Published:Updated:

''கட்சிக்காக உழைச்ச என்னை சந்திரபாபு நாயுடு மறந்துட்டார்!'' - நடிகை கவிதா

''கட்சிக்காக உழைச்ச என்னை சந்திரபாபு நாயுடு மறந்துட்டார்!'' - நடிகை கவிதா
''கட்சிக்காக உழைச்ச என்னை சந்திரபாபு நாயுடு மறந்துட்டார்!'' - நடிகை கவிதா

''கட்சிக்காக உழைச்ச என்னை சந்திரபாபு நாயுடு மறந்துட்டார்!'' - நடிகை கவிதா

``நான் ஆந்திராவில் செட்டிலாகி ரொம்ப வருஷமாச்சு. தமிழ் மக்கள் என்னை மறந்திருப்பாங்கனு நினைக்கிறேன். என்னை ஞாபகம் வெச்சுக் கூப்பிட்டிருக்கீங்க. சீக்கிரமே, சென்னைக்கு ஷிஃப்ட்டாக முடிவுசெய்திருக்கேன்" என உற்சாகக் குரலில் பேசுகிறார், நடிகை கவிதா. நடிப்பு, அரசியல் என ஆந்திராவில் பிஸியாக இருப்பவர்.

``தமிழில் நடிச்சு பல வருடங்கள் ஆகுதே. ஏன் இந்த இடைவெளி?"

``இந்தக் கேள்வியைத்தான் பலரும் கேட்கிறாங்க. பல வருடங்களாக தெலுங்கு சினிமாவில்தான் நடிக்கிறேன். அரசியலிலும் ஆக்டிவா இருக்கேன். ஹைதராபாத்லேயே தங்கிட்டதால், தமிழ் இண்டர்ஸ்ட்ரியோடு டச் விட்டுப்போச்சு. தென்னிந்தியாவின் நான்கு மொழிகளில் 400 படங்களுக்கும் மேலே நடிச்சுட்டேன். `நாரதன்' என் கடைசி தமிழ்ப் படம். தமிழ்ப் படங்கள் மற்றும் சீரியல் வாய்ப்புகள் வந்தால், நிச்சயம் சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிடுவேன். அது காலத்தின் முடிவு."

``ஆக்டிங் பயணம் எப்படி ஆரம்பிச்சது?"

``என் பூர்வீகம், ஆந்திரா. ஆறு வயசுலயே சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிட்டோம். அதனால், நானும் தமிழ்ப் பொண்ணுதான். சாவித்திரி, ரங்காராவ், ஜமுனா, ஜெயலலிதா, சோபன் பாபு உட்பட அன்றைய பிரபலங்கள் பலரும் என் பெற்றோருக்கு நண்பர்கள். சினிமா வட்டாரத்தில் என்னைப் பலருக்கும் தெரியும். 11 வயசுல `ஓ மஞ்சு' படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார், இயக்குநர் ஶ்ரீதர் சார். `ஆட்டுக்கார அலமேலு', `ரவுடி ராக்கம்மா', `காலமடி காலம்', `அவள் தந்த உறவு', `ஆளுக்கொரு ஆசை' எனத் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருக்கேன். அப்போ, சில மணி நேர ஓய்வு கிடைக்கிறதே பெரிய விஷயம்."

`` `பாண்டவர் பூமி' படத்தில் நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?"

``சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக்கிறேன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே என் கணவரிடம் சொல்லிட்டேன். ரொம்ப வருஷமா நடிக்காமல் இருந்தேன். ஆனால், தொடர்ந்து வாய்ப்புகள் வந்துட்டே இருந்துச்சு. கணவர் சம்மதத்துடன், அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்களில் நடிக்க ஆரம்பிச்சேன். அப்படி, `பாண்டவர் பூமி', என் கரியர்ல மிக முக்கியமான, மறக்கமுடியாத படம். மேக்கப் இல்லாமல், யதார்த்தமான நடிப்பு. தமிழ்நாட்டுல விவசாயம்தான் பிரதான தொழில். கிராம மக்களின் யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற மாதிரி எல்லா நடிகர்களும் நடிச்சிருந்தோம். அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என `பாண்டவர் பூமி' படம், என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானது."

``ரஜினிகாந்த் உடனான உங்கள் நட்பு பற்றி..."

``இரண்டு கன்னடம் மற்றும் ஒரு தெலுங்குப் படங்களில் ரஜினிக்கு ஜோடியா நடிச்சேன். அவர் ஹீரோவா நடிச்ச ஒரு தமிழ்ப் படத்தில், கேரக்டர் ரோல் பண்ணினேன். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என அப்போதைய முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடிச்சாச்சு. ரஜினி எனக்கு ரொம்ப குளோஸ். அப்போ, எனக்குக் கன்னடம் சரியா வராது. டயலாக்கை மனப்பாடம் செய்துட்டே இருப்பேன். அதைப் பார்த்து, `பரீட்சைக்குத் தயாராகறீங்களா? நல்ல மார்க் வாங்கணும்'னு கிண்டல் பண்ணுவார். அவருடன் இப்போவரை நட்பு இருக்கு. சிவாஜி சாருடன் ரெண்டு படங்களில் மகளா நடிச்சேன். அவர் எனக்கு நடிப்புச் சொல்லிக்கொடுத்ததை மறக்கமுடியாது."

``அரசியல் ஆர்வம் மற்றும் அரசியல் என்ட்ரி பற்றி..." 

``எனக்கு அரசியல் ஆர்வம் எப்போதும் உண்டு. ஒருமுறை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என்னை அழைச்சார். `சினிமாவுல நிறைய வொர்க் பண்ணிட்டீங்க. அரசியல்லயும் மக்களுக்காகப் பணி செய்யணும்'னு கேட்டார். அவர் தலைவராக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கியது, என்.டி.ராமாராவ் சார். அவருடன் பல படங்களில் நடிச்சிருக்கேன்; நல்ல நட்பு உண்டு. அதனால், 2008-ம் வருஷம் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தேன். பொதுவா, எதிர்க்கட்சித் தலைவரா இருக்கிறவங்க தன் கட்சியைப் பலப்படுத்த, மக்கள் ஆதரவைப் பெற பல பேரின் ஆதரவையும் உழைப்பையும் எதிர்பார்ப்பாங்க. ஆட்சிக்கு வந்ததும் கட்சிக்காக உழைச்ச பலரையும் புறக்கணிச்சுடுவாங்க. அப்படித்தான் சந்திரபாபு நாயுடுவும் செய்தார். அவர் ஆட்சிக்கு வர, நான் ரொம்பவே உழைச்சேன். அது தெலுங்கு மக்களுக்குத் தெரியும். அவர் முதலமைச்சர் ஆனதுமே என்னை மறந்துட்டார். எனக்கு முக்கியத்துவம் கொடுக்கலை. ரொம்பவே வருத்தப்பட்டு கலங்கினேன். பிறகு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, ஆக்டிவா வொர்க் பண்ணிட்டிருக்கேன். பல அமைப்புகளில் உறுப்பினராகவும், தலைவராகவும், ஆலோசகராகவும் இருக்கேன். சேனல் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்துக்கிறேன். குடும்பப் பொறுப்பையும் சரியா கவனிச்சுக்கிறேன்."  என்கிறார் இந்த ஆல்ரவுண்டர்!

அடுத்த கட்டுரைக்கு