Published:Updated:

"டி.வி. ஷோல பேசுனா கேவலம்... ஶ்ரீரெட்டிக்குக் குரல் கொடுத்தா அக்கறையா?" - லட்சுமி ராமகிருஷ்ணன்

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தான் இயக்கிக்கொண்டிருக்கும் `ஹவுஸ் ஓனர்' படம் குறித்தும், சினிமாவின் சமீபத்திய பிரச்னைகள் குறித்தும் பேசியிருக்கிறார்.

"டி.வி. ஷோல பேசுனா கேவலம்... ஶ்ரீரெட்டிக்குக் குரல் கொடுத்தா அக்கறையா?" - லட்சுமி ராமகிருஷ்ணன்
"டி.வி. ஷோல பேசுனா கேவலம்... ஶ்ரீரெட்டிக்குக் குரல் கொடுத்தா அக்கறையா?" - லட்சுமி ராமகிருஷ்ணன்

``என்னுடைய மூன்று படங்கள்ல வந்தவங்க எல்லோருமே ரியல் லைஃப்ல நான் சந்திச்ச மனிதர்கள்தாம். இந்த ஸ்கிரிப்டை நான் போன வருடமே முடிச்சுட்டேன். `ஹவுஸ் ஓனர்' தலைப்பிலேயே அசோக் செல்வன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரையும் வெச்சுப் பண்றதா இருந்தது. இடையில நான் `சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில பிஸி ஆயிட்டேன். அவங்க ரெண்டுபேரும் அடுத்தடுத்த படங்கள்ல பிஸி. அதனால, சேர்ந்து பண்ணமுடியாம போச்சு. இப்போ, இதே டைட்டிலை வெச்சு புதுசா ஒரு கதையை ரெடி பண்ணி, இந்தப் படத்தை எடுத்துக்கிட்டு இருக்கேன்!" உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார், இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன். 
 

``நீங்க `புளூ இங்க்'னு ஒரு படத்தை டைரக்ட் பண்றதா செய்தி வந்ததே?!"

``ஆமா. `சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை அடிப்படையா வெச்சு எழுதின கதை இது. படத்துக்கு சேட்டிலைட் கான்ட்ராக்ட்கூட போட்டாச்சு. அதுக்குள்ள, `சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்குத் தற்காலிகத் தடை கிடைச்சதுனால, நான் இந்த நிகழ்ச்சிக்காகத்தான் இந்தப் படத்தை பண்றமாதிரி என் மேல ஒரு தப்பான அபிப்ராயம் வரும்னு நினைச்சு, அதைப் படமா பண்ணலை." 

`` `சொல்வதெல்லாம் உண்மை' ஆங்கர் டூ மறுபடியும் டைரக்டர்... முன்னாடியே பிளான் பண்ணதா?"

``ஒவ்வொரு எபிசோடையும் உண்மையாதான் பண்ணியிருக்கேன். அந்த இடத்துல இருக்கிற மக்களோட பிரச்னைகளை கேட்கிறதுக்கு யாருக்குமே பிடிக்கலை. குறை சொல்றவங்க மனசுலதான் அழுக்கு இருக்கு. மத்தவங்களுடைய பிரைவஸிக்குள்ள தலையிடுறேன்னு சொல்றாங்க. விருப்பப்பட்டு வந்து பிரச்னைகளை சொல்றதை எப்படி பிரைவஸியில தலையிடுறதா எடுத்துக்க முடியும்? இந்த நிகழ்ச்சியை வெச்சு என்னைவிட, சேனலைவிட சினிமாக்காரங்க நல்லா சம்பாதிச்சுட்டாங்க. தற்காலிக தடை வந்தபோது இதை விட்டுடலாம்னு சேனல்கிட்டேயும் சொல்லிட்டேன். நல்லா கிளாமரா ஒரு இளம் பெண்ணை உட்கார வெச்சு நிகழ்ச்சியை நடத்தினாலே ஈஸியா டி.ஆர்.பி அதிகரிக்கும். இப்படிப் பண்ணிதான், டி.ஆர்.பியைக் கூட்டணும்னு அவசியமில்லை. இதைப் புரியவைக்க ஓரளவுக்கு மேல போராடி அலுத்துப் போச்சு. சரி, நம்ம வேலையைப் பார்ப்போம்னு படம் பண்ண ஆரம்பிச்சுட்டேன்."
 

`` `ஹவுஸ் ஓனர்' படத்தோட கதை? யாரெல்லாம் நடிக்கிறாங்க?"

``சென்னை வெள்ளத்தை மையமா வெச்சு நடக்கிற காதல் கதை. ஆனா, வெள்ளம் ஒரு காட்சியிலகூட வராது. ஹவுஸ் ஓனர் கேரக்டர்ல `ஆடுகளம்' கிஷோர் நடிக்கிறார். காதல் ஜோடி கேரக்டர்கள்ல `பசங்க' கிஷோரும், விஜி சந்திரசேகருடைய பொண்ணு லவ்லினும் நடிக்கிறாங்க. இவங்களைச் சுத்திதான் மொத்தப்  படமும் நகரும். இந்தக் கதையில நடிக்க வைக்க நிறைய பேரை ஆடிஷன் பண்ணோம். யாரும் செட்டாகலை. ஒருமுறை, விஜி அவங்க பொண்ணுகூட இருக்கிற போட்டோவை ஃபேஸ்புக்ல அப்லோடு பண்ணிருந்தாங்க. உடனே அந்தப் பொண்ணை ஆடிஷன் பண்ணேன். நல்லா நடிச்சாங்க. பிறகு, இவங்கதான் ஹீரோயின்னு முடிவு பண்ணிட்டேன். `பசங்க' கிஷோரும் அப்படித்தான் படத்துக்குள்ள வந்தார். ரெண்டுபேருமே ரொம்ப சின்சியர். சென்னை வெள்ளத்துக்கும் 1970-களில் நடக்கும் ஒரு சம்பவத்துக்குமான ஒரு கனெக்‌ஷன்தான், படத்தோட கதை. அந்த கனெக்‌ஷன் என்னங்கிறது, சஸ்பென்ஸ்!"

 ``உங்க படங்கள்ல பெரும்பாலும் விஜி சந்திரசேகர் இருப்பாங்க. இதுல அவங்க பொண்ணு இருக்காங்க.. என்ன ஸ்பெஷல்?"  

`` `ஆரோகணம்' படத்துக்கு முன்னாடி விஜியை எனக்குத் தெரியாது. ஒரு விழாவில பார்த்துதான் அவங்களை அந்தப் படத்துல நடிக்க வெச்சேன். எப்போவும் ஒரு இயக்குநருக்கு நல்ல ஆர்டிஸ்ட் மேல காதல் வந்திடும். லவ்லின் விஜியோட பொண்ணுங்கிறதால நடிக்க வைக்கலை. `ராதா' கேரக்டருக்கு அவங்க சரியா இருந்தாங்க. ரெண்டுபேருக்குள்ளும் கெமிஸ்ட்ரியை எப்படிக் கொண்டுவர்றதுனு டென்ஷனா இருந்தேன். ரெண்டுபேருமே ஈஸியா கனெக்ட் ஆகி, நடிச்சுட்டாங்க. அவங்களோட ரொமான்ஸை ரசிச்சுப் படமாக்கினேன்.  படத்தோட அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங் சீக்கிரமே ஆரம்பமாகப் போகுது."

``நடிப்பு, டைரக்‌ஷன்னு பிஸியாவே இருக்கீங்க... எது மனசுக்கு நெருக்கமா இருக்கு?"

``கண்டிப்பா, இயக்கம்தான். சவாலான கேரக்டர்கள் வந்தா, அதைப் பண்ண எப்போவும் ரெடியா இருக்கேன். இந்தப் படத்துலயே, ஹவுஸ் ஓனர் கிஷோருக்கு ஜோடியா ஒரு கேரக்டர் இருக்கு. அதுல நான் நடிச்சா சரியாதான் இருக்கும். ஆனா, எனக்குப் பண்ணப் பிடிக்கலை. காரணம், இந்தப் படத்துக்கு ஒரு இயக்குநரா மட்டும் என் வேலையைச் சிறப்பாச் செய்யணும்னு நினைக்கிறேன். நான் நடிக்கிற படத்தை நானே டைரக்ட் பண்ணமாட்டேன்." 
 

``தமிழ் சினிமாவுல பெண் இயக்குநர்கள் குறைவு... இதை எப்படிப் பார்க்குறீங்க?"  

`` `ஆரோகணம்' படத்தை மலையாளத்துல பண்ணிருந்தா, கமர்ஷியலா பெரிய ஹிட் அடிச்சிருக்கும்னு பல பேர் சொன்னாங்க. எனக்குத் தாய் மொழி தமிழ். எனக்குத் தமிழ்லதான் கதை யோசிக்கத் தெரியும். வேலை பார்த்துட்டு இருக்கும்போது, குடும்பத்தோடு இருக்க வேண்டிய நேரத்தை நான் ரொம்பவே மிஸ் பண்றேன். அதுக்கான ஏக்கம் எனக்குள்ள எப்பவும் இருக்கும். குடும்பத்தைவிட்டு புரொஃபெஷனல் வாழ்க்கையை மட்டும் யோசிச்சுப் பார்க்க என்னால முடியலை. பெண்கள் சினிமாவுக்குள்ளே வராம  இருக்கிறதுக்கு, இது ஒரு முக்கியமான காரணம். ஒரு ஆண் இடத்துல பெண்களை வெச்சுப் பார்க்கிற மனநிலையை இந்தச் சமூகம் ஆண்களுக்குக் கத்துக்கொடுக்கலை. எதிர்காலத்தில் இந்தச் சூழல் மாறலாம்."

``மலையாள சினிமாவில அதிகப் பெண் இயக்குநர்கள் இருக்காங்க..."

``பாலசந்தர், பாலு மகேந்திரா, மகேந்திரன் மாதிரியான லெஜன்ட் இயக்குநர்கள் பெண்களை மதிக்கிற மாதிரியான கதைகளைக் கொடுத்தாங்க. ஆனா, ஒரு கட்டத்துல அந்த டிரெண்டு மாறிடுது. இப்போ பெண்களை அவமதிச்சு அவங்களை டம்மியாக்கி படங்கள் பண்றாங்க. பெண்கள் பண்ற படங்களை ரசிக்கிற தன்மைகூட  இல்லை. இந்தச் சூழல் மலையாளத்துல இல்லாம இருந்திருக்கலாம். அதனால, பெண்கள் தைரியமா இறங்கியிருக்கலாம். `ஆரோகணம்' படத்தை பாலசந்தர் சார் பார்த்துட்டுப் பாராட்டினார். அடுத்தடுத்து, மக்கள் என் படத்துக்கு ஆதரவு கொடுத்தாங்க. ஆனா, சினிமாவுக்குள்ள இருக்கிறவங்க அதை மதிக்கவே இல்லை. தமிழ் சினிமாவுக்குச் செல்லப் பிள்ளைகளான எபிக் படங்களை என்னால கொடுக்க முடியும்னு நான் நம்புறேன். அதுக்கான ஒரு முயற்சிதான், இந்த `ஹவுஸ் ஓனர்' படம்."  

``நடிகர்கள்மேல நடிகை ஶ்ரீரெட்டி வைக்கிற குற்றச்சாட்டுகளைக் கவனிக்கிறீங்களா...?"  

``இதைப் பத்தி நான் பேசமாட்டேன். சாதாரணப் பெண்ணுக்கு இந்தப் பிரச்னை இருந்து, அதை உட்கார்ந்து பேசினால் அது கேவலம். ஒரு நடிகைக்கு அந்தப் பிரச்னை வந்ததுனா, அதைப் பத்தி பேசுனா அக்கறையா? இதென்ன நிலைப்பாடு? `சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில சாதாரணப் பெண்கள் அவங்களோட கஷ்டத்தைப் பேசும்போது அதைக் கேவலப்படுத்தினாங்க. சினிமாவுல இருக்கிற ஶ்ரீரெட்டிக்கு இந்தப் பிரச்னை வரும்போது, அவங்க `நடிகை' அப்படித்தானே?!" என்கிறார், லட்சுமி ராமகிருஷ்ணன்.