Published:Updated:

``கமல் சாருக்குக்கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்?" - சினேகன்

சனா

சினேகன் சமீபத்தில் 'பிக் பாஸ்' வீட்டுக்கு விசிட் அடித்த அனுபவம் குறித்துப் பேசியிருக்கிறார்.

``கமல் சாருக்குக்கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்?" - சினேகன்
``கமல் சாருக்குக்கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்?" - சினேகன்

``நல்ல வேளை `பிக் பாஸ் 2' நிகழ்ச்சியில் நான் கலந்துக்கலை. இப்போ இருக்கிற ஹவுஸ் மேட்ஸ் முதல் சீஸனில் இருந்திருந்தால், ஒரே வாரத்தில் என்னை வெளியே அனுப்புங்கனு பிக் பாஸிடம் கெஞ்சியிருப்பேன். இல்லைனா... பரணி மாதிரி வீட்டைவிட்டு வெளியே வர முயற்சி செய்திருப்பேன்!'' - அதிரடியாகப் பேச ஆரம்பிக்கிறார் சினேகன். 

``பிக் பாஸ் வீட்டுக்குச் சிறப்பு விருந்தினரா போக முடியுமானு விஜய் டிவி-யிலிருந்து என்கிட்ட கேட்டாங்க. கொஞ்சம் பிஸியா இருக்கேன். ரெண்டுநாள் கழிச்சு போறேன்னு சொன்னேன். 100 நாள்கள் நான் வாழ்ந்த இடமாச்சே, ரொம்ப எதிர்பார்ப்புடன் வீட்டுக்குள்ளே போனேன். ஆனா, நான் எதிர்பார்த்த ஃபீல் எனக்குக் கிடைக்கல. நான் மட்டும் தனித்து விடப்பட்ட மாதிரி இருந்தது. இப்போ இருக்கிற ஹவுஸ் மேட்ஸ் எல்லோரும் ஆளுக்கொரு முகமூடியைப் போட்டுக்கிட்டிருக்காங்க.ரியாலிட்டி நிகழ்ச்சியோட மதிப்பு அவங்களுக்குத் தெரியலை. பிக் பாஸ் வீட்டில் இயல்புத் தன்மை குறைஞ்சு போயிருக்கு. வீட்டுக்குள்ளே இருக்கிறவங்க எல்லோரும் ஏதோ பிக்னிக் வந்த மாதிரி இருக்காங்க. ஒரு வாழ்வியல் மாதிரி எனக்குத் தெரியல. ஹவுஸ் மேட்ஸ்கிட்ட ஒழுங்கு இல்லை. சாப்பிட்ட தட்டைக்கூட கழுவாமல் அப்படியே போட்டுவெச்சிருக்காங்க" என்றவரிடம், சில கேள்விகள்.

``இரண்டு சீஸனுக்குமான வித்தியாசமா எதைப் பார்க்குறீங்க?" 

``இப்போ இருக்குற ஹவுஸ் மேட்ஸ் யாரும் எதையும் காதுகொடுத்துக் கேட்கிற மனநிலையில இல்லை. அவங்களை ஒழுங்குபடுத்தவும் அங்கே யாரும் இல்லை. பிக் பாஸ் வீடு, இந்தச் சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீடு. அந்த வீடு மேல பெரும் பாசம் எனக்கு உண்டு. பிக் பாஸ் அனுமதி கொடுத்திருந்தால், எல்லோரையும் உட்காரவச்சு சமைச்சுப் போட்டிருப்பேன். அவங்க சாப்பிடுறதைப் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பேன். அதற்கான கால அவகாசம் எனக்குக் கிடைக்கலை. உள்ளே இருக்கிறவங்க எல்லோரும் அதி புத்திசாலியா நடந்துக்கிறதா நினைச்சுக்கிட்டு இருக்காங்க. இதை மக்கள் பார்வையிலிருந்துதான் சொல்கிறேன். முதல் சீஸனில் குறும்படம் 50 வது நாளுக்குப் பிறகுதான் போட ஆரம்பிச்சாங்க. இங்கே ரெண்டு வாரத்துலேயே போட ஆரம்பிச்சிட்டாங்க. டிராமா மாதிரி எல்லோரும் நடிக்கிறாங்க."

``இப்போ இருக்கிற ஹவுஸ் மேட்ஸில் உங்கள் ஃபேவரைட் யார்?"

``நிகழ்ச்சியில இருக்கிறவங்க யாரும் மனசுல அந்தளவுக்குப் பதியல. வெளியே இருந்து பார்க்கிற மக்களே, `உள்ளே இருக்கிற யாரையும் எங்க வீட்டுப் பிள்ளையா ஏத்துக்க முடியல'னு சொல்றாங்க. பலரோட பெயர்கூட மனசுல நிற்கலை. பொன்னம்பலம் கொஞ்சம் பெட்டர். ஏன்னா, யதார்த்தமான மனிதர். சரியோ தப்போ, மனசுல வச்சுக்கமா பேசிடுவார். இதற்குப் பிறகு நிறம் மாறுவாரானு தெரியலை."

``மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குக் கூப்பிட்டா, போவீங்களா?" 

``கண்டிப்பாப் போவேன். இப்பவே ஒருவாரம் இருந்து எல்லாத்தையும் ஒழுங்கு படுத்தலாம்னுகூட நினைச்சேன். என்னால சீராகட்டும்னு ஆசைப்பட்டேன்." 

``கமலின் நிகழ்ச்சித் தொகுப்பு?"

``நல்லாயிருக்கு. கமல் சார் வரக்கூடிய எபிசோட் மட்டும்தான் மக்கள் பார்க்கிறாங்க. முதல் சீஸனில் இருந்த ஹவுஸ் மேட்ஸ் எல்லோரும் கமல் சாரைக் கடவுள் மாதிரி பார்ப்போம். கமல் சாருக்கான மரியாதையைக்கூட இப்போ இருக்கிற ஹவுஸ் மேட்ஸ் கொடுக்க மாட்டேங்கிறாங்களோனு தோணுது. அவர் வந்தா, எழுந்து நின்னுதான் பதிலே சொல்வோம். அந்த நாகரிகம்கூட இப்போ இருக்கிற ஹவுஸ் மேட்ஸுக்குத் தெரியலை. சில நேரங்களில், கமல் சார் முன்னாடி கால் மேலே கால் போட்டுப் பேசுறாங்க."

``ஹவுஸ் மேட்ஸ் ரம்யா உங்களைத் திட்டுனாங்க... அதை எப்படி எடுத்துக்கிறீங்க?"  

``இது அவரோட உரிமை. ரம்யா, இதை நேரடியா என்கிட்டயே கேட்டிருக்கலாம். அந்தத் தைரியம் அவரிடம் இல்லை. `நீ யாருடா என்னைக் கேட்கிறதுக்கு?'னு சொல்லியிருந்தா, அப்பவே அவங்களைப் பாராட்டியிருப்பேன். முதுகுக்குப் பின்னாடி பேசுறதே ரியாலிட்டி இல்லை. `நாங்க அனுமதி கொடுத்ததுனாலதானே சினேகன் உள்ளே வந்தார். அவரை ரெஸ்பான்ஸாதானே அனுப்பி வச்சோம்' ரம்யா சொல்றாங்க. இதைச் சொல்ல அவங்களுக்கு உரிமை இல்லை. என்னை அனுப்பி வச்சது, பிக் பாஸ். அந்த வீட்டோட மூத்த குடிமகன் நான். எனக்கு அங்கே முழுச் சுதந்திரம் இருக்கு. ரம்யா அப்படிப் பேசுனது, தப்பு. அறியாமையில் பேசிட்டதா நினைச்சுக்கிறேன்.

 ரம்யாகிட்ட ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன், எனக்கு முன்னாடி நடிகர் கார்த்தி, சூரி, இயக்குநர் பாண்டிராஜ் மூவரும் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே போனாங்க. அவங்களும் `நீங்க எல்லோருமே நடிக்கிறீங்க'னுதான் சொன்னாங்க. அப்போ, வீட்டுல இருந்த எல்லோருமே வாயை மூடிக்கிட்டுதான் இருந்தீங்க. ஆனா, சினேகன் சொல்லும்போது மட்டும் கோபம் வருது. அவங்ககிட்டேயும், `நாங்க உண்மையாதான் இருக்கோம். எங்களைத் தப்பு சொல்ல நீங்க யார்?'னு கேட்டிருக்கணும். கார்த்தி பெரிய நடிகர், பாண்டிராஜ் பெரிய இயக்குநர். அதனால கேட்கலை. சினேகன் இளிச்சவாயன்னு நினைச்சுக் கேட்டுட்டீங்களா... உங்க நேர்மைக்கான அடையாளம், இதுதானா ரம்யா?"