Published:Updated:

நடிகர் சூர்யா: நெடுநாள் ஆசை; சூர்யாவின் முதல் சம்பளம்..!

சூர்யா ( விகடன் )

இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடும் சூர்யாவைப் பற்றி, சில சுவாரஸ்யமான தகவல்கள்.

நடிகர் சூர்யா: நெடுநாள் ஆசை; சூர்யாவின் முதல் சம்பளம்..!

இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடும் சூர்யாவைப் பற்றி, சில சுவாரஸ்யமான தகவல்கள்.

Published:Updated:
சூர்யா ( விகடன் )

`நேருக்கு நேர்’ படத்தின் மூலம் அறிமுகமாகி இந்த வருடம் ரிலீஸான `தானா சேர்ந்த கூட்டம்’ படம் வரைக்கும், பல வித்தியாசமான படங்கள்; கெட்டப்கள் என மக்கள் மனதில் இடம் பிடித்த சூர்யாவுக்கு, இன்று 44வது பிறந்தநாள். அவரைப் பற்றி, சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...

கமல்தான் சூர்யாவுக்கு குரு.`தேவர் மகன்' படம் வந்த சமயத்தில் அதில் வரும் கமலைப் போன்றே பன்க் தலையோடு வலம் வந்தார். `கஜினி’ பட வெற்றியின் போது, `ஒரு அண்ணனோட இடத்திலிருந்து சந்தோசப்படறேன்’ என்று கமல் சொன்னது, அவருக்குத் தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத மற்றொரு நிகழ்வு.

சூர்யாவோட பர்சனல் அட்வைஸ் என்னன்னா, `தயவு செஞ்சு யாரும் சிக்ஸ் பேக் வைக்காதீங்க’ என்பதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன்னோட வாழ்நாள் மந்திரமாக சூர்யா கடைப்பிடிப்பது, `இதுவும் கடந்து போகும்’ என்பதுதான். தன்னுடைய அப்பா சொன்ன இதை வேதவாக்காக இன்று வரை பின்பற்றி வருகிறார்.

சூர்யாவோட வாழ்க்கையில மிக முக்கியமான நாள், `அவரோட கல்யாண நாள்’. அப்போதைய முதல்வர் கலைஞரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவும் கலந்துகொண்டனர். முன்னாள் மற்றும் இந்நாள் முதல்வர்கள் கலந்துகொண்ட  அபூர்வமான நிகழ்ச்சிகளில் என்னுடைய திருமணமும் ஒன்று என்று இன்றளவும் தன்னுடைய நண்பர்களிடையே சிலாகித்துக் கூறுவார்.

சிவகுமாரும், சூர்யாவும் மலேசியாவுக்கு விமானத்தில் சென்றனர். அப்போது, `ஏன் இவ்வளவு கம்மியாகத் தண்ணீர் தருகிறார்கள்’ என அப்பாவிடம் கேட்க, விமானப் பணிப்பெண்ணை அழைத்து 2 கிளாஸ் எடுத்து வரச் சொல்லி, சூர்யாவை `ஒரு கிளாஸ் எடுத்துக் குடி’ என்றார். சிறு துளி நாக்கில் பட்டதும், `என்னது இது? இப்படிக் கசக்கிறது?’ என்று கேட்க, `இதுதான் வோட்கா. நம்ம ஆளுங்க சந்தோசம் வந்தாலும் துக்கம் வந்தாலும் இதுலதான் மூழ்கி அழிஞ்சு போயிடுறாங்க' என்றார். அப்போதிலிருந்து இப்போ வரை மது, சிகரெட் போன்ற எந்தக் கெட்ட பழக்கமும் சூர்யாவுக்கு இல்லை.

பி.காம் முடித்த பிறகு கார்மென்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.,அங்கு வேலை செய்த தியாகு என்பவர், `முதலில் சரவணன் என்ற அடையாளத்தை உருவாக்கு. பணம் சம்பாதிக்கும் முன் நல்ல பெயரைச் சம்பாதிப்பவனே சிறந்த பிசினஸ்மேன்’ என்று அவரது தோளைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

கார்மென்ஸில் தான் வாங்கிய முதல் சம்பளமான 1,200 ரூபாயில், ஆரஞ்சு நிறப் புடவையைத் தன் தாய் லட்சுமிக்கு வாங்கிக் கொடுத்தார்.

`காக்க காக்க’ படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆன சமயம், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனிடமிருந்து ஒரு கால் வந்தது. `சூர்யா சத்யம், தேவி, உதயம்னு எல்லா தியேட்டர்களுக்கும் ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க’ என்றார். `காலைக்காட்சி 11 மணிக்குத் தானே... இப்போவே போகணுமா’ என சூர்யா கேட்க, `முதல்ல கிளம்பிப் போய் பாருங்க’னு கெளதம் சொல்ல, காலை ஐந்து மணியிலிருந்து டிக்கெட் வாங்குவதற்கு ஏராளமானவர்கள் வரிசையில் நிற்பதைப் பார்த்த சூர்யாவுக்கு ஆச்சர்யம். அதில் ஒருவர், `முதல் ஷோ பாக்கணும்னு ராத்திரியெல்லாம் தூங்கவே இல்லை’ என்று கூற சூர்யா நெகிழ்ந்து போனார்.

நடிகர் ஜெட்லீ ஆரம்பித்த `தி ஒன்’ ஃபவுண்டேஷன் மாதிரி, ஆரம்பக் கல்வியிலிருந்து இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது வரை `அகரம் ஃபவுண்டேஷன்' எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதே சூர்யாவின் நெடுநாள் ஆசை.

தந்தை சிவகுமார் இலக்கியத்தில் வரும் 100 மலர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு சூர்யாவிடம் கொடுத்து, இதனை மனப்பாடம் செய்து விட்டால், உன் மூளை கொஞ்சம் வலுப்பெறும் என்றார். பின்னர் சில நாள்கள் கழித்து 100 மலர்களின் பெயர்களை கட கடவென்று கூற, இதை பார்த்த இயக்குநர் வசந்த் `பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் அதை ஒரு காட்சியாக வைத்தார்.

கார்மென்ஸில் வேலை செஞ்சிட்டு இருந்தப்போ,சொந்தமா பேக்டரி ஆரம்பிக்கணும்கிறதுதான் சூர்யாவோட ஆசையா இருந்துச்சு. அதுக்காக வங்கியில லோன் வாங்கலாம்னு முடிவு எடுத்தப்போ, அது குடும்பத்தைப் பாதிக்குமோன்னு ஒரு கவலையும் சூர்யாவுக்கு இருந்துச்சு. அப்போதுதான் இயக்குநர் மணிரத்னத்திடமிருந்து சூர்யாவுக்கு நடிக்க அழைப்பு வந்தது. அதுதான் வசந்த் இயக்கிய `நேருக்கு நேர்’.

வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் சோர்வுகளை மறக்க, எப்போதும் `பாரதியார் கவிதை’களை படிப்பது இவரின் வழக்கம்.

சூர்யாவுக்கு ரொம்ப பிடித்த மனிதர்கள் இரண்டு பேர், ஏ. ஆர்.ரகுமான், தோனி. `பல வெற்றிகளை கொடுத்தும், இன்னும் எப்படி இவ்வளவு அடக்கமாக இருக்க முடியும் என்பது இவர்களிடத்தில்தான் கற்றுக்கொண்டேன்’ என்று சூர்யா பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

`உங்க இயக்கத்துல ஒரு படம் நடிக்கணும் சார்’ என்று இவர் பாலாவிடம் கேட்க, தான் அடுத்து இயக்கிய `நந்தா’வில் நடிக்க வைத்தார். இவருக்குத் தனிப்பட்ட முறையிலும் சரி, திரையுலக வாழ்விலும் சரி மிக முக்கியத் திருப்பு முனையாக அமைந்தது `நந்தா’.

2006 செப்டம்பர் 11 ம் தேதி சூர்யா - ஜோதிகா திருமணம் நடைபெற்றது. இதற்கு 3 நாள்களுக்கு முன்புதான் இவர்கள் கணவன் - மனைவியாக நடித்த `ஜில்லுன்னு ஒரு காதல்’ ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் ஏற்கெனவே சரவணன் என்ற நடிகர் இருந்ததால், இயக்குநர் மணிரத்னம் தனக்கு மிகவும் பிடித்த `சூர்யா' என்ற பெயரை இவருக்கு வைத்தார்.

தனது அப்பா சிவகுமார் திரைப்பட நடிகராக இருந்தாலும்,சிறு வயதில் எந்தவொரு படப்பிடிப்புக்கும் செல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரானியப் படங்களின் தீவிர காதலரான இவர், முடிந்தவரை எல்லாப் படங்களையும் மிஸ் செய்யாமல் பார்த்துவிடுவார்.

சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான `2 டி' என்பதன் விளக்கம் தன்னுடைய  குழந்தைகளின் பெயர்களான தியா மற்றும் தேவ் என்பதன் சுருக்கமே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism