Published:Updated:

கக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி

கக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி
பிரீமியம் ஸ்டோரி
கக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி

கக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி

கக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி

கக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி

Published:Updated:
கக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி
பிரீமியம் ஸ்டோரி
கக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி

ஸ்வச் பாரதப் பிரதமரும், அரசியல்/சினிமா பிரபலங்களும் நீள நீளமானத் துடைப்பங்களோடு வீதியைப் பெருக்கும் காட்சியை, அவ்வபோது ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பார்க்கலாம். அண்மையில் ‘சூரத்’துக்குப் பயணித்த மோடியை வரவேற்க வைக்கப்பட்ட 600 கட்-அவுட்களில் கவனிக்கத்தக்கதாக ஊடகங்கள் முன்னிறுத்தியது பெருக்குமாறுடன் தெருக்கூட்டுவதைப் போன்ற சுமார் 20 அடி உயர கட் அவுட்டைத்தான். கடந்த நிதி ஆண்டில், மிகச் சரியாக 9000 கோடி ரூபாய் நிதிச் செலவில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்வாச் பாரத் அபியான்’ திரைப்படத்தின் நிரந்தர செட் பிராப்பர்ட்டிகளான ‘காய்ந்த இலைகளும் காகிதங்களுமே’ கூட்டி அள்ளப்பட வேண்டிய குப்பைகள் எனப் பிரசாரம் செய்யப்பட்டது. அதைப் பார்த்த படித்த இந்தியர்களும் படித்துக்கொண்டிருக்கும் இந்தியர்களும், இந்தியாவைத் தூய்மைப்படுத்தக் கிளம்புகின்றனர். அவர்களுக்கு எங்கேயாவது மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்துகிடப்பதைப் பார்த்தாலோ, சாலையில் காகிதக் குப்பைகள் வீசப்பட்டுக்கிடப்பதைப் பார்த்தாலோ கடுமையான கோபம் வருகிறது. உடனே பின்னணியில் ஸ்வாச் பாரத்தின் எழுச்சிப் பாடல் முழங்க, இவர்கள் பெருக்கக் கிளம்பி விடுகின்றனர். பாரதப் பிரதமர் தொடங்கி பள்ளிக் குழந்தைகள் வரை எல்லோருக்கும் - இந்தியாவில் எது கழிவு? அது எவ்வாறு ஊரையே மூழ்கடித்து, நாறடித்துக்கொண்டிருக்கிறது? அதை காலம்காலமாக யார் சுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்? ஏன் அவர்களே காலம்காலமாக அதைச் செய்து வருகின்றனர்? 9000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அவர்களுக்குச் செல்லத் தகுந்த ஓர் ஐந்நூறு ரூபாய்கூட ஏன் ஒதுக்கப்படவில்லை? என்ற அரச சதியை, சமூகப் பெருஞ்சூழ்ச்சியை அம்பலப்படுத்துகிறது ‘கக்கூஸ்’ ஆவணப்படம்.

கக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி

நாறிக்கிடக்கும் தமிழகத்தை, 360 டிகிரியில் சுற்றி வந்து, துப்புரவுப் பணியாளர்களின் நசுக்கப்பட்டக் குரல்களையும் இந்தச் சமூகம் பார்க்க மறுக்கும் அவர்களின் இழி வாழ்வையும் அப்பட்டமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் திவ்யா. இந்த நாட்டில் தலித் மக்கள் வசிக்கும் எந்த இடத்துக்குச் சென்று நீங்கள் கேமராவை ஆன் செய்தாலும், ஓடி ஒளியாமல், கூச்சப்படாமல் தாம் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகளையும் அடிமைத்தனங்களையும் கொட்டித் தீர்த்துவிடுவது அவர்களின் இயல்பு. ‘பொது’ என்ற வட்டத்துக்கு வெளியே தள்ளப்பட்ட தலித் மக்கள், தமது ஆயிரம் ஆண்டு காலப் புறக்கணிப்பின் வலியை யாராவது கேட்க மாட்டார்களா எனக் காத்துக்கிடப்பதன் அறிகுறி அது. ‘கக்கூஸ்’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி

ஆவணப்படத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.

