Published:Updated:

``கருத்தம்மா, சேது, நந்தா-லாம் வரம்... இப்போ ஒன்லி குடும்பம்!" - ராஜாஶ்ரீ `அப்போ இப்போ' பகுதி 18

சனா

`அப்போ இப்போ' தொடருக்காக `கருத்தம்மா' படத்தில் நடித்த நடிகை ராஜஶ்ரீ, அவரது சினிமா பயணத்தைப் பற்றிச் சொல்கிறார்...

``கருத்தம்மா, சேது, நந்தா-லாம் வரம்... இப்போ ஒன்லி குடும்பம்!" - ராஜாஶ்ரீ `அப்போ இப்போ' பகுதி 18
``கருத்தம்மா, சேது, நந்தா-லாம் வரம்... இப்போ ஒன்லி குடும்பம்!" - ராஜாஶ்ரீ `அப்போ இப்போ' பகுதி 18

``நான் பிறந்தது ஹைதராபாத் சிட்டி. ஒன்பது வயசுல இருந்து தமிழ் சினிமாவுல இருக்கேன். பலரும் நான் `கருத்தம்மா' படத்துலதான் அறிமுகம் ஆனேன்னு தப்பா நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அதுக்கு முன்னாடியே நான் சினிமாவுல இருக்கேன்!'' - தன் `அப்போ இப்போ' கதையைச் சொல்லத் தொடங்குகிறார், நடிகை ராஜாஶ்ரீ.  

``அப்பா பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்தார். அம்மா ஹவுஸ் வொய்ஃப். எனக்கு ஒரே ஒரு தங்கச்சி. பேரு, மிதுனா. அவளும் சினிமாவுலதான் இருக்கா. நாங்க ரெண்டுபேரும் சின்னப் பொண்ணா இருக்கும்போதே சென்னைக்கு வந்துட்டோம். வளர்ந்தது எல்லாம் இங்கேதான். ஹபிபுல்லா சாலையிலதான் எங்களுடைய வீடு இருந்துச்சு. அப்பாவோட கடையும் பக்கத்துலதான் இருந்தது. ஸ்கூல் லீவ்ல அப்பாவோட கடைக்குப் போவேன். அப்போ அங்கே வந்த சில சினிமாக்காரங்க என்னைப் பார்த்துட்டு, குழந்தை நட்சத்திரமா நடிக்க வைக்கலாம்னு அப்பாகிட்ட கேட்டாங்க. அப்பாவும் `சரி'னு சொல்லிட்டார். 

ஒன்பது வயசு இருக்கும்போது `பச்சைக்கிளி' என்ற படத்தில் அறிமுகமானேன். தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமா நடிச்சேன். அந்தக் காலத்துல நடிகர் சங்கத்துலதான், ஆடிஷன்ஸ் வெச்சு குழந்தை நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுப்பாங்க. அந்தக் குழந்தைகள்தாம் எல்லா மொழிப் படங்களிலும் நடிப்பாங்க. நான் அதுல செலக்ட் ஆனேன். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம்னு நான்கு மொழிகள்ல முப்பதுக்கும் அதிகமான படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சேன். தவிர, நடிகர் சங்கம் சார்பாக நடனப் பயிற்சிகளும் கொடுப்பாங்க. அப்போ, நான் கலா மாஸ்டர் ஸ்டூடன்ட்! 

கன்னடப் படத்துலதான், நான் முதல் முதல்ல ஹீரோயினா அறிமுகம் ஆனேன். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பையனோட அமைஞ்சது. இரண்டாவது படம் தமிழில், `கருத்தம்மா'. கன்னடப் படத்துல நடிச்சு முடிச்ச சமயத்துல டைரக்டர் பாரதிராஜா சாரோட மேக்கப்மேன் ஒருத்தர், `பாரதிராஜா சார் அவரோட அடுத்த படத்துக்காக நடிகையைத் தேடிக்கிட்டு இருக்கார்'னு அப்பாகிட்ட சொன்னார். அப்பா என்னைக் கூட்டிக்கிட்டு போய், பாரதிராஜா சார்கிட்ட அறிமுகப்படுத்தி வெச்சர். அவர், தமிழில் பெரிய இயக்குநர்னு அப்போ எனக்குத் தெரியாது. என்னை உற்றுப் பார்த்துட்டு, கையில சில டயலாக் பேப்பர்ஸ் கொடுத்துப் படிக்கச் சொன்னார், படிச்சேன். மேக்கப் டெஸ்ட் எடுத்தார். `கருத்தம்மா' கேரக்டருக்கு நான் ஓகேவா இருப்பேன்னு அவருக்குத் தெரிஞ்சது. என்னைப் படத்துல கமிட் பண்ணிட்டார். 

அவர் படத்துல நடிச்சபிறகுதான், அவர் எவ்ளோ பெரிய இயக்குநர்னு எனக்குத் தெரிஞ்சது. சினிமாவைத் தாண்டி பல விஷயங்களைப் பற்றி பேசுவார். நடிகை எப்படி இருக்கணும்னு அறிவுரையெல்லாம் சொல்வார். `கருத்தம்மா' படம் எனக்கு நிறைய விருதுகளை வாங்கிக் கொடுத்தது. தமிழில் என் முதல் படமே நல்ல பெயரை வாங்கிக்கொடுத்ததுல, என்னைவிட எங்க அப்பாவுக்குத்தான் பெரிய சந்தோஷம். தொடர்ந்து தமிழ்ல மட்டுமல்லாம, பிறமொழிப் படங்களிலும் ஹீரோயினா நடிச்சேன். பிறகு, சினிமாவுல கொஞ்சம் இடைவெளி கொடுத்துட்டு சீரியல்ல நடிச்சுக்கிட்டு இருக்கும்போதுதான், இயக்குநர் பாலா சாரை சந்திச்சேன். `சேது' படத்துக்காக என்கிட்ட பேசினார். அப்போ நான் டிவி சீரியல்ல பிஸியா இருந்தேன். முதல்ல கால்ஷீட் இல்லைனு மறுத்தேன். `சேது' படத்தோட முழுக் கதையையும் பாலா சார் என்கிட்ட சொன்னார். என்னைத்தவிர, அந்தப் படத்தோட கதை வேறு நடிகர்களுக்குத் தெரியாது. 

படத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டார். `இந்த கேரக்டர் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்'னு சமாதானப்படுத்தி, நடிக்க வெச்சார். சொன்ன மாதிரியே, அந்த கேரக்டர் எனக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது." என்றவர், தொடர்ந்தார். 

``நடிச்ச எல்லோருக்கும் `சேது' முக்கியமான படமா அமைஞ்சது. பெரும்பாலும் புதுமுகங்கள்தாம். ஆனா, ஜூனியர்ஸ் மாதிரி யாரும் வேலை பார்க்கலை. முக்கியமா, பாலா சார். அவர் என்ன பண்றார்னு ஸ்பாட்ல பார்க்கும்போது எதுவும் தெரியாது. அவுட்புட்ல அவ்வளவு விஷயங்கள் பண்ணியிருப்பார்.  

`சேது'வுக்குப் பிறகு `நந்தா' படத்தில் சூர்யாவுக்கு அம்மாவா நடிச்சேன். இந்த கேரக்டர்ல முதல்ல நந்திதா தாஸ்கிட்டதான் பேசியிருந்தார், பாலா சார். `அம்மா' கேரக்டர் என்பதால், நந்திதா தாஸ் நடிக்க மறுத்துட்டாங்க. என்கிட்டயே பலர், `சூர்யாவுக்கு அம்மாவா நடிக்கிறியா?'னு கேட்டாங்க. எனக்கு பாலா சார்மேல நம்பிக்கை அதிகம். உடனே ஓகே சொன்னேன். அந்தப் படம் வந்த சமயம், எங்கே போனாலும் `நந்தா' படத்துல அம்மா கேரக்டர்ல நடிச்சது நீங்கதானேனு சந்தோஷமா விசாரிப்பாங்க. இப்படி, சினிமாவில் மறக்க முடியாத சில படங்களில் நான் நடிச்சதே பெரிய வரமா நினைக்கிறேன்.  

திருமணத்துக்குப் பிறகு, சினிமாவுல நடிக்க அவ்வளவா ஆர்வமில்லை. 99 சதவிகிதம் நான் குடும்பத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். மீதி இருக்கிற ஒரு சதவிகிதம்தான் சினிமா. எனக்கு ஒரு பொண்ணு இருக்கா, பெயர் தன்வி. மூணாங் கிளாஸ் படிக்கிறா... அவகூட நேரம் செலவழிக்கிறதுதான் இப்போ நான் பண்ணிக்கிட்டு இருக்கிற ஒரே வேலை!" என்கிறார், ராஜாஶ்ரீ.