Published:Updated:

"குப்ரிக்... உதிர்ந்தழியும் மனிதநேயத்தை உலகமக்கள் முன்னால் வைத்தவர்!" - #HBDStanleyKubrick

"குப்ரிக்... உதிர்ந்தழியும் மனிதநேயத்தை உலகமக்கள் முன்னால் வைத்தவர்!" - #HBDStanleyKubrick

உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் பிறந்த தின சிறப்புக் கட்டுரை.

"குப்ரிக்... உதிர்ந்தழியும் மனிதநேயத்தை உலகமக்கள் முன்னால் வைத்தவர்!" - #HBDStanleyKubrick

உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் பிறந்த தின சிறப்புக் கட்டுரை.

Published:Updated:
"குப்ரிக்... உதிர்ந்தழியும் மனிதநேயத்தை உலகமக்கள் முன்னால் வைத்தவர்!" - #HBDStanleyKubrick

``ஒட்டுமொத்தத் திரைப்பட வரலாற்றிலும் ஸ்டான்லி குப்ரிக் அளவுக்கு அதிக சர்ச்சைகளில் சிக்கிய இயக்குநர்கள் எவரும் இல்லை என்றே கருதுகிறேன். இவரது ஒவ்வொரு திரைப்படமும் பல கட்ட விசாரணைக்கும், யூகங்களுக்கும், சில தவறான புரிதல்களுக்கும் வழி வகுத்திருக்கின்றன. மனித வாழ்வைக் கட்டுப்படுத்துகின்ற அல்லது இயக்குகின்ற போர்கள், விஞ்ஞானம், நவீனத்துவம், பாலியல் சிக்கல்கள் முதலியவற்றை இவரது திரைப்படங்கள் மீண்டும் மீண்டும் ஆராய்கின்றன. `தெளிவுக்கும், தெளிவின்மைக்கும் இடையில் ஊடாடும் மனித இருப்பை விசாரணைக்கு உட்படுத்தும் திரைப்படங்கள்!’ என ஸ்டான்லி குப்ரிக்கின் திரைப் பங்களிப்பை மேற்கத்தியர்கள் வகைப்படுத்துகிறார்கள்.   

1928-ல் நியூயார்க் நகரில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்த ஸ்டான்லி குப்ரிக், தனது இறுகலான புதிர்த் தன்மை நிறைந்த திரைப்படங்களுக்காக அதிகம் பேசப்பட்டவர். தொடக்க காலங்களில் புகைப்படக்காரராகக் காட்சி ஊடகத்துடனான தனது பயணத்தைத் தொடங்கிய குப்ரிக், தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் காட்சிக் கோணங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தவர். மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு, காட்சியின் தேவைக்கேற்ப சரியான ஷாட்டுகளைத் தேர்ந்தெடுத்துப் படமாக்குவது அவரது வழக்கம். அதற்காக எவ்வளவு காலதாமதம் ஆனாலும், அவர் பின்வாங்கியதில்லை. அவரது கடைசித் திரைப்படமான `eyes wide shut' 400 தினங்கள் படப்பிடிப்பு செய்யப்பட்டது. மிக அதிக தினங்களில் படப்பிடிப்பிலிருந்த திரைப்படம் என்ற சாதனையை இந்தத் திரைப்படம் தக்கவைத்துள்ளது.

காட்சித் தேர்வில் தனது முதல் திரைப்படத்திலிருந்தே மிகுந்த திட்டமிடல்களைக் கொண்ட ஸ்டான்லி குப்ரிக், தனது முதல் இரண்டு திரைப்படங்களான `Fear and Desire' மற்றும் `Killer’s Kiss' ஆகிய திரைப்படங்களுக்குத் தானே ஒளிப்பதிவும் செய்திருந்தார். அதோடு, `Fear and Desire' படத்துக்குப் படத்தொகுப்பும் செய்திருந்தார். `Killer’s Kiss' திரைப்படத்தை Neo–Noir பாணியில் மிகச்சிறப்பாக இயக்கி ஒளிப்பதிவும் செய்திருப்பார். அந்தத் திரைப்படத்தில் குற்ற நிகழ்வுகளின்போது, ஜாஸ் இசையைப் பின்னணியில் பயன்படுத்தி, அங்கு நிலவும் இறுக்கச் சூழலைத் தளர்த்தும் புதிய பாணியைக் கையாண்டிருப்பார். கிட்டத்தட்ட ஹிட்ச்காக் பாணியிலான சஸ்பென்ஸ் திரைப்படமான இதில், ஒளி மற்றும் நிழலின் அசைவுகள் மையக் கதையின் உளவியல் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காட்சித் தேர்வுகளில் மிக கராறான பாணியைத் தொடக்க காலங்களிலிருந்தே குப்ரிக் கடைப்பிடித்ததன் சாட்சியமாக ஒரு சம்பவம் நினைவு கூறப்படுவதுண்டு. குப்ரிக்கின் மூன்றாவது முழுநீளத் திரைப்படமான `The Killing'-ல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர், லூசியன் பாலார்ட்டு. இவர் முன்னதாகப் பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணி செய்த அனுபவம் கொண்டவர். `The Killing' படமாக்கலின் போது, குறிப்பிட்ட நீண்ட காட்சி ஒன்றில் குப்ரிக் பாலார்ட்டிடம், தரையில் கோடு ஒன்றைக் கிழித்து, இந்தத் திசையில்தான் கேமிரா பயணிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். ஆனால், பாலார்ட்டால் இட நெருக்கடியின் காரணமாக குப்ரிக் தெரிவித்த வகையில் காட்சியைப் படமாக்க முடியவில்லை. அதனால், அவர் தனக்கு உகந்த வகையில் சற்றே கேமிராவின் அமைப்பை மாற்றி பிரத்யேக லென்ஸ் மூலம் படமாக்கியிருக்கிறார். இதன்மூலம் குப்ரிக் தெரிவித்த அதே காட்சியமைப்பு உருவாக்கிவிட முடியுமென்கின்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. காட்சிப்பதிவு முடிந்ததும், குப்ரிக் அவரை நெருங்கி வந்து அந்தக் காட்சி படமாக்கப்பட்ட விதத்தைப் பார்த்திருக்கிறார். அவருக்கு அதிருப்தி உண்டாகிறது.

`கேமிராவை நீங்கள் இடம் மாற்றியிருக்கிறீர்கள்' என்று கோபத்தில் கத்துகிறார். பாலார்ட்டோ, `ஆனால், நீங்கள் தெரிவித்த காட்சி கிடைத்துவிட்டதே?' என்று சொல்ல, குப்ரிக், `காட்சி கிடைத்ததில் என்ன பயன் இருந்துவிடப்போகிறது? நான் வெளிப்படுத்த விரும்பிய கருத்து இந்தக் காட்சியில் இல்லை. இப்போது மீண்டும் நான் தெரிவித்தபடியே கேமிராவை முதலிலிருந்து இயக்குங்கள் அல்லது உடனடியாக கேமிராவைத் தூக்கிக்கொண்டு வெளியேறிவிடுங்கள்' என அதிகக் கோபத்துடன் உரக்கச் சொல்லியிருக்கிறார். பின் ஒருபோதும் குப்ரிக்கின் திட்டமிடல்களுக்கு மாற்றுக் கருத்து இருந்ததில்லை. குப்ரிக்கின் வயது அப்போது 28 மட்டும்தான். அந்த வயதிலேயே சமரசம் செய்துகொள்ளும் தன்மையற்றவராகவும், மிகுந்த ஆளுமைத் திறன் வாய்ந்தவராகவும் விளங்கியவர், குப்ரிக்.

``1950-களின் மத்தியில் சாதாரண ஒருவன் ஒரு திரைப்படத்தை இயக்குவது அத்தனை எளிதான காரியமல்ல என்றே எல்லோரும் பொதுவாகக் கருதினார்கள். சினிமா என்பது ஏதோ மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்திகளால் இயக்கப்படுவதாகக் கருதி, எல்லோரும் ஒதுங்கிக் கொண்டார்கள். மக்களின் அத்தகைய எண்ணம்தான் என்னை எளிதாகத் திரைப்படம் இயக்கி முடிக்க வைத்தது. ஒரு திரைப்படத்தை இயக்க உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு கேமிராவும், ஒரு டேப் ரெக்காடரும், கொஞ்சம் கற்பனை வளமும்தான்!” என்று குறிப்பிடும் ஸ்டான்லி குப்ரிக், மருத்துவரான அவரது தந்தை, குப்ரிக்கின் 13-வது வயதில் வாங்கிக் கொடுத்த கேமிரா ஒன்றின் மூலமாகப் புகைப்படக் கலைக்குள் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சில காலம் பிரபல அமெரிக்க இதழான `look' பத்திரிகையிலும் புகைப்படக்காரராகப் பணி செய்திருக்கிறார். பிறகு நண்பர்கள் உதவியாலும், உறவினர்களிடம் பணம் பெற்றும் தனது தொடக்க கால குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களை இயக்கினார்.

குப்ரிக்கின் திரைப்படப் பயணத்தில் முதல்முதலில் சர்ச்சையைத் தொடங்கி வைத்த திரைப்படம், `லோலிதா'. அதற்கு முன் அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகரான கிர்க் டக்ளஸுடன் இணைந்து இரண்டு திரைப்படங்களில் குப்ரிக் பணியாற்றினார். `Paths of Glory' மற்றும் `Spartacus' முதலியவையே அந்தத் திரைப்படங்கள். இதில், `ஸ்பார்ட்டகஸ்' இயக்கும்போது குப்ரிக் மற்றும் டக்ளஸ் உறவில் மிகப்பெரிய அளவில் விரிசல் விழுந்திருந்திருந்தது. முதலில் வேறு ஓர் இயக்குநரால் `ஸ்பார்ட்டகஸ்' இயக்கப்பட்டது. ஆனால், அந்த இயக்குநரோடும் டக்ளஸுக்குக் கருத்து வேறுபாடு உருவெடுத்ததால், குப்ரிக்கை இயக்கி முடிக்கும்படி டக்ளஸ் பணித்தார். ஆனால், இந்தத் திரைப்பட உருவான காலகட்டம் முழுவதிலும் டக்ளஸின் கைதான் ஓங்கியிருந்தது. குப்ரிக்கை ஆலோசிக்காமல் தன்னிச்சையாகப் பல முடிவுகளை டக்ளஸ் எடுத்ததால், குப்ரிக்குக்குக் கடுமையான மன நெருக்கடி உருவானது. பின் காலங்களில், குப்ரிக்குடன் 30 வருடங்களுக்கு மேலாக உதவியாளராக இருந்த எமிலியோவிடம் குப்ரிக், ``நான் இயக்கியதில் எனக்கு விருப்பமில்லாத திரைப்படமென்றால், அது `ஸ்பார்ட்டக்ஸ்'தான்" என்று பகிர்ந்துள்ளார். இந்தத் திரைப்படத்தை முடித்த கையோடு ஸ்டான்லி குப்ரிக் சில முடிவுகளை எடுத்திருந்தார். இனி ஒருபோதும் எதற்காகவும் சமரசம் செய்துகொண்டு தனக்கு விருப்பமில்லாத பணிகளில் இறங்கக் கூடாது என்பதுதான் அது. இன்று நாம் கொண்டாடும் ஸ்டான்லி குப்ரிக்கின் தொடக்கம் இந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது.

நபகோவ்வின் நாவலான `லோலிதா', வயோதிக மனிதர் ஒருவருக்கு 12 வயதுச் சிறுமியின் மீது உண்டாகின்ற பாலியல் தூண்டுதல்களை விவரிக்கிறது. குப்ரிக் இந்த நாவலைப் படமாக்க முயற்சி செய்தபோதே கடுமையான எதிர்ப்பும், வியப்பும் ஒருங்கே பலரிடமும் மேலிட்டது. எனினும், குப்ரிக் தான் விரும்பிய வகையில் `லோலிதா'வை இயக்கி முடித்தார். நாவலில் குறிப்பிடப்பட்டிருந்த இறுதி விவரணைகளைப் படத்தில் தொடக்கக் காட்சியாக குப்ரிக் மாற்றியமைத்திருந்தார். மதப் பற்றாளர்களின் கடுமையான எதிர்ப்பையும், விமர்சனத்தையும் மீறி `லோலிதா'வுக்குப் பார்வையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

``முழுக்க முழுக்க உரைநடை பாணியில் நீண்ட விவரணைகளைக் கொண்ட நபகோவ்வின் `லோலிதா' நாவலை எப்படிப் படமாக்க முடிந்தது எனப் பலரும் என்னிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனால், மிகச்சிறந்த அந்த நாவலை உரைநடை வாக்கியங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திப் பேசுவது, அந்த நாவலின் மகத்துவத்தைச் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. தரமான எழுத்து முறை என்பது சிறந்த நாவல் உருவாக்கத்தின் மிக முக்கியமான அம்சம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இந்தத் தரமென்பது, நாவலின் குவி மையத்தின் மீதும், கருத்தியலின் மீதும், அதன் கதாபாத்திரங்களின் மீதும், அதோடு வாழ்க்கை குறித்த தனது அவதானிப்பின் மீதும் அதன் எழுத்தாளர் கொண்டிருக்கும் விடாப்பிடியான அதீதப் பிணைப்பின் வழியாகவே அடைய முடியும். படைப்பாக்க செயல்பாட்டில் ஒன்றிக் கலத்தல் என்பதுதான் மிக முக்கியமானது. வெளிப்பாட்டுப் பாணி என்பது அந்த எழுத்தாளர் தனது எண்ணங்களையும், உணர்வுகளையும் கோத்து வாசகரை நாவலுக்குள் உள்ளிழைக்கக் கையாளுகின்ற நுட்பம் மட்டுமே. இந்த உணர்வு பேதங்களை நாம் எவ்வாறு திரைக்கதையில் உபயோகப்படுத்துகின்றோம் என்பதுதான் முக்கியமே தவிர, அந்த நாவலின் பாணி அல்ல" என்று `லோலிதா'வின் உருவாக்கம் குறித்து விவரிக்கிறார், ஸ்டான்லி குப்ரிக்.

குப்ரிக்கின் மிகச் சிறந்த படைப்பாகவும், அதன் விஷுவல் எஃபெக்ட்ஸுக்காக ஆஸ்கர் விருது பெற்றதுமான `2001: A Space Odyssey' திரைப்படம் 1968-ம் ஆண்டில் வெளியானது. குப்ரிக்குக்கு வழங்கப்பட்ட ஒரேயொரு ஆஸ்கர் விருது இது மட்டும்தான். கற்காலத்தில் தனது மனம் குடிகொண்டிருப்பதாக ஒருமுறை குறிப்பிட்டுள்ள குப்ரிக், ஸ்பேஸ் ஒடிசியில் முதல்முதலாக ஒரு பிடி நீருக்காகப் பிறிதொரு உயிரைத் தாக்க பயில்கின்ற மனிதக் குரங்குகளில் தொடங்கி, வானவெளியில் மிதக்கவிடப்பட்ட எலும்புத் துண்டுகளைப் போன்றிருக்கும் விண்வெளித் தளத்தில் மனிதனை வெற்றிகொள்ள தொடங்குகின்ற இயந்திரங்களின் பேரழுச்சி வரை அச்சுறுத்தும் வகையில் காட்சிப்படுத்தியிருப்பார். இக்காலகட்டத்தில் மிகப்பெரிய இயக்குநர்களாகக் கருதப்படுகின்ற ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கிலிருந்து பலரையும் மிகப்பெரிய தாக்கத்துக்குள்ளாக்கிய திரைப்படம் இது. விண்வெளி மைய திரைப்படங்களுக்கு ஒரு முன்னோடியாகவே திகழ்கிறது, 'ஸ்பேஸ் ஒடிசி'. அதிகத் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றிராத அக்காலகட்டத்திலேயே மிக பிரமாண்டமாகவும் அசலான விண்வெளி மையங்களுக்கு நிகரான அரங்கு வடிவமைப்புக்காகவும் பெரிய அளவில் புகழப்பட்டது, இப்படம். குப்ரிக் இத்திரைப்படத்தை மிக அதிக கவனத்துடன் திட்டமிட்டு உருவாக்கினார்.

குப்ரிக் பொதுவாக எவருடனும் பெரியளவில் நெருக்கமான நட்பு பாராட்ட விருப்பமில்லாதவர். அவரது ஆய்வுகளுக்கும், திரைப்படம் சார்ந்த பணிகளுக்கும் இடையூறாக இருக்குமெனக் கருதி எப்போதும் ஒதுங்கியே இருக்க விரும்புவர் அவர். அவரது கடைசிக் காலத்தில், லண்டனில் மிக பிரமாண்டமான மாளிகை போன்றிருக்கும் ஒரு தனித்த குடியிருப்பில்தான் தனது குடும்பத்துடன் வசித்துவந்தார். `Clockwork Orange' நாயகனைப்போலவே உடைகளை அணிந்துகொண்டு அமெரிக்காவில் குற்ற நடவடிக்கைகளில் பலர் தொடர்ந்து ஈடுபட்டதால், குப்ரிக்குக்கு மிகப்பெரிய எதிர்ப்பலை அமெரிக்காவில் உருவாகியிருந்தது. அதனால், அவர் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார்.

`Clockwork Orange' திரைப்பட நாயகனான மால்கம் மெக்டவல் படப்பிடிப்பு முடிவடையும் வரையிலும் குப்ரிக் உடன் மிக நெருக்கமாகப் பழகி வந்தார். குப்ரிக் அவருக்குக் கொடுத்த சுதந்திரத்தால் தனது முழு ஈடுபாட்டை அந்தப் படத்துக்கு அவர் வழங்கியிருந்தார். ஒரு காட்சியில், கண்களில் இயந்திரமொன்றைப் பொருத்தி, பீத்தோவனின் இசையை ஒலிக்க விடுவார்கள். நாயகன் இப்படத்தில் பீத்தோவனின் இசைக்கு மிகப்பெரிய அடிமை. இக்காட்சியில் நடிக்கையில்  மால்கம் மெக்டவலுக்கு உண்மையிலேயே கண்களில் விழித்திரை லேசாகக் கிழிந்துவிட்டது. நீண்ட சிகிச்சைக்குப் பின்னர்தான் அவரால் மீண்டுவர முடிந்தது. அந்தளவுக்குக் குப்ரிக்கின் மீது அதீத நம்பிக்கையுடன் மால்கம் மெக்டவல் பழகி வந்தார். ஆனால், `Clockwork Orange' படப்பிடிப்பு முடிவடைந்ததற்குப் பிறகு, மால்கம் மெக்டவலால் குப்ரிக்குடன் ஒருமுறைகூடப் பேச முடிந்ததில்லை. குப்ரிக் தனது திரையாக்கக் கதாபாத்திரம் ஒன்றாகவே மால்கம் மெக்டவலைப் பாவித்தாரே ஒழிய, அவரது அந்தரங்கத்துக்குள் நுழையும் அனுமதியை எப்போதும்போல அவருக்கும் அவர் வழங்கியதில்லை.

குப்ரிக்குடன் பணியாற்றியதில் மிக மோசமான அனுபவம் வாய்க்கப் பெற்றவர், ஷெல்லி டூவல்தான். `The Shinning' படத்தில் ஜாக் நிக்கல்சனின் மனைவியாக நடித்த ஷெல்லி, இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதிலும் அதீத பதற்றத்திலும், குழப்பம் சூழவும்தான் வலம் வந்துகொண்டிருந்தார். கிட்டத்தட்ட தினமும் அழுததாக அவர் குறிப்பிட்டுள்ளார். குப்ரிக் ஷெல்லியிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டார். படக்குழுவினரின் எதிரிலேயே அவரை மோசமாகத் திட்டுவதையும், அவரது நடிப்புத் திறனில் உள்ள குறைபாட்டைப் பற்றியும் உரக்கக் கத்தியபடியே இருப்பார். ஜாக் நிக்கல்சனை நோக்கி பேஸ்பாலை நீட்டி நடுக்கத்துடன் ஷெல்லி மிரட்டுகின்ற காட்சியை 127 முறை படமாக்கினார்கள். ஷெல்லி மனதளவில் தளர்ந்து போயிருந்தார். படப்பிடிப்புக் காலத்தில் அவரது தலை மயிர்கள்கூட உதிர்ந்து விழத் தொடங்கியிருந்தன. ஷெல்லிக்கு மட்டுமல்ல, ஜாக் நிக்கல்சனுக்கும் இந்தத் திரைப்படத்தில் வேலை செய்தது மிக அதிக மன நெருக்கடிகளை உண்டாக்கிய அனுபவம்தான். ஷைனிங்கில் வருகின்ற பார் காட்சியை அவர்கள் ஆறு வாரம் ஒத்திகை  பார்த்திருந்தார்கள். ஆனால், படப்பிடிப்பு அன்று காலை 9 மணியிலிருந்து இரவு 10:30 வரை மீண்டும் மீண்டும் படமாக்கப்பட்டது. ஜாக் உடல் சோர்ந்துபோய் களைப்புற்றிருந்தார். அவரது உடை அழுக்கேறி நாற்றமெடுக்க ஆரம்பித்திருந்தது.

ஸ்டான்லி குப்ரிக்கைப் பொறுத்தவரையில், ஒரு நடிகரை முழுக்க முழுக்க அந்தக் கதாபாத்திரமாகவே மாற்றிவிடுவது மிகவும் அவசியமான செயலாகும். ஒரு படைப்பாளியாகத் தனது திரைப்படத்தின் மீது தனக்கிருக்கும் அதீதப் பற்றுதலை, அப்படத்தில் பங்கேற்கின்ற ஒவ்வொரு கலைஞர்களும் கொண்டிருக்க வேண்டுமென்பதே அவரது விருப்பமாக இருந்தது. முழுமையாக அவரிடம் அவர்கள் தங்களை ஒப்புக் கொடுத்துவிட வேண்டும். குப்ரிக்கின் கடைசிப் படமான `Eyes Wide Shut' திரைப்படத்திலும் இதுவே நேர்ந்தது. நிஜ வாழ்க்கையில் தம்பதிகளான டாம் க்ரூஸ் மற்றும் நிக்கோல் கிட்மேனை இந்தப் படத்தில் நடிக்க வைத்திருந்த ஸ்டான்லி குப்ரிக், இருவருக்குமிடையில் நிலவிவந்த அதிருப்திகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். கூடுதலாக இருவருக்குமிடையில் உள்ள பொறாமையை,  படம் வளரும் காலகட்டத்தில் மூட்டிவிடவும் செய்தார். படத்தின் கருத்தியலுக்கு ஏற்றவாறு இந்த நிஜ தம்பதிகளின் வாழ்க்கையைக் குப்ரிக் பயன்படுத்திக்கொண்டார். முழுக்க முழுக்க மர்ம திரைப்படத்துக்கு ஒத்த இறுக்கத்தோடும், புதிர்த் தன்மையுடனும் பயணிக்கும் இத்திரைப்படம், ஆண் - பெண் உறவில் ரகசியமாக உள்ளுறைந்திருக்கின்ற பாலியல் கற்பனைகளை மையமாகக் கொண்டது. இந்தத் திரைப்படத்தில் அதிசயமாக தமிழ்க் குரலையும் ஸ்டான்லி குப்ரிக் ஒலிக்க விட்டிருப்பார். கூட்டுக் கலவிக் காட்சியின்போது, பின்னணியில் `காதலா… இன்பமா… இதுவொரு நரகமா…?' எனும் குரல் பெருத்த அலறலைப்போல ஒலித்துக்கொண்டிருக்கும்.

