Published:Updated:

`` `காலா' டைட்டிலில் ஏன் `பாட்டில்' இல்லை?" - இரஞ்சித் ஐடியா சொல்லும் அஞ்சலி `பாட்டில்'

சமூக வலைதளங்களில் `காலா'வின் புயல் இன்னும் மையம் கொண்டிருக்கிறது. ஆம், `காலா' படத்தில் `புயல்' கதாபாத்திரத்தில் நடித்தவர், அஞ்சலி `பாட்டில்' ;  ஆனால் காலாவில் `பாட்டில்' இல்லை! விவரம் கடைசி கேள்வி-பதிலில் ( ஓர் அறிமுகத்திற்காக மட்டுமே இந்த இடத்தில் அஞ்சலி பாட்டில்! ).

`` `காலா' டைட்டிலில் ஏன் `பாட்டில்' இல்லை?" - இரஞ்சித் ஐடியா சொல்லும் அஞ்சலி `பாட்டில்'
`` `காலா' டைட்டிலில் ஏன் `பாட்டில்' இல்லை?" - இரஞ்சித் ஐடியா சொல்லும் அஞ்சலி `பாட்டில்'

நடிக்க வந்த எட்டு வருடங்களில் 17 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.  இந்த எட்டு வருடத்திற்குள்ளாகவே `சக்ரவியூஹா', `மிஸஸ் ஸ்கூட்டர்', `நியூட்டன்', `நா பங்காரு தல்லி', `த சைலன்ஸ்'... இப்படி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம் எனப் பல்வேறு மொழிகளில் தேர்வு செய்து நடித்து வருகிறார். அத்தனை படங்களிலும் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார்.

இந்திய சினிமாவின் முக்கியமான நடிகை என்பதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் சாதாரண கல்லூரி மாணவிபோல் இயல்பான குறும்போடு இருக்கிறார் அஞ்சலி. ``இவ்வளவு பெரிய வரவேற்பை எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப சந்தோஷம்!" - கொஞ்சம் தமிழும் நிறைய ஆங்கிலமுமாகப் பேசுகிறார் அஞ்சலி. 

``எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் இந்தியாவின் பல்வேறு மொழிப் படங்களில் தடம் பதித்திருக்கிறீர்கள், எப்படி இருக்கிறது இந்தப் பயணம்?"  

``நல்ல கதைகளில் நடிக்க இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். இந்திய சினிமாவில் வெற்றிபெற, சினிமா பின்னணி தேவை எனப் பலரும் நினைக்கிறோம். அப்பா, அம்மா, அத்தை, மாமா என யாரோ ஓர் உறவினர் சினிமாவில் இருந்தால்போதும், வெற்றி பெற்றுவிடலாம் என நினைப்பதே தவறு. உறவினர்கள், பணம், சாதி என எதுவும் தேவையில்லை. திறமையும் கடின உழைப்பும்தான் சினிமாவில் ஜெயிக்க முக்கியத் தேவை. சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகளும் வருவார்கள். அவர்களும் தங்களை நிரூபிக்கப் போராடித்தான் ஆக வேண்டும். எளிதில் யாரும் வெற்றிபெற்றுவிட முடியாது. ஆனால், என் பின்னணி ஒவ்வொரு கலைஞனுக்கும் இருந்தால் சிறப்பாக இருக்கும். நான் நாடகப் பள்ளியில் ஏழு வருடங்கள் படித்தேன். 365 நாள்களும் இடைவெளியில்லாமல் வேலை செய்வோம். கடினமாக உழைப்போம், கற்றுக்கொள்வோம். இந்தப் பின்னணியே போதுமானது."

``உங்கள் பதினாறு வயதிலேயே நடிப்புதான் எதிர்காலம் என முடிவெடுத்து, வெற்றிகரமாகப் பயணித்து வருகிறீர்கள், இதுவரையிலான உங்களது முடிவுகளைப் பற்றி?" 

``நான் சிறுவயதில் எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் இயல்புடையவளாகவே வளர்ந்தேன். என் அனுபவங்களின் மூலம்தான் பலவற்றையும் தெரிந்துகொண்டேன். நான் எப்போதும் தனியாகவே இருக்க விரும்புபவள். எந்த வரையறைக்குள்ளும் சிக்கிக்கொள்ள விரும்பியதில்லை. என் விதிமுறைகளை நானே வகுத்துக்கொள்ள விரும்புபவள். எங்கிருந்து இவ்வளவு பலம் வந்தது எனத் தெரியவில்லை. எனக்கும் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மருத்துவம், பொறியியல், இவற்றைப் படிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். என் கற்பனைத் திறனுக்கும் நடிப்புக்கும் தீனிபோடும் படிப்பைப் படிக்க நினைத்தேன். நாடகப் பள்ளியில் சேர்ந்தேன். நாடகப் பள்ளியில் மனப்பாடம் செய்யவேண்டாம் என்பதே பெரிய ஆறுதல். இன்றும் நான் நிறைய வாசிக்கிறேன். எனக்குப் பிடித்ததைப் படிப்பதே மகிழ்ச்சியாக இருந்தது. உலக சினிமாக்கள், வரலாறு... எனப் பலவற்றை நாடகப் பள்ளியில் தெரிந்துகொள்ள முடிந்தது. நான் எதையும் திட்டமிட்டு முடிவு செய்வதில்லை. பிடித்த விஷயங்களைச் செய்கிறேன், அவ்வளவுதான்." 

``தேசிய நாடகப் பள்ளியின் அனுபவம் எந்த மாதிரியானது?" 

``மிகவும் ஆழமான அனுபவம். நிறைய வாசிக்க வேண்டும். பலவற்றை கூர்ந்து கவனிக்க வேண்டும். படிக்க வேண்டும். இந்தியாவைப் பற்றி மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளில் இருப்பது பற்றியும் தெரிந்துகொள்ளலாம். நடிப்புப் பாணிகளைக் கற்றுக்கொள்ளலாம். இயக்கம் குறித்தான நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். நாடகப் பள்ளியில் படித்தாலும் நான் நடிப்பு குறித்துப் படிக்கவில்லை. நான் நடிப்பு பயின்றதாகத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இயக்கம், நாடக வடிவமைப்பு குறித்துதான் அதிகம் பயின்றிருக்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டட வடிவமைப்பு, ரஷ்யாவில் உள்ள ஒரு தியேட்டர் எனப் பலவற்றைத் தெரிந்துகொள்வோம். நாடகப் பள்ளியிலிருந்து இப்படிப் பலவற்றை எனது வாழ்க்கைக்கும் நடிப்புக்கும் கற்றுக்கொண்டுள்ளேன்." 

`` `டெல்ஹி இன் எ டே', `மிஸஸ் ஸ்கூட்டர்', `வித் யூ வித் அவுட் யூ' என உங்களது பெரும்பாலான திரைப்படங்களில் விளிம்புநிலை மக்களின் கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளீர்கள். கதாபாத்திரத் தேர்வுக்கு உங்களுடைய மாநிறம் ஒரு காரணமா?" 

``ஆமாம், அதுவும் ஒரு காரணம்தான். என் தோற்றத்தை வைத்தே கதாபாத்திரத்தை முடிவு செய்கின்றனர். உண்மையில் நம் நாட்டில் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் மாநிறம் அல்லது கறுப்பாகத்தான் இருக்கிறார்கள். நாடு முழுவதும் நிறம் குறித்த குறுகிய மனப்பான்மைதான் நிலவுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். புராணங்களில்கூட இவை இருக்கிறது. நிஜத்தில் இருக்கும் பெண்களைத் திரைப்படங்களில் பிரதிபலிப்பது பெருமையான விஷயமாகத்தான் பார்க்கிறேன். கமர்ஷியல் திரைப்படங்கள் பொழுபோக்குக்காக மட்டுமே பயன்படுகின்றன. ஆனால், நிஜக் கதைகளையும் நிஜ மக்களையும் அவர்களது போராட்டத்தையும் யார் சொல்வது? இதுபோன்ற கதைகளை முன்முடிவோடு தேர்ந்தெடுப்பதில்லை. அதுபோன்ற கதாபாத்திரங்கள் மட்டுமே எனக்கு வருகின்றன. அவற்றில் எனக்குப் பிடித்ததைச் செய்கிறேன்."

`` `வித் யூ வித் அவுட் யூ' வெளியானபோது தமிழகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?"  

``தெரியும். அது எனக்கு வருத்தம்தான். தமிழ் மக்கள் இலங்கை பிரச்னையில் உணர்வுபூர்வமாக இருப்பவர்கள். ஆனால், அந்தத் திரைப்படத்தின் கதை அரசியலைத் தாண்டி இருவருக்கு இடையேயான காதலைப் பேசுகிறது. `வித் யூ வித் அவுட் யூ' சோகமான ஒரு காதல் கதை. இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண், முன்னாள் சிங்கள ராணுவ வீரனைத் திருமணம் செய்கிறாள். இருவருக்குள்ளும் அன்பு இருக்கிறது. ஆனால், அவர்களால் வரலாற்றை மாற்றமுடியாது. அதுவே அவர்களை வதைக்கிறது. அந்த ராணுவ வீரனும் மனிதன்தான். அவன் அவளைக் காதலிக்கிறான். என்னால் இப்படி நிறையப் பேசமுடியும். அதனைத் திரையிடவிடாமல் செய்தது என்பது ஒடுக்குமுறைதான். பிரச்னை சம்பந்தமானது என்றாலே அந்தத் திரைப்படத்துக்குத் தடை விதிப்பது தவறானது. மக்களும் சரி அரசாங்கமும் சரி.. விதிவிலக்கல்ல. இங்கு நாம் நமது அறிவைப் பயன்படுத்த வேண்டும். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்வதும், உரையாடுவதும்தான் நிகழ்ந்திருக்க வேண்டும். தடை என்பது சரியல்ல."  

``இந்திய சினிமாவில் கதாநாயகிகளும், அவர்களது நிறமும் பிரிக்க முடியாதவை. பாலிவுட், கோலிவுட் என எங்கு இந்தத் தாக்கம் அதிகமாக இருக்கிறது?" 

``எல்லா இடத்திலும் இது இருக்கிறது. ஆனால், பிராந்திய மொழிகளில் அவ்வளவு இறுக்கம் இருப்பதில்லை. பெங்காலி, மராத்தி போன்ற மொழிகளில் நிஜ மனிதர்களுக்கான இடம் அதிகமாக இருக்கிறது. விளிம்புநிலை மனிதர்கள் மட்டுமல்ல, சாதாரண மனிதர்கள் நிறம் மாநிறமும் கறுப்பும்தான். தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும்கூட மக்களின் கதைகளைத் திரைப்படமாக்க முனைகின்றனர். நல்ல கதைகளை மக்கள் என்றுமே வெற்றிபெறச் செய்வார்கள். `காக்கா முட்டை' ஓர் உதாரணம். நான் ஏன் நிறப் பாகுபாடு குறித்துப் பேசுகிறேன் என்றால், தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறேன், போராடியிருக்கிறேன் என்பதைத் தாண்டி.. ஒட்டுமொத்தச் சமூகமும் இப்படித்தான் இருக்கிறது. நான் ஆதிவாசியாக நடித்தால், ஆதிவாசியாகவே நடிக்கத் தள்ளப்படுகிறேன். நக்சலைட்டாக நடித்தால், தொடர்ந்து நக்சலைட்டாக நடிக்க வேண்டியிருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் பிரச்னைகள் குறித்துப் பேசவேண்டும். யார் பேசினால் தாக்கம் அதிகமாக இருக்குமோ, அவர்கள் பிரச்னைகள் குறித்துப் பேசவேண்டும். நான் இந்தப் பிரச்னை குறித்து மட்டும் சொல்லவில்லை. சமூகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அதிகாரத்தில் இருப்பவர்கள் பேச வேண்டும். இந்த நேர்காணல் மூலம் குறைந்தது 10 நபர்களாவது நிறம் குறித்த அறியாமையிலிருந்து வெளியே வருவார்கள் என்று நினைக்கிறேன். யாராவது உங்களை அழகில்லை எனச் சொன்னால், அவர்களுக்குத்தான் பிரச்னை. இந்த நம்பிக்கையை யாரிடமாவது ஏற்படுத்த முடிந்தால், கண்டிப்பாக அதைச் செய்வேன். நம்பிக்கைதான் தேவை அழகுசாதனப் பொருள்கள் அல்ல."

`` `நா பங்காரு தல்லி', `த சைலன்ஸ்' என பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறீர்கள், எப்படி இந்தத் தேர்வு?"

``நான் பெரும்பாலும் தனியாகத்தான் பயணம் மேற்கொள்கிறேன். பெண்கள் தனியாகப் பயணம் மேற்கொள்ள முடியாது என்பது பொதுவான எண்ணமாக இருக்கிறது. வெளிநாட்டுப் பெண்களுக்கு இப்படிக் கட்டுப்பாடு இல்லை. எனது வாழ்க்கையை நான் சொந்த விதிமுறைகளின்படி வாழ்கிறேன். எந்த அர்த்தமும் இல்லாத கதாபாத்திரங்களைச் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. படங்களில் காட்டக்கூடிய கவர்ச்சியான கதாபாத்திரங்களுக்குக்கூட உணர்வுகளும் அறிவும் பின்கதையும் இருக்கிறது. அதனால், நான் தேர்ந்தெடுக்கிற கதைகள் உண்மையைப் பேசுவதாக இருக்கலாம். பாதிக்கப்பட்ட பெண்ணாக, மிகவும் தைரியமான பெண்ணாக நடித்திருக்கிறேன். சினிமா வைத்திருக்கும் சட்டகங்களுக்குள் சிக்காமல் இருக்கவே விரும்புகிறேன். சாதி, மதம், பால் அடையாளம் என எல்லாவற்றையும் துறந்தவளாகவே இருக்க விரும்புகிறேன்."

``பயணங்கள் மூலம் நீங்கள் பெற்றது?" 

``நடிப்பு எனது வாழ்க்கையின் சிறுபகுதிதான். பெரிய வெற்றிகள், அரண்மனை போன்ற வீடு, கார், நம்பர் ஒன் இடம்... இவையெல்லாம் மகிழ்ச்சி தரும் என நினைத்தேன். ஆனால், பயணங்கள் மட்டுமே மகிழ்ச்சி என உணர்ந்திருக்கிறேன். தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டேன். பெரிய நகரங்களில் என்னால் இருக்க முடியாது. பெரும்பாலான நாள்களில் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும்தாம்  வாழ்க்கையைக் கழிக்கிறேன். இப்படியாக எனது வாழ்க்கையை நானே வடிவமைத்துக்கொண்டேன். இதுவரையிலான வாழ்க்கையில் பெற்ற வலிகள், அனுபவங்களிலிருந்து பயணம் எனக்குப் பிடித்த விஷயமாக மாறிவிட்டது. தவிர, அது நடிப்புக்கும் உதவுகிறது."

`` `காலா'வுக்கு முன்பு தாராவி குறித்த எண்ணம் எப்படி இருந்தது, `காலா' வுக்குப் பின் எப்படி இருக்கிறது?" 

``தாராவியிலும் படப்பிடிப்பு நடந்தது. அங்கிருக்கும் வாழ்நிலையை மிக நெருக்கமாகப் பார்க்க முடிந்தது. தாராவியைப் பற்றிய வாசிப்பில்லாமல் அதைப் புரிந்துகொள்ள முடியாது. அங்கு வேறு உலகம் இருக்கிறது. பொதுப்படுத்தலில்தான் குடிசைப் பகுதிகளைப் பார்க்கிறோம். அப்படி இல்லை. நாம் உள்ளே சென்று பார்த்தால்தான், அந்த வாழ்க்கை புரியும். நான் இப்போது நடித்துள்ள `மேரே பியாரே பிரைம் மினிஸ்டர்' எனும் இந்திப் படத்திலும் குடிசைப் பகுதிதான் கதைக்களம். குடிசைப் பகுதிகளில் அவர்கள் ஏழையாக இருப்பதில்லை. பணக்காரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அதற்கான அரசியல் காரணங்கள் வேறு."

``ரஞ்சித்துடன் வேலை செய்த அனுபவம்?" 

``ரஞ்சித்தின் அரசியல் கருத்துகள் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால், அவர் அரசியல் அறிவுமிக்கவர் என்பதில் சந்தேகமில்லை. என்னைப் பொறுத்தவரை, திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், சிலவற்றைப் பேசுவதாகவும் இருக்க வேண்டும். கருத்துகள் மாறுபட்டதாக இருக்கலாம். ஆனால், நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடையவர்கள். ஒரு படைப்பாளியாக ரஞ்சித் தன்னுடைய சமூகப் பொறுப்பை நன்கு உணர்ந்தவர். இருவரும் சிலவற்றைப் பேசினோம். நான் மிகவும் மதிக்கக்கூடிய நபர்களில் ஒருவர். மிக நேர்த்தியான படைப்பாளி. சூப்பர் ஸ்டார் இருக்கும் படத்தில் அத்தனை கருத்துகளையும் சொல்வது என்பது கடினமான விஷயம். மிகுந்த அழுத்தத்துக்கு இடையில் நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறார். சமூகம் மேம்படுவதற்கான முயற்சிகளை ரஞ்சித் எடுக்கிறார். சமூகத்துக்குக் கற்றுத்தர முயன்றுகொண்டே இருக்கிறார். அதுதான், அவர் மீதான மரியாதைக்குக் காரணம்." 

``திரைத்துறைக்கு வரும் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?"

``வெறுமனே அழகு மட்டும் போதாது. நடிப்புத் திறன்களை மேம்படுத்துவதில் அதிகச் சிரத்தை எடுக்க வேண்டும். அழகு, நடனம் போன்றவை தேவைதாம். ஆனால், அது மட்டுமே முக்கியமானவை அல்ல. உலகம் முழுவதும் பல்வேறு நடிகைகள் கதைக்காகவும் கதாபாத்திரத்துக்காகவும் நிறைய உழைக்கிறார்கள். அதில் கொஞ்சமாவது நாமும் உழைக்க வேண்டும்."

``தேசிய நாடகப் பள்ளியில் இயக்கம் படித்திருக்கிறீர்கள், உங்களிடமிருந்து எப்போது ஒரு படைப்பை எதிர்பார்க்கலாம்?"

``கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்போது காதல் குறித்த ஓர் ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறேன். தமிழில் சில கதைகளைக் கேட்டு வருகிறேன். இந்தி, மராத்தியில் சில படங்கள் நடித்துக்கொண்டிருக்கிறேன்."

`` `காலா' திரைப்படத்தில் உங்கள் பெயரில் இருக்கும் `பாட்டில்' நீக்கப்பட்டிருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"  

``ரஞ்சித்தின் உதவி இயக்குநர் என்னைத் தொடர்புகொண்டு, அதைச் சொன்னார். (இந்தியாவின் பல பகுதிகளில் சமூகத்தின் பெயரை தங்களது பெயரோடு சேர்த்துக் கொள்வது இயல்பு.. மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அஞ்சலியும் அஞ்சலி பாட்டில் ஆனது அப்படித்தான்.)  அதை நீக்குவதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சிதான். என்னைப் பொறுத்தவரை, பெயர் ஒரு விஷயமே அல்ல. நான் இங்கு புகழ்மிக்கவளாக இருக்கலாம். ஆனால், ஆப்பிரிக்காவுக்குச் சென்றால் என்னை யாருக்கும் தெரியாது. அதிகாரம், சாதி, புகழ் இதையெல்லாம் உடன் வைத்துக்கொண்டு அலைய முடியாது. மனிதம் ஒன்றுதான் உலகம் அனைத்துக்கும் பொதுவானது. அதைச் சாத்தியப்படுத்த சாதி, அதிகாரம், பணம் என எல்லாவற்றையும் நோக்கிக் கேள்வி கேட்க வேண்டும்."

இந்த மிக நீண்ட உரையாடலில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிய பொறுமை வியக்கக்கூடியது என்றால், அவரது எளிமை இன்னும் வியப்பானது. எளிமை எப்போதும் கம்பீரமானதுதான். அதுவும் இந்தப் புயலின் எளிமை இன்னும் கம்பீரமானது.