துறை சார்ந்த நிபுணர்கள், சமூகப் ‘போராளிகள்’, தொலைக்காட்சியில் புரட்சி நிகழ்த்தும் கருத்துரையாளர்கள் என யாரையும்விட இந்த நாட்டின், உலகின் பேரிழிவான சாதியத்தின் / தீண்டாமையின் / புறக்கணிப்பின் / அநீதியின் தோலை தம் எளிய சொற்களால் உரித்துக் காட்டுகின்றனர். அந்த மக்களின் வாக்குமூலங்கள்தான் ‘கக்கூஸ்’ என்ற ஆயுதத்தின் கூர்முனை.

தாம் செய்யும் வேலையின் இழிமை குறித்து...

“இந்த ஏரியாவுல நாய் செத்துப்போச்சும்மா, போய்த் தூக்கிப் போடு”னு சொன்னாங்க. சரி இப்பத்தான் செத்திருக்கும்னு போனேன். அப்படியே வெடிச்சு, ரெண்டாப் பொளந்து, புழு வச்சு, அழுகிப்போய்க் கிடந்துச்சு. சாக்க விரிச்சு கையில பேப்பரைச் சுத்திக்
கிட்டு தூக்கிக் கொண்டுபோய் பொதச்சோம். பாக்ஸுல போட்டா பொதுமக்களுக்குச் சீக்காம். அப்ப எங்களுக்குச் சீக்கில்லையா? அப்படியே கொட கொடனு வாந்தியெடுத்து, ரெண்டு நாளைக்குச் சோறே எறங்கல. சோத்துல கைய வெச்சா அந்த ஞாபகம்தான் வருது’’

“யார் யார் வீட்டுல கக்கூஸ் இல்லயோ எல்லாத்தையும் சீல் வைங்கனு சொன்னேன். பேப்பர்ல பேண்டுருவாங்க, கவர்ல பேண்டுருவாங்க, பேண்டு கொண்டாந்து எல்லாத்தையும் இங்கே போட்டுருவாங்க. அந்த நரகல் எல்லாத்தையும் நாங்கதான அள்ளுறோம்.”

கக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி

பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து...

“துப்புரவுப் பணியாளருக்கு, ஒரு வண்டி வசதி கிடையாது, ஒரு அகப்பை கிடையாது, மம்பட்டி கிடையாது, கூட்டுமாறு கிடையாது, கையில ஓடுகூட குடுக்க மாட்டங்க. அதனால, நாங்க கையால அள்ளிப் போடுறோம். ஷூ கொடுப்பாங்க. ஆனா, அதுக்குள்ள தண்ணிபோய் அந்த வெயிட்டைத் தூக்க முடியாது. மாஸ்க் எல்லாம் சும்மா... பொதுமக்களுக்கு இவங்க மாஸ்க் போட்டு வேலை பார்க்குறாங்கனு காட்டுறதுக்கு... அதை போட்டுக்கிட்டா மூக்கு புண்ணாகிரும். அந்த கிளவுஸ் போட்டா கையெல்லாம் எரியும்.”

தனியார் மயம் குறித்து...

“ரெண்டு மாசமாச்சு சம்பளம் குடுத்து. நாங்க என்ன மண்ணையா அள்ளித் திங்கிறது? நாங்க ஆறு வருஷமா வேலை செய்றோம். அப்படின்னா எங்களுக்கு ஒரு ரெக்கார்டு இருக்கணும்ல. அதை அப்பக்கு அப்ப கிழிச்சுப் போட்டுடுறாங்க. ‘கவர்மென்ட்ல துப்புரவுப் பணியாளர வேலைக்கு எடுத்தா இருபதாயிரம் சம்பளம் கொடுக்கணும். கான்ட்ராக்ட் விட்டா 150 ரூவா கொடுத்து அஞ்சு பேர வேலைக்கு வைப்போம்’ங்கறாங்க. நாங்களும் இந்தியன் சிட்டிசன்தானே. நாங்க வெளிநாட்டுல இருந்தா வந்திருக்கோம்? ஏன் எங்களுக்கு நிரந்தர வேலை இல்ல?”

“சரி... எல்லாத்தையும் டெண்டர் விட்டுட்டாங்க. எதுக்கு முனிசிப்பால் இன்ஸ்பெக்டரையும் மேஸ்திரியையும் மட்டும் வெச்சிருக்காங்க. க்ளார்க்குங்கல்லாம் எதுக்கு இருக்காங்க. அவங்களையும் வெளியே துரத்தவேண்டியதுதான. அதென்ன தாழ்த்தப்பட்டவங்களை மட்டும் வெளியே அனுப்புறது... ஒசத்திப்பட்டவங்களை மட்டும் உள்ளே வெச்சுக்கிறது...”

மாற்று வேலை குறித்து...

“அழுகின பொணத்த நம்ம வையாபுரி குளத்துல இருந்து தரதரனு இழுத்து வெளியே போட்டேன். இதை எல்லாருமே பார்த்திருக்காங்க... எல்லா மீடியாவும் எடுத்திருக்காங்க. இப்ப நான் போய் வெளில வேலை கேட்டா, ‘பொணத்த அள்ளிப் போட்டவனுக்கு எப்படி வேலை குடுக்குறது?’னு கேக்குறாங்க. ‘சாக்கடைக்குள்ள வேலை பாத்திருக்க... நாலு பேரு சாப்பிட வந்தாங்கன்னா என்ன நினைப்பாங்க கடைய பத்தி?’னு கேக்குறாங்க. ஜவுளிக்கடைக்கு வேலைக்குப் போனாலும் அங்கேயும் பாத்ரூம் கழுவுற வேலைதான்.”

கக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி

தீண்டாமை குறித்து...

“வாடகைக்கு ஒரு வீடு பார்க்கப் போனேன். ‘நீங்க என்ன ஆளுக’னு கேட்டாங்க. ‘சக்கிலியன்’னு சொன்னேன். ‘உங்களுக்கெல்லாம் வீடு தர முடியாது, வெளில போ’னு சொல்லிட்டாங்க. ‘ஏன்’னு கேட்டேன். ‘நீங்கள்லாம் சுத்தமா இருக்க மாட்டீங்க’னு தரக்குறைவா பேசி அனுப்பிட்டாங்க. மனசு ரொம்ப கஷ்டமாப்போச்சு.”

பள்ளியில் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்து...


“புள்ளகளப் படிக்க விட மாட்டேங்குறாங்க. துரத்தித் துரத்தி விட்றானுங்க அந்த வாத்தியாருங்க. பழைய சோத்தையெல்லாம் பசங்கக்கிட்ட குடுத்துவிடுறாங்க. செப்டிக் டேங்க்ல எறங்கி சுத்தம் பண்ணச் சொல்றாங்க. திருட்டுப்பழி போடுறாங்க. தள்ளி உட்காரச் சொல்றாங்க. இதனால, புள்ளங்க ஸ்கூலுக்குப் போகாம நின்னுடுச்சுங்க. நான் படிப்ப நிறுத்துனதுக்குக் காரணமே எஸ்.சினு சொல்லி ஒதுக்குனதுதான். நீயும் வேணா, உன் படிப்பும் வேணாம்னு நின்னுட்டேன்.”

அவமானங்கள் குறித்து...

கக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி“பூரி பிச்சுக் குடுத்தா, என் பொண்ணே என் கைய பார்த்துட்டு அய்யரவு பட்டுட்டா. ‘எம்மா... உன் மேல ஒரு வாடை வருதும்மா... நீ குளிம்மா... கைய கழுவும்மா. எப்படிம்மா டீ குடிக்கிற, வடை எல்லாம் சாப்பிடுறனு’ என் பொண்ணு எனக்குச் சொல்ற அளவுக்கு இந்த வேலை என் நிலைமைய ஆக்கிருச்சு.”

நிவாரணம் குறித்து...


“ரொம்பக் கஷ்டமா இருக்கு. எங்க வீட்டுக்காரரை நினைக்காத நாளே இல்லை. அந்தளவு என்ன நல்லா பாத்துக்கிட்டாரு. எங்க வீட்டுக்காரருக்கு நடந்ததெல்லாம் கொடூரம். விஸ்வநாதனுக்கும் என் வீட்டுக்காரருக்கும் நடந்த கொடூரம் யாருக்கும் நடக்கக் கூடாதுனு கடவுளை வேண்டிக்கிறேன். எங்க ஜாதின்னா இந்த வேலைதான் பாக்கணுமா? உயிர் போயிருச்சே இவங்கத் திருப்பித் தருவாங்களா? பத்து லட்சம் யாருக்கு வேணும்? ஆயிரம்தான் இருந்தாலும், அவரு இருந்ததுக்கும் பாத்துக்கிட்டதுக்கும் ஆகுமா?”

கக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி

‘கக்கூஸ்’ முழுக்க, இப்படியான கேள்விகளும் நீதிக்கான தேடல்களுமே நிரம்பியிருக்கின்றன. அறம் எனும் அகத்தூய்மை இழந்த சமூகத்தின் புறம் எப்படிப் புழுத்துக் கிடக்கும் என்பதற்கு கழிவுகள் குவிந்துகிடக்கும் இந்த நாடே சாட்சி. இந்தியர்களின் சாதிய மனநிலையை அப்பட்டமாகத் தெரிந்துகொள்ள விரும்புவோர், பொதுக் கழிப்பிடங்களைத் திறந்து பார்த்துக்கொள்ளலாம். அங்கு என்ன நீங்கள் காண்பீர்களோ அப்படித்தான் சாதிய மனமும். வாழைஇலையில் மலம் கழித்து அதை பயபக்தியோடு எடுத்துப்போட மனிதர்களை வைத்திருக்கும் சங்கராச்சாரிகளைக்கொண்ட நாடு வேறெப்படி இருக்க முடியும்?

துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமே புழங்கக்கூடியது என ஒதுக்கப்பட்ட இடங்களான கழிவறைகள், அவர்கள் வெறுங்கைகளால் சுத்தம் செய்யும் காட்சிகள் பொதுப் பார்வையிலிருந்து மறைக்கப்படுகின்றன. நூறு ஆண்டுகால வரலாறுகொண்ட எந்தத் தமிழ் சினிமாவும் இதைப் பதிவுசெய்யவில்லை. எந்தச் செய்திச் சேனலுக்கும் பொதுக் கழிப்பிடங்களையும் அங்கே சிறைபடுத்தப்பட்டத் துப்புரவுப் பணியாளர்களின் அவலநிலையையும் காட்சிப்படுத்தும் துணிவில்லை. ஆனால், ‘கக்கூஸ்’ அறஉணர்வோடு அதைப் பதிவுசெய்திருக்கிறது. ‘நாகரிக மனிதர்கள்’ கண்களால் காண விரும்பாத மலக்குவியல்களுக்கு க்ளோஸ் அப் ஷாட் வைப்பதன் மூலமாகவே பொதுப் புத்தியின் மேல் - ஆதிக்க  எதிர்ப்பு அரசியல் எனும் பாறாங்கல்லைத் தூக்கி வீசுகிறார் திவ்யா.

மனித மலத்தை மனிதரே அள்ளும் இழிவு உலகில் வேறெங்குமே இல்லை. கொடுமையான வதைக்கூடங்களில்கூட சித்ரவதை முறையாக இந்தக் கொடூரம் இல்லை. அப்படியெனில், இதைக் கொடூரங்களின் கொடூரம் என்றுதான் வகைப்படுத்த முடியும். ஆனால், புனிதம் மற்றும் இழிவின் அடிப்படையிலான குலத்தொழில் முறையை இன்றும் உயிர்ப்போடு வைத்திருக்கும் இந்தியா, ‘ஒரே ராக்கெட்டில் 104 சாட்டிலைட்டுகளை அனுப்பும்’ நவீன சாதனைகளுக்கு மத்தியிலும் அடிமைத் தொழில்களை அழிந்துவிடாமல் பாதுகாக்கிறது. செத்தால் தன் பிணத்தின் முன் இவர்கள் ஆட வேண்டும், தன் தீட்டுத்துணியைக்கூட இவர்கள்தான் வெளுக்க வேண்டும், தனது அந்தரங்கப் பகுதிகளில் உள்ள மயிர்களைக்கூட மறுப்புச் சொல்லாமல் சிரைத்துவிட வேண்டும், மிக முக்கியமாக, தான் கழிந்ததை அள்ளிப் போட வேண்டும்.

கக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி

‘எந்தக் காலத்தில் இருக்கீங்க... அதெல்லாம் மாறிடுச்சு’ எனச் சமூக வலைதளங்களில் வாதம் செய்கிறவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பரிசோதித்து ‘கக்கூஸ்’போல மற்றுமோர் ஆவணப்படத்தை எடுக்க முயற்சிக்கலாம். சிறு/பெரு நகரங்களில் ‘துப்புரவுப் பணியாளர்’ என்று அடையாளப்படுத்தப்பட்டு அரசாங்கத்திலோ, நிறுவனங்களிலோ வேலை செய்கிறவர்களுக்கே இத்தனை கொடுமை எனில், ஓரளவுக்குப் படித்து, முன்னேறிய, நாட்டு நடப்பும் உலக நடப்பும் தெரிந்தவர்களே அதை நிகழ்த்துகின்றனர் எனில், கிராமப்புறச் சேரிகளில் வசிக்கும் தலித் மக்களின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா?

கையால் மலம் அள்ளும் இழிவை ஒழித்து சட்டமியற்றி, கால் நூற்றாண்டு காலமாகிவிட்டது. மலம் அள்ளும் இழிவைப்போல சாதியின் பெயரால் நடக்கும் எல்லா அநீதிகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கச் சட்டம் இருக்கிறது. பொது மக்களாக இருந்தாலும் அரசாள்பவர்களாக இருந்தாலும் இந்து சனாதன மூளை அதை மதிப்பதே இல்லை. ஒப்பந்தப் பணியாளர்களை ஒப்பிடும்போது நகராட்சி ஊழியர்களாக நியமனம் செய்யப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள், ஊதிய அடிப்படையிலான சில சலுகைகளைப் பெறுகின்றனர். அவ்வளவே. ஆனால், வேலையில் எந்த வித்தியாசமும் இல்லை. கைகளால் மலம் அள்ளுவதும், சாக்கடையைச் சுத்தம் செய்வதும், செப்டிக் டேங்கில் இறங்குவதுமாக அரசே தொடர்ந்து சட்ட மீறலில் ஈடுபட்டுவருகிறது.

கக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி

அண்மையில் கடலூரில் விஷவாயுத் தாக்கி இறந்தவர்கள் சென்னை கழிவுநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்தான். ‘கக்கூஸ்’ படத்தில் ஒருவர் சொல்கிறார், “பேருதான் துப்புரவுப் பணி, அரசாங்க வேலை. ஆனா, உண்மையில தாழ்த்தப்பட்டவங்க, அடிமை வேலை.” ஒரு சாதிய அநீதி, எவ்வாறு பொதுச் சமூகத்தாலும் அரசாலும் நிகழ்த்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள ‘கக்கூஸி’ல் ஒலிக்கும் குரல்களைக் கேட்க வேண்டும். கைகளால் மலம் அள்ளும் இழிவை அப்படியே வைத்துக்கொண்டுதான் ‘ஸ்வச் பாரத்’, ‘மேக் இன் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’ போன்ற புரட்சிகள் இங்கே நிகழ்த்தப்படுகின்றன.

செப்டிக் டேங்கில் விஷவாயுத் தாக்கி மரணிப்பவர்களுக்கு, பத்து லட்சம் ரூபாய் நிவாரணப் பணத்தை அளிக்க வேண்டும் எனப் பல தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி இப்போது நிவாரணங்கள் அளிப்பது சில நிகழ்வுகளில் சாத்தியப்பட்டிருக்கிறது. ஆனால், நிவாரணம் ஒருபோதும் நீதியாகாது. மலக்குழிக்குள் மகனையும் கணவனையும் காவுகொடுத்த பெண்கள், இதுபோல இன்னொருவர் சாகக் கூடாது என்பதையே தங்களுக்கான நீதியாகப் பார்க்கிறார்கள். இயக்குநர் திவ்யாவை இந்தப் போராட்டத்துக்குள் கொண்டுவந்த, மறைந்த துப்புரவுத் தொழிலாளி முனியாண்டியின் மனைவி, ‘பத்து லட்சம் யாருக்கு வேணும்..., போன உசிரு வருமா? இந்தக் கொடுமை வேற யாருக்கும் நடக்கக் கூடாது’ என்கிறார். அநீதிக்குப் பலியாகும் மக்களுக்கு, அந்த அநீதியைத் தடுத்து நிறுத்துவதைவிட வேறு எது நீதியாக அமைந்துவிட முடியும்? சட்டப்படி தடைசெய்யப்பட்ட ஒரு பேரிழிவில் மனிதர்களைத் தொடர்ச்சியாக ஈடுபடுத்திக் கொலை செய்யும் குற்றவாளிகள் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. அவ்வாறு தண்டிக்கப்பட்டால், இந்தியாவின் எல்லா மாநில அரசுகளையுமே தண்டிக்க வேண்டிவரும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism