Published:Updated:

``ஆன்லைன் பைரஸியைத் தடுக்க இதுதான் வழி!" - இயக்குநர் கஸாலி

``ஆன்லைன் பைரஸியைத் தடுக்க இதுதான் வழி!" - இயக்குநர் கஸாலி
``ஆன்லைன் பைரஸியைத் தடுக்க இதுதான் வழி!" - இயக்குநர் கஸாலி

சமீப காலமாக சினிமாவில் தொடர்ந்து நடந்துவரும் ஆன்லைன் பைரஸி குறித்துப் பேசியிருக்கிறார், இயக்குநர் கஸாலி.

சில தினங்களுக்கு முன் ஆன்லைன் பைரஸி பிரச்னையில் சிக்கிய கிருஷ்ணகிரி `நயன்தாரா' தியேட்டர் மேனேஜர் மற்றும் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து இயக்குநர் கஸாலியிடம் பேசினோம். ஏனெனில், இவர் பைரஸி ரீதியான பிரச்னைகளை அணுகி, அதைத் தீர்த்து வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும் சினிமாவில் நடக்கும் பைரஸி பிரச்னைகளுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியுடன் பேட்டியைத் தொடங்கினேன். 

``நீங்க ஆன்லைன் பைரஸி பிரச்னைகளைத் தீர்த்து வைக்க முற்படுறதுக்கான காரணம் என்ன?"

``நான் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. துபாய்ல சொந்தமா லாண்ட்ஸ்கேப்பிங் (Landscaping) கம்பெனி வெச்சிருந்தேன். சினிமாமேல உள்ள ஈடுபாட்டால சென்னைக்கு வந்தேன். சினிமா எடுக்குறது பத்தி நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். கூடவே சினிமாவை எப்படி மார்க்கெட்டிங் பண்றதுனும் தெரிஞ்சுக்கிட்டேன். என் முதல் படம் `மனுசனா நீ'. அந்தப் படத்தை ரிலீஸ் பண்ண அன்னைக்கே இன்டர்நெட்ல வெளியிட்டாங்க. அதனால, எனக்கு நஷ்டம் ஏற்பட்டுச்சு. என் தனிப்பட்ட ஆர்வத்துல ஆன்லைன் பைரஸி பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு எதிராப் போராடிக்கிட்டிருக்கேன்."

``பைரஸி எல்லாமே வெளிநாட்டுல இருந்துதான் நடக்குதுனு சொல்றாங்களே?"

``திருட்டு டிவிடி வெளியிடுறவன் அத்தனைபேரும் நம்ம ஊருலதான் இருக்காங்க. ஒரு வருடத்துக்கு முன்னாடி பைரஸி எல்லாமே வெளிநாட்டுல இருந்துதான் நடக்குதுனு சொன்னாங்க. அதனால என் படத்தை வேறெந்த மாநிலத்திலேயும் வெளியிடாம தமிழ்நாட்டுல மட்டும் வெளியிட்டேன். அதேநாளில் படம் ஆன்லைன்ல வெளிவந்துருச்சு. அந்த வீடியோவை கியூப், ஈராஸ் போன்ற நிறுவனங்கள்கிட்ட எடுத்துட்டுப் போனேன். அவங்க இது எந்த தியேட்டர்ல இருந்து எடுக்கப்பட்டது, எத்தனை மணிக்கு எடுக்கப்பட்டதுனு எல்லா விவரத்தையும் கொடுத்துட்டாங்க. தியேட்டர் திரையில இன்விசிபிள் வாட்டர்மார்க் (Invisible Watermark) இருக்கும். அதை வெச்சு எல்லாத் தகவலையும் எடுத்துடலாம். ஆனா, அதுக்கு 59,000 ரூபாய் செலவாகும். ஈ-சினிமா, டி-சினிமானு ரெண்டு பிரிவுகள் இருக்கு. இங்கே எடுக்குற சினிமாக்கள் அத்தனைக்கும் ஈ-சினிமாவுல இருந்து தகவல்கள் வாங்கலாம். ஹாலிவுட் தரத்துல எடுக்கப்படுற சினிமாக்களுக்கு டி-சினிமாகிட்ட இருந்துதான் தகவல்கள் வாங்கணும். தரம் கூடுதலா இருக்கிற இந்திய சினிமாக்களுக்கும் டி-சினிமாவுல இருந்து தகவல்கள் வாங்குறதா இருந்தா, நமக்கு வரி பணத்தோட சேர்ந்து 59,000 ரூபாய் செலவாகும்."

``சமீபத்துல பைரஸி தொடர்பா நீங்க சந்தித்த வழக்குகள் என்னென்ன?"

```மிஸ்டர். சந்திரமௌலி' திரைப்படம் ஆரணி பக்கத்துல சேத்துப்பட்டு ஊர்ல இருக்கிற `பத்மாவதி' தியேட்டர்ல இருந்து திருட்டுத்தனமா எடுத்து வெளியிட்டிருக்காங்க. இந்தப் படத்தோட தயாரிப்பாளர் தனஞ்செயன் குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள்ல இருக்கார். மயிலாடுதுறையில் உள்ள `கோமதி' தியேட்டர்லேயும், கரூர் `எல்லோரா' தியேட்டர்லேயும் `ஒரு குப்பைக் கதை' படத்தைத் திருட்டுத்தனமா ஷூட் பண்ணி வெளியிட்டிருந்தாங்க. அடுத்த வாரம் இந்தத் தியேட்டர்கள் மேல நடவடிக்கை எடுக்கப்போறோம். 

மேலும், `தமிழ்ப்படம் 2', `கடைக்குட்டி சிங்கம்' ஆகிய படங்களும் ஆன்லைன்ல வெளிவந்திருக்கு. அதாவது, ரிலீஸாகுறதுக்கு முன்னாடி நெட்ல வந்ததுனா, அது வெளிநாட்டுல இருந்து வந்த பிரின்ட்னு அர்த்தம். அதுவே ரிலீஸான அன்னைக்கு சாயங்காலமே வெளிவந்ததுனா, அது நம்ம ஊர் தியேட்டர்ல இருந்து எடுக்கப்பட்டதுனு அர்த்தம்."

`` `கோலிசோடா 2' படத்தை ஆன்லைன்ல வெளியிட்டதுக்கு சிலரைக் கைது பண்ணியிருக்காங்க. என்ன நடந்ததுனு சொல்லுங்க..." 

`` `கோலிசோடா 2' படத்தை வெளியிட்ட தியேட்டரின் பெயர் `தாரா'. இப்போ `நயன்தாரா'னு பெயரை மாத்தியிருக்காங்க. கியூப் நிறுவனத்துல இன்னமும் அந்தத் தியேட்டரின் பெயர் வெறும் `தாரா'னுதான் இருக்கு. அதைக் கண்டுபிடுச்சு பெயர் பிரச்னையைத் தீர்த்து, எங்களுக்கு வந்த ஆதாரங்களைக் கொண்டு தியேட்டர் உரிமையாளரை போலீஸ் உதவியுடன் கைது செய்யப் போனோம். அவருக்கு நாங்க வர்ற தகவல் தெரிஞ்சு, முன்கூட்டியே ஜாமீன் வாங்கி வெச்சிருந்தார். அதுக்கப்பறம் அந்த தியேட்டரோட ரெண்டு ஆபரேட்டரையும், மேனேஜரையும் கைது செய்தோம். இப்போ தியேட்டர்கள் உரிமையாளர்களுக்குக் கொஞ்சம் பயம் வந்துருச்சு. 

தமிழ்நாட்டுல 25 தியேட்டர்கள்தாம் தொடர்ந்து இந்த வேலையைப் பண்ணிக்கிட்டு இருக்கு. அவங்களைத் தொடர்ந்து கண்காணிக்கணும். தியேட்டர்களோட சப்போர்ட்லதான் ஆன்லைன் பைரஸி நடக்குது. படம் பார்க்க வர்ற மக்கள் தண்ணி, நொறுக்குத் தீனி எல்லாம் கொண்டு வர்றாங்களானு செக் பண்றாங்களே... கேமரா கொண்டு வர்றாங்களானு செக் பண்ணமாட்டாங்களா? தியேட்டர் உரிமையாளர்கள், `எங்களுக்குத் தெரியாம ஷூட் பண்ணிட்டாங்க'னு சொல்றதெல்லாம் சுத்தப் பொய். அவங்களுக்குக் காசு போய்டும். அதை வாங்கிக்கிட்டு இப்படியான கீழ்த்தனமான செயல்கள்ல ஈடுபடுறாங்க.  

இந்த தியேட்டர்ல இருந்துதான் ஷூட் பண்ணிருக்காங்கனு தெரிஞ்சதும், அங்கே இருக்கிற ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் கைப்பற்றிவிடுவாங்க. அவங்களால அடுத்தடுத்து படங்களைத் திரையிட முடியாது." 

``நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கத்துல இருந்து சப்போர்ட் எப்படி இருக்கு?"

``இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டணும்னு விஷால் நினைக்கிறார். அதை எப்படிப் பண்ணணும், யாரை நம்பி இறங்கணும்னு அவருக்குத் தெரியலை. அதனால, அவர் எனக்கு உறுதுணையா இருக்கார். சங்கத்துல இருந்து எந்தமாதிரியான உதவிகள் செய்றதுக்கும் விஷால் ரெடியா இருக்கார்."

``இதுக்குத் தீர்வா நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்க?"

``ஆன்லைன் பைரஸி குற்றவாளிகளுக்கு 3 வருட ஜெயில் தண்டனை. மேலும், இழப்புக்கு ஏத்த மாதிரி நஷ்டஈடு வாங்கலாம். கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்கள் பணம் கேட்டாலும், தியேட்டர் உரிமையாளர்கள் கொடுத்துதான் ஆகணும். 

தியேட்டருக்குள்ள வந்துட்டா நம்மகிட்ட இருக்கிற மொபைல், கேமரா போன்ற சாதனங்கள் எதுவும் வேலை செய்யாம இருக்கிறதுக்குப் புதுசா ஒரு கருவியைக் கண்டுபிடிச்சிருக்காங்க. ஒரு லட்சம் மதிப்புள்ள அந்தக் கருவியை எல்லா தியேட்டர்களிலும் வாங்கிப் பொருத்திட்டா, பைரஸியைத் தடுக்கலாம். 

SCV, TCCL, அரசு கேபிள் இது எல்லாமே தனித்தனி கேபிள் சங்கங்கள். இதுல நம்ம படத்தை ஒளிபரப்புனா, நமக்குக் காசு கிடைக்கும். ஒரு கேபிளுக்கு 50 ரூபாய் வீதம் வசூலிச்சா, லாபம் கிடைக்கும். அந்த மாதிரி அடுத்த வாரம் என்னோட `மனுசனா நீ' படத்தை கேபிள்ல ரிலீஸ் பண்ணப்போறேன். குறைந்தது 2 லட்சம் பேர் என் படத்தைப் பார்த்தா போதும், போட்ட முதலீடை திரும்ப எடுத்துடலாம். அதுக்காகத்தான் தமிழ்நாடு முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டி விளம்பரப்படுத்தியிருக்கேன். மேலும், ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா மாதிரியான சிம் கார்டு கம்பெனிகாரங்க எல்லாம் `ஸ்க்ராட்ச் கார்ட்'னு ஒண்ணு விற்பனை பண்றாங்க. அதாவது, படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடி ஸ்க்ராட்ச் கார்டை வாங்கிடணும். படம் ரிலீஸ் தேதி அன்னைக்கு அந்தப் படத்தை நம்ம மொபைல்லேயே பார்த்துக்கலாம். இந்த ஒரு வருடத்துல தமிழ் சினிமாவோட வியாபார யுக்தியே மாறிடும். நீங்க வேணும்னா பொறுத்திருந்து பாருங்களேன்!" என்று சவால் விட்டபடி முடிக்கிறார், கஸாலி. 

அடுத்த கட்டுரைக்கு