Published:Updated:

"நா.முத்துக்குமாருக்கும் எனக்கும் சண்டை வந்தா, வாய்ப்பு தர்றேன்னார் ராம்!" - பாடலாசிரியர் கருணாகரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"நா.முத்துக்குமாருக்கும் எனக்கும் சண்டை வந்தா, வாய்ப்பு தர்றேன்னார் ராம்!" - பாடலாசிரியர் கருணாகரன்
"நா.முத்துக்குமாருக்கும் எனக்கும் சண்டை வந்தா, வாய்ப்பு தர்றேன்னார் ராம்!" - பாடலாசிரியர் கருணாகரன்

'7ஜி ரெயின்போ காலனி' பாடல்கள் என்னைப் புரட்டிப் போட்டன. நா.முத்துக்குமாரிடம் கேட்டேன், `சார் மீட்டர் இடிக்காம எப்படி பாடல் எழுதுறது?' என்று!

`பேரன்பு' படத்தில் இடம்பெற்ற 'செத்துப்போச்சு மனசு' பாடலில் `மரமான செடியைத் தோளில் எப்படிச் சுமப்பது?' என்கிற ஒற்றை வரி, படத்தின் மொத்தக் கதையையும் தாங்கியுள்ளது எனலாம். இழப்பு, ஏமாற்றம், அவமானம் அத்தனையையும் தனது நம்பிக்கையால் தகர்த்தெறிந்து, பத்தாண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் தன்னை நிலைநிறுத்தி வருபவர். காதலைப் பற்றி கூறுகையில், `காதல் என்பது அறியாத வயதில் தெரியாமல் உள்ளே நுழைகிற ஓர் ஆனந்தம்' என்பார். வங்கக் கடல் ஓசை காதின் ஓரம் ஈரத்தைப் பாய்ச்ச, மார்பிளில் ஊறிய மிதமான சூட்டோடு அமர்ந்து வேர்க்கடலை கொறித்தபடி பாடலாசிரியர் கருணாகரனுடன் உரையாடினேன்.     

``குடும்பம், கல்வி, நண்பர்கள் பற்றி?"

``மதுராந்தகம் என் சொந்த ஊர். தற்போது சென்னையில் வசிக்கிறேன். அப்பா லஷ்மணன், அம்மா பரமேஸ்வரி. எனக்கு ஐந்து சகோதரிகள், ஒரு தம்பி. என் பெரியப்பா, அக்கா பசங்க இவங்கதான் என் குடும்பம். இந்தப் பூமிப் பந்தில் இருக்கும் அனைவரும் என் குடும்பம்தான். இப்படித்தான் என் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் விடிகிறது. இப்படித்தான் என் பயணமும் போய்கிட்டிருக்கு. பள்ளிக்கூடம் படிக்கும்போது சாக்லேட், பென்சில், பேனா, நோட்டு என எது வாங்கணும் என்றாலும் அதை நண்பர்கள்தாம் வாங்கிவருவார்கள். நடக்கமுடியாத எனக்குப் பதிலாக என் நண்பர்கள் நடந்தார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் B.A., பொருளாதாரம் படிச்சிருக்கேன்."

``வாசிப்பு அனுபவம் குறித்து..?"

``தமிழ் இலக்கியம் அதிகமா படிச்சிருக்கேன். மேலும், வாசிப்பனுபவத்தின் மேல் அதிக ஈடுபாட்டைக் கொடுத்தது `பொன்னியின் செல்வன்'தான். பின்பு சுஜாதா புத்தகங்கள் படிச்சிருக்கேன். வாலியின் கவிதையில் உள்ள நடையழகு ரொம்பப் பிடிக்கும். பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வைரமுத்து பாடல்களை விரும்பிக் கேட்பேன். பொதுவுடமை சார்ந்த நூல்கள் அதிகம் படிப்பேன்."

``என்ன மாதிரியான பாடல்கள் நீங்கள் சினிமாவுக்கு வரக் காரணமாக இருந்தது, எப்படிப் பாடல் எழுதக் கற்றுக்கொண்டீர்கள்?"

``என்னை சினிமாவுக்குள் கொண்டுவந்ததே தத்துவப் பாடல்கள்தாம். காதல் பாடல்களும் இருக்கலாம். அதை இளையராஜா பாடல்கள் மூலம்தான் அறிந்தேன். என்னை ஓப்பனிங் பாடலாசிரியர் ஆக்கினதுக்கு முழுக்க முழுக்கக் காரணம், வாலி சாரின் பாடல்களும், ரஜினி சார் பாடல்களும்தாம். தத்துவப்பாடல்கள் எழுதணும்னு தோணுனது, எம்ஜிஆர்  பாடல்கள் மூலமாதான். இதுக்கு இடைப்பட்ட காலத்தில் எனக்கு எதுவுமே தோணலை. பிறகு, `7ஜி ரெயின்போ காலனி' பாடல்கள் என்னைப் புரட்டிப்போட்டன. நா.முத்துக்குமாரிடம் கேட்டேன், `சார் மீட்டர் இடிக்காம எப்படி பாடல் எழுதுறது?' என்று. அதற்கு அவர் சொன்னார், `இந்திப் படப் பாடல்களின் டியூனுக்கெல்லாம் எழுதக் கத்துக்க ஈஸியா இருக்கும்' என்றார். ஆனால், நான் தமிழ்ப் பாட்டு டியூன்களிலே எழுதிக் கத்துக்கிட்டேன்."

``இயக்குநர் ராமுக்கும் உங்களுக்குமான முதல் சந்திப்பு பற்றி, வாய்ப்பு கிடைத்தது பற்றி?" 

``ஆரம்ப காலகட்டத்துலேயே ராம் சாரிடம் பாடல் வாய்ப்பு கேட்டிருக்கேன். `நா.முத்துக்குமாருக்கும் எனக்கும் சண்டை வரட்டும் கருணா, வாய்ப்பு தருகிறேன்' என்றார். உடனே, `அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேணாம் சார்' என்றேன். அவ்வப்போது யுவன் சார் ஆபீஸில் சந்திப்போம். `என்ன கருணா போயிட்டிருக்கு?' என்பார். ஒருநாள் நான் எழுதிய பாடலை அவரிடம் காட்டினேன். `அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன்' என்றார். ஒருநாள் யுவன் சாரின் மேனேஜர் எனக்கு போன் பண்ணி, `உங்களை ராம் சார் பார்க்கணும்னு சொன்னார்' என்றார். கொஞ்ச நேரத்திலே ராம் சாரும், `கருணா கொஞ்சம் ஆபீஸ் வாங்க' என்றார்.

அவர் அலுவலகம் சென்றேன். `பேரன்பு' படத்துக்கு பாட்டு எழுதத்தான் கூப்பிட்டார்னு தெரிஞ்சதும், ரொம்ப மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால், எனக்கு முன்னாடியே வைரமுத்து பாடல் எழுதியிருந்தார். சுமதி ராம் எழுதியிருந்தாங்க. இவர்களெல்லாம் இந்தப் படத்துக்குப் பாடல் எழுதிய பிறகு, நான் எழுதுவதில் கொஞ்சம் பயமும் இருந்தது, சந்தோஷமும் இருந்தது."

``ஃபேன்டஸி பாடல் எழுதும் நீங்கள், `பேரன்பு'க்குப் பாடல் எழுதும் முன் எப்படி உங்களை தயார்படுத்திக்கொண்டீர்கள்?"  

``ராம் சாரின் முந்திய படங்களின் பாடல்களெல்லாம் வேறு தளத்தில் இருக்கும். எளிமையாகவும் கவித்துவமாகவும் இருக்கும். ஆனால், நான் எழுதிய பாடல்கள் `ஐ ஆம் பேட் பாய்', `வரேன் சொல்லு தள்ளி நில்லு, தி பாய்ஸ் ஆர் பேக்' இப்படி என்னுடைய பயணங்கள் வேறுமாதிரி இருக்கும். நாம எப்படி ராம் சாருக்குப் பாடல் எழுதுவது என்ற சிறு தயக்கம் இருந்துச்சு. `சேர்ந்து போலாமா', `காதல் மௌன மொழி' போன்ற பாடல்களில் கவித்துவமான பாடல்கள் எழுதியிருக்கேன். ஆனாலும், அதன் அங்கீகாரம் வேறுமாதிரி இருந்தது.

ராம் சார் டியூன் கொடுத்ததும், `சார் ரெண்டுநாள் டைம் தாங்க'னு கேட்டேன். `மூணு நாள் எடுத்துக்கோ'னு சொல்லிட்டு, மறுநாள் போன் பண்ணி `ஆபீஸுக்கு வாங்க கருணா' என்றார். போகும்போதே, ராம் சார் படத்தில் நா.முத்துக்குமார் சாரின் பாடல்கள் எப்படி இருக்கும், அதன் தன்மை என்னவாக இருக்கும், ராம் சாருக்கு என்ன பிடிக்கும்? இந்த மூன்று கேள்விகளோடு அவருடன் பயணிக்கலாம்னு நினைச்சுப் போனேன். போனதும், `வாங்க கருணா ஃப்ரீயா எழுதலாம்' என்றார். மூன்று மணி நேரத்தில் இடையிடையே உரையாடல் நிகழ்த்தியவாறு அந்தப் பாடலை எழுதி முடித்தோம். `யுவன் சங்கர் ராஜா சாரும் வரிகள் ரொம்ப நல்லா இருக்குது' என்று பாராட்டினார். எனக்கு ஆச்சர்யம் என்னனா, அந்தப் பாடல் ராம் சாருக்கும் பிடித்திருந்ததுதான்."

``திரைத்துறையில் உங்களின் நட்பு வட்டாரம்?" 

``எனக்கு முதல் நண்பர்கள், வழிகாட்டி எல்லாமே சிம்பு சாரும், யுவன் சாரும்தாம். இவர்கள்தாம் எனக்குப் பிள்ளையார் சுழி.  இசையமைப்பாளர் அம்ரிஷ், எஸ்கேப் மதன் சார், நடிகர் கார்த்திக் சார், உதயநிதி சார், சுராஜ் சார். தாணு சார் வயதுக்கு மீறிய நண்பராகவும் அப்பாவைப் போன்றவர். ஆர்.பி.சௌத்ரி சார், ஞானவேல் சார், லைக்கா ரவி, வெங்கட் பிரபு, தமன், இமான், ஹாரிஸ் ஜெயராஜ் சார்... என ஏராளமான நண்பர்கள் இருக்காங்க. ஜி.என்.செட்டி சாலையில் கண்ணதாசன் சிலையைக் கடக்கும்போதெல்லாம், `தலைவா எப்படி இருக்கீங்க?' என்பேன். சிம்பு, யுவன் சாருக்கு அடுத்ததாக நான் மானசீக குருவாக நினைப்பது, கண்ணதாசனைத்தான். பாடலாசிரியர்களில் விவேகா, யுகபாரதி, நா.முத்துக்குமார், சில மேடைகளில் சில கணங்களில் மதன் கார்க்கி... என ஏராளமான நண்பர்கள் உண்டு."   

``பாடல் எழுதி வெளிவரவுள்ள படங்கள் என்னென்ன?" 

```பார்ட்டி' படத்தில் எழுதியுள்ள `ஜிஎஸ்டி வரி நான், எல்ஈடி இடை நான், ஓட்காவின் இதழ் நான்' பாடல் காதல் காமம் இரண்டுக்கும் நடக்கும் ஒரு மிருகத்தின் வேட்டையாக வார்த்தைகள் உலாவிட்டு இருக்கும். அப்புறம், வசந்த பாலன் சார் படத்தில் எழுதியிருக்கேன். இப்பாடல், லோக்கல் கானாவாக இருக்கும். `கர்ஜனை' படத்தில் திரிஷா மேடமுக்காக `ஓடு ஓடு ஓடு' என்ற பாடலையும், `பொட்டு' திரைப்படத்தில் ஒரு பாடலும் எழுதியிருக்கேன். மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்." 

``திரைப்பாடல் தவிர்த்து, இலக்கியத்தின் மீது நாட்டம் இருக்கா?"

``விரைவில் என் கவிதைப் புத்தகம் வெளிவரவிருக்கிறது."

``என்ன மாதிரியான பாடல்கள் எழுத விருப்பம்?"

``இப்படித்தான் எழுதணும்னு முன்முடிவு என்னிடம் இல்லை. அது காலத்தின் கையில்தான் இருக்கு. மக்களுக்குப் பிடிக்கிற பாடலாக இருக்கணும், அவ்வளவுதான்." 

``யாருடன் பணிபுரிய விருப்பப்படுகிறீர்கள்?"

``முதல்ல, இசைஞானி இளையராஜா இசையில் எழுதணும். ரஜினிக்கும் கமலுக்கும் பாடல் எழுதணும். பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜிடமும் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். விரைவில் நடக்கும் என நம்புகிறேன்."

```பேரன்பு' பாடலிலிருந்து  சில வரிகள்...?"

``காக்கா குஞ்சப் போல நானும் கரையாத காலம் இல்ல

மரத்துக்கீழ நிக்கும் நீயும் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்ல

முடியாது என்று ஆனபோதும் முயன்று நான் தோற்கிறேன்

விடியாது என்று ஆனபோதும் நான் கிழக்கையே பாக்குறேன்

குடைகளைக் கண்டு மழையும் வானில் நிற்காதே

தடைகளைக் கண்டு வாழ்க்கை பாதியில் முடியாதே..."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு