Published:Updated:

``உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்!’’ - `ஒருதலை ராகம்’ ரூபா

வே.கிருஷ்ணவேணி

`ஒரு தலை ராகம்' படத்தில் நடித்த நடிகை ரூபா, தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

``உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்!’’ - `ஒருதலை ராகம்’ ரூபா
``உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்!’’ - `ஒருதலை ராகம்’ ரூபா

டி.ராஜேந்தர் இயக்கிய முதல் படம், `ஒருதலை ராகம்' (1980). கதையையும் தாண்டி இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கக் காரணமாக அமைந்தது, படத்தில் இருந்த புதுமுகங்கள். ஏனெனில், நடித்த நடிகர்கள், கேமராமேன், இயக்குநர் எனப் பெரும்பாலானவர்கள் சினிமாவுக்குப் புதிதாக அறிமுகம் ஆனவர்கள். `ஒருதலை ராகத்து'க்குப் பிறகு அத்தனை நடிகர்களும் பின்னாளில் மக்களிடையே பிரபலமானார்கள். இந்தப் படத்தில் நடித்த நடிகை ரூபாவிடம் பேசினோம். 

``உங்கள் முதல் படம், நண்பர்கள், சக்சஸ்?"

``ஹய்யோ... அந்த நாள்களை இப்போ நினைச்சுப் பார்த்தாலும் உடம்பு சிலிர்க்கும். எப்படி அது சாத்தியமாச்சுனு இப்போவும் ஆச்சர்யமாகப் பார்க்கிறேன். முதல் படம் எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. படம் ஹிட் அடிக்குமானு யாரும் யோசிக்கலை. கொடுத்த வேலையைப் பக்காவா செய்தோம். ஷூட்டிங் நேரம் தவிர மற்ற நேரங்கள் அரட்டைதான். லன்ச் டைம் செம்ம காமெடியாப் போகும். மாயவரத்தில் இருந்த ஒரு காலேஜ்லதான் `ஒருதலை ராகம்' படத்தை ஷூட் பண்ணாங்க. நாங்க தினமும் காலேஜ் போற மாதிரிதான் ஷூட்டிங் போனோம். எந்தப் பந்தாவும் கிடையாது. அவ்வளவு நல்ல நாள்கள் அதெல்லாம்! 

``மறக்க முடியாத சம்பவங்கள் ஏதாவது இருக்கா?" 

``நிறைய உண்டு. ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு மறக்க முடியாத நிகழ்வுகள் நடக்கிறதுண்டு. `ஒருதலை ராக'த்தைப் பொறுத்தவரை என்னால் இப்போவும் நம்பமுடியாத மறக்க முடியாத ஒரு நிகழ்வு உண்டு. படத்துக்காகப் பூஜை போடுவதற்கு ஐயர் ஒருத்தர் வந்திருந்தார். பொதுவாக எல்லாப் படத்துக்கும் நல்லபடியாகப் படம் முடிந்து, நல்லா ஓடணும்னு சொல்லி ஆசீர்வதிக்கிறதுண்டு. ஆனால், அந்தப் படத்துக்கு பூஜை செய்தவர், `படம் சூப்பர் ஹிட் ஆகி, கோடி கோடியாகப் பணம் வரணும்'னு சொன்னார். `யார் இவர்? இப்போதான் எல்லோரும் அறிமுகம் ஆகுறோம். படம் எப்படிப் போகும்னு தெரியலை. அதுக்குள்ள கோடி கோடியா வசூலிக்குமாம்'னு சொல்லிக் கிண்டல் பண்ணோம். படம் ரிலீஸானப்போ, நான் ஊட்டியில இருந்தேன். போன் மேல போன். படம் சூப்பர் ஹிட்னு சொன்னப்போ, இந்தப் படத்துக்குப் பூஜை போட்டவர்தான் நினைவுக்கு வந்தார்."

``டி.ஆர் மற்றும் அந்தப் படத்தில் தோழியாக நடித்த உஷா இருவரிடையேயான நட்பு?"

``உஷா எனக்கு ரொம்ப நெருக்கம். படத்துல நடிக்கும்போதே எங்க இரண்டு பேருக்குமான நட்பு ஸ்ட்ராங்கா இருந்தது. அந்தப் படத்துக்குப் பிறகுதான் டி.ராஜேந்தரும் உஷாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. `ஒருதலை ராகம்' படத்தில் நடித்தபோது எங்களுக்கிடையே இருந்த நட்பு இப்போவரை தொடருது. அவங்க குடும்ப விழாக்களுக்கு என்னைக் கூப்பிடுவாங்க. ஆனா, அவங்க குழந்தைகள்கிட்ட அதிகம் பேசினது கிடையாது. தமிழ்த் திரையுலகின் சிறந்த ஜோடினு அவங்களைச் சொல்லலாம்." 

`` `ஒருதலை ராகம்' ஸ்கிரீனிங் பண்றதுக்குள்ள நிறைய பிரச்னைகள் வந்ததாகக் கேள்விப்பட்டோம்?"

``ஆமாம். என்ன பிரச்னைனு தெரியலை. `ஒருதலை ராகம்' வந்த காலகட்டத்துல அந்தப் படம் சினிமாவை வித்தியாசமான கோணத்தில் காட்டியது. பணப் பிரச்னைகள் காரணமாக அந்தப் படம் வெளியாவது தாமதமாகிகிட்டே இருந்தது. தயாரிப்பாளர் ரொம்ப நாளா அந்தப் படத்தைத் தொடாமலே இருந்தார். அப்போல்லாம் படம் திரையிட்டதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் போய் ரசிகர்களைச் சந்திப்போம். அவங்ககூட நிறைய பேசுவோம். அவர்களுடைய எதிர்பார்ப்பைத் தெரிஞ்சுக்குவோம். ஆனா, இப்போ அது முழுக்க மாறிடுச்சு. பாராட்டுறது, திட்டுறதுனு நினைப்பதையெல்லாம் ஆன்லைன்ல கமென்ட்ஸா பதிவு பண்ணிட்டுப் போயிடுறாங்க. என்னதான் டெக்னாலஜி முன்னேற்றம் வந்தாலும், ரசிகர்களை நேரில் சந்திக்கிற அந்தத் திருப்தி இப்போ இல்லைனு தோணுது." 

``வெளி மாவட்டங்களுக்குப் போகும்போது ஒரு விஷயத்தை அடிக்கடி ரசிகர்கள் கேட்பாங்களாமே?"

``ஓ... அதுவா!. நான் தமிழ்நாட்டில் எல்லா இடத்துக்கும் போயிருக்கேன். அப்போலாம், அந்தப் படத்துல இருந்த மாதிரி சேலையின் தலைப்பை தோள்மேல் போட்டா அப்படியொரு அப்ளாஸ் கிடைக்கும் பாருங்க... நீங்க எவ்வளவு சம்பாதிச்சாலும் அந்தக் கைதட்டலுக்கு ஈடாகியிருக்காது. அதனால, அடுத்தடுத்து போற ஊர்கள்ல இந்தமாதிரி புடவைக் கட்டிப் பழகிக்கிட்டேன். ஒருமுறை கும்பகோணம் போயிருந்தப்போ ஒரு பாட்டி, `உன்னாலதான் அந்தப் பையன் இறந்துபோயிட்டான்'னு ஆவேசமாத் திட்டினப்போ, அன்பையும் தாண்டி அழுகை வந்துடுச்சி. எவ்வளவு தூரம் படத்தை தங்களுடைய வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கிறாங்கனு புரிஞ்சுக்கிட்டேன். நல்லவிதமான நடிப்பைக் கொடுக்கணும் என்கிற கடமை எனக்கு அப்போது புரிந்தது."

``தமிழில் ஒரு படத்தில்கூட டான்ஸராக நடிக்கவில்லையே ஏன்?"

``அதுக்குத் தடையாக இருந்தது, `ஒருதலை ராகம்' போன்ற படங்கள்தாம். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் சேலைகட்டி பவ்யமான பெண்ணாக நடிச்சிட்டேன். அதனால, என்னை எல்லா ரசிகர்களும் அப்படியே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த நேரத்தில் டான்ஸர், கிளாமர் ஆர்ட்டிஸ்ட் என வந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என இயக்குநர்களும் எனக்கு ஹோம்லி கேரக்டர்களையே கொடுத்துட்டாங்க. கடைசிவரை தமிழில் ஒரு படத்தில்கூட டான்ஸராக நடிக்க முடியலையே என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. மற்றபடி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட எல்லா ரோல்களிலும் நடிச்சிருக்கேன்." 

``நீங்கள் நடித்த படங்களில் உள்ள காதலுக்கும் தற்போதைய காதலுக்குமான வித்தியாசம்?"

```நிறைய இருக்கு. தலைமுறை இடைவெளி முக்கியக் காரணம்னு தோணுது. அதேநேரம் பழசையே நினைச்சுட்டு இருக்க முடியாதில்லையா. சொல்லப்போனால், இந்தக் காலத்துல ரொம்பவே பிராக்டிகலாக இருக்காங்க. அதேநேரம் அதிகப்படியான காதலால் புரியும் தன்மையை இழந்து, ஆசிட் வீச்சு, பழிவாங்குவது போன்ற செயல்களில் இறங்குவதைப் பார்க்கும்போது மனசுக்கு வேதனையா இருக்கு. அந்த அளவுக்குக் காதலைக் கொண்டுபோயிருக்க வேண்டாம்னு தோணும். மொத்தத்தில் பெற்றோர் பேச்சைக் கேட்டு நடக்கும் பிள்ளைகள் இப்படிக் கெட்டுப்போக மாட்டார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து." 

``சமீபத்தில் `ஒருதலை ராகம்' டீம் சந்திப்பு நடந்ததே?"

``அந்த நாளை மறக்க முடியுமா? ஷங்கர்தான் எல்லோரையும் அந்த விழாவுக்குக் கூப்பிட்டார். இத்தனை வருடம் கழிச்சு எல்லோரையும் சந்திச்சது ரொம்ப சந்தோஷமா இருந்தது. ரவீந்தர் மட்டும் அங்கே இல்லை. நாங்க முதல்ல மீட் பண்ணதும், யார் யாரைக் கல்யாணம் பண்ணியிருக்காங்க. எத்தனை பசங்க. இப்போ என்ன செஞ்சுட்டு இருக்காங்க... இப்படி அடிப்படை விசாரிப்புகள் முடிந்து, அதுக்கப்புறம் கலகலனு பேச ஆரம்பிச்சிட்டோம். நாங்க எல்லோரும் சேர்ந்து நடித்த படங்களில் மிஸ் செய்த வசனங்கள், அதிக டேக் வாங்கிய நினைவுகள்னு எத்தனையோ விஷயங்களைப் பேசிப் பேசி சிரிச்சுக்கிட்டே இருந்தோம். கிட்டத்தட்ட 18 வருடமா யார்கூடவும் பேசியது இல்ல. இத்தனை வருடம் கழித்து சந்திச்சதே பெரிய சர்பிரைஸாக இருந்தது." 

``உங்கள் குடும்பம், கரியர்?"

``இப்போது, கன்னட சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன். கூடவே, படங்களும் பண்ணிட்டு இருக்கேன். மகன் இப்போ காலேஜ் படிச்சிட்டு இருக்கார். எங்களுடையது காதல் திருமணம் என்பதால், எங்க வாழ்க்கை ரொம்ப திருப்தியாப் போயிட்டு இருக்கு'' என்கிறார் சந்தோஷம் பொங்க!