Published:Updated:

கொதிக்கும் சாம்பாரில் முட்டையைப் போடும் கோழைத்தனம் `கம்மட்டிப்பாடம்' படத்தில் இல்லை!"

கொதிக்கும் சாம்பாரில் முட்டையைப் போடும் கோழைத்தனம் `கம்மட்டிப்பாடம்' படத்தில் இல்லை!"
கொதிக்கும் சாம்பாரில் முட்டையைப் போடும் கோழைத்தனம் `கம்மட்டிப்பாடம்' படத்தில் இல்லை!"

`மலையாள கிளாசிக்' தொடரின் 17-வது பகுதி. 'கம்மட்டிப்பாடம்' குறித்த கட்டுரை.

சில படைப்புகள் எல்லோருக்கும் உரியதாய் இருக்க முடியாது. ஒன்றைப் படைப்பது பற்றிதான் சொல்கிறேன் என்றாலும், அதற்குள் அதன் வீரியம் அறிந்து நுழைவதற்கே சில தகுதிகள் தேவைப்படுகின்றன. உலகம் எல்லாக் கோணங்களிலும் அனுபவிப்பதற்கான சுக சௌகர்யமான மலர்மஞ்சம்தான் என்று மல்லாந்து விட்டவர்களுக்குப் பல உண்மைகள் இல்லை. அவர்கள் விலக்கப்பட்டவர்கள். அவர்களைத் தாண்டி, அவர்களுடைய சொகுசுகளைத் தாண்டி அடித்து அமர்த்தப்பட்ட எத்தனையோ ஜீவன்களின் ரத்தத்திலும் வியர்வையிலும் இந்தப் பூமி எழுந்திருக்கிறது. கொண்டாடலாம் வா என்கிற அகங்காரமே அறியாமையின் விளைவு. எல்லோருக்கும் பொதுவான சமத்துவத்தை ஓரளவில்கூட பொருட்படுத்தாமல், காலில் போட்டு மிதித்த துரோகங்களில் வெந்து தணிந்த மனித உயிர்களுக்குக் கணக்கில்லை. இந்தப் படம் கேரளாவினுடையது மட்டுமே அல்ல; நூறு நகரங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, `கம்மட்டிப்பாடம்' ஒரு சௌகர்யமான நகரத்தின் கதையைத்தான் சொல்கிறது.

இத்தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

நட்பை, காதலை, வன்முறையைச் சொல்லவேண்டும் என்று மாரிலடித்துக்கொண்டு கற்பித்த சம்பவங்களை அடுக்குகிற போலிகள் சொல்லிவிட முடியாத கதை இது. நகர்த்திவிட முடியாத சினிமா இது. வெறுமனே பில்டப் செய்வதாகக் கருத வேண்டாம். ரத்தமும் சதையுமான அசல் மனிதர்களை அறியாத கலை அந்நியப்பட்டு நிற்கிற தூரம் பற்றி கான்ஷியசாகத் தெரிந்தே சொல்கிறேன். இந்தப் படத்தின் பாலனும் கங்காவும் ஒரு திரைக்கதைக்காரனின் மூளையில் உதித்து வந்து வணிக டிஸ்கோ ஆடுகிறவர்கள் அல்ல; ஜேம்ஸ் பாண்டுகள் அல்ல; நமது வசிப்பிடங்களின் மார்பிள் சௌகர்யங்களுக்குக் கீழே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்கள்.

ராஜீவ் ரவி ஒரு சத்தமுள்ள படத்தை ஆவேசமாகச் சொல்லி அதன் முடிவில் அமைதியாக தனது அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறான். ஏனென்றால் இந்தப் படம் வஞ்சிக்கப்பட்டவர்களைப் பற்றிய உண்மையான ஒரு நினைவு.

ஏதோ நஷ்டங்களுக்குப் பின்னர் கிருஷ்ணனின் குடும்பம் தமது ஊரான கம்மட்டிப்பாடத்துக்கு வந்து சேரும்போது, அவர்களை ஏந்திக்கொண்டு அவர்களுடன் இணைந்து விவசாயம் செய்கிறவர்களாக இருக்கிறார்கள், அந்த தலித் குடும்பத்தினர். கிருஷ்ணனனுக்கு விளையாட்டுத் தோழமையாக, பள்ளித் தோழமையாக அந்த தலித் குடும்பத்தைச் சேர்ந்த கங்கா அமைகிறான். அவனது முறைப்பெண்ணான அனிதாவும் வளர வளர கிருஷ்ணனுக்கு நெருக்கமாகிறாள். பள்ளிக்காலங்கள் எல்லாம் ஒரு வழியாய் சென்றுகொண்டிருந்தாலும், அது திசை மாறுகிற லட்சணங்களையே கொண்டிருந்தது. உருப்படுவதற்குக் கிருஷ்ணன் வெளியேறிப் போயிருக்க வேண்டியவன். அனிதாவால் போகவில்லை. மெள்ள மெள்ள, தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்றுக்கொண்டு யாரையும் வன்முறையால் வென்றுவிடக்கூடிய பாலேட்டனிடம் ஈர்ப்பு கொண்டு, அவனது குழுவினரில் ஒருவனாக மாறுகிறான்.

பாலன் கங்காவின் அண்ணன்தான்.

சினிமா டிக்கெட்டை பிளாக்கில் விற்று, கள்ளச்சாராயம் காய்ச்சி, அடிதடி வேலைகள் செய்து ஒரு தினுசான பிழைப்பு. அவனை மாதிரி ஒரு முரட்டு எடுபிடி எவ்வளவோ பேருக்குத் தேவை. ஆசான் என்று அழைக்கப்படுகிற சுரேந்திரன் எல்லாம் அவனைப் போன்றவர்களால்தாம்  வளர்கிறார்கள். என்ன காரியத்துக்காக என்கிற லட்சியமில்லாமல், பிச்சைக் காசுக்காக ஏவுகிற காரியங்களில் எல்லாம் ஈடுபடுகிற பாலன் மற்றும் கிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர், தனது சொந்த இனத்தின் மக்களுடைய இடங்களையே அடாவடியாய்ப் பிடுங்கி முதலாளிக்கு வளம் சேர்த்துக் கொடுக்கின்றனர். ஒரு கட்டத்தில் இந்தத் தலைமுறையின் அறியாமையைச் சகித்துக்கொள்ள முடியாமல் பாலனின், கங்காவின் தாத்தா இறக்கிறார். கிருஷ்ணன் அதை கவனித்து பிழைப்பதற்கான மாற்று வழிகள் சொல்கிறான். பாலனுக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. ஆனால், சுரேந்திரனை அண்டிப் பிழைக்கிற சுமேஷ் என்கிறவனின் விரோதம் மாறாமலே இருந்தது. அவர்களால் பாலன் கொல்லப்படுகிறான்.

கங்காவுக்குத் தனது முறைப்பெண் அனிதா மீது காதல் இருந்தது. அவள் தன்னைக் காதலிக்கவில்லை என்பதையும், அவள் கிருஷ்ணனை விரும்புகிறாள் என்பதையும் நம்ப விருப்பமில்லாமல், கங்கா மூர்க்கமாயிருக்கிறான். தனக்காக ஒரு போலீஸ்காரனை வெட்டி ஜெயிலுக்குச் சென்று திரும்பிய கிருஷ்ணனை கங்கா வெறித்தனமாக நட்பு பாராட்டினாலும், இவ்விஷயத்தில் பிணக்கு வைக்கிறான். அவளிடம் அதிகாரம் செலுத்துகிறான். பாலன் இறந்ததே கிருஷ்ணனால்தான் என்றுகூட ஒரு பழி இந்த முக்கோணக் காதலால் வருகிறது. பாலனைக் கொன்ற சுமேஷை வீழ்த்திய பிறகு, நண்பர்கள் யாவரும் பிரிந்து போகிறார்கள். காலம் செல்கிறது. மும்பையில் ஒரு உத்தியோகத்தில் இருக்கிற கிருஷ்ணனுக்கு ஒருநாள் ஒரு போன் வருகிறது. கங்காதான் பேசுகிறான். யாரோ தன்னைப் பின்தொடர்கிறார்கள் என்பது அதில் முக்கியமான வரி. அனிதாவை நீ வந்து கூட்டிச் செல் என்பது உபரியாயினும் நெகிழ்வு. அதற்குப் பின்னால் தொடர்புகொள்ள முடியாமல் போகவேதான், அவன் கங்காவைத் தேடிக்கொண்டு இங்கே வருகிறான். பழைய நண்பர்களின் சந்திப்புகளில் கங்காவின் தோற்றுப்போன அவலமான வாழ்க்கை தெரிய வருகிறது. அவன் போன வழி பிடிபடுகிறது.

கங்காவை முடித்து வைத்தவனை அடைந்து, கிருஷ்ணன் அவனைத் தீர்த்துக் கட்டுவதுதான் படத்தின் இறுதிப் பகுதி.

அடிப்படைக் கதையாய் இவ்வளவு சிறிய கருவை எடுத்துக்கொண்டவர்கள் சொல்ல வந்தது, ஒரு கூட்டம் மக்களின் வாழ்க்கையைப் பற்றி. அவர்கள் சுரண்டப்படுவது பற்றி. அவர்கள் ஒழித்துக்கட்டப்படுவது பற்றி. கங்கா என்கிற காம்ப்ளெக்ஸ் உள்ள மனிதனின் தோல்விக்குப் பின்னால் உள்ள அவலங்களுக்குக் கணக்கில்லை. மண்ணின் மைந்தர்கள் விரட்டப்படுவதெல்லாம் இருக்கட்டும், வளர்ந்துவிட்ட ஒரு நகரம் தன்னை வளர்த்து விட்டவர்களைக் கழித்துக்கட்டுவது இருக்கிறதே... அதைத்தான் முக்கியமாய்ச் சொன்னார்கள். கங்கா இந்த நகரத்துக்குத் தேவையில்லை! அதை அடிக்கோடிட்டு சொல்கிற இந்தப் படம் கங்காவைப் பற்றியது. அவனைப் போன்ற எத்தனையோ மனிதர்களைப் பற்றியது.

இரண்டு அடுக்குகளில் ஃபிளாஷ்பேக்குகளாக விரிகிற இந்தப் படத்தின் திரைக்கதை பிரமாண்டமானது. காட்சிகள் எல்லாம் அசலானவை. சாம்பாரைக் கொதிக்க வைத்து அதில் முட்டையைப் போட்டு விடுகிற மாதிரியான கோழைத்தனம் நிரம்பிய ஒரு பிட்டுகூட படத்தில் கிடையாது. மார்க்கெட்டில் வைத்து ஒரு கராத்தேக்காரனை பாலன் பொளந்துகட்டி முடித்தபிறகு கைதட்டுங்கடா என்று கூச்சலிடுவான். என்ன ஒரு சீன்? பள்ளிப் பருவத்தின் கிருஷ்ணா ஒரு செயினை வாங்கிப் பொதிந்து கொடுக்க அனிதா இது என்ன? என்பாள். உடனடியாக அதைத் தொடர்ந்து வரும் காட்சியைப் பார்க்க வேண்டும். படத்தில் இருக்கிற கத்தி, ரத்தம் வன்முறை எல்லாவற்றுக்குமே ஒரு ரிதம் இருக்கிறது. கதையில் நகரம் பங்கு வகிக்கிறது. ஓடும் ரயில் பாம்புகள், கான்கிரிட் கோபுரங்கள் திரைக்கதையில் இருக்கின்றன. எழுதியவர் பி.பாலச்சந்திரன். அவருடைய எழுத்து முழுக்கவும் திறமைகளை முன்னிறுத்துவது அல்ல. மனதில் தேங்கி கனத்து கோபமாக வெளிப்படுகிற ஒரு கலை சன்னதம்.

மது நீலகண்டன் ஒளிப்பதிவாளர்.

என்ன சொல்வது?

திருவிழா நடக்கிற ஒரு கேரள கிராமத்தின் இரவை அப்படியே பார்த்தேன். அமைதியைக்கூட அந்த ஒளிப்பதிவால் காதில் கேட்டேன் என்று சொல்லவேண்டும். பூச்சிகள்போல ரீங்காரமிடுகிற நகரத்தின் படிமத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதற்கு நியாயம் சேர்த்துக்கொண்டே இருக்கிற எடிட்டிங். நெஞ்சை வந்து இடிக்கிற பாடல்கள், இசை. ஒவ்வொன்றாக வளர்த்துவானேன்? எல்லாத் துள்ளியிலும் துள்ளியின் துளிகளிலும் ராஜீவ் ரவியே நிறைந்திருந்தார். மலையாளப் படங்களின் ஐடியாக்கள் வேறு ரகம். அவர் அதைத் தவிர்த்து, தரை மட்டமாக்கி, வேறு ஒரு கோணத்தில் முஷ்டி உயர்த்தியிருக்கிறார். அது முக்கியமானது என்பது இப்போதுதான் நமக்கே தெளிந்திருக்கிறது. கருத்து முழக்கம் பிரசாரம் என்கிற கிளிஷேக்கள் உருவாவதற்கு ஒரு கூறும் இல்லாமல், தனது திரைமொழியை வழிநடத்துகிற திராணி அவர் படங்களுக்கு எப்போதுமே உண்டு.

கம்மட்டிப்பாடம் படமே ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு கொண்டது எனும்போது, படத்தில் நடிப்புக்குத்தான் முதலிடம். பாலனாக வந்தவரின் முதல் படம் என்றார்கள். அது அப்படி ஓர் ஆவேசம் கொண்டிருந்தது. துல்கர் வழியாய் சொல்லப்படுகிற கதையில் அவரது பங்களிப்புகள் நிறைவு. அனிதாவின் எளிமை மிகவும் வியப்பு. மிகவும் சுருங்கிய நேரத்தில் ரத்தினச் சுருக்கமாக முடியும் வசனங்களில் அவருடைய பேசுகிற கண்கள் இருக்கின்றன. அலங்காரத்துக்கு வந்து போகிறவர்களாய் இல்லாத, அத்தனை கதாபாத்திரங்களில் நடித்தவர்களையும் உண்மையில் தனித்தனியாய் பாராட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இளமை, நடுத்தர வயது, முதுமை என்று பல்வேறு கோணங்கள். அதை நிகழ்த்திக்காட்ட பொம்மைகளால் ஆகாது. பாலனின் மனைவியாக நடித்தவர் ஒரு நடை நடந்திருப்பார் ஓர் இடத்தில், அது போதும்.

கங்கா கதாபாத்திரம் பல நுட்பங்கள் கொண்டது.

முதலில் அவனுக்கு தான் அசிங்கமாக இருக்கிறோம் என்பது மறக்காமல் இருக்கிறது. அவனால் அடுத்த காலடியை எடுத்துவைக்க உடனடியாய் முடிவதில்லை. எவ்வளவு தூரம் அவன் தனது நண்பனைக் கொண்டாடுகிறான் என்பதற்கு எல்லையே கிடையாது. அதேநேரம் தொடர்ந்து வருகிற பல்வலியைப்போல ஒரு காதல். அதுவும் நண்பனை விரும்புகிற காதலி. நண்பர்கள் பல வழிகளிலும் பிரிந்து, ஒற்றை யானையைப்போல சுற்றி வருகிற அந்தத் தனிமை உண்டாக்குகிற பயம், வேதனை, மூர்க்கம், குடி. விநாயகன் போல ஒருத்தன் மட்டுமே இதையெல்லாம் செய்யமுடியும். வேறு ஒரு நடிகனை கற்பனை செய்யும்போதேகூட அறுவெறுப்பாய் இருக்கிறது. சும்மாதான் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு, தனது மரண பயத்தையும் சொல்லிவிட்டு, அனிதாவை எடுத்துக்கொள் என்பதில் இருக்கிற கனிவை நான் வாய்விட்டே அழுதேன் என்று சொல்லவேண்டும். ஒன்றுமில்லை, ஒரு படம் முழுக்க அவர் நிகழ்த்திக் காட்டுகிற ஜாக்சன் நடையை என்னவென்று பாராட்டுவது. வசனத்தை விழுங்கிப் பேசுவதில் மார்லன் பிராண்டோவுக்கு ஒரு ஸ்டைல் இருப்பது நமக்குத் தெரியும். விநாயகனுக்கு அதில் ஒரு நாட்டுப்புறத்தன்மையே இருக்கிறது. சிரிப்பில் மறைவாய் களங்கமில்லை. கோபத்துக்குப் பின்னால் டையலமா இல்லை. அரை வசனத்தில் அவனால் ஜனங்களை சிதறடிக்க முடியும். கம்மட்டிப்பாடம் ராஜீவ் ரவியால் உயிர் கொள்கிறது என்றால், விநாயகத்தால் நிறைவு கொள்கிறது.

கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர் படத்தை முதல்முறை பார்த்தபோது முதலில் தாக்கியது அதன் சரளம்தான். என்ன இப்படி என்று மலைப்பூட்டியது. படம் எடுப்பதெல்லாம் ஒரு காரியமே இல்லை என்றுகூட தோன்றிவிட்டது. இந்தச் சரளம் இனிமேல் சாத்தியமா என்று தோன்றியவாறு இருந்தபோதுதான், இப்படம் வந்தது. நிஜமாகவே வெண்ணை வழுக்கும் படம். துல்கரை காரும் ஆட்களும் துரத்துகிற ஓர் இரவை இவ்வளவு எளிமையாய் அழகு செய்துவிட முடியுமா. படத்தில் அந்தமாதிரி எவ்வளவோ மினுங்கல்கள் வெட்டியவாறு இருக்கின்றன.

இறுதிக்காட்சியில் உயர்கிற அந்தப் பாடலை எண்ணிக் கொள்கிறேன். அப்பனும் மகனும் தனது இழந்த சொர்க்கங்களைப் பற்றி விதும்பிச் சொல்லி குரல் தேய்ந்து முடியும்போது, நமது மனதில் எழுகிற அந்தத் துயர் ததும்பும் அமைதி பற்றியும். அந்த அமைதியில் அல்லது மனதின் கண்ணீரில் கங்கா புன்னகைத்தவாறு இருக்கிறான். அது, நமது குற்றவுணர்ச்சியைப் பேணியவாறு இருக்கும்.

ஒருவேளை நீதியுணர்ச்சியைக் கூட!

அடுத்த கட்டுரைக்கு