத்துறையில் நடைபெற்ற 45 நாள் ஸ்டிரைக்குக்குப் பிறகு முதல் படமாக இது ரிலீஸாகி ரசிகர்களை திருப்திப்படுத்தியது. சைலன்ட் மூவி என்பதால் படம் முழுக்க பின்னணி இசையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது பெஸ்ட்டை கொடுத்திருப்பார். இந்தப் படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ், தற்போது ரஜினியின் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். 

9.கலகலப்பு - 2:

சுந்தர்.சி இயக்கத்தில் விமல், `மிர்ச்சி’ சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த `கலகலப்பு’ படத்தின் முதல் பாகம் 2012 ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா நடிக்க, இந்த வருடம் வெளியானது. முதல் பாகம் அளவுக்கு இல்லை என்கிற விமர்சனம் எழுந்தாலும், படம் யாரையும் ஏமாற்றவில்லை என்றும் கூறினார்கள். 

8.தானா சேர்ந்த கூட்டம்:

சூர்யா நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கிய `தானா சேர்ந்த கூட்டம்’, பொங்கல் ரிலீஸாக இந்த வருடம் வெளியானது, இந்தியில் வெளியான `ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், சுரேஷ் மேனன், ஆர்.ஜே.பாலாஜி எனப் பலர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்துக்காக அனிருத் இசையமைத்திருந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

7.சவரக்கத்தி:

மிஷ்கினின் எழுத்தில், அவரது தம்பி ஆதித்யாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் `சவரக்கத்தி’. ராம், பூர்ணா நடித்த இந்தப் படத்தில் வில்லனாக மிஷ்கினும் நடித்திருப்பார். அரோல் கொரேலி இசையமைத்திருந்த இந்தப் படம், கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி, காமெடியால் ரசிகர்களை திருப்திப்படுத்தியது.

6.டிக் டிக் டிக்:

இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்கிற அடையாளத்தோடு சமீபத்தில் வெளியான படம் `டிக் டிக் டிக்’. `ஜெயம்’ ரவி, அவரது மகன் ஆரவ் ரவி, நிவேதா பெத்துராஜ், அர்ஜூணன், ரமேஷ் திலக் எனப் பலர் நடிக்க, `நாய்கள் ஜாக்கிரதை’, `மிருதன்’ படங்களை இயக்கிய சக்தி செளந்தர் ராஜன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்குப் புது அனுபவத்தை இந்தப் படம் கொடுத்திருந்ததால், பலரின் லைக்ஸைப் பெற்றிருக்கிறது.

5.இரவுக்கு ஆயிரம் கண்கள்:

அருள்நிதி, அஜ்மல், மஹிமா, சாயாசிங், சுஜா எனப் பலர் நடித்து அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கிய திரைப்படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்’. ஒரு நாள் இரவில் நடக்கும் நிகழ்வை மையப்படுத்தி, சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இதை எடுத்திருந்தார் மு.மாறன். கடந்த ஆறு மாதங்களில் வெளியான படங்களில் இந்தப் படத்துக்கு ஐந்தாவது இடத்தை வாசகர்கள் கொடுத்திருக்கிறார்கள்.  

4.நாச்சியார்:

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த படம் `நாச்சியார்’. ஜோதிகாவும், ஜி.வி.பிரகாஷும், இதுவரை நடித்த தனது படங்களைவிட இந்தப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றார்கள். இந்தப் படத்தை வாசகர்கள் நான்காவது இடத்தில் வைத்திருக்கிறார்கள்.

3.நடிகையர் திலகம்:

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, தெலுங்கில் `மகாநடி’ என்ற பெயரிலும் அதன் தமிழ் டப்பிங் `நடிகையர் திலகம்’ என்கிற பெயரிலும் வெளியானது. `சாவித்திரியின் வாழ்க்கையை முழுமையாகச் சொல்லவில்லை; ஜெமினி கணேசனை நெகட்டிவ்வாகக் காட்டியிருக்கிறார்கள்’ எனச் சில விமர்சனங்கள் இந்தப் படத்தின் மீது இருந்தாலும், `நடிகையர் திலகம்’ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆறு மாதங்களில் வெளிவந்த படங்களில் இந்தப் படத்துக்கு மூன்றாவது இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

2.காலா:

`கபாலி’ படத்துக்குப் பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இரண்டாவது முறையாக இணைந்த படம் `காலா’. தனுஷ் தயாரிக்க ரஜினியுடன் ஈஸ்வரி ராவ், நானா படேகர், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி எனப் பலர் நடித்திருந்தார்கள். ஜூன் 7 ம் தேதி ரிலீஸான `காலா’, நில அரசியலைப் பற்றி பேசியது. ரஜினியின் ஸ்டைல் மிஸ்ஸாகாமலும் தனது படங்களின் சாயலிலும் `காலா’வை மக்கள் முன் நிறுத்தினார் ரஞ்சித். இந்தப் படத்தை ரசிகர்கள் இரண்டாவது இடத்தில் வைத்திருக்கிறார்கள்.

1.இரும்புத்திரை:

அறிமுக இயக்குநர் P.S.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன், ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்த படம் `இரும்புத்திரை’. நமது டேட்டா எப்படியெல்லாம் திருடப்படுகிறது; தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனவும் அதை உணர்ந்துகொண்டு மக்கள் செயல்படவேண்டும் என்ற விழிப்புஉணர்வையும் ஏற்படுத்தியது இந்த `இரும்புத்திரை’. சைபர் வாரைப் பற்றி மக்களுக்குத் தெளிவாகப் புரிய வைத்த இந்தப் படத்துக்கு ரசிகர்கள் முதல் இடத்தைக் கொடுத்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு