Published:Updated:

விஜய்-முருகதாஸ், அஜித்-சிவா, சூர்யா-கெளதம் காம்போ வரிசையில் சிவா-அமுதன்! `தமிழ்ப் படம் 2' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
விஜய்-முருகதாஸ், அஜித்-சிவா, சூர்யா-கெளதம் காம்போ வரிசையில் சிவா-அமுதன்! `தமிழ்ப் படம் 2' விமர்சனம்
விஜய்-முருகதாஸ், அஜித்-சிவா, சூர்யா-கெளதம் காம்போ வரிசையில் சிவா-அமுதன்! `தமிழ்ப் படம் 2' விமர்சனம்

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் - சிறுத்தை சிவா, சூர்யா - கௌதம் மேனன் வரிசையில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கூட்டணி சிவா - சி.எஸ்.அமுதன் கூட்டணி! இந்த முறை ஜெயித்து இருக்கிறதா?

ரு கின்னம் கதையை எடுத்துகிட்டு ரொம்ப ஷார்ப்பாகவும் இல்லாம ரொம்ப மொக்கையாகவும் இல்லாம பொதுவா ஒரு திரைக்கதையை ரெடி பண்ணி, நாலு கௌதம் மேனன் படங்களை எடுத்துகிட்டு பொடிப்பொடியா நறுக்கி அப்படியே பரபரன்னு தூவிவிட்டு, விஜய்-அஜித் படங்களை எடுத்து அதை நீளம், நீளமா வெட்டி அப்படியே பரபரன்னு தூவிவிட்டு, 16 கரண்டி அரசியல் அலப்பறைகளை எடுத்து உள்பக்கம் ஆறு கரண்டி, வெளிப்பக்கம் 10 கரண்டி அப்படியே வெழாவிவிட்டு, இவ்வளவு ஹாலிவுட் படங்களை எடுத்து மழைச்சாரல் மாதிரி மேலாப்ல பெய்யவிட்டு, பொத்துனாப்புல அப்படி ஒரு பிரட்டு இப்படி ஒரு பிரட்டு பிரட்டி கலகலன்னு ஒரு ஊத்தாப்பம் படைச்சிருக்கு `தமிழ்ப் படம் 2' டீம். ஏன் இப்படி சம்பந்தமேயில்லாம எழுதியிருக்கோம்னு நேரம் வரும்போது சொல்றோம். 

`அகில உலக சூப்பர் ஸ்டார்' என டைட்டில் கார்டு போடுவதில் ஆரம்பித்து எண்ட் கார்டில் `யார்றா அவன்' என வசனம் பேசியதுவரை, ஒட்டுமொத்த படத்தையும் பாகுபலியைப்போல் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார் சிவா. படத்தின் ஓப்பனிங்கில் `தேவர்மகன்' ஃபன்க் கமல் கெட்டப்பில் வந்து லந்து கொடுப்பவர், இடையில் வேறு கெட்டப்புக்கு மாறி பின் மீண்டும் க்ளைமாக்ஸில் `கடைசியில என்னையும் நடிக்க வெச்சுட்டீங்களே' என அதே `தேவர்மகன்' மீசை கமல் கெட்டப்பில் வந்து கண் கலங்குகிறார். இதன் மூலம் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார் சிவா. இந்தப் படத்தில் `தசாவதாரம்' கமலைவிட அதிக கெட்டப் போட்டிருக்கிறார் சதீஷ். அவர்தான் இந்தப் படத்தின் வில்லன், `மிஸ்டர் P'. `அந்நியன்' விக்ரம், `எந்திரன்' ரஜினியில் ஆரம்பித்து `நூறாவது நாள்' சத்யராஜ் வரை அவரும் தன் பங்குக்கு பலரை ஊறப்போட்டு கலாய்த்திருக்கிறார். உங்க கேரியர்ல இது முக்கியமான படம் ப்ரோ. ஏன்னா, நீங்க பண்ற காமெடிக்கு சிரிப்பு வருது. சிவாவின் பாட்டியாகக் கலைராணி, காவல்துறை அதிகாரியாக சேத்தன், நிழல்கள் ரவி எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். `இளம் நடிகர்கள்’ மனோபாலா, சந்தானபாரதி மற்றும் ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரின் நடிப்பும் நச். ஐஸ்வர்யா மேனனுக்கு தமிழ் ரசிகர்களின் சார்பாக நல்வரவு. நடிப்பில் நவரசத்தையும் புளிப்பு, காரம் குறைவின்றி முகத்தில் கொண்டுவருகிறார். 

முதல் பாகத்தில் போலீஸாக இருந்த சிவா, இந்தப் பாகத்தில் காவல்துறை அவர் காலில் விழுந்து மண்றாடியும் `நான் போலீஸ் வேலைக்கு வர மாட்டேன்' என அடம்பிடிக்கிறார். பின்னர், தன் மனைவியை வில்லன் ‘P' டெட்மி மொபைலைக் கூரியரில் அனுப்பி கொல்ல, வில்லனை பழிவாங்கும் வெறியோடு மீண்டும் காவல்துறையில் இணைகிறார். வில்லனை ஹீரோ பழிவாங்கினாரா என்பதே மீதிக்கதை. கதையின் இடையில் ஒரு குழப்பம் வருகிறது, அதை சிவாவே மக்களுக்கு எடுத்துச் சொல்லி குழப்பத்திலிருந்து தெளிவடையச் செய்கிறார்.

கமிஷனர் பேர் ஏழுச்சாமி, பேட்டியெடுப்பவை HBO, டிஸ்கவரி, ஸ்டார் சேனல்கள், டீக்கடையில் croissant வகையறா பலகாரங்கள், ‘ஏழாமலே’ பாடல் என்று கிடைத்த இடத்தில் எல்லாம் பொளேர் என உடைத்தும் அதேநேரம் பொத்திப் பொத்தி வைத்தும் காமெடி செய்திருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். சிவாவைத் தவிர வேறு யாரையும் இந்த ரோலில் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. உண்மையில், அவர் அகில உலக சூப்பர் ஸ்டார்தான். ஹாலிவுட் பட வில்லனில் தொடங்கி தேவர்மகன் பட வில்லன் வரை ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு வில்லன் கெட்டப்பில் வந்து அப்ளாஸ் அள்ளுகிறார் சதீஷ். சிவாவுக்கு ஏற்ற ஜோடியாக சதீஷ் நிறைவு. என்ன சதீஷுக்கு நடிக்கத் தெரியவில்லை, சிவாவுக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை. பரவாயில்லை சமாளிச்சுக்கலாம்.

கலை இயக்குநர் செந்தில் ராகவன் சின்னச் சின்ன விஷயங்களில்கூட கவனிக்க வைக்கிறார். இசை, ஏதோ ஒரு பாடலின் சாயலிலும் இருக்க வேண்டும், அதே சமயம் ஒரிஜினலாக ரசிகரைக் கவரவும் வேண்டும் என்ற சவாலை ஜஸ்ட் லைக் தட் கையாண்டு கைதட்டல் பெறுகிறார் இசையமைப்பாளர் கண்ணன். அதுவும் அந்தக் க்ளைமாக்ஸ் சாங்கில், இரு ஆண்கள் பரதமாடும் -  பாடலும் இசையும் லயிக்கச் செய்கிறது. பாடலின் வரிகளும் காட்சியமைக்கபட்ட விதமும் குபீர் ரகம்.

லாஜிக் தேவை இல்லாத படம் என்றாலும், பார்வையாளர்களுக்குக் கேள்விகள் உண்டாகிற இடங்களை ஹைலைட் செய்து அதையும் ஒரு காமெடியாக மாற்றிய விதம் அருமை. மனோபாலா உயிரோடு அடுத்த காட்சியில் வருவது, டைம் டிராவலில் 14-ம் நூற்றாண்டுக்குப் போகும்போது தாடியில்லாத கெட்-அப்பில் போவது எனப் பல இடங்களைக் குறிப்பிடலாம்.

கதை போல ஏதோ ஒன்று இருக்கிறது; ஆனால் என்ன கதை என்பதுதான் புரியவில்லை என்பது படத்தின் குறை. ஆனால், அதையும் தமிழ்ப் படங்களின் ஸ்பூஃப் என்பார்கள்போல. கலாய்க்கப்படும் படங்களின் மூட்-ஐ இன்னும்கூட நெருக்கமாகக் கொண்டுவந்திருக்கலாம். முந்தைய பார்ட்டில் எவர்கிரீன் ஸ்பூஃபாக பல காட்சிகள் இருந்தன. இதில் பலவும் டிரெண்டிங்கான, அரசியல் ஸ்பூஃபாக இருக்கின்றன. அதனால், பார்த்ததும் சட்டென சிரித்துவிடுவீர்கள். சட்டென மறந்தும் விடுவீர்கள்.

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் - சிறுத்தை சிவா, சூர்யா - கௌதம் மேனன் வரிசையில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கூட்டணியான சிவா - சி.எஸ்.அமுதன் கூட்டணி, சிரிப்புக்கு நாங்க கேரண்டி என மீண்டும் சொல்லியடித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு