Published:Updated:

நாலு பேர், கோவா பிளான், ஒரு ஷார்ட் ஃபிலிம்... இது ஹேங்ஓவர் காமெடி! #EeNagaranikiEmaindi

நாலு பேர், கோவா பிளான், ஒரு ஷார்ட் ஃபிலிம்... இது ஹேங்ஓவர் காமெடி! #EeNagaranikiEmaindi
நாலு பேர், கோவா பிளான், ஒரு ஷார்ட் ஃபிலிம்... இது ஹேங்ஓவர் காமெடி! #EeNagaranikiEmaindi

இயக்குநர் தருண் பாஸ்கர் தன் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் திரைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து, ஒவ்வொரு காட்சியிலும் காமெடி சேர்த்து ஒரு முழுப் பொழுதுபோக்குப் படமாகக் கொடுத்திருக்கிறார்.

2016-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வந்த ஃபீல்குட் படங்களில் முதல் இடம் எதற்கு என்றால் `பெல்லி சூப்புலு' (Pelli Choopulu) தெரியாதா என்பார்கள். இரண்டு தேசிய விருதுகளை வாங்கியிருக்கிறது. ஆனால், அந்தப் படத்துக்கு அதையும் தாண்டி பல சிறப்புகள் உண்டு. அறிமுக இயக்குநர் தருண் பாஸ்கர் இயக்கிய அந்தப் படத்தின் மூலம்தான் அதுவரை துணை நடிகராக இருந்த விஜய் தேவரக்கொண்டா நாயகனானர். தற்போது தெலுங்கு சினிமாவில் ஒரு ரவுண்டு வந்துகொண்டிருக்கும் விவேக் சாகருக்கு அதுவே முதல் படம். இப்படியொரு படத்தைக் கொடுத்த இயக்குநரின் அடுத்த படம்தான் #EeNagaranikiEmaindi (இந்த நகரத்துக்கு என்னாச்சு?).

விவேக் (விஷ்வக் சென்), கார்த்திக் (சாய் சுஷாந்த் ரெட்டி), கௌஷிக் (அபினவ் கோமதம்), உப்பி (வெங்கடேஷ் காகுமனு) நால்வரும் நண்பர்கள். சினிமாவில் கால்பதிக்கும் எண்ணத்துடன் இருக்கும் அவர்கள், ஒரு கட்டத்தில், தங்கள் கனவுகளை விடுத்து சாதாரணமான வாழ்க்கைக்குத் தங்களை சமரசம் செய்துகொள்கிறார்கள். இந்நிலையில் கார்த்திக்குக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்க, பேச்சுலர் பார்ட்டியில் மீண்டும் ஒன்று சேரும் நான்கு நண்பர்களை விதி கோவாவுக்கு அழைத்துச் செல்கிறது. நிச்சயதார்த்த மோதிரம் தொலைந்துவிட, கார்த்திக்குக்குத் தற்போது ஐந்து லட்சம் பணம் தேவைப்படுகிறது. வேறு வழியின்றி கோவாவில் நடக்கும் ஷார்ட் ஃபிலிம் போட்டியில் பங்குகொள்ள முடிவு செய்கிறார்கள். கௌஷிக் தன் காதல் தோல்வியிலிருந்து மீண்டானா, படம் எடுத்தார்களா, தங்களின் பழைய கனவுகளை மீண்டும் உணர்ந்தார்களா? இதற்கான விடைகளைக் கலகலப்பாகச் சொல்கிறது Ee Nagaraniki Emaindi.

இயக்குநர் தருண் பாஸ்கர் தன் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் திரைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து, ஒவ்வொரு காட்சியிலும் காமெடி சேர்த்து ஒரு முழு பொழுதுபோக்குப் படமாகக் கொடுத்திருக்கிறார். நண்பர்களின் வாழ்வில் திருப்புமுனையாக இருக்கும் அந்த விபத்தை முதல் காட்சியாக வைத்தது படத்துக்கு சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறது. அதிலும் அதைப் படமாக்கிய விதம் அற்புதம். ஃபிளாஷ்பேக் காட்சிகளில் வரும் கல்லூரி கலாட்டாக்கள், விவேக்குக்கு ஏற்படும் அந்தக் காதல், ஷார்ட் ஃபிலிம் எடுக்க வேண்டும் என்ற ஆசை என அனைத்துமே சிறிதும் சினிமாத்தனமின்றி, அதே சமயம் நகைச்சுவையுடன் நகர்வது படத்தின் பலம்.

ஷார்ட் ஃபிலிம் மேக்கர்கள் சந்திக்கும் பிரச்னைகள், கல்லூரிப் படிப்பு முடியும் தருவாயில் தோன்றும் எதிர்காலம் குறித்த கவலை, சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் வந்த பின்பு பிடித்த வேலையைச் செய்ய முடியாமல், கிடைத்த வேலைக்குச் செல்வது, வருமானம் பெரிதாக வராவிட்டாலும், பிடித்த வேலையைச் செய்து கஷ்டப்படுவது என்று இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் அத்தியாயங்களை அடுக்கிய விதம் அருமை. படத்தை மெலோடிராமாவாக மாற்ற இத்தனை விஷயங்கள் இருந்தும், அந்த ஏரியாவுக்கே செல்லாமல் அனைவரும் ரசிக்கும்படி நகைச்சுவையாகவே படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். அதிலும் குடித்துவிட்டு மட்டையான பிறகு, தலையில் அடிப்பட்டு மயங்கிப்போன கார்த்திக்கை கீழே கிடத்தி நண்பர்கள் செய்யும் கலாட்டா, நிச்சயம் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும். அதை டாப் ஆங்கிளில் மட்டுமே காட்டிய விதம், அந்தக் காட்சிக்கு மேலும் ரசனை சேர்க்கிறது.

இரண்டாம் பாதியில் கோவாவில் நடக்கும் சம்பவங்களில் ஆங்காங்கே தொய்வும், செயற்கைத் தனமும் மேலிடுகின்றன. நண்பர்களின் பாதையை வெவ்வேறாக்கிய குறும்படப் போட்டியே மீண்டும் அவர்களின் பழைய லட்சியங்கள் நோக்கி நகர்த்துகிறது என்பது ஒன்லைனாக சுவாரஸ்யம்தான். ஆனால், அதுவரை இயல்பாக நகர்ந்த கதையில் அந்தப் போட்டியும், அதற்கு உதவ முன்வரும் மற்றொரு நாயகி கதாபாத்திரமும் நம்பற மாதிரி இல்ல பாஸு! ஆனால், அந்த அத்தியாயங்கள் முழுக்க கவனம் ஈர்ப்பது கௌஷிக்காக வரும் அபினவ் கோமதம். வெளியே மற்ற நண்பர்களுடன், விவேக் பற்றி காரசாரமாகப் பேசிவிட்டு, உள்ளே சென்று விவேக்கிடமே சிரித்தபடி நடிப்பது அப்ளாஸ் வாங்குகிறது. எடிட்டிங் தெரிந்த நண்பனாக வரும் உப்பி (வெங்கடேஷ் காகுமனு) கதாபாத்திரத்துக்கு எப்போதும் மில்க்ஷேக் குடிக்கும் வேலை. நண்பர்களுக்குள் நடக்கும் கலவரத்துக்குள் அவ்வப்போது மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் அப்பாவியாக முகத்தை வைத்து கிச்சுகிச்சு மூட்டுகிறார்.

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு நண்பர்கள் குறும்படம் எடுக்கும்போது எளிமை முகமும், கோவா காட்சிகளில் பீச்சின் அழகைக் காட்டும்போது வசீகர முகமும் காட்டுகிறது. இசையமைப்பாளராக பணியாற்றத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே பல ஹிட் பாடல்களைக் கொடுத்துவிட்ட விவேக் சாகர் இதிலும் கவனம் ஈர்க்கிறார். 

"உங்களுக்குப் பிடித்த வேலையைத்தான் செய்கிறீர்களா?" என்ற கேள்வியை எழுப்பி வாழ்க்கைப் பாடம் கற்றுக்கொடுக்கும் படம் என்று இதை மேலோட்டமாக அடக்கிவிடலாம் என்றாலும், அதை அழுகை இல்லாமல், ஒரு ஹேங்ஓவர் காமெடியாக எடுத்ததற்காக இந்தப் படத்தை நிச்சயம் கொண்டாடலாம்.

அடுத்த கட்டுரைக்கு