Published:Updated:

''ரஜினின்னு கூப்பிட்டா நானும் ரஜினியும் போய் நிப்போம்!'' - 'ரஜினி' நிவேதா

கு.ஆனந்தராஜ்

``பொருளாதார ரீதியா குறைவில்லை. ஆனா, சரியான சினிமா வாய்ப்பு வரலைனு மனசுதான் கஷ்டப்படுது. எனக்கு வயசு எத்தனை வேணா இருக்கலாம். ஆனா, மனதளவில் இளமையாதான் இருக்கேன். எந்த கேரக்டரா இருந்தாலும் தூள் கிளப்ப ரெடியா இருக்கேன்."

''ரஜினின்னு கூப்பிட்டா நானும் ரஜினியும் போய் நிப்போம்!'' - 'ரஜினி' நிவேதா
''ரஜினின்னு கூப்பிட்டா நானும் ரஜினியும் போய் நிப்போம்!'' - 'ரஜினி' நிவேதா


 

``என்ன கேள்வி வேணாலும் கேளுங்க. சந்தோஷமா பதில் சொல்றேன். ஆனால், என் முதல் படம், என் வயசு பற்றி கேட்காதீங்க. மீறிக் கேட்டால் செல்லமாக் கோபப்படுவேன்" என கண்டிஷன்களுடன் பேசத் தொடங்கினார், நடிகை ரஜினி நிவேதா. சினிமா மற்றும் சீரியல்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து புகழ்பெற்றவர்.

``அப்பா சினிமா வினியோகிஸ்தர். அதனால், அவரோடு அம்மாவும் ஷூட்டிங் போவாங்க. அப்படி அஞ்சு மாசக் கைக்குழந்தையான என்னைத் தூக்கிக்கிட்டு ஒரு தெலுங்கு ஷூட்டிங்குக்குப் போயிருக்காங்க. அங்கே நடிகை தேவிகாவின் குழந்தையா என்னை நடிக்கவெச்சிருக்காங்க. அந்தப் படம் எதுனு எனக்கும் தெரியலை. பிற்காலத்தில் அதுபற்றி அம்மாகிட்டயும் கேட்டுக்கலை. அப்படியே தெரிஞ்சாலும் சொல்லமாட்டேன். அந்தப் படம் ரிலீஸான வருஷத்தை வெச்சு, என் வயசைக் கண்டுபிடிச்சுடுவீங்களே" எனச் சிரிக்கிறார்.

``விவரம் தெரியாத குழந்தைப் பருவத்தில் பல படங்களில் நடிச்சிருக்கேன். சின்ன வயசிலிருந்தே டான்ஸ்ல அதிக ஆர்வம். பெரிய டான்ஸ் மாஸ்டரான பசுமரத்தி கிருஷ்ணமூர்த்தியிடம் அசிஸ்டென்ட்டா சேர்ந்து, நிறைய படங்களில் வொர்க் பண்ணினேன். வாணிஶ்ரீ, ஜெயபிரதா, ஜெயசுதா, ஶ்ரீதேவி, மஞ்சு பார்கவி, ஶ்ரீவித்யா, ராஜசுலோச்சனா, ராஜஶ்ரீ என அப்போது தெலுங்கின் பெரிய ஹீரோயின்களுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்திருக்கேன். பல ஹீரோயின்களின் வீட்டுக்கே போய் டான்ஸ் சொல்லிக்கொடுத்த அனுபவங்களை மறக்கமுடியாது. அவங்க எல்லோருடனும் நட்பு இருந்துச்சு. இந்நிலையில, மீண்டும் ஆக்டிங் வாய்ப்புகள் வந்துச்சு.

`நெஞ்சிலே பூத்த மலர்' படத்தில் அறிமுகமாகி, `ரோஜா மலரே', `செவ்வந்தி', உறங்காத கண்கள்' உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினா நடிச்சேன். என் படங்களில் சில பாடல்களுக்கு நானே கொரியோகிராபி பண்ணிப்பேன். ஒருகட்டத்துக்கு மேலே கேரக்டர் ரோல்கள் வர ஆரம்பிச்சுது. அப்போ, ஜெயலட்சுமி என்கிற என் இயற்பெயரில் வேறு சில நடிகைகள் இருந்தாங்க. அதனால், ஒரு தெலுங்குப் படத்தில் என் கேரக்டர் பெயரான ரஜினியுடன், நிவேதா சேர்த்துக்கிட்டேன். `நவரத்தினம்', `வெள்ளை ரோஜா', `இமைகள்', `நான் சிவப்பு மனிதன்', `தங்க மகன்', `போக்கிரி ராஜா' என நூற்றுக்கணக்கான படங்கள், எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் நடிச்சிருக்கேன்.

எஸ்.பி.முத்துராமன் சார், `ரஜினி'னு கூப்பிட்டால், நானும் ரஜினிகாந்த் சாரும் வந்து நிற்போம். அதெல்லாம் பெரிய காமெடி ஆகிடும். அதனால், `பெண் ரஜினி'னு என்னைக் கூப்பிட ஆரம்பிச்சாங்க. நான் எல்லோரிடமும் கலகலப்பாப் பேசுவேன். பலரை மாதிரி பேசுவேன். அப்போவெல்லாம் மரத்தடியில்தான் ரெஸ்ட் எடுப்போம். அந்த நேரம் கலகலப்பாப் பேசி எல்லோரையும் ரசிக்க வெப்பேன்" என்கிற ரஜினி நிவேதா, நடன ஆசிரியையாகப் பல பள்ளிகளில் பணியாற்றியிருக்கிறார். தற்போது வீட்டிலேயே நடனம் பயிற்றுவிக்கிறார்.

``சினிமா வாய்ப்பு குறைஞ்சதும் சீரியல்களில் நடிக்க ஆரம்பிச்சேன். `ஆனந்தம்', `கோலங்கள்', `மலர்கள்' என ஐம்பதுக்கும் அதிகமான சீரியல்களில் நடிச்சுட்டேன். எனக்கு சினிமாவும் டான்ஸும்தான் உயிர். இந்த ஃபீல்டில் நல்ல அடையாளம் பெறணும்னு நினைச்சேன். ஆனால், 1990-களுக்குப் பிறகு பெரிசா மக்கள் மனசுல இடம்பிடிக்க முடியலையோனு தோணுது. பொருளாதார ரீதியா குறைவில்லை. ஆனா, சரியான சினிமா வாய்ப்பு வரலைனு மனசுதான் கஷ்டப்படுது. எனக்கு வயசு எத்தனை வேணா இருக்கலாம். ஆனா, மனதளவில் இளமையாதான் இருக்கேன். எந்த கேரக்டரா இருந்தாலும் தூள் கிளப்ப ரெடியா இருக்கேன்" எனச் சிரிக்கிறார் ரஜினி நிவேதா.