Published:Updated:

தமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி

தமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி
பிரீமியம் ஸ்டோரி
தமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி

படங்கள் : ‘ஸ்டில்ஸ்’ ரவி, ஞானம்

தமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி

படங்கள் : ‘ஸ்டில்ஸ்’ ரவி, ஞானம்

Published:Updated:
தமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி
பிரீமியம் ஸ்டோரி
தமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி

ரையாடல்களில் ஒருவரைப் பற்றி குறிப்பிடும்போது ‘ஐயே, அந்த ஆள் சரியான நெகட்டிவ் கேரக்டர்’ என முகம் சுளிப்பதைப் பார்த்திருக்கிறோம். எதைச் சொன்னாலும் எதிர்மறையாகப் பேசுபவர்கள், எதிலொன்றிலும் அவநம்பிக்கை தொனிக்கப் பேசுபவர்களை நெகட்டிவ் கேரக்டர்கள் என்கிறோம். அப்படியானால், பாசிட்டிவ் கேரக்டர் என்பவர் யார்?

பொதுவாக எது ஒன்றைப் பற்றியும் சாதகமாகவே சிந்திப்பவர், நாளை மீது நம்பிக்கையுடன் வாழ்பவர், சோதனைகள் எத்தனை வந்தாலும் எதிர்கொண்டு போராடி வெல்பவரைச் சொல்லலாம்.  எவ்வளவுதான் அடிபட்டாலும் சோர்ந்து போகாமலும், குட்டக்குட்டக் குனியாமலும் சாமர்த்தியமாக அந்தச் சூழலைக் கையாண்டு தன்னம்பிக்கையோடு வாழ்பவர்களையும்  சொல்லலாம். இப்படியான பாசிட்டிவ் கேரக்டர்களை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்துக் கடந்தே வந்திருக்கிறோம்; வருகிறோம். ஒவ்வொருவரும் தாம் சந்தித்த பாசிட்டிவ் கேரக்டர்களைத் தமக்குள்ளும் கண்டடைந்து  விடைதேடிக்கொள்வதும் உண்டு.

இந்தப் பாசிட்டிவ் கேரக்டர்களுக்கு  தமிழ்த் திரைப்பட உலகில் என்ன முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று பார்த்தால், அங்கு பெரும் கேள்விக்குறிதான். பாசிட்டிவ் பெண் கேரக்டர்களைத் தமிழ் சினிமாவின் கதைகளுக்குள் நாம் சல்லடைப் போட்டுத் தேடினாலும் காண முடிவது இல்லை. கற்பையும் கணவனுக்குச் சேவை செய்வதையும் புனிதமாகக் கொண்டவர்களையே பாசிட்டிவ் பெண்களாக மதங்கள் அடையாளம் காட்டுவது மட்டுமல்லாமல், பொதுப்புத்தியிலும் அதுவே திணிக்கப்பட்டிருக்கிறது. சாவித்திரி, அனுசுயா, நளாயினி, சந்திரமதி போன்ற பெண் பாத்திரங்களே மதம் காட்டும் முன்னுதாரணங்களாக இருக்கிறார்கள். அதனால்தான் தொடக்கக் கால தமிழ் சினிமாக்கள் இந்தக் கதைகளைச் சுட்டுத் தள்ளி மாபெரும் வெற்றியும் பெற்றன. தம் மீது திணிக்கப்படும் பொய் மதிப்பீடுகளைச் சுமந்துகொண்டு சமூக முரண்களைக் கட்டிக் காப்பதே பெண்களுக்கான பாசிட்டிவ் சிந்தனை என்று பொதுப்புத்தியில் பல நூற்றாண்டுகளாகக் கட்டிக் காக்கப்பட்டுள்ளதன் நீட்சியாகத் தான் இதை மதிப்பிட முடிகிறது.

தமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி

தொடர்ந்து சமூகம் சார்ந்த கதைகளைக்கொண்ட படங்களிலும்கூட தமது சுயமரியாதையைக் காத்துக்கொள்பவளாக, அதற்காகப் போராடுபவளாக பெண் கேரக்டர்களைத் தமிழ் சினிமாவில் காண்பது அரிது. தேசிய இயக்கப் படங்கள், திராவிட இயக்கப் படங்கள், பொதுவுடைமைச் சிந்தாந்தம் பேசிய படங்களில்கூட இதைக் காண்பது அரிது. இதன் செல்வாக்கின் நீட்சி தொடர்ந்தது. இந்தக் கதைகளில் பாசிட்டிவ் பெண்களின் அதிகபட்ச ஆயுள் அவர்கள் திருமணத்துக்கு முன்பே முடிந்துவிடுகிறது. என்னதான் படித்திருந்தாலும், விடுதலை உணர்வுகள் கொண்டிருந்தாலும் கழுத்தில் தாலி ஏறிவிட்டால் கணவன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் கணவனையும் அவனது குடும்பத்தினரையும் காப்பாற்றுவதற்கு மட்டுமே அந்தப் பெண்ணின் பாசிட்டிவ் கேரக்டர் அனுமதிக்கப்படுகிறது. மற்றபடி அவள் பொதுவெளியில் ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியாதவளாகிறாள். தம்மைப் போன்ற அபலைப் பெண்களுக்காகப் பரிந்து பேசுவதற்குக்கூட அவர்கள் அனுமதிக்கப் படாமல் நெகட்டிவ் பெண்களாக உருமாற்றப்படுகிறார்கள்.

மூட நம்பிக்கைக் கருத்துகளுக்கு எதிராக, பெருமளவு குரல் கொடுத்த கலைவாணரின் படங்களில்கூட முழுமையான பாசிட்டிவ் பெண் பாத்திரங்களைக் காண முடியவில்லை. அவரது படங்களில் ‘நல்லதம்பி’, ‘மணமகள்’, ‘பணம்’ ஆகிய படங்களில் ஓரளவுக்கு இதைக் காண முடிகிறது. இவற்றிலும் முழுமையான மையப் பாத்திரங்களாக அவை அமையவில்லை. இதையும் மீறி நாட்டுப்பற்று காரணமாகக் கணவனையும் கொன்று தன்னையும் மாய்த்துக்கொள்ளும் வீர மங்கையாவதற்கு மட்டுமே தம்மை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி

அர்ப்பணித்துக்கொள்கிறாள். இதற்கு  ‘மந்திரிகுமாரி’, ‘அந்த நாள்’, ‘எங்கள் தாய்’ எனப் பல படங்களைக் கூற முடியும்.

மற்றபடி தாம் இழிவுசெய்யப்படுவதையும் புறக்கணிக்கப்படுவதையும் பொருட்படுத்தாமல் தனது நலன்கள் பறிக்கப்படுவதைப் பற்றிய பிரக்ஞை மழுங்கிய நிலையில் குடும்பத்துக்காகவே உழைக்கும் தாயாக, மனைவியாக, அண்ணியாக, அக்காவாகத்தான் தமிழ் சினிமாவில் பெண்கள் தங்கள் பாசிட்டிவ் எனர்ஜியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். (உதாரணம்: ‘அடுக்குமல்லி’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘மனதில் உறுதி வேண்டும்’.)

துரதிருஷ்டவசமாக, தமிழ் சினிமா முழுமையுமே கதாநாயகனை அல்லது கதாநாயகியை மையப்படுத்திய கதை என்றுதான் கூறுபோட்டுள்ளோம். கதாநாயகியை மையப்படுத்திய கதைகளிலும் அவள் ஆணைப்போல் சண்டைபோட்டு நீதியைக் காப்பவளாக இருந்தாலும் குடும்பம் என்று வந்துவிட்டால் அடங்கிய மனைவியாகத்தான் வலம் வருவாள். அல்லது  அடங்காத மாமியாரை, நாத்தனாரை அடக்குபவளாக இருப்பாள், அல்லது கணவரையும் மீறி கணவரின் குடும்ப மரியாதையை மீட்டெடுப்பவராக (உதாரணம்:சூரியகாந்தி) அல்லது ஓடிப்போன அப்பா, அப்பாவி அம்மா, விதவைத் தங்கை, திருமணத்துக்குக் காத்திருக்கும் தங்கை, பொறுப்பில்லாத அண்ணன், அவன் மனைவி, குழந்தைகள், கண் தெரியாத தம்பி இவர்களைக் காக்கும் பொறுப்பைத் தலை மேல் சுமக்கும் பெண்ணாக, திருமண வாழ்க்கையைத் தியாகம் செய்பவளாக (‘அவள் ஒரு தொடர்கதை’) இருக்கிறாள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் 1970-களின் பிற்பகுதியில்தான் இதற்கான சிந்தனையே தமிழ் இயக்குநர்களிடம் உருவாகியுள்ளது. உண்மையில் பெண்ணின் பாசிட்டிவ் சிந்தனைகளை இயல்பான போக்கில் காட்டக்கூடிய படங்கள் இதன் பிறகே வந்துள்ளன. அப்படியான படங்களில், தங்கள் சுயமரியாதையைக் காத்துக்கொள்ள தங்கள் பாசிட்டிவ் கேரக்டரை மூலதனமாக்கிய அனு, மஞ்சு, கங்கா, செவந்தி, அம்முலு போன்ற பெண் கதாபாத்திரங்கள், சுயசிந்தனை கொண்டவர்கள். மறக்க முடியாத கேரக்டர்கள்.

தமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி

‘அவர்கள்’ அனு

‘அவர்கள்’ படத்தின் நாயகி அனு (சுஜாதா) சாதாரண நடுத்தரக் குடும்பத்துப் பெண். அவள் வாழ்க்கையில் மூன்று ஆண்கள் வந்து போகிறார்கள். கணவன் ராமநாதன் (ரஜினிகாந்த்), முன்னாள் காதலன் பரணி (ரவிகுமார்), மற்றும் அனுவின் மீது அனுதாபத்தோடு ஒருதலைக்காதல்கொண்ட ஜனார்த்தனன் (கமல்ஹாசன்).

அனு – பரணி காதல், அனுவின் அப்பாவுடைய வேலை இடமாற்றத்தால் தடைபடுகிறது. இந்தத் தகவலைத் தெரிவித்து அனு எழுதிய கடிதங்கள் அனைத்தும் பரணியின் மனவளர்ச்சி குன்றிய தங்கையால் அழிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தனது தந்தையின் அலுவலகத்தில் பணியாற்றும், தனித்து வாழும் ராமநாதன் அனுவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். அனு அவனைக் கைப்பிடிக்கிறாள். வழக்கம்போல இதில் அவள் விருப்பம் என்று ஏதும் இல்லை. அது மட்டுமல்லாமல் தனக்கும் பரணிக்குமான காதலையும் ராமநாதனிடம் தெரிவித்துவிடுகிறாள். அவனும் அதனைப் ‘பெருந்தன்மையுடன்’ ஏற்பதுபோல் பாவனை செய்கிறான். ஆனால், சாடிஸ்ட் குணம்கொண்ட வக்கிரமான ராமநாதன் ஒவ்வொரு நொடியும் அவளைச் சந்தேகிப்பவனாக, அவள் மீது பொறாமை கொள்பவனாக மாறுகிறான். அவனோடு வாழும் ஒவ்வொரு கணமும் தேளாக, அதன் சந்தேகக் கொடுக்கு ஒவ்வொரு நொடியும் கொட்டுவதாக அவளது வாழ்க்கை அமைகிறது. கணவனின் வக்கிர மனம் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சிரித்துக்கொண்டே பதில் சொல்பவளாகவும் அதனால் அலுவலகத்தில் தடுமாறுபவளாகவும் அல்லாடும் அனு, ஒரு குழந்தைக்கும் தாயாகிறாள். அதன் பிறகும் சமாளிக்க முடியாத நிலையில் சுயம் மறுக்கப்பட்டு, இழிவுகளைத் தாங்குபவளாகவே வாழ வேண்டுமா என்ற நியாயமான கேள்வி அவளுக்குள் எழுகிறது. இந்த நிலையில் ராமநாதனிடமிருந்து விவாகரத்துப் பெற்று தன் கைக்குழந்தையோடு சென்னைக்கு மாற்றலாகி வருகிறாள் அனு.

சென்னையில் அவளுடன் பணியாற்றும் மலையாள இளைஞன் ஜனார்த்தனன் அவளுக்கு ஆறுதலாக அமைகிறான். அலுவலகப் பணிகளில் அவளின் சுமையை ஓரளவு பகிரும் அளவுக்கு அவள் மீது நேசம் கொள்கிறான். அவளுக்கு அதிக அலுவல் பணிகள் இருக்கும் நேரங்களில் அவள் குழந்தையை முழுமையாகப் பராமரிக்கிறான். சென்னையில் சுதந்திரக் காற்றை முழுமையாக அனுபவிக்கிறாள் அனு.

இதற்கிடையில் ராமநாதனின் தாய்க்கு தன் மகன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, அவளை வதைத்து அனுப்பிய தகவல் தெரிய வர, தன் மருமகளிடமே வேலைக்காரியாகச் சேர்ந்து அனுவுக்கு ஆதரவாகவும், அவள் குழந்தையைப் பராமரிப்பவளாகவும் மாறுகிறாள். அதோடு அனுவின் காதலன் பரணியும் அவளை எதிர்பாராமல் சந்திக்கும் எதிர் வீட்டுக்காரனாகிறான். அப்போதுதான் தனது கடிதங்கள் பரணிக்குப் போய்ச் சேரவில்லை என்பதும் பரணி இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதும் தெரிந்து தர்மசங்கடமடைகிறாள் அனு.

ஜனார்த்தனன் அனு மீதான தனது காதலை மறைமுகமாகத் தெரிவிக்க முயல்கிறான். ஆனால், அனு பரணியுடன் இணைய விரும்புகிறாள். இதற்கிடையே அனுவின் அலுவலகத்தில் அவளது மேலதிகாரியாக ராமநாதன் வருகிறான். தான் திருந்திவிட்டதாகவும் மீண்டும் திருமணம் செய்துகொள்ளுமாறும் கோருகிறான். அனு என்ன முடிவு எடுக்கிறாள் என்பதுதான் க்ளைமாக்ஸ். வழக்கமான தமிழ் சினிமாவாக இருந்தால் கணவன் திருந்திவிட்டதாகக் கூறியதும் உடனே அவன் காலில் விழுந்து வணங்கி அவனை ஏற்றுக்கொள்ளும் பதிவிரதையாகக் காண்பிக்கப்பட்டிருப்பாள். ராமநாதன் திருந்திவிட்டதாகக் கூறுவது என்பதே அவனது கபட நாடகத்தின் ஒரு பகுதிதான் என்று தெரிந்த பின், மீண்டும் அவள் நிலை இருதலைக்கொள்ளி எறும்பாகிறது. ஆனால், அனு எந்தச் சலனத்துக்கும் ஆளாகவில்லை. தனது மாமியாரே தனக்கு முழுமையாக ஆதரவு அளிப்பது தெரிந்து, மாமியாருக்கு ஆதரவாக அவளைச் சார்ந்து வாழும் வாழ்வே பெண் வாழ்வு என்ற முடிவை அவள் எடுத்தாலும், அது நடைமுறைக்கு வரவில்லை. கணவனும் வேண்டாம்; காதலும் வேண்டாம். இதன் அதிகபட்ச விளைவாகக் கையிலிருக்கும் குழந்தையும் இந்தச் சமூகமும் போதும் என்று முடிவெடுக்கிறாள். அது மட்டுமல்லாமல் அதுவரை எக்ஸ்ட்ரா சுமையாகச் சுமந்துகொண்டிருந்த தாலியையும் கழற்றித் தூக்கி வீசுகிறாள்.  குழந்தை, வேலைக்காரியான மாமியார், இந்தச் சமூகம் என அவள் வாழ்க்கை தொடர்கிறது.

‘தண்ணீர் தண்ணீர்’ – செவந்தி

ஒரு துளி நீர்கூட வானத்திலிருந்து விழப் போவதில்லை என்ற நிலையில், சொந்த மண்ணை விட்டு ஒட்டுமொத்தக் கிராமம் முழுதுமே அங்கிருந்து நகர்கிறது. நம்பிக்கையோடு செவந்தி மட்டும் காத்திருக்கிறாள் ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தில். தொலைதூரத்துக் குக்கிராமத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், சமூக நோக்குக்காகச் சொந்த வாழ்க்கையையும் அழித்துக்கொள்ளத் தயங்காத படிப்பறிவற்ற வெகுளிப்பெண் செவந்தி வேடத்தில் சரிதா ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கேரக்டர்.

தமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி

தன் சொந்த வாழ்க்கை, கணவன், புகுந்த வீட்டு மனிதர்கள் என அனைத்தையும் தூக்கியெறிந்தவளுக்கு, தன் கிராமத்தின் தண்ணீர்த் தேவை மட்டுமே உயிர்மூச்சாக இருக்கிறது. வயல்களில் ஏர் உழுது பல ஆண்டுகளாகிவிட்டன. குடிக்கத் தண்ணீர் கேட்டு மனு மேல் மனுவாகப் போட்டுக் காத்திருக்கிறார்கள் மக்கள். அத்தகைய அவல நிலையில் உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் தாகமென்று கேட்டால் தீர்க்க ஒரு சொட்டுத் தண்ணீர் தரக்கூட யாருக்கும் மனம் இல்லை. இந்த நிலையில்தான் நல்ல தண்ணீர் தேடி, இருபது கல் தொலைவு நடந்து சென்று தண்ணீர்ப் பானைகளைத் தலையிலும் இடுப்பிலுமாகச் சுமந்துவரும் செவந்தி, அந்தத் தண்ணீரைத் தாகம் என்று கேட்கும் வெளியூர்க்காரர் ஒருவருக்குத் தரவும் தயங்குவது இல்லை. மனம் முழுக்க வெக்கையின் தணலில் வெந்து புழுங்கினாலும் கண்களில் நம்பிக்கையை விட மறுக்கும் பிடிவாதக்காரச் செவந்தியாக சரிதா வாழ்ந்த படம்.
 
ஊரின் நன்மைக்காக ஒரு வண்டியில் தினமும் பத்து மைல் தள்ளிச்சென்று தண்ணீர் கொண்டுவருகின்ற,  தலைமறைவுக்  ‘குற்றவாளி’யைக் காவல்துறையின் கழுகுக் கண்களில் இருந்து காப்பதில் முனைந்து நிற்கும்போது செவந்திக்குத் தன்  வாழ்க்கையையே துச்சமாக நினைக்கத் தோன்றுகிறது. அந்த நேரங்களில் அவள் வெளிப்படுத்தும் எள்ளல் தொனி, போலீஸ்காரப் புருஷன் வரவால் மகிழ்ச்சியில் மனம் துள்ளினாலும், தண்ணீர் கொண்டு வரும் தலைமறைவுக் குற்றவாளிக்கு அவனால் ஆபத்து ஏற்படுமோ, அதனால் ஊருக்குத் தண்ணீர் கிடைக்காமல் போகுமோ என்ற பதற்றம் கொள்ளும் பாவம் என பலவித உணர்வுகளை அந்தப் பெரிய விழிகளில் இலகுவாகக் கொண்டு வந்திருப்பார், நடிகை சரிதா.

தமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி


தங்கள் கிராமத்துக்குத் தண்ணீர் கொண்டு வர மக்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியையும் மேலாதிக்க சக்திகள் நசுக்குவதால் விரக்தியின் உச்சத்துக்குச் செல்லும் மக்கள், மொத்தமாகக் கிராமத்தைவிட்டே வெளியேறுகிறார்கள். செவந்தி மட்டும் கண்களில் உறுதியுடனும் மனதில் மாறாத நம்பிக்கையுடனும் வானத்தை அண்ணாந்து பார்த்தவாறு நிற்பது தன்னம்பிக்கையின் உச்சம்.

‘அவள் அப்படித்தான்’ -  மஞ்சு

துரோகங்கள், ஏமாற்றுதல்கள், வஞ்சங்கள் எல்லாம் அவரவர் தர்மப்படி நியாயப்படுத்தப்படுகின்றன. ஒரு பெண் தன்னியல்பாக, தன்னெழுச்சியாக சுயமரியாதையைக் காத்துக்கொள்ளப் போராடுகிறாள். ஆனால், அந்தப் போராட்டத்தையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆண் சமூகத்தில் தன் போராட்டங்களை நம்பிக்கையுடன் தொடர ஒரு பெண் விரும்பினாள் என்றால், நிச்சயம் அவள் ‘மஞ்சு’ என்ற கதாபாத்திரமாகத்தான் இருக்க முடியும்.

பதின்ம வயதுப் பருவம் பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமானது. அந்தப் பதின்ம வயதில் பெற்றோர் மத்தியில் ஏற்படும் ஒற்றுமையின்மை எளிதாக அந்தப் பெண்ணையும் அவள் மனதையும் ஒருசேரத் தாக்கிவிடும் தன்மைகொண்டது. அவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகும் மஞ்சு, தொடர்ந்து சமூகத்தின், குறிப்பாக ஆண் வர்க்கத்தால் பகடைக்காயாக உருட்டப்படுகிறாள். நட்பு, ஆறுதல், காதல், காமம், சகோதர உறவு, அதிகாரம் என எத்தனை வடிவங்கள் உண்டோ, அத்தனை வடிவங்களிலும் அவளின் சுயமரியாதை சீண்டப்படுகிறது. அத்தனையையும் அவள் சுயமரியாதையின் துணைகொண்டே எதிர்கொள்கிறாள். அவளது எதிர்கொள்ளும் விதத்துக்காக அவள் ஏளனமும் உதாசீனமும் செய்யப்படுகிறாள். ஆனால், இந்த அவமானங்களால் கூனிக்குறுகி முடங்கி விடாமல், அதே சமூகத்தின் முன்பாக அவள் தலை நிமிர்ந்து நிற்பதை, நிற்க முயல்வதை மஞ்சுவின் தன்னம்பிக்கை என்பதா... சுயகௌரவம் என்பதா?

முற்போக்குக் கருத்துகளை எவ்வளவு பேசினாலும் நடைமுறை என்று வரும்போது, தான் ஓர் ஆண் என்ற சிந்தனை எழாத, ஆதிக்க மனோபாவம் மேலோங்காத ஆண்கள் அரிது என்பதை, மஞ்சு பாத்திரம் தன் குணநலன்கள் வழியாக, ஆணாதிக்கச் சமூகத்தின் மீதான தனது இடையீட்டின் வழியாக  நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது.

தமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ – கங்கா

கல்லூரியிலிருந்து திரும்பும்போது பிடித்துக்கொண்ட பேய் மழையில் தனக்கு லிஃப்ட் கொடுக்க முன்வந்தவனின்  (ஸ்ரீகாந்த்) காரில் ஏறியதால், ‘வல்லுறவுக்கு’ ஆளாகும் கங்காவை(லட்சுமி) இந்தச் சமூகம் எதிர்கொள்வதும், சமூகத்தை கங்கா எதிர்கொள்வதும்தான் இந்தப் படத்தின் இரு முக்கிய அம்சங்கள்.

கண நேர சபலத்துக்கு இணங்கியதால் ஒட்டுமொத்த வாழ்க்கையுமே பாழடிக்கப்படுவதை அனுமதிக்க வேண்டுமா? அது ஒரு விபத்து, ஒரு நோயைப் போன்றதுதானே! அதற்காக வாழ்க்கை முழுவதையும் அவள் இழக்க வேண்டுமா? அம்மா, மாமா போன்றவர்கள் ஆதரவளித்தாலும், அவ்வப்போது அவளை, அவள் நடத்தையை வார்த்தைகளால் குத்திக் கிழிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. அதிலும் மாமா, வயதில் மூத்தவர். கங்காவைத் தன் காம விகாரங்களுக்கு அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். அப்படியான நேரங்களில் முகம் சுளித்து அதை மறுத்து, மாமா என்பதால் அதை வெளிப்படையாக மறுக்க முடியாமல் மனதுக்குள் குமைந்து, ஒருகட்டத்தில் துணிச்சலுடன் ‘என்னைத் தொடாதேங்கோ…’ என்று ஆணித்தரமாக அறிவிப்பதில் கங்காவின் சுயம் வெளிப்படுகிறது.  

சந்தர்ப்பவசத்தால் தனது பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ள யாரை அனுமதித்தாளோ, அந்த நபரை மீண்டும் சந்திக்கும் கங்கா, அந்தத் தருணத்தில் அந்த உறவில் தன் விருப்பமும் கலந்திருந்தது என்பதைப் புரிந்துகொள்கிறாள். அவனுடன் நட்பு கொள்ளத் தொடங்கினாலும், அது காதலாகித் திருமணத்தில் முடிவதற்கு முன்பாக, அவன் சமூகச் சட்டகங்களை உதாரணம் காட்டி, வேறு திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தி அவளைக் கைவிடுகிறான். அதையும் சமூக அவலங்களில் ஒன்றாக எடுத்துக்கொண்டு தன் வாழ்க்கையைத் தன் வழியில் எதிர்கொள்கிறாள் கங்கா. அவளிடம் மிஞ்சியிருந்த அன்பு, கருணை போன்ற குணங்களைக் கொன்று தனக்குத்தானே விட்டேத்தியான எதிர்நிலையை நோக்கி அவள் தள்ளப்படுகிறாள். அவளுக்கான இயல்பான ஒரு வாழ்வை விடுத்து, சுற்றமும் சமூகமும் அந்த நிலையை நோக்கி அவளை உந்தித் தள்ளுகின்றன. எனினும், தான் கற்ற கல்வியின் வழி தன் சுயச்சார்பை அவள் உறுதிப்படுத்திக்கொள்கிறாள். 

‘கல்யாண அகதிகள்’ – அம்முலு

‘காதலில் தோல்வியடைந்தவர்களுக்கு உயிரை மாய்த்துக்கொள்வதுதான் தீர்வா?’ என்று அழுத்தமாகக் கேள்வி எழுப்பும் கேரக்டர் அம்முலு (சரிதா). ‘காதலும் வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆனால், அதுவே வாழ்க்கை அல்ல’ என்பதை அழுத்தமாகச் சொல்லும் பல பாத்திரங்கள் இந்தப் படத்தில் உண்டு. என்றாலும், அம்முலு அதில் முதல் இடம் பிடிப்பவள். கல்யாணச் சந்தையில் விலை போகாத ஆறு பெண்கள் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுடன் இணைந்து அங்கேயே அடைக்கலமாகும் அம்முலு, மீண்டும் ராபர்ட் என்ற பணக்கார இளைஞனுடன் காதல் வயப்படுகிறாள். திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் மதம் மாற வேண்டும் என காதலனின் வீட்டில் கட்டாயப்படுத்த, தனது தாய் மதத்தைத் துறக்க விரும்பாமல், அவள் தனது காதலைத் துறப்பதுதான் கதை.

இது, ஆர்.எஸ்.எஸ் அஜண்டாவைக் காதல் சாக்லெட்டில் கலந்து அளிக்கப்பட்ட படம்தான் என்றாலும், மத மாற்றம் என்பது அவரவர் விருப்பம்  என்பதை இந்துப் பெண் அம்முலு பாத்திரத்தின் மூலம் அழுத்தமாகப் பேசுகிறது. திக்கற்றுவிடப்படும் மக்களின் கடைசி அடைக்கலம் கடவுள் என்பார்கள். தமக்கு விருப்பமான கடவுளை, நம்பிக்கையை மாற்றச் சொல்பவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அது இந்துத்வா கருத்துக்கு வலுச் சேர்ப்பதாகவே அமையும். ஆனாலும், காதலா ? கடவுளா? என்ற மனப்போராட்டம் எழும்போது, மதம் பற்றிய தீவிரமான பார்வை எதுவும் இல்லாத ஒரு நாயகி, தான் பிறந்து வளர்ந்தது முதல் தொடரும் நம்பிக்கைகளை, நடைமுறைகளை எள்முனையளவும் மாற்றிக்கொள்ளத் தயார் இல்லை என்பதை ஆணித்தரமாக அறைந்து தன் முடிவைச் சொல்லுகிறாள். அம்முலு எமிலியாக மதம் மாறினால்தான் திருமணம் என்று நிர்பந்தம் செய்யும் ராபர்ட்டை நிராகரித்துவிட்டு மீண்டும் கல்யாண ‘அகதிகள்’ முகாமில் தஞ்சமடைகிறாள்.  

ந்தப் பாத்திரங்கள் தமிழ் சினிமாவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. நம்முள் நியாயமான பல்வேறு கேள்வி அலைகளை உருவாக்குபவை. 70-களில் ‘அவர்கள்’ அனு பெண்களிடம் பெற்ற பாராட்டையும் வரவேற்பையும் அடுத்து வந்த கங்கா பெறவில்லை. அனுவை விட கங்கா ஒருவகையில் பாவப்பட்ட ஜென்மம் என்றாலும், ஆண்கள் அளித்த வரவேற்பைப் பெண்கள் அவளுக்கு அளிக்கவில்லை என்பதும் உண்மை. ஜெயகாந்தனின் நாயகியாக கங்கா பெரும் அங்கீகாரம் பெற்றிருந்தாலும், சினிமாவில் அதுதான் நிலை. கங்காவின் அம்மாவுடைய மனநிலை என்னவாக இருந்ததோ, அதே மனநிலைதான் சினிமா பார்வையாளப் பெண்களுக்கும் இருந்தது. ஆனால், மஞ்சு, செவந்தி, அம்முலு பாத்திரங்கள் பெருத்த வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக மஞ்சுவைப் போன்ற பல பெண்கள் அசலாகவே இருந்தார்கள் என்பதும் உண்மை. ஆண்களுக்குத்தான் அவளைப் பிடிக்காது ஆனால், அப்படி தங்களால் இருக்க முடியவில்லையே என்ற தவிப்பில் பல பெண்கள் இருந்தார்கள். தங்களின் பிரதிநிதியாக மஞ்சுவை அவர்கள் பார்த்தார்கள்; பாராட்டினார்கள்.

தமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி

இருப்பினும், இந்தப்  பாத்திரங்கள் இங்கே ஏன் ஒருவித வரிசையில் பேசப்பட்டுள்ளன?

எந்த ஒரு நபரும் எதிர்கொள்ளும் எந்த ஒரு விளைவும் தன்வயப்பட்டது இல்லை. அதனைச் சமூகமயத்தன்மையாகக் காணும்போது சொந்தச் சோகங்கள் அகன்று அங்கு சமூகக் கோபம் கனல்கிறது.

’அவர்கள்’ அனு அத்தகையவள்தான். சாதாரணப் பொதுப்புத்தியில் அனு என்ன செய்திருப்பாள்? கணவனுடன் கொண்ட கோபத்தால் அவள் தனது முன்னாள் காதலனையோ அல்லது புதிய உறவையோ தேர்ந்தெடுத்திருக்கலாம். அது தீர்வாக அமைந்திருக்குமா என்பதற்கு அவளது அடுத்த பத்தாண்டு வாழ்க்கைதான் பதில் சொல்லும். அதிகபட்சமாக இன்னொரு குழந்தையைப் பெற்றெடுக்கலாம். ஆனால், ஆணாதிக்கச் சிந்தனை கோலோச்சும் ஒரு சமூகத்தில் அது விடையாக இருக்குமா என்பது சந்தேகமே! அதைத்தான் நாம் நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் வழியாகக் காண்கிறோம். அதே சமயம் தன் இழப்புகளைத் தனக்கு மட்டுமானதே எனக்கொள்ளாமல், அதைச் சமூக நோயாகக் காணும் ஒரு பெண் அனு செய்ததைத்தான் செய்திருக்க முடியும். அதனால்தான் அனு முதல் இடம் பெறுகிறாள்.

தமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரிஅடுத்ததாகச் செவந்தியைச் சொல்லலாம். தான், தன் குடும்பம் சார்ந்த நலன்களைத் தாண்டி தனது ஊர் மக்கள், பொதுநலன் என்று சிந்திக்கிறாள் செவந்தி. அதனால்தான், அவளால் அன்பான கணவனையும் மாமியாரையும்கூட புறக்கணிக்க முடிகிறது.

ஆனால், மஞ்சு, கங்கா ஆகியோரின் வரம்புகள் விரிவானவை. செவந்தியைப் போல் குறுகிய வட்டம் அல்ல. அது மட்டுமல்லாமல் நகரப் பண்பாட்டில் நடப்பட்ட பெண்களின் சுயமரியாதை செவந்திக்கானதைப்போல அவ்வளவு எளிதாக அங்கீகரிப்படுவது இல்லை. அதனால்தான், அவர்கள் பாசிட்டிவ் எனர்ஜியில் முன்னிலை பெற்று வரிசையில் நிற்கிறார்கள். இறுதியாக, அம்முலு தனது சுயத்தை மதத்தில் தேடுவதால்தான், இந்தக் கட்டுரை அவளைக் கடைசியில் கொண்டுவந்து நிறுத்துகிறது.

சினிமாவில் பாசிட்டிவ் பெண்களை உற்பத்தி செய்ய சினிமா தயங்கினாலும் ஒவ்வொரு பத்தாண்டுகளின் பின்னும் சில பாசிட்டிவ் பெண்களை சினிமா பிரசவித்திருக்கிறது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism