Published:Updated:

"கொஞ்சநாள்தான்... ரசிகர் மன்றங்கள் எல்லாம் காணாம போயிடும்!" - ஜீவா

"கொஞ்சநாள்தான்... ரசிகர் மன்றங்கள் எல்லாம் காணாம போயிடும்!" - ஜீவா
"கொஞ்சநாள்தான்... ரசிகர் மன்றங்கள் எல்லாம் காணாம போயிடும்!" - ஜீவா

`கீ', `கொரில்லா', `ஜிப்ஸி' படங்கள் குறித்து, சினிமா பயணம், ரஜினி, கமல் அரசியல்...எனப் பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கிறார், நடிகர் ஜீவா.

``டிராவல் பண்றது எனக்குப் பிடிக்கும். நிறைய மக்களைப் பார்க்கலாம், அவங்க கலாசாரங்களைத் தெரிஞ்சுக்கலாம், முடிஞ்ச ஒருநாள் அவங்களைமாதிரி வாழ்ந்து பார்க்கலாம். முக்கியமா, இயற்கையை ரசிக்கலாம்!" - இப்படியெல்லாம் பேசுவது, நடிகர் ஜீவாதான். `கொரில்லா', `ஜிப்ஸி' படங்களில் பிஸியாக இருக்கும் அவரிடம் பேசினேன். 

``பதினெட்டு வயசுல இருந்து ஹீரோ. ஒரு நடிகரா உங்களை நீங்களே விமர்சனம் பண்ணிக்கலாமே?"

``திரைப்படங்களுக்கு நியாயமான விமர்சனம் பண்ற விகடன் தயாரிச்ச முதல் படத்துல நான் ஹீரோ. நினைக்கும்போதே சந்தோஷமா இருக்கு. இன்னைக்குவரை அந்தப் படம் எனக்கான பெரிய அடையாளம். என்னை மத்த ஹீரோக்களோட கம்பேர் பண்ணிக்க விரும்பலை. லவ், ஆக்‌ஷன், சென்டிமென்ட், கருத்து சொல்ற படம்னு எல்லாவிதமான படங்களும் பண்ணியிருக்கேன்; அதுல பல நல்ல படங்களும் இருக்குனு நம்புறேன். நான் பெரிய ஸ்டார் கிடையாது, மோசமான படங்கள் பண்ற நடிகரும் கிடையாது."

``இது டிஜிட்டல் யுகம். சினிமாவும் ரொம்ப ஸ்பீடா மாறிக்கிட்டே இருக்குல்ல..?"

``உலகம் இப்படித்தான். வேகமா ஓடிக்கிட்டே இருக்கும். ஆனா, நம்ம ஒரிஜினாலிட்டியை இழந்துடாம இருக்கணும். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் கிரிக்கெட் போட்டிகளோட ஃபார்மெட் மாறிக்கிட்டு இருக்கிறதைப் பத்தி பேசிக்கிட்டு இருப்போம். ஆனா, `Form is temporary class is permanent' இல்லையா... அதனால, இனி வர்ற ஃபிலிம் மேக்கர்ஸ் எல்லாம் உலகளவுல யோசிச்சுப் படம் பண்ணுவாங்கனு நம்புறேன். அதுக்கு நடிகர்களும் தயாராகணும். நான் 18 வயசுல ஹீரோ ஆனேன். இப்போ, 20 வயசுல டைரக்டர் ஆகிடுறாங்க. ரொம்பச் சின்ன வயசுலேயே கேப்டன்ஷிப்பை எடுத்துக்கிட்டு ஜெயிக்கிறாங்க. அதுக்கு நாமளும் சரியா இருக்கணும். புதுசா வொர்க் பண்ணணும்." 

``அமீர், ஜனநாதன், மிஷ்கின், ராம்னு பல முக்கியமான இயக்குநர்களோட வொர்க் பண்ணியிருக்கீங்க. அவங்களையெல்லாம் அடிக்கடி சந்திச்சுப் பேசுறதுண்டா?"

``ஏதாவது நிகழ்ச்சிகள்ல பார்த்தா பேசுவேன். ஆக்சுவலா, நான் வொர்க் பண்ண எந்த இயக்குநர்களோடும் திரும்பவும் படம் பண்ணதில்லை. அதனாலகூட அடிக்கடி பேசமுடியாமப் போயிருக்கலாம். திரும்ப அவங்களோட வொர்க் பண்ணக் கூடாதுனு இல்லை. இது யதார்த்தமா நடந்த ஒண்ணு. ஜனா சார், அமீர் சார், ராஜேஷ்... இவங்களோட எல்லாம் மறுபடியும் வொர்க் பண்றதா இருந்தது. அது சரியா அமையலை."

``ரசிகர்களை பட புரமோஷனுக்குப் பயன்படுத்திக்கிற நடிகர்கள்தாம் இங்கே அதிகம். உங்களுக்கும் ரசிகர் மன்றம் இருக்கு. ஒரு நடிகருக்கு ஏன் ரசிகர் மன்றம் தேவை?" 

``நான் என் ரசிகர்களுக்குப் பெருசா எதையும் பண்ணலை. ஆக்சுவலா, ரசிகர்கள் எல்லாம் மாறிக்கிட்டே இருக்காங்க. டீன் ஏஜ்ல ஒருத்தருக்கு ரசிகரா இருந்தா, வேலை, கல்யாணம்னு ஆனபிறகு வேறொருத்தருக்கு ரசிகர் ஆயிடுறார். ரசிகர்களைத் தக்கவெச்சுக்க அவங்களுக்குப் பிடிச்சமாதிரியான படங்கள் பண்ணிக்கிட்டே இருக்கணும். நான் அப்படிப் பண்றதில்லை. பொதுவான படங்களைத்தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.

மத்தபடி, இப்போதைய சூழல்ல நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் தேவையில்லைதான். ஓப்பனிங் காட்டுறதுக்கும், பால், கூழ் ஊத்துறதுக்கும், சில நல்ல விஷயங்களைப் பண்றதுக்கும் ரசிகர் மன்றங்களைப் பயன்படுத்துறாங்க. அதை இனி பண்ணமுடியாது. ஏன்னா, இது டிஜிட்டல் உலகம். ரசிகர் மன்றங்கள் எல்லாம் இன்னும் கொஞ்சநாள்ல காணாமப் போயிடும்னுதான் நினைக்கிறேன். ஹீரோவுக்கு ரசிகர்கள் என்ற நிலை மாறி, ஃபிலிம் ஃபாலோயர்ஸ் அதிகம் ஆயிடுவாங்க. ஆனா, ரஜினி சார், கமல் சாருக்கு இது பொருந்தாது. அவங்க படங்கள் ரிலீஸாகும்போது, வேற வேற மாநிலங்கள்ல இருக்கிற ரசிகர்களெல்லாம் சென்னைக்கு வந்து ரசிகர்களோட படம் பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க. அதனால, நல்ல படங்களுக்கான ரசிகர்கள் வட்டம்தான் இனி இருக்கும். அந்த `நல்ல படங்கள்'ல நாம இருந்தா போதும்."

``சின்ன வயசுலேயே நடிக்க வந்துட்டதுனால, நிறைய இழந்திருப்பீங்க. இப்பவும் ஃபீல் பண்றது எதுக்கு?"

``ஃபிலிம்ல எடுக்கும்போது, தேவையானதை எடுப்பாங்க. டிஜிட்டல் கேமரா வந்தபிறகு நிற்கிறது, சாப்பிடுறது, கேஷூவலா இருக்கிறதுனு ஷூட்டிங்ல எல்லாத்தையும் எடுத்து வெச்சிருக்கிறாங்க. என் பிரைவஸியை இழந்தமாதிரி ஒரு ஃபீலிங். தவிர, எனக்கு மெரினா பீச்ல மனைவி, குழந்தையோட சுத்திட்டு வரணும்னு ஆசை. சின்ன வயசுல அடிக்கடி போயிருக்கேன். இப்போ, ஷூட்டிங் இருந்தாத்தான் போகமுடியுது."

``தமிழ் சினிமாவுல ஜீவாவுக்கான இடம் எப்படி இருக்கணும்?"

``உலகம் பின்னிப் பிணைஞ்சிடுச்சு. இங்கே நீங்க பண்ற ஒரு விஷயம், அமெரிக்கா வரைக்கும்கூட எதிரொலிக்கும். ஒரு படம் பண்ணிட்டு, அதை உலகம் முழுக்க நாம கொண்டுபோகவும் முடியும். அதையெல்லாம் நான் சீக்கிரம் பண்ணணும். எனக்கு 34 வயசு ஆயிடுச்சு. இன்னும் ஆறேழு வருடங்கள் சினிமாவுல நல்லவிதமா இருந்துட்டு, ரிட்டயர்டு ஆனாலும் ஆயிடுவேன். ஏன்னா, இப்பவே என்னைக் கலாய்க்கிறாங்க. 40 வயசுக்குப் பிறகு நான் ஹீரோயின்கூட எல்லாம் ஆடிக்கிட்டு இருந்தா, இன்னும் மோசமா கலாய்ப்பாங்க."

``கடந்த சில வருடங்கள்ல சினிமாவுக்கான பிளாட்பார்ம் அதிகமாகியிருக்கு. ஹீரோக்கள் என்னென்ன அப்டேட்ஸோட இருக்கணும்னு நினைக்கிறீங்க?" 

``'இந்தக் கேள்வியை ஹீரோக்கள்கிட்ட கேட்காதீங்க. இயக்குநர்கள்கிட்ட கேளுங்க. நான் ஒரு நடிகரா வரும்போது, ஒரு வருடம் கராத்தே, டான்ஸ், ஆக்டிங் கிளாஸுக்குப் போறதுனு எனக்கான பயிற்சிகளை எடுத்துக்கிட்டேன். இயக்குநர்கள் அப்டேட்டா இருக்கணும். டாப் 10 பட்டியல் ஹீரோக்களுக்கு மட்டுமல்ல, இயக்குநர்களுக்கும் வேணும். ப்ரியதர்ஷன் - மோகன்லால் கூட்டணி 45 படங்கள் பண்ணாங்க. இந்தக் காலத்துல அப்படி ஒரு இயக்குநர் - ஹீரோவைக் காட்டுங்க பார்க்கலாம்... முடியாது. அந்தக் காலத்துல இருந்த இயக்குநர்கள் மாதிரி இப்போ இல்லை. எல்லோரும் ஒன் டைம் வொண்டர், டூ டைம் வொண்டரா இருந்துட்டுப் போயிடுறாங்க. நல்ல எழுத்தாளர்கள் இல்லை. இவங்கெல்லாம் இருந்தாத்தானே, ஒரு நல்ல நடிகரும் உருவாக முடியும்.

`பாகுபலி' பக்கத்து ஸ்டேட்ல வருது. நம்ம தமிழ்சினிமாவுல இருந்து ஏன் வரலை? தவிர, இயக்குநர்களுக்குக் கிடைக்கிற சம்பளம் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கிறதில்லை. இப்படிப் பல பிரச்னைகள் இருக்கு. நான் மேக்ஸிமம் நல்ல கதாசிரியர்களைத் தேடுறேன். `ஜிப்ஸி' படத்துல நடிக்க சம்மதிச்சதுக்கான முதல் காரணம், இயக்குநர் ராஜுமுருகன் நல்ல எழுத்தாளர். தவிர, இவர் மூலமா எனக்கு இன்னும் பல எழுத்தாளர்கள் பழக்கம் ஆவாங்க. ஸோ, தமிழ்சினிமாவுல மாறவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. எல்லோரும் `ரஜினி படம் ஓடலை, கமல் படம் ஓடலை, ஜீவா படம் ஓடலை'னுதான் சொல்வாங்களே தவிர, `அந்த இயக்குநரோட படம் ஓடலை'னு சொல்லமாட்டாங்க. தவிர, தமிழ்சினிமாவுல உதவி இயக்குநரா இருக்கிறவர், எக்ஸிகியூடிவ் புரொடியூசரா இருப்பார். நடிகர்கள் விநியோகஸ்தர்களா இருப்பாங்க. இப்படி இருக்கக் கூடாது. நடிகர்களோட வேலை நடிக்கிறது. ஒரு படத்தோட மற்ற பிரச்னைகளையெல்லாம் நடிகர்கள் தலையில வைக்கக் கூடாது. ஃப்ரீயா விடணும். தமிழ்சினிமா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இந்த முன்னேற்றத்தை நோக்கிப் போகணும்னு ஆசைப்படுறேன்."

``ரஜினி, கமல் அரசியல்...?"

``எல்லோரும் இந்நாட்டுக் குடிமகன்கள். யாரும் அரசியலுக்கு வரலாம். அமெரிக்காவுல அர்னால்டு ஏன் கவர்னர் ஆனார்னு யாரும் கேட்கலை. நாமளும் கேட்கவேணாமே... எல்லோருக்கும் அரசியலுக்கு வர உரிமை இருக்கு. எல்லாத்தையும் கேள்விக்குள்ளாக்கி, கருத்துச் சொல்லிக்கிட்டு இருக்கமுடியாது. எல்லோரும் அரசியலுக்கு வர்றாங்க. இதைப் பண்றார், அதைப் பண்ணப்போறார்னு சொல்றாங்க... ஆனா, ஒரு முடிவு இல்லாமப் போய்க்கிட்டே இருக்கு. அதனால, கொஞ்சநாளைக்கு இதையெல்லாம் ஒதுக்கி வெச்சுட்டேன்."

``அடுத்து?"

``ரிலீஸாகாம இருக்கிற `கீ' படத்தை முடிக்கணும். `இரும்புத்திரை' மாதிரி டிஜிட்டல் மோசடிகளைச் சொல்ற படம். இந்தப் படம்தான் முதல்ல வரவேண்டியது, `இரும்புத்திரை' முந்திடுச்சு. பரவாயில்லை, நான் அதை பாசிட்டிவா எடுத்துக்கிறேன். என் கரியர்ல இது முக்கியமான படமா இருக்கு. `ஜிப்ஸி' ஷூட்டிங் போய்க்கிட்டு இருக்கு, `கொரில்லா' ரிலீஸுக்கு ரெடியா இருக்கு."

அடுத்த கட்டுரைக்கு