சிறு வயதில் ஜாஸ் இசையமைப்பாளராகும் ஆசை கொண்டிருந்த குப்ரிக், தனது திரைப்படங்களில் இசைக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில், இசையென்பது மற்றுமொரு வகையிலான கதை சொல்லும் யுத்திதான். வெறும் உணர்ச்சி மேலெழும்பல்கள் மட்டுமல்லாது, முழுவதுமாக இசையின் வீரியத்தைத் தனது திரைப்படங்களில் அதன் முழுப் பரிமாணத்துடன் பயன்படுத்தியிருக்கிறார், ஸ்டான்லி குப்ரிக். அவரது முதல் படத்திலிருந்து இறுதித் திரைப்படம் வரையிலும் இசையின் முக்கியத்துவம் அதிகளவில் இருந்திருக்கிறது. அதேபோல, மாஸ்டர்களின் இசைத் துணுக்குகளையும் அவர் பயன்படுத்திக்கொள்ளத் தயங்கியதில்லை.

தனது ஒவ்வொரு திரைப்பட எழுத்துப் பணிக்காகவும் பல மாத கால அவகாசம் எடுத்துக்கொள்ளக்கூடியவர், ஸ்டான்லி குப்ரிக். அவருக்குத் திரைப்படத்தை எழுதுவதும், இயக்குவதும் மட்டுமே எப்போதும் சிந்தனையில் அதிக முக்கியத்துவமானதாக இருந்திருக்கிறது. ஒருபோதும் தனது திரைப்படங்களைக் குறித்து அவர் விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்க மாட்டார். பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்ற வகையில் முடிவற்ற தன்மையிலேயே அவரது திரைப்படங்கள் எப்போதும் இருந்திருக்கின்றன. அதேபோல, சில திரைப்படங்களை வெளியானதன் பிறகுகூட மீண்டும் படத்தொகுப்பு செய்து மறு வெளியீடு செய்திருக்கிறார். பத்திரிகைகளில் தனது புகைப்படம் வெளியாவதையும் அவர் விரும்புவதில்லை. `Full Metal jacket'க்கும், அவரது இறுதித் திரைப்படமான `Eyes Wide shut'-க்குமான 12 வருடங்களில் அவரது ஒரு நேர்காணலோ, ஒரு புகைப்படமோகூட வெளியாகியிருக்கவில்லை. மிகுந்த தனிமையையும், ஆய்வுகளிலும் அதிக நேரத்தைச் செலவிடக்கூடிய ஸ்டான்லி குப்ரிக், தனது குழந்தைகளுடன்கூட இறுக்கமான மனிதராகவே இருந்திருக்கிறார்.

அவரது வீட்டில், என்னென்ன வேலைகளை எப்படி எப்படிச் செய்யவேண்டும் என்கிற குறிப்புகள் ஒட்டப்பட்டிருக்கும். ஸ்டான்லி குப்ரிக்கே முழுவதுமாக ஒவ்வொரு குறிப்பாகத் தட்டச்சு செய்து வீட்டில் ஒட்டியிருப்பார். அதேபோல விலங்குகளின் மீது மட்டற்ற அன்பு கொண்டவர். நாய்கள், பூனைகள் எனப் பலவும் அவரது லண்டன் இல்லத்தில் உலவிக்கொண்டிருக்கும். குப்ரிக் அவை  ஒவ்வொன்றையும் கவனத்துடன் எப்படிப் பராமரிக்க வேண்டுமென்ற குறிப்பையும் எழுதியிருக்கிறார்.

எப்போதும் இறுக்க பாவத்துடன், எளிதில் புரிந்துகொள்ள இயலாத கலையின் மீது மிகத் தீவிரமான நேசம் கொண்டிருந்த குப்ரிக்கின் ஒட்டுமொத்தமான திரையுலகப் பங்களிப்பை அவரது வார்த்தைகளைக் கொண்டே விவரிக்க முடியும், ``வாழ்க்கையின் அர்த்தமற்ற போக்குகள்தாம் ஒருவனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. தனக்கான அர்த்தத்தைத் தானே உருவாக்கிக்கொள்ள உந்தித் தள்ளுகிறது. இலையின் பசுமையைப்போல இந்த உலகத்தின் பரிசுத்தத்தை முழுமையாகச் சுவீகரித்துக்கொள்ள குழந்தையால்தான் முடியும். குழந்தையால்தான் கட்டுப்படுத்தப்படாத வாழ்வின் அலையினை அதன் அசலான முகத்தோடு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், வயது ஏற ஏற அவனே எல்லாவற்றையும் தராசில் வைத்து எடைபோடத் தொடங்கி விடுகிறான். மரணம் அவனைத் துரத்துகிறது. தனது வாழ்வுக்கான சட்டங்களை உருவாக்குகிறான். குழந்தை பக்குவமடையும்போதும் அவன் வாழ்வின் போலித்தனங்களையும், வலியையும், அழுகையையும் உணருகிறான். அதனால், தன் சக மனிதன் மீது பேரச்சம் கொள்கிறான். எல்லாவற்றையும் நம்பிக்கையற்று நோக்குகிறான். அதுவே, ஒரு குழந்தை வலுவான சிந்தனையை வளர்த்துக்கொண்டுவிட்டால், அவனால் எந்தத் தடைகளையும் எளிதாகக் கடந்துவிட முடியும். அவனால் ஒரு புதிய சிந்தனை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தப்படலாம். அர்த்தமற்ற வாழ்வினைக் கண்டு அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்க மாட்டான். உலகினைப் பற்றிய மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய உண்மை என்னவென்றால், இது ரொம்பவும் வித்தியாசமான ஓர் இடம். அது பகைமையும், விரோதமும் நிரம்பி ஓடும் இடம் மட்டுமேயல்ல. இது ரொம்பவும் வித்தியாசமான ஓர் இடம். ஆனால், வாழ்வுக்கும் சாவுக்குமான எல்லைகளைப் பொருட்படுத்தாமல், சக உயிர்களுக்கிடையிலான வாழ்வின் வித்தியாசமின்மையையும், நாம் சந்திக்கவிருக்கின்ற சவால்களையும் சந்திக்க எப்போதும் தயாராக இருந்தால், நம் வாழ்க்கை உண்மையிலேயே அர்த்தம் பொருந்தியது எனத் திடமாக நம்பினால், எத்தனை இருள் நிரம்பியதாக இருப்பினும், நம்மால் நமக்கான ஒளியை உருவாக்கிக்கொள்ள முடியும்!”.  

குப்ரிக் நேர்மையின்மைக்கும், போலித்தனங்களுக்கும், மனித உயிர்களைப் பலி ஆடுகளைப் போலாக்குகின்ற அதிகார மையங்களுக்கு எதிராகவும் இயங்கிக்கொண்டிருந்தார். அவரது ஒவ்வொரு திரைப்படமும், மனித மனதில் துளிர்க்கும் பைசாசத்தின் அர்த்தமின்மையை தீவிரக் காட்சிமொழியுடன் கடத்துகிறது. அவரது கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் சுய ஆய்வுக்கு உள்ளாகிறார்கள். அச்சுறுத்தக்கூடிய உலக அதிகார மையங்களின் கூட்டியக்கத்தின் அடியில் சுருங்கும் மனிதப் பண்புகளின் வீழ்ச்சியை அவர் தனது சிலந்தி வலைப்பின்னல் போன்ற காட்சியமைப்புகளின் மூலம் வெளிக்கொணர்ந்தார். கால காலங்களுக்குள் முன்னும் பின்னுமாகத் தாவி உதிர்ந்தழியும் மனிதநேயத்தை உலக மக்களின் முன்னால் வைக்கிறார். வீரியமிக்க தனது ஒவ்வொரு திரைப்படங்களுக்கு முன்னும் பின்னும் அவர் பேசுவதேயில்லை. அவர் எப்போதும் சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார். மெளனித்திருந்த அந்த மனிதரின் தீவிர உழைப்பின் பிறகான களைப்பில்  சுருங்கும் நெற்றிக் கோடுகளில் உதிர்ந்தவை எல்லாம் சிந்தனைத் துளிகள் தாம்!