Published:Updated:

``விஜய் சேதுபதியின் கண், காதை அடைத்தார் ஆஸ்கர் வின்னர் மேக்கப் மேன்!’’ - `சீதக்காதி'’பாலாஜி தரணீதரன்

தார்மிக் லீ
``விஜய் சேதுபதியின் கண், காதை அடைத்தார் ஆஸ்கர் வின்னர் மேக்கப் மேன்!’’ - `சீதக்காதி'’பாலாஜி தரணீதரன்
``விஜய் சேதுபதியின் கண், காதை அடைத்தார் ஆஸ்கர் வின்னர் மேக்கப் மேன்!’’ - `சீதக்காதி'’பாலாஜி தரணீதரன்

`சீதக்காதி' திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கெட்டப் குறித்துப் பேசியிருக்கிறார் படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன்.

மீபகாலமாக விஜய் சேதுபதிதான் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார். '96 படத்தின் டீசர், 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கை கெட்டப், விரைவில் வெளியாகவிருக்கும் 'ஜுங்கா' படத்தில் கேங்ஸ்டர், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் 'செக்கச் சிவந்த வானம்' எனப் பயங்கர பிஸியாக இருக்கிறார். இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமும் சரி, படத்தில் இவருக்கான கெட்டப்பும் சரி... வெவ்வேறு பாணியில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். இதைத்தொடர்ந்து 'சீதக்காதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் முதியவர் வேடத்தில் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். சமீபத்தில் வெளியான மேக்கிங் வீடியோவும் இணையத்தில் சக்கைபோடு போட்டு வருகிறது. மேக்கிங் வீடியோ குறித்து இயக்குநர் பாலாஜி தரணீதரனிடம் பேசினேன். 

``சேது, 75 வயது முதியவரா படத்துல நடிச்சிருக்கார். அதனால, மேக்கப் தத்ரூபமா இருக்கணும்ங்கிற முடிவுல ரொம்பவே உறுதியா இருந்தோம். பிராஸ்தெடிக் மேக்கப்பும் முன்னாடி இருந்ததைவிட இப்போ ரொம்பவே அட்வான்ஸாவே இருக்கு. படத்தோட கதையும் சேதுவோட கேரக்டரை மையப்படுத்திதான் நகரும்ங்கிறதால, தயாரிப்பாளரும் அதை சரியா பண்ணுங்கனு முழு சுதந்திரம் கொடுத்துட்டார். ஹாலிவுட் படங்களுக்கு வொர்க் பண்ற கெவின் ஹேன்லிதான் சேதுவுக்கு மேக்கப் பண்ணார். அவர், 'டிரைவிங் மிஸ் டெய்ஸி' படத்துக்காக ஆஸ்கர் விருது வாங்கியவர். இப்போ லாஸ் ஏஞ்சல் சிட்டியில இருக்கார். படத்துல சேது போடுற 'விக்'கையும் அங்கே இருக்கிற ஒருவர்கிட்டதான் ரெடி பண்ணோம். அவரும் ஆஸ்கர் விருது வாங்கியவர்.

எங்களுக்கு எந்த மாதிரி விக் வேணும்னு கேரக்டரை ஸ்கெட்ச் பண்ணிக் கொடுத்தோம். நான்கு நாள்கள் அங்கேயே இருந்து, முழு வேலைகளையும் பார்த்தோம். மோல்டிங், விக் எல்லாம் ரெடி ஆனதும் சென்னைக்குத் திரும்பி ஷூட்டிங் தொடங்க முடிவெடுத்தோம். லாஸ் ஏஞ்சல்ஸ்லிருந்து வந்த, அலெக்ஸ் நோபுல் என்பவர்தான் சென்னையில ஷூட்டிங் நடக்கும்போது கூடவே இருந்து மேக்கப் வொர்க்ஸ் பார்த்துக்கிட்டார். ஒவ்வொரு நாள் ஷூட்டிங்லேயும் மேக்கப் போடவே ஐந்து மணிநேரம் ஆகும். ஷூட்டிங் முடிச்சு, மேக்கப் கலைக்க ரெண்டு மணிநேரம் ஆகும். 

சேது இதெல்லாத்தையும் என்ஜாய் பண்ணிதான் வொர்க் பண்ணார். இவங்க மேக்கப் பண்றதுக்கான மோல்டிங்கைப் போடும்போது, மூச்சு விட மூக்கு பகுதியில மட்டும்தான் ஓட்டை இருக்கும். கண், காது எல்லாம் மூடிடுவாங்க. சிலர் ஒரு கட்டத்துக்குமேல ரொம்ப சோர்ந்து போயிடுவாங்க. ஆனா, சேது ரொம்ப நார்மலா இருந்தார். கெவின் ஹேனியும், 'ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் இப்படி ஈஸியா எடுத்துக்குவாங்க'னு சொல்லி ரொம்பவே பாராட்டினார். ஆனா, இவ்ளோ கஷ்டத்தையும் வெளியில காட்டிக்காம, ஒவ்வொரு நாள் ஷூட்டிங்குக்கும் சூப்பரா ஒத்துழைப்பு கொடுத்தார் சேது.

இன்னும் சொல்லப்போனா, ஷூட்டிங் ஆரம்பத்துலிருந்து முடியிற வரை 75 வயது முதியவர் மோடுலதான் ஸ்பாட்ல சுத்திக்கிட்டு இருப்பார். அவரைப் பார்க்கும்போது எல்லோருக்குமே ஒரு பிரமிப்பு இருந்தது. அவரோட காஸ்ட்யூம் பாடி லாங்குவேஜ் எல்லாத்தையும் பார்க்கும்போது, பலரும் விஜய் சேதுபதினு நம்பல. 'இது உண்மையிலேயே விஜய் சேதுபதிதானா'னு என்கிட்டேயே பலர் கேட்டாங்க. இதுதான் அந்த மேக்கப்புக்குக் கிடைத்த வெற்றி. படமும் ரொம்ப சிறப்பா வந்திருக்கு!" என நம்பிக்கையோடு பேசி முடித்தார் இயக்குநர் பாலாஜி தரணீதரன்.

அடுத்த கட்டுரைக்கு