Published:Updated:

“தியேட்டர்கள்தான் தோல்வி அடையும், படங்கள் அல்ல!”

“தியேட்டர்கள்தான் தோல்வி அடையும், படங்கள் அல்ல!”
பிரீமியம் ஸ்டோரி
“தியேட்டர்கள்தான் தோல்வி அடையும், படங்கள் அல்ல!”

சந்திப்பு: இரா. வினோத், படங்கள்/சு.குமரேசன்

“தியேட்டர்கள்தான் தோல்வி அடையும், படங்கள் அல்ல!”

சந்திப்பு: இரா. வினோத், படங்கள்/சு.குமரேசன்

Published:Updated:
“தியேட்டர்கள்தான் தோல்வி அடையும், படங்கள் அல்ல!”
பிரீமியம் ஸ்டோரி
“தியேட்டர்கள்தான் தோல்வி அடையும், படங்கள் அல்ல!”

ந்தியத் திரை உலகில் முக்கியமான ஆளுமை இயக்குநர் கிரிஷ் காசரவள்ளி. 75 ஆண்டு கால கன்னட சினிமா வரலாற்றில், இவரது பங்கு தவிர்க்க முடியாதது! 

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் கேசலூர் என்ற குக்கிராமத்தில் பிறந்து... வளர்ந்த காசரவள்ளி, பி.ஃபார்ம் படித்துவிட்டு, சினிமா மீதிருந்த தீராத காதலால் புனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போதே 'அவசேஷ்’ என்ற குறும்படத்துக்காக, குடியரசுத் தலைவரின் 'தங்கத் தாமரை’ விருது பெற்றார். கடந்த 37 ஆண்டுகளாக திரைத் துறையில் இயங்கி இருந்தாலும், இதுவரை 12 படங்களை இயக்கி இருக்கிறார். அதில் 10 படங்கள் தேசிய விருது பெற்றவை. மூன்று தங்கத் தாமரை விருதுகள், இரண்டு வெள்ளித் தாமரை விருதுகள், கர்நாடக அரசு விருதுகள், பத்மஸ்ரீ விருது என இவரின் சாதனைப் பட்டியல் நீள்கிறது. இன்னும் சொல்லப் போனால்... தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடும் கேன்ஸ், வெனிஸ், பாரீஸ், ரோம், டொராண்டோ போன்ற நகரங்களில் நடக்கும் சர்வதேச சினிமா விழாக்களில், இந்திய சினிமாவை உயர்த்திப் பிடித்தவர் காசரவள்ளி.

“தியேட்டர்கள்தான் தோல்வி அடையும், படங்கள் அல்ல!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறுகதை, நாவல்களை மட்டுமே தொடர்ந்து படமாக்கி வரும் பிடிவாதக் கலைஞன். பார்வையாளனிடத்தில் பொறியைப் பற்றவைக்கும் முற்போக்கு சிந்தனையாளன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மட்டும் இல்லாமல், தான் தான் விரும்பியதைப் படமாக்க முடியாதபோது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுப்பார். ஒரு இந்தி படம், ஒரு டெலி சீரியல் என்று எல்லைகளை விரித்துக்கொண்டே சென்றாலும் குறும்படங்களிலும், ஆவணப்படங்களை இயக்குவதிலுமே அலாதிப் பிரியம் கொண்டவர்.

பெரும்பாலும் திரைக்குப் பின்னால் கேமரா வெளிச்சம் படாமல்... பெங்களூரு பி.டி.எம். லே-அவுட்டில் தனியாக வாழும் கிரிஷ் காசரவள்ளியை ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தோம்.

''நான் அதிகம் பேச மாட்டேன். என்னிடம் பேச எதுவும் இல்லை. சென்னையில் இருந்து என்னைத் தேடி நீங்கள் வந்திருப்பதால் பேசுகிறேன்...'' என முன்னுரை கொடுத்துப் பேசத் துவங்கினார்.

''மௌனம், தனிமை, யோசனை, கனவு, கும்மிருட்டைத் துளைக்கும் மெழுகுவத்தி... கூடவே நிறையக் காதல், கொஞ்சம் தேடல்... இதுதான் என் வாழ்க்கை. எங்கோ வாசித்த, 'வாழ்க்கை ஒரு நதிபோல...’ என்ற வாசகம் உண்மைதான். சுகம், துக்கம், வெட்கம், வறுமை, கனவு, லட்சியம், பொறுப்பு என உலகின் சபிக்கப்பட்ட குணங்களைக் கொண்ட நடுத்தர வர்க்கத்தில் பிறந்து, நாகரிகம் தெரியாமல் வளர்ந்து, பி.ஃபார்ம் படித்து, முட்டி மோதி படைப்பாளி ஆகி இருக்கிறேன்.

“தியேட்டர்கள்தான் தோல்வி அடையும், படங்கள் அல்ல!”

எனக்கு, கலை தாகம் ரத்தத்திலேயே கலந்திருக்கிறது. எங்கள் மண், மரம், மக்கள், வாழ்வு எல்லாமே கலையின் வடிவங்களே. வீட்டில் அப்பா, மாமா 'யக்ஷகானா’ கலைஞர்கள். அதை மட்டுமே கேட்டு வளர்ந்தவன். கர்நாடகத்தின் மிகத் தொன்மையான அக்கலை இன்று அழிந்துவிட்டது. எங்கள் வீதிகளிலும், கோயில்களிலும், திருவிழாக்களிலும் மக்களை மகிழ்வித்த அந்த நாடக பாணி காணாமல் போய்விட்டது. ஊருக்கு ஒதுக்குப் புறமாக பாலியல் கல்வியை போதித்த குறவன்-குறத்தி வாழ்வு எங்கே? கதை சொல்லிகள், தெருக் கூத்து, பூம்பூம் மாட்டுக்காரனின் நாயனம், குலவை, ஒப்பாரி எல்லாம் எங்கே?

சினிமாதான் இந்த மண்ணின் கலைகளை அழித்துவிட்டது என்ற வாதத்தை என்னால் ஏற்க முடியாது. இன்று சினிமாவை தொலைக்காட்சி அழித்து வருகிறது. 70 சதவிகிதம் அழித்தேவிட்டது. கால மாற்றத்தில் கலையின் உருவங்கள் மாறும். ஆனால், கலையை மறக்காமல் போற்றிப் பாதுகாக்கும் அறிவு வேண்டும். அதற்கு நல்ல கல்வி வேண்டும்.

“தியேட்டர்கள்தான் தோல்வி அடையும், படங்கள் அல்ல!”
“தியேட்டர்கள்தான் தோல்வி அடையும், படங்கள் அல்ல!”

சினிமாவை பணம் சம்பாதிக்கும் தொழிலாகப் பார்ப்பதே பாவம். சினிமா ஒரு பவர்ஃபுல் மீடியம். சினிமாவால் எதையும் செய்ய முடியும். என்றைக்கு சினிமா வணிகமாக மாறியதோ, அன்றைக்கே கலை தாகம் காணாமல் போய்விட்டது. ஆனால், இன்றைக்கு கமர்ஷியல், கலைப் படங்கள், பிரமாண்டம் என சினிமா பிரித்துப் பார்க்கப்படுகிறது. அதுவும் கலைப் படங்களுக்கு மரியாதையே இல்லை; தியேட்டர்களும் கொடுக்கப்படுவது இல்லை. காரணம் கேட்டால், இதுபோன்ற படங்களை மக்கள் ரசிப்பதில்லை என்கிறார்கள். முதலில் ரசனை என்பதே 'உருவாக்கப்பட்ட' ஒன்று. 365 நாட்களும் காபி குடித்த ஒருவனுக்கு ஒரு நாள் மட்டும் பால் கொடுத்தால், பாலின் சுவை அவனுக்குப் பிடிக்காது. அதைப் போலத்தான், 99 சதவிகித கமர்ஷியல் படங்களைப் பார்த்தவர்களுக்கு ஆர்ட் படம் பிடிக்காமல் போகிறது. ஆனால், பால்தானே உடலுக்கு நல்லது!

“தியேட்டர்கள்தான் தோல்வி அடையும், படங்கள் அல்ல!”

இந்தியாவில், தியேட்டர் முறையை முதலில் மாற்ற வேண்டும். 1,000, 500 இருக்கைகள் இருக்கின்றன. இது என்ன கொடுமை? படம் பார்க்க வருகிற எல்லோருக்கும் ஒரே ரசனை எப்படி இருக்க முடியும்? அது மட்டும் இல்லாமல், வாரத்துக்கு 28 காட்சிகள்... பார்வையாளனுக்கு வேறு வேலையே கிடையாதா? ஐரோப்பா, அமெரிக்காவில் இருப்பதுபோல் 25, 50, 100 அதிகபட்சம் 250 இருக்கைகள் உள்ள சிறிய தியேட்டர்களை உருவாக்க வேண்டும். அதுவும் பார்வையாளனுக்குப் பொருத்தமான நேரங்களில் மட்டுமே படம் போட வேண்டும். இதற்கு ரீல், படப்பெட்டி எதுவும் தேவை இல்லை. டி.வி.டி-யே போதும். பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் இந்த முறை வர ஆரம்பித்து விட்டது. ஐ.டி. கம்பெனிகளில் எனது படங்களைத் திரையிடுகிறார்கள். படங்கள் ஒருபோதும் தோல்வி அடைவதில்லை. தியேட்டர்கள்தான் தோல்வி அடைகின்றன!

கிட்டத்தட்ட 37 வருடங்களாக என்னால் 12 படங்களை எடுக்க முடிந்தது. நான் கதை சொல்லி கிடையாது. காலை ஒரு கதை, மாலை ஒரு கதை, இரவுக்கு ஒரு கதை என்னால் சொல்ல முடியாது. நான் எழுத்தாளன் கிடையாது. அதனால் வார்த்தைகளால் வடிக்க முடியாது. காட்சிகளால்தான் வெளிப்படுத்த முடியும். பெரும்பாலான எனது படங்கள் சிறுகதை, நாவலில் இருந்தே பிரசவமாகியுள்ளன. தமிழைப்போலவே, கன்னடத்திலும் நல்ல இலக்கியங்கள் இருக்கின்றன. யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் பல கதைகளைப் படமாக்கி இருக்கிறேன். இதுபோன்று நாவலில் இருந்து படமாக்கும் போது, கதை முடியும் புள்ளியில் இருந்துதான் எனது திரைப்படங்கள் தொடங்கும். என் தேவைகளுக்கு ஏற்ப நிறைய மாற்றங்களைச் செய்துகொள்கிறேன். அது எனது உரிமை. இதுவரை யாரும் வந்து என் சட்டையைப் பிடிக்கவில்லை. ஒருவேளை, எனது முடிவுகள் அவர்களுக்குப் பிடிக்கிறதோ... என்னமோ?

இந்தியத் திரையுலகில் மலையாளப் படங்களும், பெங்காலி படங்களும் செய்ததை... இப்போது தமிழ்ப் படங்கள் செய்கின்றன. பாரதிராஜா, பாக்கியராஜ், பாலசந்தர், மணிரத்னம் படங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் கதைக் கருக்கள் அனைத்துமே உண்மையை பேசும், மக்களின் வாழ்வைப் பேசும். மகேந்திரனின் படங்கள் அருமையோ அருமை. இப்போது இருக்கிற இளம் தலைமுறையினரது படங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்க்கிறேன். பாலு மகேந்திராவின் படங்களில் அழகியலும் ஆன்மாவும் படங்களில் ததும்பும். லெஜன்ட்ரி கலைஞன். அவர் மீது எனக்கு தீராத காதல் இருக்கிறது. ரொம்பவே வித்தியாசமான படைப்பாளி. அவர்கூட வேலை பார்க்க ஆசையாக இருக்கிறது. பாலு மகேந்திரா எப்போதுமே ஆச்சர்யக்குறி!

ரஜினியும், அமிதாப் பச்சனும் நல்ல கலைஞர்கள். அவர்களைப் பயன்படுத்தாமல் கெடுத்துவிட்டனர். தனக்கென ஒரு இமேஜ் உண்டாகிவிட்ட நடிகரை வைத்து என்னால் படம் எடுக்க முடியாது. என் உதவியாளர்களைக்கூட ஒரு படத்துக்கு மேல் நான் வைத்துக்கொள்வது இல்லை. ஏனென்றால், அவர்களுடைய தாக்கம் எனக்கு வந்துவிடும் என்ற பயம்தான். சுயமாகச் சிந்திக்க முடியாவிட்டால் என்னால் ஒரு ஷாட் கூட எடுக்க முடியாது.

பழங்குடிகளின் புலம்பல், தலித்களின் விசும்பல், விவசாயிகளின் முடிவில்லா வலி, அடுப்பங்கரையில் பெண்களின் கண்ணீர்... இவைதான் எனது படங்கள். இச்சமூகத்தில் யாருடைய குரல் கேட்கப்படாமல் மறுதலிக்கப்படுகிறதோ, அவர்களின் குரலாக என் படங்கள் ஒலிக்கும். எனது 'அக்ரமணா’ படத்தில் என் காதல் மனைவிக்கு (வைசாலி காசரவள்ளி), குலாபி டாக்கீஸ் படத்துக்கென நடிகை உமா ஸ்ரீக்கு, ஜெயமாலா (தாயி சாஹிபா), சவுந்தர்யாவுக்கு (ஹாசினா) என பெண் கேரக்டர்களுக்கு விருது கிடைக்கக் காரணம் அவர்களின் கேரக்டர்களில் இருந்த ஜீவன்தான். பெண்களின் வேதனைமிக்க வாழ்வை படமாக்கியதில் எனக்கும் திருப்தியே. எனது அடுத்த படத்தின் பேர் இன்னும் முடிவு செய்யவில்லை. அதிலும் பெண்ணை மையமாக வைத்தே கதை நகர்வதால் நிச்சயம் விருது கிடைக்கும்!'' என சினிமாபற்றியே பேசிக்கொண்டு இருந்தவர், அரசியலின் பக்கம் தாவினார்...

''இந்தியாவிலே கர்நாடக அரசியல் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறது? இங்கு முற்போக்கு சிந்தனை பேசும் தலைவர்களின் தாக்கம் இல்லை. மேற்கத்திய நாடுகளில் கார்ல் மார்க்ஸ் போல் தமிழ்நாட்டில் பெரியாரின் கருத்துகள் உயிர் பெற்றதால்தான் தமிழ்நாடு தப்பித்தது. ஊழலை ஒழிக்க அண்ணா ஹஜாரே போராடுவது நியாயம் என்றாலும், அதை வைத்து விளம்பரம் தேடிக்கொள்ளக் கூடாது. ஊழலுக்கு எதிரான குரலை ஆதரிக்கிறேன். ஆனால், அதை வைத்து அரசியல் செய்வதை ஏற்றுகொள்ள முடியாது!

உலகின் எல்லா மூலைகளிலும் விவசாயி கடுமையாக உழைக்கிறான். கஷ்டப்படுகிறான். ஆனால், அவனுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடையாது. அவனுக்காகப் பேச யாருக்கும் நேரம் இல்லை. காந்தியக் கொள்கைகளைப் பேசும் தேசம் ராணுவத்தை பலப்படுத்துகிறது. கல்வி, மருத்துவத்தைக் காட்டிலும் ஆயுதத்துக்கு அதிகமாகச் செலவழிக்கிறது. காலங்காலமாக காவிரி நீரை வைத்து தமிழ்நாட்டிலும், கர்நாடத்திலும் அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள். மாண்டியாவில் இருக்கும் விவசாயிக்கும், தஞ்சாவூரில் இருக்கும் விவசாயிக்கும் காவிரி நீரின் தேவை குறித்து இருக்கின்ற அறிவும் தெளிவும்... வட்ட மேஜையில், குளுகுளு அறையில் பேசும் முதலமைச்சர்களுக்குத் தெரியுமா? விவசாயிகளை இருதரப்பிலும் மரத்தடியில் அமரவைத்துப் பேசி இருந்தாலே, இப்பிரச்னை என்றோ முடிந்திருக்கும்! விவசாயிகளுக்குப் பிரச்னை முடிய வேண்டும். அரசாங்கத்துக்குப் பிரச்னை முடியாமல் இருக்க வேண்டும். என்னடா உலகம் இது!

உலகின் எல்லாப் பிரச்னைக்கும் கலையால் மட்டுமே தீர்வு கிடைக்கும். கலை உலகின் பொதுமொழி. வாழ்வின் வலிகளை தெளிவாக்கி வழியாக்கும் ஒரே விஷயம் கலை மட்டும்தான்!''

நம்பிக்கையோடு முடிக்கிறார் கிரிஷ் காசரவள்ளி!

“தியேட்டர்கள்தான் தோல்வி அடையும், படங்கள் அல்ல!”

விருது நாயகன்

கிரிஷ் காசரவள்ளியின் படத்தில் ஒரு நடிகை ஒப்பந்தமாகி இருக்கிறார் என்றால்... அவருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைத்தே தீரும் என்று நம்புகிறது, கன்னட திரையுலகம். இவர் பெரும்பாலும் கன்னடம் தெரிந்தவர்களையே பயன்படுத்துகிறார். 'கலைக்கு மொழி தேவையில்லை. ஆனால் கலையை முழுமையாக செதுக்க வேண்டும் என்றால் மொழி அவசியம்’ என விளக்கமளிக்கிறார்.

தன்னுடைய 'கட்டாஷ்ரதா’, 'அக்ரமனா’, 'தாபர்ன கதே’, ஆகிய படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றிய வைசாலியை ஆறு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2010-ம் ஆண்டு வைசாலி நோய்வாய்ப்பட்டு இறந்ததிலிருந்து தனிமையில் இருக்கிறார்.

தனது படங்களில் அவ்வப்போது நடிகராகவும் அவதாரம் எடுக்கிறார். ஒரு படம் எடுக்க குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகிறது. அதனால்தான் தயாரிப்பாளர் அவதாரமும் எடுக்க வேண்டிய சூழல் உருவாகிறது என்கிறார்.

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனும், கிரிஷ் காசரவள்ளியும் நல்ல நண்பர்கள். சாருஹாசனுக்குத்  தன்னுடைய 'தாபர்ன கதே’ படத்தில் ஒரு கேரக்டர் கொடுத்து, பல விருதுகளையும் பெற்றுக் கொடுத்தார்.

கிரிஷ் காசரவள்ளியின் படங்கள் எல்லாம் ரியலிஸ்டிக் ரகம். 'உலகின் எந்த மூலையிலும், எப்போதும் இது போன்ற படங்களே ரசனையைப் பெறும். காலசக்கரத்தில் கமர்ஷியல் படங்கள் காணாமல் போய்விடும்’ என்கிறார்.

கிரிஷ் காசரவள்ளி இயக்கிய படங்கள்:

1. கட்டஷரதா, 2. தாபர்னே கதே,

3. மனெ 4. ஏக் கர்(இந்தி), 5. க்ரார்யா,

6. தாயி சாபா, 7. தீவிபா, 8. ஹசினா,

9. நாயி நெரலு, 10. குலாபி டாக்கீஸ்,

11. கனசெம்பா குதிரெயனெரி,

12. க்ராஹாபங்கா (டெலி சீரியல்) 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism